கண்ணே, கொல்லாதே! | 1 | சாய்ரேணு
1. அரெஸ்ட்!
“மிஸ்டர் கௌதம், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்றான் போஸ்.
கௌதம் விழித்தான். பிறகு மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தான்.
“கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ். இரண்டே நாளில் அக்யூஸ்டைக் கண்டுபிடிச்சுட்டீங்களே! அதோட, இந்தக் கௌதமைக் கம்பிக்குப் பின்னால் வெச்சுப் பார்க்கணும்னு குறைஞ்சது அரை டஜன் இன்ஸ்பெக்டர்கள் விரும்பறாங்க. வெல்டன்” என்றார் கமிஷனர்.
“தாங்க் யூ சார்” என்றான் போஸ். மனதில் பெருமை நிரம்பியிருந்தது. ஒரு தேர்ந்த குற்றவாளியைப் பிடித்திருக்கிறான்! அதுவும் கொலைக் குற்றத்திற்கு!
“உட்காருங்க. கேஸைச் சுருக்கமா சொல்லுங்க” என்றார் கமிஷனர்.
“பிரபல தொழிலதிபர் மிஸ்டர் மாசிலாமணி, இரண்டு நாட்களுக்கு முன்னால் இறந்துபோனார். ஹார்ட்-அரெஸ்ட்.
“மாசிலாமணிக்கு ரெண்டு மகன்கள். அவங்கள்ள மூத்தவன்தான் நாம அரெஸ்ட் பண்ணியிருக்கும் கௌதம். இரண்டாவது பிள்ளை மகாவீர்.”
“என்னய்யா, இவர் பேர் மாசிலாமணி, பிள்ளைங்க பேரில் வடநாட்டு வாடை அடிக்குது!” என்று சிரித்தார் கமிஷனர்.
“மாசிலாமணி தன்னை ஒரு நான்-கன்ஃபார்மிஸ்ட்னு சொல்லிக்கிட்டார் சார். நம் தமிழ்நாட்டில் வழக்கொழிந்துபோன பௌத்த, ஜைன மதங்களின் பெயர்களை வைத்திருக்கார். அவங்க மனைவி குலதெய்வத்துடைய பெயரையோ, தாத்தா பெயரையோ வைக்கச் சொன்னதற்கு எதிராக!”
கமிஷனர் “மேலே சொல்” என்பதுபோல் சைகை செய்தார்.
“கௌதம் சின்னக் குழந்தையா இருக்கும்போதிலிருந்தே கெட்ட குணம் உள்ளவன். ஸ்கூலில் திருட்டு, பத்து வயசிலேயே பீடி, பதினைந்து வயசில் தண்ணி, காலேஜில் கஞ்சான்னு எல்லாப் பழக்கமும் வந்தாச்சு. ஸ்கூலிலிருந்து இரண்டு முறை வெளியே அனுப்பப்பட்டு, மாசிலாமணி இன்ஃப்ளூயன்ஸால் திருப்பிச் சேர்க்கப்பட்டவன்.
“காலேஜிலும் ஏகப்பட்ட கம்ப்ளெயின்ட்ஸ். ட்ராப்-அவுட். ஒருமுறை அவங்க அப்பாவோட கையெழுத்தை ஃபோர்ஜரி பண்ணிப் பெரிய தொகை எடுத்திருக்கான். அப்போ மாசிலாமணி அவனை வீட்டைவிட்டு வெளியே துரத்திட்டார். அப்புறம் ஒரு முழு க்ரிமினலா வாழ்க்கை நடத்தியிருக்கான். ஆனா போலீஸ்க்கு டிமிக்கி கொடுக்கறதில் மன்னன். அவன் பேர்ல ஒரு கேஸ்கூட ரிஜிஸ்டர் ஆகலை.
“ஆனா, சமீபத்தில் வேறு ஒரு எதிரிக் கூட்டத்திடம் வசமா மாட்டிக்கிட்டான் கௌதம். முக்கியமான சரக்கு டெலிவரிக்காக அவனிடம் கொடுத்திருந்த பணத்தை வெச்சுச் சூதாடிட்டான். அந்த கேங்க் பணத்துக்கு நெருக்கிருக்காங்க… கொலை பண்ணக்கூடத் தயங்காதவங்க அவங்க. பையன் அரண்டுட்டான். எப்படியாவது பணத்தைச் சேகரிக்க முயற்சி பண்ணியிருக்கான். முடியாம போகவே, பாதுகாப்புக்கும், பணம் கிடைக்குமான்னு பார்க்கறதுக்கும் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கான்.
“அவன் அம்மா பாவம், அவன் திருந்தி வந்திருக்கறதா நினைச்சு, உபசாரம் பண்ணியிருக்காங்க. ஆனா அங்கே பணம் கிடைக்க வாய்ப்பில்லைன்னு அவனுக்குப் புரிஞ்சுபோச்சு. அம்மாவோட நகைகள்கூட வெளியே இல்லை, லாக்கர்ல, அப்பா கண்ட்ரோல்ல இருந்திருக்கு! தவிச்சுப் போயிட்டான் கௌதம். அப்போதான் அவன் அப்பாவும் லாயரும் பேசறதைக் கேட்டிருக்கான்.
“மாசிலாமணி தன்னுடைய சொத்தில் ஒரு லட்சம் ரூபாயும் ஒரு ஃப்ளாட்டும் மட்டும்தான் அவன் பேருக்கு எழுதி வெச்சிருக்கார்! மீதியில் 75% தன் மகன் மகாவீர் பேரிலும் 25% தன் மனைவி பேரிலும் எழுதியிருக்கார். அம்மாவின் பங்கு தனக்கு அப்படியே வந்துடும்னு கௌதம் நினைச்சிருக்கான். அவங்க வேறுமாதிரி நினைச்சிருந்தாலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவங்களைக் கன்வின்ஸ் பண்ணிப் பணத்தை வாங்கிட முடியும்னு தோணியிருக்கு…”
“அதுக்கு அவன் அப்பா சாகணும்…”
“எக்ஸாக்ட்லி சார்.”
“மோடஸ் ஆபரண்டி என்ன? விபத்துபோலக் காட்ட முயற்சி பண்ணியிருக்கான்னு சொன்னாங்களே” என்றார் கமிஷனர்.
“யெஸ் சார். ரொம்பக் கெட்டிக்காரத்தனமா வேலை பார்த்திருக்கான். கொஞ்சநாளா மாசிலாமணிக்குக் கண்ணில் இர்ரிடேஷன் இருந்திருக்கு. அதற்கு டாக்டர் சொட்டுமருந்து கொடுத்திருக்கார். அதை அவர் டெய்லி சாப்பிடுகிற டானிக்கில் கலந்து கொடுத்திருக்கான். விஸின் என்ற கண் மருந்து உள்ளுக்குச் சாப்பிட்டால் விஷம். அமெரிக்காவில்…”
“…படிச்சேன். அவனை எப்படிக் கார்னர் பண்ணினீங்க?”
போஸ் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். இந்த நிமிடத்திற்காகத்தானே அவன் காத்திருந்தான்!
“சார், மாசிலாமணியுடைய மரணம் இயற்கையானதுன்னே எல்லோரும் நினைச்சிருக்காங்க. யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரலை. அவரை அட்டெண்ட் பண்ணிய டாக்டர்கூட, சடனா நடந்துடுச்சேன்னு ஆச்சரியம்தான் பட்டிருக்கார்.
“டாக்டர், மாசிலாமணி இரண்டுபேருமே சிட்டி ரெக்ரியேஷன் க்ளப் மெம்பர்ஸ். தற்செயலா மாசிலாமணி இறந்த அன்று அங்கே நான் ஒரு விசாரணைக்குப் போயிருந்தேன். அப்போ மாசிலாமணியின் திடீர் மரணத்தைப் பற்றி டாக்டர் பேசிட்டிருந்ததைக் கேட்டேன். அப்பதான் அவர் மகன் கௌதம் வீட்டில் இருக்கறதாகவும், அடுத்த பிள்ளை மகாவீர் கல்கத்தாவிலிருந்து வரதுக்காக அவங்க வீட்டில் வெயிட் பண்ணிட்டிருக்கறதாகவும் சொன்னார். இந்தப் பெயர்களைக் கேட்டதும் இந்தக் கௌதம் நம்மாளாச்சேன்னு எனக்குத் தோணிட்டது. எதுக்கும் ஒரு விசாரணை பண்ணிடுவோம்னு அவங்க வீட்டுக்குப் போனேன். என்னைப் பார்த்ததுமே கௌதம் பதறினான், நடுங்க ஆரம்பிச்சான்.
“டாக்டரிடம் மாசிலாமணியோட உடல்நலம் குறித்து விசாரிச்சேன். சாதாரணமா மாசிலாமணி ரொம்ப ஹெல்தின்னும் கொஞ்சம் ஆஸ்த்மா ப்ராப்ளம் மட்டும் உண்டுன்னு சொன்னார். மரணமடையறதுக்கு ஒரு வாரம் முன்னாடியிலிருந்து அவருக்குக் கண் அலர்ஜி – கண் உறுத்தல், சிவப்பாதல் எல்லாம் இருந்தது.
“இந்த ப்ராப்ளம்ஸால ஒருவர் மரணமடைய மாட்டாரேன்னு கேட்டதுக்கு, சடன் கார்டியாக் அரெஸ்ட்னு மட்டும் சொன்னார். அவருக்கே மனசுக்குச் சந்தேகமா பட்டது போல… பாடியைப் போஸ்ட்மார்ட்டம் செய்துடலாமான்னு கேட்டதும் சரின்னார். மாசிலாமணி மனைவி அதைத் தீவிரமா எதிர்த்தாங்க, கடைசியில் ஒப்புக்கிட்டாங்க.
“வயிற்றில் விஷம் இருப்பதும், அது ஆஸ்தாலின் டானிக்கில் கலந்து கொடுக்கப்பட்டிருப்பதும் ஆட்டாப்ஸில தெரிஞ்சுடுச்சு. அன்றைக்கு அவருக்கு மருந்து கொடுத்தது யார்னு விசாரிச்சேன். “ரொம்ப இழுத்து இருமறீங்க, டானிக்கைச் சாப்பிட்டுடுங்க அப்பா” என்று கௌதம் சொன்னதற்குச் சாட்சியம் கிடைச்சது – பெருக்கறதுக்கு அவர் ரூம் பக்கம் போன வேலைக்காரி கேட்டிருக்கா. ஆனா அப்போ அவர் டானிக் குடிக்கலை, நேரமாகிடுச்சுன்னு ஆஃபீஸ் போயிட்டாரு. இரவில்தான் டானிக் குடிச்சிருக்கார், காலையில் பார்த்தா உயிரோடு இல்லை!
“அதற்கு முதல்நாள் இரவும் அவர் டானிக் குடிச்சிருக்கார். ஸோ மருந்து அன்றைக்கு ராத்திரியிலிருந்து அடுத்தநாள் காலைக்குள் கலக்கப்பட்டிருக்கணும். அட் லீஸ்ட், அடுத்தநாள் மாலைக்குள். முதல்நாள் மத்தியானம் மகாவீர் ஆஃபீஸ் வேலையா கல்கத்தா போயிட்டார். அதிலிருந்து வீட்டில் மாசிலாமணியைத் தவிரக் கௌதமும் அம்மாவும்தான் இருந்திருக்காங்க. சமையற்காரர் காலையில் வந்துட்டுப் போயிடுவார்.”
“எல்லாமே சர்க்கம்ஸ்டான்ஷியலா இருக்கேப்பா! ஒரு நல்ல லாயர் இதையெல்லாம் உடைச்சுப் போட்டுடுவார்!” என்றார் கமிஷனர் யோசனையாக.
“சொட்டு மருந்தை எடுத்துக் கௌதம் ஹேண்டில் பண்றதை அன்று காலை சமையல்காரர் பார்த்திருக்கார். இந்த எவிடன்ஸ் போதுமா சார்?” என்றான் போஸ் புன்னகையுடன்.
கமிஷனர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
1 Comment
குற்றவாளி யார்னு கண்டுபிடிப்பாங்க! நீங்க குற்றவாளியை சொல்லிட்டு அவன் குற்றம் செய்யலைன்னு நிருபணம் பண்ணப்போறீங்கன்னு தோணுது! சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை!