பயராமனும் பாட்டில் பூதமும் | 4 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 4 | பாலகணேஷ்

வீட்டினுள் நுழைந்த தனலட்சுமியின் முகமானது அவளே போன வாரம் செய்த பாதுஷா போல இறுகிப் போயிருந்தது. அவள் பின்னாலேயே வந்த கடைப்பையன் மளிகைப் பைகளை வைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான்.

“எங்க போயிட்ட தனம் இவ்ளவு நேரம்..?” என்று குக்கரில் பதினைந்து விசில் வைத்து எடுத்த குருணையரிசி போலக் குழைந்தான் ஜெயராமன்.

“உங்கள மாதிரி ஒரு… ஒரு… இதை… கல்யாணம் பண்ணிக்கிட்டது என் தலையெழுத்து… மளிகை சாமான் வாங்கிட்டு வாய்யான்னா ஆளு போயே போயாச்சு. டிவி ரிமோட்டை வேற தூக்கிட்டு போய்ட்டீங்க…” பேசியபடியே அருகில் வந்தவள், அவன் முகத்தில் ஒரு ‘பன்ச்’சை இறக்கினாள்.

“சரி, வர்றப்ப வந்து தொலையட்டும்னு விட்றுப்பேன். அதுக்குள்ள எங்க வீட்லருந்து கால் வந்துச்சா..? நானே போய் எக்ஸ்ட்ரா மளிகை சாமானே வாங்கிட்டு வந்துட்டேன்…”

“என்னது..? வீட்லருந்து கால் வந்துச்சா…?” வயிற்றில் புளியை மட்டுமில்லை, இஞ்சி, கருவேப்பிலை, இன்னபிற சமாச்சாரங்களையும் கரைத்தது போலக் கலக்கிற்று ஜெயராமனுக்கு. “என்ன விஷயமாம்..?”

ஏற்கனவே பூரி போலிருந்த குண்டு முகம் சோலாப்பூரியாய் பூரிக்க வாய் நிறையச் சிரிப்புடன் சொன்னாள். “நாளைக்கு மார்னிங் ட்ரெயின் புடிச்சு எங்கம்மாவும், என் அண்ணனும், அவனோட மூணு புள்ளைங்களும் வர்றாங்க…”

பங்குனி வெயிலில் காயவைத்த சுண்டைக்காய் வற்றல் போலச் சுருங்கியது ஜெயராமனின் முகம். ‘ஓ, அதான் இன்னிக்கு மெல்லக் குத்தினதோட விட்டுட்டாளா.? கடவுளே… அந்த வைரஸ் ஸ்கொயர்ஸ் வர்றதுனால என்னென்ன நடக்கப் போகுதோ’ என்று மனதுக்குள் பயம் பரதம் ஆட, “பேஷ்.. பேஷ்.. ரொம்ப சந்தோஷம்..” என்றது வாய் தன்னிச்சையாக. வேறு ஏதாவது சொல்லித் தொலைத்தால் என்னவாகும் என்பது அவனுக்குத்தானே நன்கு தெரியும்..?

“சந்தோஷம்னு வாயால சொல்லிட்டா மட்டும் பத்துமாங்க..?” திடீர்க் கனிவு பொங்கியது தனலட்சுமியின் குரலில். “வீடு பூரா ஒரே ஒட்றையாருக்கு. எல்லாத்தையும் துப்புரவாக் க்ளீன் பண்ணணும்ங்க. அதுல நீங்கதானே எக்ஸ்பர்ட்..?”

“ஐயோ, நான் என்னிக்கு அதைக் கரெக்ட்டாச் செஞ்சிருக்கேன்..? எனக்கு முதுகு வலிக்குது தனம்..”

“அதுக்கு ஒலக்கையை அழுத்தி ஒத்தடம் தந்தாச் சரியாப் போய்டுமாம். போன வாரம்தான் யூட்யூப்ல பார்த்தேன். செஞ்சிட்டாப் போச்சு…”

“ஐய்யய்யோ… உலக்கையோட நீ வேறயா..? எனக்கு முதுகுக்கு ஒண்ணுமில்லடி, விட்று.”

“அப்பறம்… இங்க பாருங்க… தரைல்லாம் அழுக்காருக்கு. மாப் போட்டு க்ளீன் பண்ணனும். உங்களை மாதிரி யாராலங்க அதை பர்ஃபெக்ட்டா பண்ண முடியும்..? அப்பறம்…”

அவள் அடுக்கடுக்காகப் புகழ்ந்து(!) கொண்டே வேலைகைளை அடுக்க, தலைசுற்றி, அதனால் உடல்சுற்றி, அறுத்துவிட்ட தேங்காய் போலப் பொத்தெனக் கீழே சரிந்தான் ஜெயராமன்.

பாரசீகத்தின் கடைவீதியில் சுற்றிலும் ஷேக்குகள் நின்று வேடிக்கை பார்க்க கன்னாபின்னாவென்று உடலை ஷேக் செய்தபடி காஜல் அகர்வாலுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தான் ஜெயராமன். திடீரென மழை பெய்யத் துவங்க… “ஏய், மழை வருது பாரு. வா ஒதுங்கலாம்…” என்று சொல்வதற்குள் மழையானது இன்னும் பலத்துப் பெய்ய…

“மழை… மழை…” என்று உளறியபடியே கண் விழித்தான் ஜெ.

கண்ணெதிரே தனலட்சுமி இப்போது சினலட்சுமியாக கையில் ஒரு சொம்பு தண்ணீருடன் பிரம்மாண்ட உருவமாய்க் காட்சியளித்தாள்.

“காலைல ஒம்பது மணியடிச்சாச்சு. இன்னும் என்ன தூக்கம்..? இன்னிக்கு என் வீட்டாளுங்க வராங்கன்னு சொன்னேன்ல..? மிஷினுக்குப் போகணும், காய்கறி வாங்கணும்னு எவ்ளவு வேலை கெடக்கு உங்களுக்கு..? சீக்கிரம் குளிச்சு ரெடியாகற வழியப் பாருங்க…” டி.வி. விவாத நிகழ்ச்சியில் பேசுபவள் போல படபடவென நிறுத்தாமல் பொரிந்து தள்ளிவிட்டு நகர்ந்தாள்.

“தோ, அஞ்சே நிமிஷத்துல ரெடியாய்டறேன். உன் ஸ்பெஷல் காபியைக் குடு தனம்” என்றபடி பாத்ரூமை நோக்கி நடந்தான் ஜெ.

கண்ணாடிமுன் நின்று தலைசீவிய நிமிடத்தில் தோளின் பின்னாலிருந்து பிரசவமானது அந்த ஜீனி. “வணக்கம்ணே…” என்றது.

தூக்கிவாரிப் போடத் திரும்பினான். “யார் நீ..?” பீதியுடன் பார்த்தான்.

“அண்ணே… ஆனாலும் இம்பூட்டு மறதி ஆகாதுண்ணே. ஜீனிண்ணே. உன் ஒரு மாச அடிமை. ஞாபகம் வருதா இப்போ..?”

குண்டை உடைத்ததும் கப்பென்று நுரைத்துப் பொங்குகிற சோடா போல, நடந்தவை ப்ளாஷ்கட்டில் ஜெயராமனின் மெமரியில் ஓடின. பிரகாசமானான்.

“வாய்யா.. சொன்னமாதிரியே கரெக்ட்டா வந்துட்டியே…” குஷியாகி, அதை நோக்கித் திரும்பினான்.

“இப்பக் கேளுண்ணே… உனக்கு என்ன வேணும்னு..? ஒன் நிமிட்ல செஞ்சுடறேன்..” என்று சிரித்தது அந்தப் ‘பிரதாபன்’.

“சட்னு கேட்டா எப்டிய்யா..? கொஞ்சம் யோசிக்க விடு..” என்று அவன் சொன்ன அதேநேரம், “யார்ட்ட பேசிட்டிருக்கீங்க..?” என்றபடி கையில் டிபன் தட்டுடன் எண்ட்ரியானாள் தனம்.

“தோ… இந்த மிஸ்டர் ஜீனிகிட்டத்தான்…” என்று கை காட்டினான். அவன் கை காட்டிய திசையில் பார்வையைத் திருப்பியவள், ‘ழே’யென்று விழித்தாள்.

“யாரு..? இங்க யாருமே இல்லையேங்க..?”

“அண்ணே, உங்க கண்ணுக்கு மட்டும்தான் நான் தெரிவேன். இந்த விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்..” என்று ஹிஹித்தது பிரதாபன்.

“நல்லா மறந்தடா நீயி. இப்போ என்ன சொல்லி சமாளிக்கட்டும்..?” என்று மோட்டுவளையைப் பார்த்து யோசிக்க, தனலட்சுமி கலவரமான, சற்றுக் கோபமான பார்வையுடன் அவனை ஏறிட்டாள்.

“என்னாச்சு உங்களுக்கு..? தானாவே பேசிக்கறீங்க, ஏதோ கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க யோசிக்கறவர் மாதிரி மோட்டுவளைய பாத்துட்டு யோசனை வேற… வீட்டு வேலையச் செய்ய டிமிக்கி கொடுக்க ப்ளானா..? அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் பாத்துக்குங்க…”

“வேற என்னவா இருப்ப தனம்..?” அப்பாவியாக ஜெ. கேட்க, கையை ஓங்கியபடி அருகில் வந்தவள், சட்டெனக் காரியம் பெரிது என்பதை உணர்ந்தவளாக,

“வளவளங்காம சட்டுபுட்டுன்னு சாப்ட்டுட்டு வாங்க, ஏகப்பட்ட வேலை செய்ய வேண்டியிருக்கு, சொல்லிட்டேன்…” பொரிந்துவிட்டு நகர்ந்தாள்.

சட்டென்று தீர்மானித்தான் ஜெயராமன்.

“அடேய் ஜீனி, கல்யாணமான நாள்லருந்து என் பேச்சை என்னிக்கும் கேட்டதில்லை என் பொண்டாட்டி!! இப்ப, இந்த நிமிஷத்துலருந்து என் பேச்சைத் தட்டாம அவ கேக்கணும். நான் சொல்லாம எதையும் செய்யக் கூடாது. நான் சொன்னதை உடனே செய்யணும்… இந்த மாதிரி மாத்திக் குடு பாக்கலாம்…”

“பார்யாளைத் தன் பேச்சைக் கேக்க வெக்கறது பரமசிவனாலயே முடியாத காரியம்ணே. ஓப்பனிங்லயே இப்டி பவுன்ஸராப் போட்டு என்னைக் காலி பண்ணப் பாக்கறியே..?” என்றது பிரதாபன்.

“அடப்பாவி… கிரிக்கெட் வேற தெரியுமா உனக்கு..?”

“அதான், பூதங்களுக்கு எல்லாம் தெரியும்னு நேத்தே சொன்னேன்ல..?”

“அது எப்டியோ ஒழியட்டும். நான் கேட்டதைச் செய்ய முடியுமா..? முடியாதா..?”

“செஞ்சிடறேண்ணே. ஆனா என் சக்தி பூரா அதுலயே விரயமாய்டும். அதுனால இன்னிக்கு வேற எந்த உதவியும் உனக்குச் செய்ய முடியாது. இனி ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவேன். பரவால்லியா..?”

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையே இல்ல. இப்ப நீ போற, அவளை மாத்தற… ஓடு…”

டுத்த ஐந்தாவது நிமிடத்தில் காற்றுப் போன பலூனாக வந்தது பிரதாபன். அதன் பின்னாலேயே தலைகுனிந்தபடி தனலட்சுமி.

“அண்ணே… நீங்க கேட்டபடி மாத்தியாச்சு. இனி உங்க பேச்சுக்கு மறுபேச்சே இருக்காது. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன். வர்ட்டா..?” என்றபடி மறைந்து போனது.

ஜெ, தனத்தைப் பார்த்தான்.

“ஏய், என் கிட்டவாடி..” வந்தாள்.

“இப்டி உக்காரு..” உட்கார்ந்தாள்.

“எந்திருடி…’‘ எழுந்து நின்றாள்.

“என் காலைத் தொட்டுக் கும்பிடு…” கும்பிட்டாள்.

“ஆஹா… இத்தனை அதிசயங்களை நடத்திக் காட்டிய ஜீனியே… நீ வாழ்க.. வாழ்க..” எம்பிக் குதித்தான் சந்தோஷத்தில்.

“இதோ கொண்டு வருகிறேன் அத்தான்..” என்றபடி அவள் நடக்கத் தொடங்க, “ஏய்… இரு, என்ன கொண்டு வர்ற..?”

“ஜீனி கேட்டீர்களே அத்தான்…”

“அதெல்லாம் ஒண்ணும் கேக்கல. இதென்ன புதுசா அத்தான், பொத்தான்னுக்கிட்டு…”

“நீங்க என் பிராணநாதரல்லவா..? உங்களை வேறெப்படி அழைப்பது..?’‘

“பிராண…? சரி, சரி, இதுவும் நல்லாத்தான் இருக்கு..” என்றவன், அவளை ஏறிட்டான். ‘சற்றே குண்டானாலும், சற்றே வயதானாலும் அழகாய்த்தான் இருக்கா! பேசாம ஜீனிகிட்ட இவளை இளமையாக்கித் தான்னு கேட்ருக்கலாமோ..?’ என்றொரு எண்ணம் மனதில் ஓட, ‘சரி, நாளைக்கு அதைக் கேட்டு வாங்கிக்கிட்டாப் போகுது’ என்றொரு எக்ஸ்ப்ரஸ் எண்ணமும் குறுக்கே ஓடியது.

அதே நேரத்தில் ரொமான்ஸ் மூடும் அவனைக் கேட்காமலேயே சட்டென்று எண்ட்ரியானது. அவளையே உறுத்துப் பார்த்தான். “என்னங்க இது…? ஷுகர் பேஷண்ட் பாதாம் அல்வாவைப் பாக்கற மாதிரியே பாக்கறீங்களே… உங்க லுக்கே சரியில்லை…” வெட்கினாள்.

“இப்ப நீ என்கிட்ட வருவியாம். என் மடில உக்காந்து கன்னத்துல ஒண்ணு குடுப்பியாம்..” என்று ரொமான்ஸாக அவளைப் பார்த்து ஒரு பக்கமாக கழுத்தைச் சாய்த்து கன்னத்தைக் காட்டினான்.

அடுத்த கணம் நேரே வந்து அவன் மடியில் அமர்ந்தாள். பளிச்சென்று கையை உயர்த்தி…

ஒன்று கொடுத்தாள்.

பளார்!!!

“ஆ…” என்று அலறினான். ‘பாழாப்போன ஜீனி வரத்தை சரியாக் குடுக்காம எஸ்ஸாயிடுச்சா..? பழைய மாதிரியே அடிக்கறாளே…’ என்று மனம் அலற, “ஏண்டி இப்ப அடிச்ச..?” என்று கேட்டான்.

“அத்தான், நீங்கதானே கன்னத்தில் ஒன்று தரச் சொன்னீர்கள். தந்தேன். உங்க பேச்சுக்கு எதிர்ப்பேச்சு உண்டா..?”

“நாசமாப் போச்சு. நான் கேட்டது இதில்லைடி. ஒரு முத்தம்…”

“ஓ, இப்படித் தெளிவாகச் சொல்வதற்கென்ன..?” என்றபடி தான் அறைந்த இடத்திலேயே உதடால் ஒற்றிவிட்டுச் சென்றாள்.

‘சர்த்தான்.. எந்திரன் சிட்டி மாதிரி ஆக்கிடுச்சா அந்த ஜீனி இவளை… இனி இவகிட்ட எது சொன்னாலும் தெளிவா, விரிவாச் சொல்லணும் போல’ தனக்குத்தானே தலையாட்டிக் கொண்டான் ஜெயராமன்.

–பூதம் வரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...