தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு

 தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு

தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட முன்னணி நடிகர் கிருஷ்ணா இன்று (15-11-2022) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80.

தெலுங்குத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் கிருஷ்ணா, 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 50 ஆண்டுகளாகத் தெலுங்குத் திரைவுலகில் கோலோச்சிய அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் போட்டிப்போட்டு நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக விக்ரமுடன் கந்தசாமி படத்தில் நடித்தார். தெலுங்கில் கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தில் நடித்திருந்தார்.

ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் 1942-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி பிறந்த இவர், 1960-களில் குல கோத்ரலு, பதந்தி முந்துகு உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர், 1966-ஆம் ஆண்டு கூடாச்சாரி 116 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். இப்படம் நடிகர் கிருஷ்ணாவின் கலைப்பயணத்தில் மட்டுமின்றி தெலுங்கு திரைத்துறைக்கும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான ஸ்பை த்ரில்லராக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆந்திராவில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என இரு நடிகர்களுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கிருஷ்ணா.  

இவரது முதல் மனைவி இந்திரா தேவி. இவர்களுக்கு மகேஷ் பாபு, ரமேஷ் பாபு ஆகிய மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். மகேஷ் பாபு தெலுங்கில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.

‘எலந்தப்பழம்’ பாடல் புகழ் விஜயநிர்மலாவை கிருஷ்ணா காதலித்து 2-வது திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு விஜயநிர்மலா மரணம் அடைந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் கிருஷ்ணாவின் முதல் மனைவியும், மகேஷ் பாபுவின் அம்மாவுமான இந்திரா தேவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.

இந்த வருடத்திலேயே தாய் மற்றும் அண்ணனை இழந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தனது தந்தை கிருஷ்ணாவையும் இழந்து பெரும் துயரத்தில் உள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்!

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...