இதுதான் காதல் என்பதா? | இயக்குநர் மணிபாரதி
கிரீன் பாவர்ச்சியில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் ஐதராபாத்திற்கு வரலாம். அருணும், அவனுடன் வேலை பார்க்கும் கோபியும் ஆபிஸ் வேலையாக ஐதராபாத் வந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரமும், ஒருநாள் விட்டு ஒருநாள் அங்கிருந்துதான் பிரியாணி வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார்கள். ஐதராபாத்திற்கு வருகிறவர்கள் சார்மினாரை மிஸ் பண்ணினாலும் பண்ணலாமே தவிர, கிரீன் பாவர்ச்சியை மிஸ் பண்ணக்கூடாது. பண்ணினால் அது அவர்களுக்குதான் நஷ்டம். அந்த பிரியாணி ரைஸை வாயில் வைத்தால் ஐஸ் கிரீம் போல் கரையும். அன்று கடைசி நாள். ஊருக்கு புறப்படும் முன் அங்கு போய் சாப்பிட்டு விட்டு போகலாம் என முடிவு பண்ணி இருவரும் அங்கு வந்தார்கள். இரண்டு மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்தது பில்லிற்கான பணத்தைக் கொடுத்து விட்டு, வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து ‘செகந்த்ராபாத் போகலாமா..’ எனக் கேட்டு ஏறிக் கொண்டார்கள்.
செகந்த்ராபாத் ரயில்வே ஸ்டேஷன். ஆட்டோ வந்து நிற்க, அருணும், கோபியும் இறங்கிக் கொண்டார்கள். மீட்டர் பார்த்து பணம் கொடுத்து விட்டு, உள்ளே வந்து, ஓவர் ஹெட் பிரிட்ஜில் ஏறி, ஐந்தாம் நம்பர் பிளாட்ஃபாமிற்கு வந்து சேர்ந்தார்கள். சென்னை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. எஸ் – 7 கோச்சை தேடி, அதில் ஏறி, தங்களது சீட் நம்பரை பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். டிரயின் புறப்படுவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தது. அங்கும் இங்குமாக தமிழும் தெலுங்கும் கலந்த பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அருண் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது, ஒரு பெண், இடுப்பில் உட்கார்ந்திருக்கும் குழந்தையை தனது இடது கையால் அணைத்துப் பிடித்தும், வலது கையில் ஒரு சூட்கேஸை சுமந்தபடியும், அவர்கள் உட்கார்ந்திருக்கும் அதே கோச்சில், வேக வேகமாக வந்து ஏறினாள்.
சீட் நம்பரை பார்த்து, இவர்களுக்கு எதிரே உட்கார்ந்தாள். அவளைப் பார்த்ததும் அருண் ஆச்சரியம் அடைந்தான். அவள் வினோதினிதானே? அவளும் அவனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். அவன் அருண்தானே? இருவருக்கும், சிறிது நேரம் பேச்சு வர வில்லை. கோபி அவர்களைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அருண்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.
“வாட் ஏ சா்ப்ரைஸ்.. உன்னை நா இங்க எதிர்பார்க்கல வினோதினி..“
“நா கூட உங்களை எதிர்பார்க்க்கல.. இது நிஜம்தானான்னு இன்னும் எனக்கு சந்தேகமா இருக்கு..“
“நிஜம்தான்.. நோ டவுட்.. எப்படியிருக்க.. உன் குழந்தையா..“
“ம்.. நல்லாருக்கேன்.. என் குழந்தைதான்..“
அருண், குழந்தையின் கன்னத்தை லேசாக கிள்ளி முத்தமிட்டு விட்டு “என்னப் பேர் வச்சுருக்க..“ எனக்கேட்டான்.
“அருணகிரி.. ஷாட்டா அருண்னு கூப்பிடுறோம்..“
அதைக்கேட்டதும், அவன் ஷாக்கடித்தவன் போல, அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“என்ன அப்படி பாக்குறீங்க..“
“என்னை நீ இன்னும் மறக்கல இல்ல..“
“எப்படி மறக்க முடியும்..? மறந்துட்டா, நடந்ததெல்லாம் உண்மையில்லன்னு ஆயிடுமே….“
டிரயின் புறப்பட்டது. பிளாட் ஃபாமில் நின்று கையசைத்தவர்கள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரது கண்களில் கண்ணீர் தெரிந்தது. பிரிவு எத்தனை துயரமானது.. அருணும், வினோதினியும் கூட, ஒருநாள், இப்படி பிரிந்து சென்றவர்கள்தானே.
சென்னை, காதர் நவாஸ்கான் ரோட்டிலுள்ள ஒரு ஐ டி கம்பெனியில், அருண் சாஃப்ட்வேர் இஞ்சினியராக வேலைப் பார்த்தான். அதே கம்பெனியில் வினோதினியும் வேலைக்கு வந்து சேர்ந்தாள். ஒரு பெரிய ஹாஸ்பிட்டலுக்கு தேவையான சாஃப்ட்வேரை தயாரிக்கும் பொறுப்பை, மேனேஜ்மென்ட், அருண், வினோதினி இருவரிடமும் ஒப்படைத்தது. இருவரும், நேரம் காலம் பாராமல், பசி, தூக்கம் பாராமல், சேர்ந்து உழைத்தார்கள். அந்த உழைப்பில் ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் வியந்து பார்த்தார்கள். எப்போதாவது ரெஸ்ட் கிடைக்கும் போது, ஒருவரைப்பற்றி ஒருவர் பர்சனலாகவும் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
அருண், அவனது பெற்றோருக்கு ஒரே பையன். அதனால் செல்லமாக வளர்க்கப்பட்டவன். அவன் கேட்டது எல்லாமே அவனுக்கு கிடைத்திருக்கிறது. இப்போதும், இரவில் அவன் வீட்டிற்கு வருவதற்கு தாமதமானால், அவனது அப்பா, வீட்டிலிருந்து டின்னர் எடுத்துக் கொண்டு ஆபிஸிற்கு வந்து விடுவார். எப்போதுமே, அதில் இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு இருக்கும். முன்பெல்லாம் கோபிதான் அவனுடன் ஷேர் பண்ணி சாப்பிடுவான். வினோதினி வந்ததற்கு பிறகு, அவள்தான் அவனுடன் ஷேர் பண்ணுகிறாள். ஒவ்வொரு முறையும், அருண் அம்மாவின் கைப்பக்குவத்தை, அவள் மனம் விட்டு பாராட்டுவாள். அதுபோல, சாப்பிட்டு முடித்ததும், அந்தக் கேரியரை அவளே கழுவி வைக்கவும் செய்வாள்.
அவளுக்கு அப்பா கிடையாது. ஒரு விபத்தில் இறந்து விட்டார். அம்மா மட்டும்தான். மற்றும் இரண்டு தங்கைகள். அவள், படித்து முடித்து வேலைக்கு வருவதற்கு முன்பு வரை, அவளது மாமா ராஜேஷ்தான், அந்த குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டான்.
ஒருநாள், அருண், வினோதினியிடம் “இந்த உலகத்திலேயே உனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் எது வினோ..“ எனக்கேட்டான்.
“நீதான்..“ அவள் கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னாள்.
அருண், ஒரு நிமிடம் தடுமாறிப் போனான்.
“இப்படி ஒரு ஆன்ஸரை நா எதிர்பாக்கல..“
“நானும் எதிர்பாக்கல.. என்னமோ டக்குன்னு வந்துடுச்சு..“
“அது எப்படி டக்குன்னு வரும்.. மனசுல, ஏற்கனவே அந்த விதை விழுந்துருதாதான் அப்படி வரும்..“
“சரி.. விழுந்ததாதான் வச்சுக்கங்களேன்..“
அவன், மேலும் தடுமாறிப் போனான்.
“ஏய்.. என்னப்பா சொல்ற.. நீ சொல்ற வார்த்தைக்கு மீனிங் புரிஞ்சுதான் பேசுறியா…“
“எஸ்.. புரிஞ்சுதான் பேசுறேன்..“
“அப்ப.. யூ ஆர் லவ் வித் மீ..“
“எஸ்..“
அருண் வாயடைத்துப் போய் நின்றான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. மனதில், நூறு தடவை யோசித்து, ஆயிரம் தடவை ஒத்திகைப் பார்த்து சொல்லக் கூடிய ஒரு விஷயத்தை, கொஞ்சமும் தயக்கமில்லாமல், இப்படி, ஒரு விநாடியில் போட்டு உடைக்கிறாளே?
“என்ன சைலன்ட் ஆயிட்டிங்க.. உங்களுக்கு விருப்பம் இல்லையா..“ அடுத்தக் கேள்வியையும், அதிரடியாக கேட்டாள்.
“விருப்பம் இல்லன்னு சொன்னேன்னா.. என்ன பண்ணுவ..“
“சூசைட் பண்ணிக்குவேன்னு மட்டும் எதிர்பாக்காதிங்க.. அப்பவும் உங்களைதான் லவ் பண்ணுவேன்.. நீங்க அக்சப்ட் பண்ற வரைக்கும் உங்கள லவ் பண்ணிகிட்டே இருப்பேன்..“
அவளது ஆழமான நேசிப்பு, அவனுக்கு புரிந்தது. “அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம்.. இப்பவே பண்ணிக்க..“ என்றான். அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை. “தாங்ஸ்..“ என்று கூறி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். அதுவும் அவன் எதிர்பாராததுதான். எல்லாவற்றிலும் வேகமாக இருக்கிறாள்.
அன்று முதல், இருவரும், தனித் தனி அல்ல, ஒன்று என நினைக்க ஆரம்பித்தார்கள்.
அவன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அப்பா அம்மா இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவள், அவனது அம்மாவின் கையைப் பிடித்து“அருமையா சமைக்கிறிங்க ஆண்ட்டி..“ என்று கூறி முத்தமிட்டாள். அப்பா “நான்தான் பாராட்டிகிட்டு இருப்பேன்.. இப்ப நீயும் வந்து சேந்துகிட்டியா.. இனிமே புரவிஷன் பில்தான் எகிறப்போவுது.. உங்க ஆண்ட்டி நெய்யும், முந்திரி பருப்பும்இல்லாம எந்த பலகாரமும் பண்ண மாட்டா..“ என்று சொல்லி சிரித்தார். பதிலுக்கு வினோதினி “ஹோட்டலுக்கு போற செலவு மிச்சமாகுதுல்ல அங்கிள்.. அதோட வயித்துக்கும் கெடுதல் இல்லாம இருக்குல்ல..“ என்றாள். அவள் அப்படி பேசியது அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனது.
அடிக்கடி, அவனது வீட்டிற்கு, வர ஆரம்பித்தாள். ஒரு சில நாட்களில், அவர்களுக்குள், எந்த இடைவெளியும் இல்லாமல் போனது. அருண் எங்கேயாவது வெளியூர் போக நேர்ந்தால், அவள் அங்கு வந்து படுத்துக் கொள்வாள். அதுவும் அவனுடைய பெட் ரூமில், அவனது பெட்டிலேயே படுத்துக் கொள்வாள். சுவற்றில் அவளது போட்டேவை மாட்டி வைத்து, அதில் ‘ஐ லவ் யூ வினோ’ என, அவன் எழுதி வைத்திருப்பதை, அவள் பார்த்து, பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொள்வாள். குளிர் அதிகமானால், ஏ சியை நிறுத்த மாட்டாள். அவனது சட்டைகளில் ஒன்றை எடுத்து போட்டுக் கொள்வாள். யாருக்கு கிடைக்கும் இப்படியொரு லைஃப்?
ஒருநாள், அந்த லைஃபிற்கும் இடையூறு வந்தது. ராஜேஷ், தனது அக்காவிடம் வினோதினியை கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புவதாக சொன்னான். அதைக்கேட்டு, வினோதினி அதிர்ந்து போனாள். ஆனால், அவளது அம்மா “பண்ணிக்கடா.. நா என்ன மாட்டேன்னா சொல்லப்போறேன்.. உங்க அத்தான் இறந்ததுக்கப்புறம், இந்த குடும்பத்தோட நல்லது கெட்டது எல்லாத்தையும், அவரோட இடத்துல இருந்து, நீதான எடுத்துப் பண்ண.. நீ மட்டும் இல்லன்னா, மூனு பொம்பளை புள்ளைகளை வச்சுகிட்டு, நா நடுத்தெருவுக்குதான் வந்துருக்கனும்..“ என்று சொன்னாள். அவளது கண்களில் நன்றி பெருக்கு ஆறாக ஓடியது. ராஜேஷ் “நீ சொல்லிட்ட.. வினோதினி என்ன சொல்லுவான்னு தெரியலையே..“ என்றான். அதற்கும் அவள் “அவ என்ன சொல்லப் போறா.. நடந்ததெல்லாம்தான் அவளுக்கும் தெரியுமே.. நீ கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் பாரு..“ என அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அறிவித்தாள்.
வினோதினி அப்படியே உறைந்து போய் உட்கார்ந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. ராஜேஷூம் நல்லவன்தான். அவளது அப்பா இறந்ததற்கு பிறகு, அந்த குடும்பத்தைத் தாங்கிப் பிடித்தவன். வயதுக்கு வந்த பிறகு, ஒரு தடவை கூட, அவளை, அவன் தப்பான நோக்கத்துடன் பார்த்ததில்லை. அவ்வளவு நாகரீகமானவன். அப்படிப்பட்டவனை வேண்டாம் என எப்படி நிராகாரிக்க முடியும்..? அதை அம்மாதான் தாங்கிக் கொள்வாளா..? மாமா மனதில் இப்படியொரு ஆசை இருக்கிறது என்பது, முன்பே தெரிந்திருந்தால், அருணை காதலிக்காமலாவது இருந்திருக்கலாம்.. இப்போது அவருக்கு என்ன பதில் சொல்வது.. அவரே சரி என ஒப்புக் கொண்டாலும், அவரைப் பிரிந்து, தன்னால் நிம்மதியாக வாழ முடியுமா.. கடவுளே இது என்ன சோதனை.. இதை நானோ இல்லை அருணோ எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்..
அதிகம் தள்ளிப் போடாமல், அன்று மாலையே, அருணிடம் விஷயத்தை சொன்னாள். அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின் “எல்லாத்துலயும் உனக்கு அவசரம்.. அதுதான் இப்ப உன்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.. நாம ரெண்டு பேரும் சின்னப் பசங்க இல்ல.. வீட்டுல இருக்குறவங்களோட உணர்வுகளை மதிக்காம நடம்ம இஷ்டத்துக்கு நடந்துக்குறதுக்கு.. நீ ராஜேஷையே கல்யாணம் பண்ணிக்க.. அதுதான் நல்லது.. என்னடா இப்படி சொல்றானேன்னு நினைக்காத.. அவங்களை காயப்படுத்திட்டு, நாம ஒண்ணு சேரனும்ன்னு நினைச்சோம்ன்னா, சத்தியமா நம்பளால நிம்மதியா வாழ முடியாது.. சரி, பிரியிறது மட்டும் சாத்தியமான்னு கேட்டின்னா, அதுவும் கஷ்டம்தான்.. வலிக்கும்தான்.. ஆனா, அவங்க வலியோட கம்பேர் பண்ணும் போது, நம்ம வலி கம்மிதான்.. போ.. போய் கல்யாணத்துக் ஒத்துக்க….“ என தெளிவாகக் கூறினான். அவள், அவனை கட்டிக் கொண்டு அழுதாள். சிறிது நேரம் அழ விட்டு, பின் தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்தான். “ஆல் த பெஸ்ட் வினோ..“ என்றான்.
இது நடந்து இரண்டு வருடமாகிறது. அவள் கல்யாணத்திற்கு கூட அவன் போக வில்லை. அவளுக்கு தைரியம் சொல்லி விட்டானே தவிர, கல்யாணத்தில் கலந்து கொள்ளும் தைரியம் அவனுக்கு இல்லாமல் போனது. அது, தனக்கு மட்டும் கஷ்டமில்லை. அவளையும் கஷ்டப்படுத்தி விடும் என்கிற நல்லெண்ணத்தில்தான்.. அதன் பிறகு, அவளை, இதோ, இப்போதுதான் பார்க்கிறான்.
“ராஜேஷ் வரலியா..“
“என் முதல் தங்ககைக்கு நிச்சயதார்த்தம்.. அதுக்காதான் சென்னைக்கு போயிட்டு இருக்கேன்.. அவருக்கு ஆபிஸ்ல டைட் ஒர்க்.. ரெண்டு நாள் கழிச்சு ஃபிளைட்ல வந்துடுவாரு..“
“ஓ.. அப்படியா..“
“நீங்க எப்படி இருக்கிங்க அருண்.. கல்யாணம் ஆச்சா..“
“ம்..“
அவள் முகத்தில் நிம்மதி படர்வது தெரிந்தது.
“அவங்க பேரு.. என்ன பண்றாங்க..“
“கௌசல்யா.. ஹவுஸ் ஒய்ஃப்தான்..“
“குட்.. என்னை விட நல்லா இருப்பாங்களா..“
அவன் சற்று யோசித்து விட்டு “ம்.. நல்லா இருப்பாங்க..“ என்றான்.
அவள் மேலும் நிம்மதி அடைந்தாள்.
“குழந்தைங்க..“
“ஒரு குழந்தை.. பொண்ணு..“
“என்ன பேரு வச்சுருக்கிங்க..“ அவசரமாகக் கேட்டாள்.
“வினோதினி..“
கோபி திரும்பி அருணைப் பார்த்தான்.
வினோதினியின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
“தாங்ஸ் அருண்.. இந்த நினைவுகள் போதும்.. மிச்ச நாட்களை நாம நிம்மதியா வாழ்றதுக்கு..“
அப்போது, அவளது குழந்தை அழ ஆரம்பித்தது. அவள் அதை அருணிடம் கொடுத்து வைத்துக் கொள்ள சொல்லி விட்டு, ஃபிளாஸ்க்கிலிருந்து ஒரு டம்ளரில் பால் ஊற்றி அதில் சர்க்கரையைப் போட்டு கலக்கினாள். பின், அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு, அதற்கு அந்தப் பாலை ஊட்ட ஆரம்பித்தாள்.
சென்னை சென்ட்ரல். டிரயின் வந்து நின்றது. மூவரும் இறங்கி வெளியில் வந்தார்கள். அருண், ஒரு ஆட்டோ பிடித்து, அதில் வினோதினியையும், குழந்தையையும் ஏற்றி அனுப்பி வைத்தான். பின், வேறொரு ஆட்டோ பிடித்து, அதில் அவனும், கோபியும் ஏறிக் கொண்டார்கள். ஆட்டோ புறப்பட்டதும் கோபி, முதல் வேலையாக அருணிடம் – “எதுக்குடா.. இத்தனைப் பொய்..“ எனக்கேட்டான்.
அருண் அமைதியாக இருந்தான்.
“கல்யாணமாயிடுச்சு.. குழந்தை இருக்கு.. அது இதுன்னு.. நீ பாட்டுக்கு அள்ளி விட்டுட்டு வர்ற..“
அவன், அதற்கும் அமைதியாக இருந்தான்.
“என்னடா.. சைலன்ட்டா இருக்க.. எதுக்காக அப்படி சொன்ன..“
“வேணும்ன்னுதான்டா சொன்னேன்.. அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. ஹஸ்பென்ட் குழந்தைன்னு சந்தோஷமா இருக்கா.. நா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு தெரிஞ்சுது.. நம்பளாலதான இவர் இப்படி இருக்காருன்னு நெனைச்சு வருத்தப்படுவா.. காரணம், அவதான லவ் பண்ணா.. அவதான பிரிஞ்சு போனா.. அந்த குற்ற உணர்ச்சி அவ மனசுல என்னிக்குமே இருந்துகிட்டு இருக்கும்.. அது அவளை காயப்படுத்தக் கூடாது.. அதனாலதான் அப்படியெல்லாம் பொய் சொன்னேன்.. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நா சொன்னதும் அவ முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சுதே.. அதை நீ பாத்தியா.. அந்த நிம்மதி அவகிட்ட நிரந்தரமா இருக்கனும்.. அதுதான் எனக்கும் நிம்மதி….“ என்று சொல்லி அழ ஆரம்பித்தான்.
கோபி அவனை தனது தோளில் ஆதரவாக சாய்த்துக் கொணடான்.
1 Comment
உண்மையான அன்பு என்றும் பிறரது மகிழ்ச்சியை மட்டுமே நாடும்…