பயராமனும் பாட்டில் பூதமும் | 1 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 1 | பாலகணேஷ்

ன்றைய தினம் தன் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதற்கான ஆரம்ப தினம் என்பதை அறியாதவனாக, முகத்தை அஷ்டகோணலாகச் சுளித்தபடி (சுளிக்காமலேயே அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்) மனைவி தந்த காப்பியை விழுங்கிக் கொண்டிருந்தான் ஜெயராமன்.

திடீரென்று வீட்டினுள் மர்ம உருவம் ஒன்று தடதடவென உள்நுழைய, எழுந்து நின்று கத்தினான் ஜெயராமன். “டேய்… டேய்.. நில்றா, கதவு தொறந்திருந்தா வீட்ல நொழைஞ்சிடுவியா..? பட்டப்பகல்ல திறந்த வீட்ல எதுவோ நொழைஞ்சா மாதிரி விறுவிறுன்னு வர்றியே… யார்றா நீ..?”

“அப்பா…” அவன் ஜெயராமனை நெருங்கினான். “நல்லா கவனிச்சுப் பாருப்பா. என்னைத் தெரியலையா”

புருவம் சுருங்க உற்று நோக்கினான் ஜெயராமன். “டேய், குமார்… நீயாடா..? காதே தெரியாம முடிய வளர்த்துக்கிட்டு, பேஷன்னு சொல்லி ஒரு தாடிய வேற வெச்சுக்கிட்டு, கண்ணையும் உதடையும் தவிர வேற எதுவுமே வெளிய தெரியாமல்ல திரிஞ்சுட்டிருந்த..? இப்பத்தான் நானே உன் மூஞ்ச முழுசாப் பாக்கறேன். இப்ப என்னாச்சுன்னு திடீர்ன்னு 70கள் சினிமால வர்ற பாரின் ரிட்டன்ட் ஹீரோ மாதிரி வந்து நிக்கற..?”

“அதுவா..? அம்மா போட்ட கண்டிஷனுக்குப் பயந்துதான்ப்பா…”

“கண்டிஷனா..? தமிழ்ல அவளுக்குப் பிடிக்காத வார்த்தையே அதானடா..? வீட்டுக்கு ஏர்கண்டிஷன் போடறேன்னு நான் சொன்னப்பக்கூட வேண்டாம்னுட்டாளே..”

“அதென்னவோ தெரியல. ஸ்ட்ரிக்ட்டா கண்டிஷன் போட்டாங்கப்பா. தலைமுடியை ட்ரிம் பண்ணி, தாடியை எடுக்காம இருந்தேன்னா நெக்ஸ்ட் டூ மன்த் ஸ்விக்கில ஆர்டர் பண்ணியோ, ஹோட்டல்ல போயோ எதையும் பண்ணி சாப்டக் கூடாது, வீட்ல அவங்க சமைச்சுத் தர்றதைத்தான் திங்கணும்னு ஆர்டர் போட்டாங்க. அதான்…”

“பயங்கரமான கண்டிஷன்தான். ஊரெல்லாம் வைரஸ் வந்தப்பக்கூட பயப்படாத நீ, இதுக்கு பயப்படறதுல ஆச்சர்யமே இல்லடா. நானே இப்ப அவ செய்யப்போற ‘பஜ்டா’வுலருந்து எப்டி தப்பிக்கறதுன்னு தெரியாமத்தான் முழிச்சுகிட்ருக்கேன்..”

“பஜ்டாவா..? அதென்னதுப்பா புதுசா..?”

“முந்தாநேத்து போண்டா பண்றேன்னு அவ செய்யப்போக, அது போண்டாவாவும் இல்லாம, பஜ்ஜியாவும் இல்லாம கலப்பினக் குட்டி மாதிரி ஒரு வினோத ஷேப்ல இருந்துச்சு. இதுக்கு என்னங்க பேரு வெக்கலாம்னு கேட்டா. நான் சும்மா இல்லாம ‘பஜ்டா’ன்னு வெச்சுடுன்னு சொன்னேன். இன்னிக்கு அதை மறுபடி ட்ரை பண்ணிப் பாக்கப் போறதா சொல்லிருக்கா. பஜ்டா வர்றதுக்குள்ள நீயாச்சும் எஸ்கேப்பாயி ஓடிடுடா..”

“வாயை மூடுங்க..” என்றபடியே சமையலறையிலிருந்து கையில் கரண்டியோடு வெளிப்பட்டாள் தனலட்சுமி.

“அரசியல்வாதி உளறாம பேசற மாதிரி என்னிக்காச்சும் ஒருநாள்தான் வாயைத் திறக்கறேன். அது பொறுக்காதே உனக்கு..?” என்று ஆரம்பித்தவன், அவள் முறைப்பில் கப்சிப்பானான்.

“பயப்படாதீங்க.. நீங்க சொன்னதைச் செய்யலை நான். இன்னிக்கு புதுரகமா வேறயே ஒரு டிபன் பண்ணிருக்கேன். வந்து சாப்ட்டுப் பாத்து எப்டியிருக்குன்னு சொல்லுங்க. இனிமேத்தான் அதுக்குப் பேரு வெக்கணும்…”

“நீ பண்ற டிபன் எல்லாத்தையுமே தின்னு பாத்ததுக்கப்பறம்தான் பேரையே டிசைட் பண்ண முடியும். இப்ப என்ன புதுசா..?” என்று முனகியவாறே எழுந்து நின்றான். முனகல்தான்… வாய்விட்டுச் சொன்னால் அதன் பின்விளைவாகக் கிடைக்கும் உப்புமா எத்தனை ‘சிறப்பானது’ என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

“மளிகை சாமான் வாங்கணும்னு சொன்னியே… முதல்ல போய் அதை வாங்கிட்டு வந்துடறேனே… அப்பறம் சாப்டலாமே..” என்றான் தப்பிக்கும் யோசனையோடு.

“நல்ல ஐடியாதான். இந்தாங்க… சாமான் லிஸ்ட் போட்ருக்கேன். இந்திரா ஸ்டோர்சுக்கு ஒரு எட்டு போயி வாங்கிட்டு வந்துடுங்க..”

“அடிப்பாவி… ஒரு எட்டா அது..? கிலோமீட்டர் கணக்குலயே அதுல பாதி வந்துடுமேடி…”

“வேலைவெட்டி இல்லாம சும்மாதான இருக்கீங்க… வாங்கிங் போறதா நெனச்சு போய்ட்டு வாங்க..”

“ஹும்… நானாச்சும் விஆர்எஸ் வாங்கிட்டு வீட்ல கெடக்கேன். எல்லாப் பயலுவளும் ஊரடங்கு, வீடடங்குன்னு ஆபீஸ் வேலையவும் வீட்லதான் பாத்துட்ருக்கான் இப்ப. சரி, சரி… பைய எடு. அந்த சந்திரா ஸ்டோர்ஸ்க்கு போய்ட்டு வந்துடறேன்.”

“தேவுடா… என்னதான் மறதின்னாலும் இப்டியா ஒரு மனுஷனுக்கு இருக்கும்..? அது இந்திரா ஸ்டோர்ஸ்ங்க..”

“ஏதோ வாய்தவறிச் சொல்லிட்டேன். அதுக்குப் போய் கோவிச்சுக்கலாமா ஜெயலட்சுமி.?”

“நாசமாப் போச்சு… என் பேரு தனலட்சுமிங்க..”

“ஏதோ ஒரு லட்சுமி. விடு… எடு பைய. பொடி நடையா மந்திரா ஸ்டோர்ஸ்க்குப் போய்ட்டு வந்துடறேன்…”

“சர்த்தான்… இன்னும் எத்தனை பேரை மாத்தி உளறுவீங்களோ..? எப்டியோ வாங்கிட்டு வந்தாச் சரி…” என்று தலையிலடித்துக் கொண்டபடி பையை எடுத்துத் தந்தாள். “சொன்னதை மறந்து போயி கன்னாபின்னான்னு உளறுவீங்களேன்னுதான் லிஸ்ட் எழுதியே வெச்சுட்டேன்..” லிஸ்டை எடுத்து நீட்டினாள். “கவனமா படிச்சு ஒழுங்கா வாங்கிட்டு வாங்க. ஏதாச்சும் தப்பாருந்துச்சோ… மறுபடி நீங்கதான் போய் மாத்திட்டு வர வேண்டியிருக்கும்…”

“அதெல்லாம் நடக்காதும்மா. தோ, செல்போனை எடுத்து பாக்கெட்ல போட்டாச்சு. எதாச்சும் டவுட்ன்னா உடனே உனக்கு போனடிச்சுக் கேட்டுடறேன். சரியா..?”

“கடை பேரை இந்திரா இந்திரான்னு ஜபிச்சுக்கிட்டே போங்க. வழி மறந்துட்டாலும் யார்ட்டயாச்சும் வழி கேட்டுப் போயிடலாம்..” அவள் வாய்பொத்திச் சிரிக்க, “எல்லாம் நேரம்டி” என்று முணுமுணுத்தபடியே நகர்ந்தான் ஜெயராமன்.

“வாங்க சார்… வாங்க..” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் இந்திரா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. “டேய் பயலே சம்முவம்… நம்ம ஜெயராமன் சாரைக் கவனி..” என்று ஒருவனை அவர் மீது ஏவினார். வந்து நின்றவனை பையன் என்று சொல்ல முடியாது, பையர்!! லிஸ்டை அவனிடம் நீட்ட, “நீங்களே படிங்க சார். சட்னு எடுத்து போட்டுட்றேன்..”

“சரிப்பா. மொதல்ல புழுங்கலரிசி நாலு கிலோ போடு..”

“சாப்பாட்டுக்கா சார்..?”

“யோவ், சாப்பாட்டுக்கு இல்லாம, நான் என்ன கொல்லைப்புறத்துல விவசாயமா பண்ணப் போறேன் அதை வெச்சு..?”

“அதில்லை சார். சாப்பாட்டு அரிசியா..? இல்லை இட்லிக்கு அரிசியான்னு கேட்டேன்..”

“சாப்பாட்டு அரிசியாவே போட்றுப்பா…”

நகர்ந்து போன சண்முகம்(ர்) சற்று நேரத்தில் திரும்பி வந்தான்(ர்).

“போட்டாச்சு சார். நெக்ஸ்ட்..?”

“கசமுசா ஒரு 250 கிராம் போடுப்பா..”

“என்னது..? கசமுசாவா..?”

“அப்டித்தான்ப்பா எழுதிருக்கு. பாரு..” காட்டினார்.

“சரியாப் போச்சு. அது கசகசா சார். போட்டுட்றேன். நெக்ஸ்ட்..?”

“உளுத்தம் பருப்பு ஒரு கிலோ.”

“உடைச்சதா வேணுமா.? உடைக்காததா..?”

“எந்தப் பொருளையும் உடைச்சு எடுத்துட்டுப் போனா என் மண்டை உடைஞ்சிடும். உடைக்காததாவே குடு”

‘சாருக்கு இன்னிக்கு வீட்ல அடி கன்பர்ம்’ என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்தவனாகப் பொட்டலம் கட்டினான் சண்முகம். “அப்புறம் சார்…”

“தனியா ஒரு கால் கிலோ போடுப்பா..”

“தனியால்லாம் போய்ப் போடமுடியாது சார். இங்கதான் பொட்லம் போடுவேன்..”

“அடச்சை… தனியான்னா கொத்தமல்லி விதைய்யா”

“ஓ, அந்த ‘தனியா’வா..? போட்டுட்றேன் சார். அப்பறம்..?”

“அரைக்கிலோ புளி..”

“பழம் புளியா..? புதுசா சார்.?”

“யோவ், உன் பேர் சண்முகமா, சந்தேகமா..? ஒண்ணொண்ணுக்கும் கேள்வி கேட்டுக்கிட்ருக்க..? எனக்கும் டவுட்டாயிருக்கு. அவளுக்கே போன் பண்ணி கேட்டுட்றேன், இரு…” என்று அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து டயல் பண்ணத் துவங்க, வாயைப் பொத்திச் சிரித்தான் அந்த சண்முகம்.

“சார்.. இதுலயா கால் பண்ணப் போறீங்க..?”

“ஏன்..? வேற எதுல பண்ணுவ நீயெல்லாம்..?”

“செல்போன்ல பண்ணுவேன் சார். நீங்க கைல வெச்சிருக்கறது டிவி ரிமோட். அத வெச்சுல்லாம் டயல் பண்ண முடியாது…”

“ஆஆஆ…” என்று அலறியபடி கையிலிருந்ததைப் பார்த்தான் ஜெயராமன். செல்போன் என்று நினைத்து மறதியாக அவன் எடுத்து வந்திருந்த டிவி ரிமோட் அவனைப் பார்த்து வில்லத்தனமாகச் சிரித்தது.

“ஐயோ போச்சே… இந்நேரம் சீரியல் பாக்க ரிமோட்டைத் தேடி அது கிடைக்காம சீரியலை மிஸ் பண்ணி… கொலைக் காண்டுல இருப்பாளே… இனி அடுத்த ஒரு வாரத்துக்கு உப்புமாதானே கிடைக்கும்..” என்று ஜெ.யின் மைண்ட் வாய்ஸ் அலற, சட்டென்று சினிமாவில் சிவாஜிகணேசனுக்கு வருவது போன்று மனசாட்சி ஜெயராமன் பிரிந்து எதிரே வந்து நின்றான்.

“அட லூசு, அதுவாடா பிரச்சனை..? சீரியல் மிஸ்ஸான கடுப்புல அவ நாலு சாத்து சாத்தினா தாங்குவியாடா நீயி..? போன மாசமே நர்சிங்ஹோம் பில்லு ரெண்டாயிரம் ரூபா. ஓடிருடா..” என்றான்.

“லி… லிஸ்டை போட்டு வெய்ப்பா. ஈவினிங் வந்து படுத்துக்கறேன், ச்சீ, எடுத்துக்கறேன்…” என்று உளறிய (அலறிய) படியே ஓட்டமெடுத்தான் இப்போது பயராமனாக மாறிவிட்டிருந்த ஜெயராமன்.

நேரு பூங்கா. வீட்டை விட்டுத் தொலைவில் இருந்த காரணத்தால் ஒருமுறைகூட விசிட் அடித்திராத பார்க்கினுள் இப்போது நுழைந்தான் ஜெயராமன்.

என்ன ஆச்சரியம்! கார்ப்பரேஷன் பார்க்கா இது..? நடைபாதைகள் சுத்தமாய் துடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு தூசிதும்பைக் காணோம். செடிகள் அழகாய் கத்தரித்து ட்ரிம் செய்யப்பட்டிருந்தன. ‘சார் டீ’ என்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டு அலையும் ஒரு ஆசாமியும் இல்லை. அப்படியொரு இனிய சூழல் பார்க்கினுள்.

…என்றெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான். ஆனால் பார்க் அப்படியில்லை. டிபிக்கல் சென்னை பார்க்குகளுக்குண்டான லட்சணங்கள் அத்தனையும் இருந்தன. விரலை வைத்துப் படம் வரையுமளவு அழுக்கான பெஞ்ச்சுகள், கேனில் டீயுடன் சுற்றிவந்த ஓர் ஆசாமி, அங்கங்கே எட்டாம் நம்பரை வரைந்து புதிதாய் நடைபயிலும் குழந்தைபோல் அதில் சுற்றிச் சுற்றி வரும் மூத்த குடிமக்கள்… எதுவும் குறைவில்லை. ஜெ. ஒரு கார்னர் பெஞ்ச்சில் அமர்ந்து சுற்றிலும் கவனிக்க ஆரம்பித்தான்.

இந்த நடையர்கள்தான் எத்தனை விதம்! மிலிட்டரி மார்‌ச் போல கைகளை வீசி சீரான ஒழுங்குடன் நடந்து செல்லும் முதியவர், ‘என்னையாடா சண்டைக்குக் கூப்பிட்டே?’ என்கிற தினுசில் கைகளை வீசி அதிர அதிர நடந்து வரும் ஒரு குண்டு மாமி, அது நடையா இல்லை ஓட்டமா என்று தெரியாதபடி நடையோட்டமாகச் சென்ற ஒரு மத்திய வயது நபர், பின்னாலேயே அவர் நடந்து வருகிறாரா, இல்லை காற்று அவரைத் தள்ளிக் கொண்டு வருகிறதா என்ற குழப்பம் ஏற்படும்படி நாகேஷ் போல ஊசி உடம்புடன் ஒருவர், அதற்குப் பின்னால் ஒரு இளம்பெண்ணின் தோளில் கை போட்டுக் கொண்டு.. -காதலனாகத்தான் இருக்க வேண்டும், கணவனாக இருந்தால் அவன் முகத்தில் சிரிப்பிருந்திருக்காது, தோளில் கை போட்டிருக்க மாட்டான் – வந்த அவன்…

தன்னை மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜெயராமன் தன் இடப்பக்கம் தலையைத் திருப்ப, ‘ழே‘யென்று விழித்தான். காரணம்… அருகில் அமர்ந்திருந்த அந்த இளம்பெண்..! அவள் அழகு..!!

அந்த அழகி, ஜெயராமனைப் பார்த்துப் புன்முறுவலித்தாள்.

-பூதம் வரும்…

ganesh

2 Comments

  • வரிக்கு வரி சிரிப்பு.. கலக்கல் தொடரின் ஆரம்பமே செம்ம. பஜ்டா !

  • தொடக்கமே துலக்கம் –
    எழுத்துக்கு எழுத்து – சிரிப்பு பீறி வெடிக்கிறது.
    நீங்கள் – வரிந்து கட்டிய காமெடி ரைட்டர் அல்லர் – இயல்பாகவே நகைச்சுவை சுரக்கும் இயற்கை எழுத்தாளர்.
    பாக்கியம் ராமசாமி அவர்களின் எழுத்துக்கு ஒப்பானது உங்கள் எழுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...