கிருஷ்ணை வந்தாள் | 1 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 1 | மாலா மாதவன்

ஆலம் பாடி காளி அம்மா

அருளை நீயும் தருவாய்

காலம் தோறும் நீயே எங்கள்

கைவி ளக்காய் வருவாய்

ஞால மெங்கும் நிறைவாய் காளி

ஞான ஒளியை வழங்கு

கால தேவி நீயே காளி

கவிதை வடிவும் நீயே!’

கல்யா தன் நோட்டில் பிள்ளையார் சுழியிட்டுத் தன் மனதில் உதித்த பாடலை எழுதி வைத்தாள். அப்பா சுந்தரவதனன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின் முழுநேரக் கோவில் வாசியாக ஆகி விட்டார். அவரின் பணி முடிந்த பிறகு மகளுடன் அமைதி கொஞ்சும் ஆலம்பாடி கிராமத்தில் வீடு வாங்கிக் கொண்டு அங்குள்ள காளியம்மன் கோவில் வேலைகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்.

கோவில் கும்பாபிஷேகம் அப்போது தான் முடிந்திருந்ததால் சுந்தரவதனத்திற்குப் பல வேலைகள். நடுவில் அம்மா இல்லாத தன் ஒரே மகள் அகல்யாவைக் கவனிப்பதற்குக் கூட அவருக்கு நேரமில்லை.

அகல்யா கல்லூரிப் படிப்பை முடித்தவள் என்றாலும் வெளியூரில் சென்று வேலை பார்த்தவள் இல்லை. உள்ளூரில் வயதானவர்களுக்கென்று பாடசாலை இருந்ததில் அதில் பகுதி நேர டீச்சராக இருந்து வந்தாள். ஒரு பக்கம் வயதானவர்கள் படிக்க இன்னொரு பக்கம் பள்ளிக் குழந்தைகள் ட்யூசனுக்கு வந்து உட்கார்ந்திருப்பார்கள். கல்லூரியில் படித்த பெண்கள் தன்னார்வத்துடன் அவ்வூரில் அதனை நடத்தி வந்தனர்.

அகல்யா மிகவும் அமைதியான சுபாவம். அதுவே அவளை நிறைய யோசிக்க வைத்தது. நிறைய எழுதவும் வைத்தது. ஓய்வு நேரங்களில் காளியம்மன் மேல் பாடல் எழுதிக் கொண்டிருப்பாள். அவளுக்கு அதுவே பழகி எழுந்தாலும் உட்கார்ந்தாலும் காளி ஸ்மரணை தான். அந்தளவு அம்மனுடன் ஒன்றி விட்டவள்.

ன்றைய தினம் கோவிலில் லட்சார்ச்சனை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் மக்கள் கூட்டம் ஏகமாய் வந்து கொண்டிருக்க காளியம்மன் தன் பரிவாரங்களோடு கருணை பொங்க அமர்ந்திருந்தாள்.

அகல்யாவுக்கும் அன்று வேலைகள் நிறைய. கைகாட்டி நிறுத்தம் சென்று மதுரையில் இருந்து பஸ்ஸில் வந்த மல்லிகைப் பூக்களை மாலையாகத் தொடுக்கும் வேலை அவளுக்கு. காலையில் ஆட்டோவில் போய் வாங்கி வந்தவள் இதோ இன்னும் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து தொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.

தங்க நிறத்தில் உடலோடு கிடந்த சேலையும், தலைக்குக் குளித்ததால் ஈரம் சொட்டும் அவள் முடியும் , பிரகாசமான முகமும் பார்ப்பவர் கண்ணுக்கு அவளை அழகியாகக் காட்டின.

“என்ன அகலு! வெள்ளனவே பூ வாங்கிட்டு வந்திட்டியா?” ஊர்ப் பெரியவரின் மனைவி பூவாத்தா கரிசனையோடு கேட்க..

“ஆமாத்தா! இன்னிக்கு லட்சார்ச்சனையாச்சே. கூட்டம் குமியறதுக்குள்ள கட்டி முடிச்சுடலாம்ன்னு பார்த்தேன். வேகம் இல்லாம போச்சு” புன்னகைத்தாள்.

“இப்படிக்கா தள்ளு பூவை. எனக்குக் கட்டத் தெரியாட்டாலும் நீ கட்டுறதுக்கு ஏதுவா அடுக்கியாவது வைக்கறேன்.”

வேலையைத் தொடர்ந்தவள்….

“ஆமா.. இன்னிக்குப் பொழுதுக்குத் தெரிஞ்சுரும்னாரே பூசாரி. காளியம்மா யாரு வாக்கில வந்து நிக்கப் போறாளோ? என்ன சொல்லப் போறாளோ?”

“என்ன ஆத்தா தெரிஞ்சுரும்? எதுவும் களவு போயிருச்சா?” அகல்யாவின் கேள்வியில்..

“அடியாத்தி! உனக்குத் தெரியாதாக்கும்! நம்மூருல நடக்கற கிடைத் திருட்டு. கிடையப் போட்டாப் போதும். மறுநாளு பாதி ஆடுக தான் கெடையில் கெடக்கு. மீதி காத்தோடல்ல காணாமப் போகுது!. யாரு செய்யறாக? என்னதுக்குன்னு ஊரு சனமே மண்டையப் பிச்சுக்கிட்டு கெடக்கறது உனக்குத் தெரியாதுன்னா சொல்ற? அட! போ அகலு! சும்மா வாயப் புடுங்கி வெளையாட்டு காட்டற!”

“இல்ல ஆத்தா. தெரியாது. பள்ளிக்கூடம் லீவுன்னு நானும் கொஞ்ச நாளா இங்க இல்லாம தேவோட்டை பெரிம்மா வீட்டுலல்ல இருந்தேன். இப்ப நம்ம காளியம்மா கும்பாபிஷேகம்ன்னு வந்தவ அப்புறம் ஏதும் தெரிஞ்சுக்கல! என்ன சொல்லப் போறாங்க? யாரு வந்து சொல்வாங்க?”

“தெரில அகலு. ஆனா காளியம்மா கட்டாயம் பதில் சொல்வா. அந்த நம்பிக்கை இங்க அத்தினி பேருக்கும் இருக்கு. கும்பாபிசேகத்து அன்னிக்குக் கூட வந்த சனம் அத்தனையும் குடையைப் பிடிச்சுக்கிட்டு கருடன் வர காத்திருக்க.. காத்திருப்பைப் பொய்யாக்காம… காளியம்மன் அந்த அத்துவானக் காட்டுலயும், அடைமழை நேரத்துலயும் ஒத்த கருடனை தலை வாசல் கோபுர வழியிலிருந்து ஒரே வட்டமா சுத்தி ஆத்தா பறந்து போக வைச்சாள்ல. பார்த்த அத்தனை பேர் கண்ணும் வாயும்ல மூடிப் போச்சு. அது மாதிரி இன்னிக்கும் செயலாக்குவா.

பூவாத்தா தன் போக்கில் சொல்லிக் கொண்டிருக்க அகல்யா மாலையைக் கட்டி முடித்திருந்தாள். அவள் மாலைகளோடு எழுவதற்கும் சன்னிதி உள்ளிருந்து பூஜை மணி சத்தம் அடிப்பதற்கும் சரியாய் இருந்தது. அகல்யா தன் கை மாலைகளைத் தட்டில் வைத்து அம்மனுக்குப் போடச் சொன்னாள். மல்லிகைப் பந்தலில் வீற்றிருந்தாள் காளியம்மன்.

அப்படியே பிரகாரத்தை வலம் வர ஆரம்பித்தாள் அகல்யா. அடிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தவளின் கால் தரையின் மேடான பகுதியில் எத்த, அங்கிருந்த ஒரு மூடி போன்ற பகுதியை அவள் விரலின் ரத்தம் நனைத்தது அவ்விடத்தை அபிஷேகம் செய்தது போல் இருந்தது. அந்த இடம் லேசாக அசைந்து பின் சமதளமானதை அறிய வில்லை அகல்யா. அச்சமயம் அதன் பக்கமிருந்த அரளி மரம் தன்னுடலை அசைத்து அத்தனை பூக்களையும் அப்பாதையில் கொட்டியதில் காற்றின் கனம் அறிந்து மனம் இலேசாகி பிரதட்சணத்தைத் தொடர ஆரம்பித்தாள் அகல்யா.

எத்தியதில் காலில் வழிந்த ரத்தத்தையும் , அது தந்த வலியையும் பிறகு தான் கவனித்தாள் அவள். மெல்ல யாரும் அறியாமல் கோவில் மண்ணெடுத்து அக்காயத்தில் பூசிக் கொண்டாள். தெரிந்தால் கூட்டம் கூடி விடுமே. அகல்யாம்மாக்குக் காயமாம் என சிறுகாயம் பெருங்காயமாகி ஐசியூ வரை கொண்டு போய் உட்கார வைத்து விடுவார்கள். அவ்வளவு பாசக்கார மனுஷங்க.

அப்பா வரை விஷயம் போனால் அவரும் வருத்தப் படுவார். ஒற்றைப் பெண்ணாயிற்றே! ஒரு வழியாய் ரத்தம் நின்று விட கோவில் கிணற்றில் நீரிறைத்துக் காலைக் கழுவிக் கொண்டாள். பின் ஜாக்கிரதையாக அடி வைத்துப் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டாள்.

கோவிலில் ரத்த காயம் ஆயிற்றே என்று நினைத்து வருத்தத்துடன் கண்ணை மூடி அமர்ந்தவள்..

“அம்மா இல்லாத குறைக்கு உன்னைத் தான் அம்மாவா நினைச்சு தினம் பேசிட்டுப் போறேன். எங்க அம்மாவா இருந்தா என்னடி கண்ணு அடிபட்டுடுத்தான்னு பக்கத்தில் உட்கார்ந்து கேட்டிருப்பா. நீ என்னடான்னா..” அம்மனைப் பார்த்துப் பேசியவள்.. சற்று நேர கண் மூடிய அமைதியின் பின்..

மெல்ல பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள் அகல்யா.

“என்னம்மா ஆச்சு? ரொம்ப அடிபட்டுடுச்சா?”

குமிழ்சிரிப்புடன் கேட்ட சிறுபெண் பாவாடை சட்டையுடன் ஆடு மேய்க்கும் சிறுமி போல் இருந்தாள். கிருஷ்ணனின் கருப்பு நிறம். யார் கூட வந்திருப்பாள்? நம்ம ஊரா? வெளியூரான்னு தெரியலயே. வயசென்ன ஒரு ஏழெட்டு இருக்குமா? கறுப்பிலும் இத்தனை அழகாய் இருக்க முடியுமா என மின்னிக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

பூஜை முடிந்தும் தன்னை மறந்து வெகுநேரம் அச்சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா.

வேலையெல்லாம் முடித்து சுந்தரவதனன் அந்தப் பக்கம் வந்தவர்… “என்னம்மா அகல்யா? என்னத்த வெறிச்சுப் பார்த்துண்டு இருக்க? பூஜை முடிந்து பிரசாதம் கொடுக்க ஆரம்பிச்சாச்சு பாரு. போய் அவாளுக்கு உதவியா இரேன்.”

“இல்லப்பா.. வந்து.. இந்தக் குழந்தை..!” கை காட்டினாள்.

“எந்தக் குழந்தைம்மா? யரரிருக்கா இங்க?”

“இதோ இந்த தூண் பக்கத்துல உட்கார்ந்திருக்காளே!”

“தூண் பக்கமா? யாருமே இல்லையே. என்னாச்சும்மா உனக்கு? வந்தவா எல்லோரும் அன்னதானக் கூடத்துல இருக்க நீ மட்டும் இங்க உட்கார்ந்துண்டு இருக்கியேன்னு வந்தேன். யாருமே இல்லாத இடத்துல நீ என்ன செய்றேன்னு கேட்டா ஏதோ குழந்தை இருக்கு பார்த்துண்டு இருக்கேன் அப்படின்னு சொல்ற! கனவு ஏதும் கண்டுண்டு இருக்கியா மா? காலம்பர சீக்கிரம் எந்துருந்தது வேற! அதான் இப்படி முன்ன பின்ன பேசிண்டு இருக்க! சரி! கிளம்பு! வீட்டுக்குக் கிளம்பு!”

“இல்லப்பா அவள் இருக்கா பாருங்க! கிருஷ்ணனாட்டம் நிறம்! மூக்கும் முழியுமா கண்ணுக்கு அழகா பாவாடை சட்டை போட்டுண்டு கையில குச்சியோட ஒக்காந்து இருக்கா பாருங்க!” அகல்யா பிரமிப்புடன் சொன்னாள்.

” தாயே! காளியம்மா! என் பொண்ணுக்கு காத்து கருப்பு அடிச்சிடுத்தோ? ஏன் இப்படி பேசறா? யாருமே இல்லாத இடத்தில் யாரோ இருக்கான்னு சொல்லிட்டு இருக்காளே! என் கண்ணுக்கு ஒண்ணும் தெரியலையே!”

புலம்ப ஆரம்பித்து விட்டார் சுந்தரவதனன்.

அவர் ஆயாசத்துடன் கண்ணை மூடி சுவற்றோரம் சாய்ந்த வேளை..

அகல்யா ஓசைப்படாது எழுந்து தூண் ஓரம் சென்று நின்றாள். அங்கு அசையாது அமர்ந்திருந்த அச்சிறுமி அகல்யாவை பார்த்து சிரித்தாள்.

“உனக்கு என்ன பேரு குழந்தே!?”

“நீதான் ஒரு பேர் சொல்லேன்!”

“எனக்கு என்ன தோணுதுன்னா நீ எங்க கிருஷ்ணனாட்டம் அழகா இருக்க. அதனால உன் பேர கிருஷ்ணைன்னு வைக்கட்டா?”

“ஓ! தாராளமா வச்சுக்கோயேன்!”

“கிருஷ்ணை! நீ யாரு வீட்டுப் பொண்ணு?”

“நான் எல்லார் வீட்டுப் பொண்ணுந்தான்!”

“அப்ப யார் வீட்டில் நீ இருப்ப?”

“எல்லார் வீட்டிலும் தான்!”

“எங்க சாப்பிடுவ? எங்க தூங்குவ?”

“இதோ இங்க தான்!” சிரித்தாள் கிருஷ்ணை.

“உனக்குன்னு ஒரு வீடு இல்லையா தங்க? பேசாம என்கூடவே வந்துடுறியா?” அகல்யா கேட்டாள்.

“உன் வீட்டில் என்னை வைச்சுக்க இடம் இருக்கா? நான் ஆடுவேன். பாடுவேன். ஆக்ரோஷமாய் ஓடுவேன்.”

“என் வீட்டை விட எம் மனசில் உனக்கு என்னிக்கும் இடம் இருக்கு. அப்ப என்னோடயே இருப்பியோன்னோ?”

“நிச்சயமா! இப்பக் கிளம்பு. உன் அப்பா பாவம். இன்னும் ஒரு வாரம் மருந்தின் நெடி பீடிக்கும் அவருக்கு.”

“ஏன் என்ன செய்யப் போகுது கிருஷ்ணை. குறி சொல்வியா நீ? எனக்கும் கொஞ்சம் சொல்லேன். நம்ம ஊருல கிடை ஆடு காணாமப் போகுதாமே. யார் எடுத்திருப்பா?”

“உனக்குச் சொன்னாலென்ன? உன் அப்பாவுக்குச் சொன்னாலென்ன? இப்போதைக்கு இருவரும் ஒண்ணு தானே. போ! போய் அவர்ட்ட உட்கார்ந்துக்கோ. உன் பலம் இப்ப தான் அவருக்கு வேணும்! ஆடு பத்தி நீ கவலைப் படாதே. சென்றது தானாய் வந்து சேரும்.” கிருஷ்ணை தீவிரமாய்ச் சொன்னாள்.

தலையாட்டிய அகல்யா படபடத்த மனதுடன் சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டிருந்த அப்பாவைத் தொட்டாள்.

–க்ருஷ்ணை வருவாள்…

ganesh

5 Comments

 • ஆரம்பமே அமர்க்களம்!பிரமாதம்!

 • ஆஹா… அருமை அருமை….
  ஆரம்பமே ஆர்வம் தூண்டும் விதமாக இருக்கிறது… அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் எதிர் நோக்கி… கிருஷ்ணை பேர் அழகு..

 • ஆஹா… அருமை அருமை….
  ஆரம்பமே ஆர்வம் தூண்டும் விதமாக இருக்கிறது… அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் எதிர் நோக்கி… கிருஷ்ணை பேர் மிக அழகு..

 • ஆஹா ஆஹா அருமை…
  நல்ல தொடக்கம் அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் எதிர் பாத்து…

 • பாராட்டுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...