கண்ணே, கொல்லாதே | 4 | சாய்ரேணு

 கண்ணே, கொல்லாதே | 4 | சாய்ரேணு

4. எதிராஜு…

வாயில்மணி அடிக்கவே, அவசர அவசரமாகத்தான் அருந்திக் கொண்டிருந்தவற்றை உள்ளே மறைவாக வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் எதிராஜு.

“யாரு, தெரிலீங்களே” என்றான்.

“கௌதமோட ஃப்ரெண்ட் நான்” என்றவாறே உள்ளே நுழைந்தான் தர்மா.

“நான் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லீங்களே?” என்றான் எதிராஜு சந்தேகமாக.

“இதுவரை பார்க்காட்டா என்ன எதிராஜு? இப்போ பாரேன்” என்றவாறே ஸ்வாதீனமாக உள்ளே வந்து அமர்ந்துகொண்டான் தர்மா. சுற்றிலும் பார்த்தான், வீட்டில் விசேஷமாக எதுவுமில்லை. வீடு சுத்தமாகவும் இல்லை.

அவன் பார்வையைப் புரிந்துகொண்டவனாய் “என் பொண்ணுதான் வீட்டைப் பார்த்துக்கிட்டா இத்தனைநாளா. இப்போ கட்டிக் கொடுத்துட்டேன். தனியாத்தான் இருக்கேன்” என்றான்.

“எப்போ கட்டிக் கொடுத்த, எதிராஜு? ஒரு மாசம் இருக்குமா?” என்று கேட்டான் தர்மா.

“இல்லை, பத்து நாளாச்சு…” என்று சொன்னவன் “அதிருக்கட்டும், நீங்க ஏன் இதெல்லாம் கேட்கறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று பதட்டமாய்க் கேட்டான் எதிராஜு.

“சொன்னேனே, நான் கௌதமோட ஃப்ரெண்ட். அவனும் நீயும்தான் தோஸ்தாச்சே, அவன் அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னாடி உங்கிட்ட ஏதாவது சொன்னானான்னு எங்களுக்குத் தெரியணும். புரிஞ்சுதா? எந்தப் பிரச்சனையும் பண்ணாம பாட ஆரம்பி, கண்ணா!” என்று தர்மா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அச்யுத் உள்ளே நுழைந்தான். ஆறடி உயரத்தில் ரௌடி கெட்டப்பில் இருந்த அச்யுத்தைப் பார்த்ததுமே எதிராஜு நடுங்கினான். அச்யுத் சதுரா டிடக்டிவ் ஏஜன்சியில் வேலை செய்பவன் என்று அவனுக்கு எப்படித் தெரியும்?

“நீங்க கௌதம் பணம் கொடுக்க வேண்டிய ஆளுங்களா?” என்றான் குரல் நடுங்க.

“பார்த்தா எப்படித் தெரியுது?” என்றான் தர்மா, புன்னகையுடன்.

“என்ன பாஸ், பேசிட்டிருக்கீங்க? இவனை நாலு தட்டுத் தட்டினா கௌதம் பணத்தை எங்கே ஒளிச்சு வெச்சிருக்கான்னு சொல்லிடுவான்” என்றான் அச்யுத்.

“ஐயையோ, எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க சார். கௌதம் பணம் தேடித்தான் பெரிய வீட்டுக்கு வந்தாருன்னுகூட எனக்குத் தெரியாதுங்க! அவர் வந்தப்போ நான் வீட்டிலேயே இல்லீங்க! பொண்ணு கல்யாண விஷயமா லீவு போட்டிருந்தேன். நான் அவரைப் பார்க்கவே இல்லீங்க” என்று அலறினான் எதிராஜு.

தர்மா “அப்படின்னா நாங்க உள்ளே வந்தபோது, கௌதம் பணம் கொடுக்க வேண்டிய ஆட்கள் நீங்கதானான்னு எப்படிக் கேட்ட எதிராஜு? அது போலீஸ் ரொம்ப ரகசியமா வெச்சிருக்கற விஷயம் ஆச்சே! வீட்டில் இருந்திருந்தா நீ அவங்க பேசிக்கறதைக் கேட்டிருக்கலாம். நீயோ ஐயா சாகற வரை வீட்டுக்கே போகல” என்று சிரிப்புடன் கேட்டான்.

எதிராஜு திணறினான்.

அச்யுத் “ஒரே நிமிஷம். நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் கறக்கறேன் பாருங்க” என்றான், விரல்களில் சொடக்கு எடுத்தவாறே.

“வயலன்ஸ் வேணாம் இப்போதைக்கு” என்று எச்சரித்தான் தர்மா.

“சரி பாஸ்” என்று சொல்லிவிட்டு எதிராஜு பலவீனமாய் எதிர்க்க, அவனுடைய சிறிய வீட்டை முழுவதுமாகச் சோதனை போட்டான் அச்யுத். அரிசி வைத்திருந்த பெரிய டப்பாவைத் திறந்ததும் “பாஸ், இங்க பாருங்க” என்று காட்டினான்.

பணம்.

“எவ்வளவுன்னு எண்ணிட்டியா, அச்யுத்?” என்றான் போஸ், கைகளில் லத்தியைச் சுழலவிட்டவாறே. அதன் ஒவ்வொரு சுழற்சிக்கும் எதிராஜுவின் உடல் ஒருமுறை நடுங்கியது.

“தொண்ணூறாயிரம் ரூபாய்” என்றான் அச்யுத். “நோட்டுக் கட்டிலிருந்து பிரிச்ச மாதிரி இருக்கு” என்று சேர்த்துக் கொண்டான்.

“அப்போ, இதில் ஒரு லட்ச ரூபாய் இருந்திருக்கணும். பத்தாயிரம் ரூபாயை நீ செலவு செய்துட்டதா வெச்சுப்போம். என்ன செலவு பண்ணின?” என்ற்று கேட்டான் போஸ்.

“பொ… பொ… பொண்ணு கல்யாணத்துக்கு…” என்று குழறினான் எதிராஜு.

“பாத்தியா, வயசுல பெரியவன்னு மரியாதை கொடுத்தா வாங்கிக்க மாட்டேங்கறியே! அப்புறம் நான் போலீஸ் மரியாதையைக் காட்ட வேண்டியிருக்கும்! கையில ஒரு லட்ச ரூபாயை வெச்சுக்கிட்டு, பத்தாயிரம் ரூபாய் பொண்ணு கல்யாணத்திற்குச் செலவழிச்சியா? உண்மையைச் சொல்லு மேன்” என்று மிரட்டினான் போஸ்.

“உண்மை இப்போ தெரிஞ்சிடும் போஸ்” என்றவாறே உள்ளே நுழைந்தாள் தன்யா. கூட ஒரு செழுமையான மனிதரை அழைத்துக் கொண்டு, தர்ஷினி.

“இது, ராம்லால் சேட். இந்த ஏரியாவில் வட்டிக்கடை வெச்சிருக்கார். சேட்ஜி, இந்த எதிராஜு உங்ககிட்ட கடன் வாங்கியதுண்டா?” என்று அவரைப் பார்த்துத் திரும்பிக் கேட்டாள் தன்யா.

“அப்பப்போ வாங்கறான், அப்பப்போ கொடுக்கறான்” என்றார் சேட், இலக்கணம் மாறாத மார்வாடித் தமிழில்.

“கடைசியா எப்போ கடன் வாங்கினான்?”

“ஒரு மாசம் முன்னே. பொண்ணு ஷாதிக்கு வேண்டிப் பணம் கேட்டாருங்கோ!”

“கடனுக்கு முதல் மாச வட்டி கட்டிட்டானா?”

“இன்னாங்கோ ஜோக் பண்றான்? ஒரு வாரம் முன்னே மொத்தப் பணத்தையும் திருப்பிக் கொடுத்துட்டான். அசல் வந்திருச்சு, நாங்க வட்டி கேக்கறானில்லே” என்றார் சேட்ஜி.

“அசல் வந்த அதிர்ச்சியில் வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டீங்களாக்கும்! சாதாரணமா அசலுக்கு மேலே வட்டி வளர்ந்துட்டுப் போறதுதானே உங்களுக்குப் பழக்கம்? சரிசரி, இப்போ விஷயம் அது இல்லை. இந்த விவகாரத்துக்கு ஏதாவது ப்ரூஃப் வெச்சிருக்கிங்களா?”

“இன்னா பேட்டி, எங்க கணக்கு நோட்டில் எல்லாம் எளுதி வெச்சிருக்கான், இப்படி டவுட் படுது! வாக்கு சுத்தம் இல்லேன்னா, சேட் வியாபாரம் பண்றானில்லே, ஜசல்மேர் மேலே போறான்!” என்று குறைப்பட்டுக் கொண்டார் சேட்.

“நோட்டைக் காட்டிட்டு எங்கே வேணும்னாலும் போங்க” என்றான் போஸ் குறுக்கிட்டு.

“பாருங்கோ இன்ஸ்பெக்டர் சாப். நாங்க பொய் சொல்றானில்லே. எங்க மேலே இவன் கம்ப்ளெயிண்ட் பண்றானா?” என்று எதிராஜுவை முறைத்தவாறே கணக்கு நோட்டைப் பிரித்து நீட்டினார் சேட்ஜி.

போஸ் தேதிக் ‘கால’த்தைக் கவனித்தான். பத்தாயிரம் ரூபாய்க் கடன் ஒரு மாதம் முன்பு வாங்கப்பட்டிருந்தது. ஏழு நாட்கள் முன்பு திரும்பக் கொடுக்கப்பட்டிருந்தது.

“மாசிலாமணி இறந்ததுக்கு அடுத்த நாளைக்கு அடுத்த நாள்” என்று முணுமுணுத்தான் போஸ். பிறகு “சரி, சேட்ஜி, நீங்க கிளம்பலாம். நோட்டு பத்திரம். கோர்ட்டிலே இதைக் காட்டச் சொன்னால் வந்து காட்டணும்” என்று எச்சரித்தான் போஸ்.

சேட்ஜி விஷயம் என்ன தெரிந்துகொள்வதற்காகச் சற்றுத் தயங்கி நின்றார். அவரை இரு கான்ஸ்டபிள்கள் அன்புடன் தள்ளிக் கொண்டுபோய் வெளியே விட்டார்கள்.

“ஒரு லட்ச ரூபாய்…” என்றான் போஸ், சிந்தித்தவாறே.

“ஒரு நிமிஷம்” என்று அவன் சிந்தனையைக் கலைத்த தர்ஷினி வெளியே போய்விட்டு ஒரு நடுத்தர வயது நபருடன் திரும்பி வந்தாள். “இவர் எதிராஜு பொண்ணைக் கட்டிக்கிட்ட மாப்பிள்ளையோட தாய்மாமன்” என்று அறிமுகம் செய்துவைத்தாள்.

அவர் போஸைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார்.

“ஐயா, உங்க வீட்டுப் பையனுக்கு இவர் என்னென்ன சீர் செய்தாருன்னு சொல்லுங்க” என்றாள் தர்ஷினி.

இவர் விழித்தார். “எங்கள்ள பிள்ளை வீட்டுக்காரங்கதான் கல்யாணம் செய்வாங்க. பொண்ணு வீட்டுல வரதட்சணையா கொடுக்கற பணத்தை வெச்சு இவங்க கல்யாணச் செலவைப் பார்த்துப்பாங்க. இவரால ஒண்ணும் கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சுதான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம். பொண்ணு வீட்டுக்கு அடங்கின, தங்கமான பொண்ணா இருந்ததாலே…

“கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை, பொண்ணு ட்ரெஸ்க்காகப் பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தாரு. கல்யாணம் முடிஞ்சு நாலு நாள்ள எங்க குடும்பங்கள்ள மறுவீடுன்னு ஒரு சடங்கு உண்டு…”

“மாப்பிள்ளை-பொண்ணு பொண்ணோட பிறந்த வீட்டுக்கு வரது தானே?” என்று கேட்டான் போஸ், இவரை எதற்குக் கூட்டிவந்திருக்கிறாள் தர்ஷினி என்று ஊகிக்க முயன்றவாறே.

“ஆமாங்க. அப்போ இவர் தட்டில் வெச்சு ஒரு லட்ச ரூபா கொடுத்தாரு. கல்யாணத்தும்போது செய்ய முடியலைன்னும், இப்போ செய்யறதாகவும் சொல்லி, பையன் அவர் மகளைக் கண் கலங்காமப் பார்த்துக்கணும்னு கேட்டுக்கிட்டாரு… அவரா தாங்க கொடுத்தாரு, நாங்க ஒண்ணும் கேக்கல” என்றார் அவர், எங்கே வரதட்சிணை வழக்கு ஏதேனும் தொடரப்பட்டிருக்கிறதோ என்று பயந்து.

போஸ் இந்தத் தகவலை ஜீரணித்தவாறே “நீங்க போலாம்” என்றான்.

–இன்னும் வரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...