மக்கள் தொகையில் சீனாவை முந்துகிறது இந்தியா
நேற்றுடன் (15 செவ்வாய்க்கிழமை) உலகம் மக்கள் தொகை 800 கோடியைக் கடந்துள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவை அடுத்த ஆண்டில் இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு 700 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 2022ல் 800 கோடியாகவும், அதுவே 2037ல் 900 கோடியாகவும், 2037-ம் ஆண்டுக்குள் 900 கோடியாக உயரும். இவர்களில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மக்கள் அதிகளவில் இருக்கும். ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வரும் 2058ல் மக்கள் தொகை 1000 கோடியாகவும் உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரித்ததில் அதிக பங்களிப்புள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அதே நேரத்தில் உலகின் அதிக மக்கள் தொகையுள்ள நாடான சீனாவில் இருந்து 7 கோடியே 30 லட்சம் பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.
கடந்த 1975ஆம் ஆண்டு 400 கோடியை எட்டிய உலக மக்கள் தொகை 47 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதன்பின் மக்கள் தொகை இரட்டிப்பாகும் வாய்ப்பு இல்லை என்றே ஐ.நா.சபை மக்கள் தொகை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
“கடந்த ஆண்டு 140 கோடி மக்கள் தொகையாக இருந்த இந்தியா, இரண்டாவது பெரிய நாடாக இருந்த சீனாவை விஞ்சி, 2023க்குள் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்” என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) இன்று தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைப்பு இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்படுத்தலைப் பாராட்டியது, இருந்தாலும் அது மக்கள் தொகையை இன்னும் கட்டுப்படுத்தலாம் எனக் குறிப்பிட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் குழந்தை பிறப்பு குறையும், அதே நேரத்தில் மக்களின் ஆயுட்காலம் உயரும். இதனால் வரும் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் என்பது சற்று குறைவாகவே இருக்கும்.
“இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நிலையானதாகத் தோன்றுகிறது என்பது நல்ல செய்தி. அதற்குக் காரணம் மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை, தேசிய அளவில் 2.2ல் இருந்து 2.0 ஆகக் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 69.7 சதவிகிதத்தைக் கொண்ட மொத்தம் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கருவுறுதல் விகிதத்தை 2.1 என்ற மாற்றுநிலைக்குக் கீழே அடைந்துள்ளன” என்று UNFPA கூறியது. இது மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியா தனது இளையவர்களுக்காக முதலீடு செய்வதால், எதிர்காலத்தில் அதிக விகிதத்தில் உள்ள வயதானவர்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்வதற்கு மக்கள் தொகை மாற்றத்திற்கான திட்டங்கள் தேவைப்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்ற பெருமையை சீனாவிடமிருந்து இந்தியா அடுத்தாண்டில் தட்டிச் செல்லும்.
தற்போது சீனாவின் மக்கள் தொகை 142.6 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 141.2 கோடி. வரும் 2050ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை 166.8 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 131.70 கோடியாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கிறது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையில் 15-64 வயதுடையோர் எண்ணிக்கை, 68 சதவிகிதமாக உள்ளது. அதேநேரத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகும். வளர்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிகமுள்ள நாடு என்கிற பெருமையை 2030ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியா தக்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
‘வளரும் நாடான இந்தியா, வளமான நாடாகவும் ஆகவேண்டும். அது மக்கள் தொகையில் மட்டுமல்ல, அனைத்துத் தேவைகளையும் அடைவதில்’ என்பது மக்கள் சேவகர்களின் கோரிக்கை.