ஆசையின் விலை ஆராதனா | 1 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 1 | தனுஜா ஜெயராமன்

சென்னை விமான நிலையம். அதிகாலை. மார்கழி மாதக் குளிர் ஊசியாய் உடலை ஊடுருவ, இரு கைகளையும் தேய்த்து வெப்பத்தை உண்டாக்கிக் கன்னத்தில் வைத்துக்கொண்டே போர்டைப் பார்த்தார் வெங்கடாச்சலம். ப்ளைட் அரைமணிநேரம் லேட்…

“ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்திருக்கலாம் விஜி”, என்று அங்கலாய்த்தார் தனது மனைவியிடம். இருவரும் காத்திருப்புக்காகப் போட்டிருந்த சேரில் அமர்ந்தனர். அங்குமிங்கும் நாய்கள் சுற்றி வர, அவ்வப்போது அவற்றின் “லொள்” குரைப்பு சத்தம். சற்று எரிச்சலாக வந்தது வெங்கடாசலத்திற்கு.

விஜயலஷ்மிக்கோ பேத்தி ஆத்யாவையும், மகள் ஆராதனாவையும் காண ஆவலாக இருந்தது அவள் சீட் நுனியில் அமர்ந்திருந்ததில் தெரிந்தது. விஜி அப்படித்தான்…. மகள் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் அதே ஆர்வத்துடன் ஏர்போர்ட் வருவது வழக்கம்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு… ‘லண்டன் ஹூத்ருவிலிருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியது’ என்ற அறிவிப்பு தென்பட்டது… ‘லேண்டட்’ என்ற ஒற்றை வாசகம் விஜியின் வயிற்றில் பாலை வார்த்தது. கடவுளை நினைத்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு மகளுக்காகக் காத்திருந்தாள்.

“செக் அவுட் முடிச்சிட்டு வர எப்படியும் அரை மணியாகும். அப்புறம் போகலாம். உட்காரு விஜி”…என்றார்.

பெட்டியைத் தள்ளிக்கொண்டே வந்த ஆராதனாவைப் பார்த்துத் தலையசைத்துச் சிரித்தார் வெங்கடாச்சலம்.

“கிரண்ட்பா”… என அங்கிருந்தே கத்தியது ஆத்யா தனது மழலை குரலில்…

செக் அவுட் முடித்து வெளியே வந்ததும் விஜி மகளையும்,பேத்தியையும் கட்டியணைத்துக் கண் கலங்கினாள். “ப்பா!… எவ்ளோ நாளாச்சி”…என்றாள் வாஞ்சையுடன்..

“ம்மா!… போன வருஷம் கூட வந்திருந்தோமே”…

“உங்கம்மாக்கு நீ மாசாமாசம் வந்தாலும் இப்படித்தான்” -சிரித்தார் வெங்கடாச்சலம்..

“அப்பா! ஒரு நிமிஷம் இருங்க, உங்க மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு வரேன்… கிளம்புனதிலிருந்து எத்தனை போன்…” என்று சிரித்து.… “ஏங்க!.. நான் பத்திரமா வந்து சேர்ந்திட்டேன். அப்பா, அம்மா எங்களை பிக்கப் பண்ணிட்டாங்க.. நீங்க கவலைப்படாம இருங்க… நான் அப்புறம் பேசுறேன்”… என்றுவிட்டுப் போனை வைத்தாள்.

கார் வந்ததும் லக்கேஜ்களை ஏற்றிக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டனர். வண்டி ஆர். ஏ. புரத்தை நோக்கி சென்றது.

“அப்புறம்மா.. லண்டன் எப்படியிருக்கு?”

“அதுக்கென்னப்பா..? ஜோரா இருக்கு”..

“சரி… நீங்க எப்படியிருக்கீங்க? அதை சொல்லு”..

“எங்களுக்கென்னப்பா…. உங்க மாப்பிள்ளை எங்களை தாங்கு தாங்குன்னு தாங்கறாரு.. ஜோரா ஹாயா இருக்கோம்”.… என்று சிரித்தாள்.

ரண்டு நாட்கள் இரவு பகல் என ஜெட்லாக்கில் கழிய, தற்போதுதான் சற்று தெளிந்திருந்தாள் ஆராதனா. காலையிலேயே கணவர் அம்ரிஷுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“இப்பத் தானே வந்து ரெண்டு நாளாகுது.. அதுக்குள்ள போரடிக்குதுன்னா எப்படிங்க?”.. -சிரித்தாள் ஆராதனா.

“என்ன பண்றது..? வீடே வெறிச்சின்னு இருக்கு… நீயும் ஆத்யாவும் இல்லாம”…

“சமாளிங்க… இன்னும் 15 நாள் தானே..? வந்துருவோம்”..

“என்னம்மா..? என்ன சொல்றாரு மாப்பிள்ளை..?” என்றாள் விஜி.

“போரடிக்குதாம்மா… எப்ப வர்றேன்னு கேக்குறார்”.

“ஆமா.. என்னைக்குக் கிளம்பணும்..?”

“ம்மா .. இருபதாம் தேதி கிளம்பணும்”…

“இவ்ளோ சீக்கிரமா?”

“அம்மா!… உன் மருமகன் எங்களை அனுப்பவே மாட்டேன்றாரு… அடம் பிடிச்சித் தான் கிளம்பி வந்தோம்”…

“அதுக்குன்னு இவ்வளவு சீக்கிரமா..? ஒரு மாசமாவது இருந்துட்டு கிளம்பினா என்ன..?” -அங்கலாய்த்தாள் விஜயலஷ்மி.

“அப்பா!.… அந்த புதுவீட்டுச் சாவி இருக்கா..? கொஞ்சம் வேலை இருக்கு. அங்க போகணும்ப்பா”..

“இதோ இங்க தான் ஆணியில மாட்டியிருக்கு… ஏன்மா, என்ன விஷயம்..?”

“ஒண்ணுமில்லைப்பா… ஒரு சின்ன வேலை இருக்கு… முடிக்கணும்ப்பா.”.

“சரிம்மா!… நீ குளிச்சிட்டு சாப்பிடு… நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்” என்றபடியே கிளம்பினார் வெங்கடாச்சலம்.

இந்த புது ப்ளாட் போனமுறை லீவில் வந்தபோது பார்த்து ஃபைனல் பண்ணியது. நடுவில் அம்ரிஷ் இந்தியா வந்தபோது சில இன்டீரியர் கரெக்ஷன் பண்ணச் சொல்லி சென்றிருந்தார். அதன் பிறகு தற்போதுதான் புதுவீட்டிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தபடியே குளிக்க சென்றாள்.

விஜயலஷ்மியோ, ஆத்யாவுக்குக் கதை சொல்லியபடி சோறுட்டி கொண்டிருந்தாள்.

“கிரான்மா.… வேற ஸ்டோரி சொல்லுங்க.. இது ஒரே போர்” என்றாள் ஆத்யா…

“அம்மா!… நீ ஆத்யாவைப் பாத்துக்க… நான் அடையாறு ப்ளாட்க்குப் போய்ட்டு வர்றேன்… நான் இந்தக் காரை எடுத்திட்டுப் போறேன்.. அப்பா வந்தாச் சொல்லிடு”..

“சரி, சீக்கிரம் வந்திடு… ஆத்யா! அம்மாவுக்கு பை சொல்லு”..

“மம்மி, நானும் வரேன்”…

“நோ டா செல்லம்… கிரான்ட்மா நிறைய கதை சொல்லுவாங்க… மம்மி சீக்கிரம் வந்திருவேன்.. நீ குட் கேர்ளா சமத்தா இருக்கணும்.. ஓக்கே.?”

“ஓக்கே மம்மி.… பை… மம்மி” -கையாட்டினாள் ஆத்யா

ஆராதனா காரை விர்ரெனக் கிளப்பி அடையாறை நோக்கி சென்றாள்.

மொபைல் ஒளிர…அம்ரிஷ் தான் லைனில்…

“சொல்லுங்க….”

“கிளம்பிட்டயா..?”

“ம்…ஐஸ்ட் நவ்.”..

“நீ நம்ம ப்ளாட்டுக்குப் போனதும்… சுதிஷ் வந்து ஒரு பார்சலைத் தருவான். வாங்கிப் பத்திரமா வை. ஊருக்கு வரும்போது எடுத்திட்டு வந்திரு”

“என்ன பார்சல் அது..?”

“அபிஷியல் தான்… ப்ராஜெக்ட் விஷயமா?”

“சரி… வாங்கி வைக்குறேன்… நீங்க சாப்டீங்களா?”

“ஹூகும்…. இன்னும் இல்லை”

“ஏங்க..! ஷெர்லி போன் பண்ணாளா..? “

“இல்லையே… ஏன்..?”

“இல்ல… அவகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்… சரி, அப்புறம் பேசிக்கறேன்… கார் ஓட்டுறேன்.. இப்ப போனை வைக்கவா?”

“சரிடா!… டேக் கேர்.. வெச்சுடறேன்” -அம்ரிஷ் போனை வைக்கவும், ஆராதனா காரை வேகமாகச் செலுத்தினாள்.

“மில்லேனியன் ஸ்டோன் ” என்ற பெயர்ப் பலகை தாங்கிய கேட்டில் நுழைந்தவளை செக்யூரிட்டி நிறுத்த “B1 5th floor owner” என்று சிரித்து உள்ளே நுழைந்து பேஸ்மெண்டில் இருந்த பார்க்கிங்கில் காரைச் சொருகினாள்.

அருகிலிருந்த லிப்டை அடைந்து 5 பட்டனை அழுத்தி மேலேறி… B1 என்ற கதவில் சாவியைத் திருகி உள்ளே நுழைந்தாள். உள்ளே இன்டீரியர் ஒர்க் எல்லாம் முடிந்திருந்தது. அம்ரிஷ் டிசைன் பண்ணிக் கொடுத்தது சிறப்பாகவே இருந்ததாகத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் நகாசு வேலைகள் மட்டுமே பாக்கியிருந்தன. இந்த முறை நல்ல ஆட்களாய்ப் பார்த்து வாடகைக்கு விட்டுவிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். அது சம்பந்தமாக ரியல் எஸ்டேட் மூர்த்தி வேறு வருவதாகச் சொல்லியிருந்தான். ப்ளாட் செகரெட்டரியைப் பார்த்துக் கொஞ்சம் பேசவேண்டும்… என்று மனத்திற்குள் கணக்குப் போட்டபடி பெட்ரூமினுள் நுழைந்தாள். ஹாலில் அழைப்பு மணி ஒலிக்க….

‘அதற்குள் மூர்த்தி வந்துவிட்டானா..? அவன் இரண்டு மணிக்கு மேல் தானே வருவதாகச் சொன்னான்..?’ -யோசித்தபடி கதவை நோக்கி நடந்தாள்.

கதவின் பின்னால் அவளுக்காகக் காத்திருந்த அதிர்ச்சியை அறியாமல் கதவின் லாக்கைத் தொட்டாள் ஆராதனா.

–ஆராதனா வருவாள்…

ganesh

1 Comment

  • சுவாரஸ்யமான ஆரம்பம்! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...