கிருஷ்ணை வந்தாள் | 4 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 4 | மாலா மாதவன்

‘செய்யும் செயலில் உன்னை – நானும்

செயலாய்ப் புகுத்தி வைத்தேன்

செய்கை யாவும் உன்னால்- காளி

செழித்து வளரும் தன்னால்

முன்னம் கடந்த பாதை – தாயே

முழுதும் உந்தன் பலமே

என்னுள் இருந்து இயக்கு – இருந்து

எனது வழியை நடத்து’

பாடலைப் பாடியபடி அகல்யா ஸ்வாமி விளக்கேற்றி வைத்து தியானத்தில் ஆழ்ந்தாள். ஆழ்மனம் தெளிவாயில்லை. மீண்டும் முயன்றாள். குழப்பமுற்ற மனம் தெளிய மீண்டும் நடந்ததை எண்ணிப் பார்த்தாள்.

வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ஆயிற்று. ஆயினும் அப்பா முன் போல் கலகலவென்று பேசவில்லை. ஏதோ சிந்தனை வயப்பட்டவராக இருந்தார். என்ன யோசனையோ தெரியவில்லை. இப்படி யோசித்து யோசித்து தான் நெஞ்சுவலியை இழுத்து விட்டுக் கொண்டாரோ? எது நடக்குமோ அது நடக்கப் போகிறது. எதற்கு இந்த யோசனை? பேசவும் மாட்டேங்கிறார். பேசினாலாவது என்னவென்று கேட்கலாம். அன்று ஆஸ்பத்திரியில் பெரியம்மாவுடன் கேண்டினில் இருந்து வரும் போது வெளியே ஒரு கறுப்பு குடையை வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் அறையை ஒட்டி நின்று கொண்டிருந்தார்.

அவர் வழியில் போகும் இன்னொருவரிடம் என்னவோ சொன்னாரே! ம்ம்ம்! ஏதோ முணுமுணுத்தார். சடாரென்று என்னைப் பார்த்த அவர் பார்வையிலும் ஒரு மிரட்சி தெரிந்தது. ஹா..ன்! பைத்தியம் என்றார். நானென்ன பைத்தியம்? ஓஹோ.. கிருஷ்ணை அங்கிருக்க நான் அவரை உட்காராதீர்கள்ன்னு சொன்னேன். அதனாலயா? போறது. நான் பைத்தியமாவே இருந்துக்கறேன்.

அப்புறம் என்னமோ சொன்னாரே.. ம்ம்! ஆழ்ந்து யோசித்தவள்.. வனஸ்பதிக்கு இவங்க ரூமுல என்ன வேலைன்னார். இல்ல, வாசஸ்பதிக்கு!

ஆமா.. யார் அந்த வாசஸ்பதி? வயசானவரா? சின்னவரா? அவருக்கு என் அப்பா கிட்ட என்ன வேலை? லட்சக்கணக்கா பணத்தை அப்பாவுக்காகக் கட்டி வந்து பார்க்கற அளவுக்கு? அந்த வனஸ்பதி பத்தி அப்பாவும் எதுவுமே என்னிடம் சொல்லல.. ஒருவேளை அதான் அவர் மனக் குழப்பத்துக்குக் காரணமோ?

இந்தக் கிருஷ்ணையும் வரலை. சும்மா சும்மா ஓடி வந்து நிப்பா. இப்ப என்னடான்னா காணவே காணோம். ஊர்ப் பொங்கலில் தரிசனம் அளித்து ஓய்ந்து போய் உட்கார்ந்திருக்கா போலிருக்கு.

ம்ம்! நாம் மனதை ஒருமுகப் படுத்தி அம்மனைப் பாடுவோம். கிருஷ்ணையாய் அவள் தருவாள் ஆயிரம் பலம்.

நினைத்தவள் கண்ணை மூடி தீவிரமாய்த் தியானத்தில் ஆழ்ந்தாள். மனம் கிருஷ்ணை கிருஷ்ணை என ஜபித்தது.

“என்ன அகல்யா? என்னைத் தீவிரமாய் அழைக்கிறாய் போல. தகதகவெனப் பட்டுப் பாவாடையில் ஓடோடி வந்தாள் கிருஷ்ணை.

” ம்! அழைத்தேன். நீ சொன்னபடியே அப்பா நல்லபடியாய் வந்து விட்டார். அதனால் அழைத்தேன். இப்போது எனக்கும் அப்பாவுக்கும் நடுவே ஒரு வனஸ்பதி வந்திருக்கிறாரே. அது யார் கிருஷ்ணை? ” ஆவலுடன் கேட்டாள் அகல்யா.

“ம்ம்! வாசஸ்பதி என்றால் பேச்சுக்கு அதிபதி என்று பொருள். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருநூற்றி பதினெட்டாவது நாமமாய் வருவது இந்தப் பெயர். பேச்சாற்றலைத் தருபவன் உனக்கு என்ன தரப் போகிறானோ அகல்யா!” பூடகமாய்ச் சிரித்தாள் கிருஷ்ணை.

“பேச்சாற்றலா? இப்ப நானென்ன பேசாமையா இருக்கேன்? அதெல்லாம் வேண்டாம். எனக்கு எதுவும் தர வேண்டாம். எங்க அப்பா கிட்ட இருந்து என்னை பிரிக்கவும் வேண்டாம்.”

“ஏன் இப்படி சொல்ற அகல்யா? உனக்கான வாழ்வு உங்க அப்பா கூட மட்டுமல்ல! இன்னும் உன் வாழ்க்கைப் பாதையில கணவர், குழந்தை அப்படின்னு நிறைய விஷயங்கள் இருக்கு. அதுக்குள்ள என்ன விட்டுடுன்னா எப்படி? இந்த கிருஷ்ணை நீ கூப்பிட்ட உடனே உன்னோட அம்மாவா வந்தேன் இல்ல. நான் சொல்றத கேக்க மாட்டியா?”

*அப்படின்னா நீ தான் எங்க அப்பா மனசுல புகுந்து அந்த வனஸ்பதியை வர வச்சியோ?”

“என் ஆசை பெண்ணே! உனக்கு தெரியாமல் இருக்குமா? கிருஷ்ணையை முழுதும் புரிந்து கொண்டவள் நீதான்! அம்மாவாக உனக்கு இது கூட பண்ண மாட்டேனா?”

“அப்போ அம்மாவாகவே வாயேன்! ஏன் இப்படி குட்டி பொண்ணா என்கிட்ட வர? அதுவும் வேற யார் கண்ணுக்கும் தெரியாம! எல்லோரும் என்னைப் பைத்தியம்ன்னு சொல்றா. தவிர, எங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு எனக்கு மறந்தே போச்சு. நீ எங்க அம்மா மாதிரி பெரிய பொம்மனாட்டியா உரு எடுத்துண்டு வாயேன் நீ என்னோட நிஜமாவே இருந்தா நானும் எல்லாரும் தெரிற மாதிரி பேசுவேன். என்னை யாரும் பைத்தியம்ன்னு சொல்ல மாட்டா. ஆமா, ஏன் எனக்கு மட்டும் தெரியற? நான் பண்ணின முன் ஜென்மப் பலனா?”

“ம்ம். மனிதனின் கணக்கில் தெய்வபலம் என்று ஒரு கட்டமுண்டு. அது உனக்கு பலமாக இருந்ததால் உனக்கு என் தொடர்பு ஏற்பட்டது. விதிக் கணக்கு அகல்யா. விதி வழி ஆடும் பொம்மைகள் தானே மனிதர்கள். உனக்கான கணக்கு முடியும் போது நான் உன்னுடன் உருவமாய் வந்து பேச மாட்டேன். ஆனால் உன்னைக் காப்பாற்றும் சக்தியாய் என்றும் இருப்பேன். ஆனால் உன்னைப் பேசுபவர்களைப் பற்றிக் கவலைப் படாதே. பார்வைகள் மாறும்!”

“ஆ! அப்படியா! எனக்கு எதுவுமே வேண்டாம் கிருஷ்ணை. நீ எப்பவும் என் கூட இருந்தாப் போதும்.”

அகல்யா கண்ணீர் விட்டு அழுதாள்.

பின் நின்று அகல்யாவுக்கு தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்த சுந்தரவதனன், ஜோதியிடம் அகல்யாவை காண்பித்தார்.

“பார்த்தாயோன்னோ? இப்படித் தான் தனக்குத் தானே பேசிக்கறா. தானே பாடிக்கறா. இதோ இப்ப அழுதும் ஆச்சு.. எம் பொண்ணுக்கு என்னமோ ஆச்சு ஜோதிம்மா. எந்தக் காட்டேரியோ அவளை ஆண்டுண்டு இருக்கு.”

“இது தான் உன் மனக் குழப்பத்துக்குக் காரணமா சுந்தர்?”

சுந்தரவதனனும் ஜோதியும் ஒரு வயதினர் தான்.. ஜோதியின் இரட்டை சகோதரி வேணியைத் தான் சுந்தரவதனன் மணந்தது. அதுவும் அவர் வீட்டினரை எதிர்த்து.

” ஆமா அன்னைக்கு நான் வீட்ட எதுத்துண்டு வரும்போது என்னைப் பெத்தவா என்ன சாபம் கொடுத்தா தெரியுமா? எங்கள அம்போன்னு விட்டுட்டுப் போறியே. உன் வம்சமே விளங்காதுடான்னு சாபம் கொடுத்தா. அது இப்ப பலிச்சுடுத்தோன்னு பயமா இருக்கு ஜோதிம்மா.”

“அதுக்குப் பயந்து தான் தொடர்பே இல்லாத உங்கக்காவோட திரும்பச் சேர்ந்துக்க நினைச்சியா சுந்தர்? அன்னிக்கு வாசஸ்பதி வந்ததும் அதுக்காகத் தான் இல்லையா? இவர் சொன்னார் வந்திருந்தான்னு. நானும் அகல்யாவும் கேண்டீனில் இருந்து வரதுக்குள்ள நீ தான் அவனை அனுப்பிச்சதா சொன்னார்.”

“ஆமா. இப்பவே அகல்யா பார்த்தா யாரு என்னன்னு தொளைச்சு எடுப்பான்னு தான் நீங்க வரதுக்குள்ள அவனை அனுப்பிட்டேன். ஆனா ராமனாதனுக்குத் தெரியும் எல்லாமே!”

“ஆமா அவர் தான் சொன்னார். இப்படி விஷயம்ன்னு. நிஜமாவே அகல்யாக்கு சித்தம் கலங்கிடுச்சுன்னு சொல்றியா? அதான் உன் அக்கா வீட்டுலயே மாப்பிள்ளை பார்க்கறியா? அகல்யாவுக்கு சரிவருமா அந்த இடம்?”

“ஜோதிம்மா! மாப்பிள்ளை யாருன்னு இன்னும் எனக்குத் தெரியாது. அலமேலு அக்கா வீட்டுல வாசஸ்பதிக்கு மேல இன்னொரு அண்ணனுண்டு.. அவன் பேரு மனோகரன். அவனுக்கும் இன்னும் கல்யாணமாகல. ஏன்னா அவன் கொஞ்சம் சித்த சுவாதீனம் இல்லாதவன்னு வாசஸ்பதி சொன்னாப்புல. நம்ம அகல்யா இப்படி இருக்கறதால யார் வீட்டுல கொடுக்க? மனோகரனுக்கே கொடுக்கலாமான்னு ஒரு யோசனை.”

“ஹான்.. கிளி மாதிரி பொண்ணை ஒரு பைத்தியத்துக்குக் கொடுக்கறதா? ஏன் சுந்தர் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்க?”

“நம்ம பொண்ணு நிலைமை தெரியாமச் சொல்ற. அவன் பைத்தியம்ன்னா இவ யாரு?”

“அத அந்த வாசஸ்பதிட்ட சொல்லிட்டியா?”

“இல்ல.. நான் சொல்லலை.. ஆனா குறிப்பு காட்டி இருக்கேன். எங்க அகல்யா இனி உங்க பொறுப்புன்னேன். நான் பார்த்துக்கறேன் மாமான்னான்!”

“அதெப்படி சரியா அவன் உன்னைப் பார்க்க வந்தான்? பணமும் கட்டினான்.. யார் சொன்னாங்களாம் அவனுக்கு?”

“நான் தான் ஐசியூவில் இருந்து வெளியில் வரவும் என் நிலைமை யோசிச்சு அவனுக்கு போன் செஞ்சேன் ஜோதிம்மா. என் காதில் யாரோ சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அகல்யா உன் அக்கா அலமேலு வீட்டுக்குப் போக வேண்டியவள். அதற்கான நேரம் இது தான். வாசஸ்பதியைக் கூப்பிடு.. கூப்பிடு என்று. இன்னொரு அதிசயம் என்னன்னா நான் அவன் நம்பரை என் போனில் வைச்சுக்கவே இல்லை. ஆனால் அந்த நம்பர் என் போனில் இருந்தது. யார் பதிந்து வைத்திருப்பார்கள்? எனக்கோ அகல்யாவுக்கோ அவர்களோடு எந்தத் தொடர்பும் கிடையாது. அதிசயமாத் தான் இருந்தது. ஆனாலும் என் காதில் விடாமல் ஒலித்த அந்தக் குரலை மதித்து அவர்களை தொடர்பு கொண்டேன்!”

“ம்ம்! ஏதோ நம்மைச் சுத்திச் செயல்ல இருக்கு. பார்ப்போம். எல்லாத்துக்கும் நம்ம ஆலம்பாடி காளி இருக்கா. அவளுக்கு நாளை பொங்கல் வைச்சு சேவிச்சுடுவோம். எல்லாம் சரியாயிடும். கவலைப் படாதே!”

“ம்ம்.. சரிம்மா. எனக்கும் ஆஸ்பத்திரி சேர்ந்ததுமே மனசு கலக்கமாயிடுத்து இப்படி அகல்யாவைத் தனியே விட்டுட்டுப் போறோமேன்னு. காளியம்மனுக்குப் பொங்கல் வைக்கறேன்னு வேண்டிண்டேன். போவோம். நாளைக்கு நல்ல நாளா பாரு! ராமனாதனையும் கேளு. நாள் பார்த்துச் சொல்வான்.”

ஜோதி எழுந்து போய் காலண்டரைப் பார்த்தாள்.

“ஆமா சுந்தர். நாள் நன்னா இருக்கு. முஹூர்த்த நாள் தான். சித்த யோகம் வேற. போய்ட்டு வந்துடுவோம். இன்னொன்னும் சொல்லணும்ன்னு நினைச்சேன். ரெண்டு பேரும் இங்க தனியா இருக்காம எங்களோட தேவகோட்டைக்கு வந்துடுங்களேன். நானும் போட்டது போட்ட படி கதவைப் பூட்டிட்டு வந்துட்டேன். இவரும் அதே தான் சொல்றார். என்னங்க சொல்லுங்களேன்!”. ராமனாதனைத் துணைக்கு அழைத்தாள்.

” ஆமாப்பா. அங்க வந்து உடம்பை பார்த்துண்டு போலாம்.. அகல்யாவுக்கும் இடம் மாற்றம் வேணும்ப்பா இப்போ. ஒத்தைப் பெண்ணா இருக்கறதால தான் தனக்குத் தானே பேசிக்கறா. அவளுக்கு ஒண்ணும் நீ சொல்ற மாதிரி சித்தம் கலங்கலை!”

“அகல்யா இங்க முதியோர் கல்வி எடுக்கறா. தவிர டியூசனும் எடுக்கறாளே ராமனாதன்! அவள் கிட்ட தான் கேட்கணும். வேலையை விட்டுட்டு வராளோ என்னவோ?”

கொல்லைப்புறத் திண்ணையில் அமர்ந்து கிருஷ்ணையுடன் இன்னும் பேசிக் கொண்டிருந்தாள் அகல்யா. கொல்லைக்கு நேர் பின்னே வயலில் வேலை முடிந்து போவோரின் பாதை. அங்கிருந்து பார்ப்போருக்கு அவள் தன்னால் பேசிக் கொள்வது போல் இருந்தது.

“அகல்யா! உன் அப்பா உன்னோடு ஊரை விட்டே கிளம்பப் போறாராம்!” கிருஷ்ணை சொன்னாள்.

“ஊரை விட்டா.. அம்மாடி.. உன்னை விட்டா? நான் போகவே மாட்டேன் கிருஷ்ணை.” அழுதாள் அகல்யா.

“நான் தான் உன்னோடயே வந்துடுவேனே. உனக்கான பாதை இங்கு இல்லை. இனி தான் உன் சாம்ராஜ்யம் விரியும். அத்தனைக்கும் நானிருப்பேன் உன் கூட. பிறகென்ன பயம்?” கிருஷ்ணை ஆறுதலாய் சொன்னாள்.

“நீ என் அம்மாவா கிருஷ்ணை? என்னை ஒவ்வொரு இடத்திலும் செதுக்கற. புரிய வைக்கற. ஆனா என்னை மட்டும் இந்த ஊரை விட்டுப் போகச் சொல்றியே?”

கிருஷ்ணை சிரித்தாள்.

“குலதெய்வம் என்று கொண்டாடும் எத்தனை பெண்கள் கல்யாணமாகி புக்ககம் போனதும் பிறந்த வீட்டுக் குல தெய்வத்தைக் கும்பிட வருகின்றனர்? அப்படியே மறந்து அவரவர் வாழ்க்கைப் பாதை மாறி விடும். அத்தெய்வம் தான் எங்கே தன்னைக் கொண்டாடிய பெண்களைக் காணோமே என்று தேடிக் கொண்டிருக்கும் என்னைப் போல. நீ எப்படி அகல்யா? கல்யாணமானதும் என்னை மறந்துடுவியா?”

“கல்யாணமா? எனக்கா? அப்போ உன்னை மறந்துடுவேனா?” கேட்ட அகல்யா தன்னுள் யோசனையில் ஆழ்ந்து போனாள்.

“என்ன சுந்தர்! இன்னுமா அகல்யா உள்ள வரலை? இரு! போய் கூட்டிண்டு வரேன். ஸ்வாமி விளக்கேற்றியதில் இருந்து இப்படிப் போய் உட்கார்ந்திருக்கா. ஒரு மணி நேரம் ஆச்சு!” சொன்ன ஜோதி கொல்லைப்புறம் சென்று திண்ணையில் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்த அகல்யாவைத் தொட்டாள்.

–கிருஷ்ணை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...