ஒற்றனின் காதலி | 1 | சுபா

 ஒற்றனின் காதலி | 1 | சுபா

டைட்டில் கார்டு போடுவதற்கு முன்…

ரசாங்க மருத்துவமனை உறங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரிய இரும்புக் கதவுகள் திறந்து கிடந்தன. யார் நினைத்தாலும், யானை வந்து தள்ளினாலும் மூடமுடியாதபடி, கதவின் கீழ்ச் சக்கரங்கள் தரையில் அழுத்தமாகப் புதைந்திருந்தன.

விபத்து கேஸ்களைக் கவனிக்கும் காஷுவாலிட்டி பிரிவின் வராந்தாவில் குழல் விளக்குகள் மெல்லிய ‘ம்’முடன் எரிந்தன.

வராந்தா பென்ச் ஒன்றில் காக்கிச் சட்டை ஆசாமி, அடிபட்டவனைப் போல் படுத்துக் கிடந்தான்.

அறையில் ஒரு நர்ஸ் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தாள். ஹவுஸ் சர்ஜன் டாக்டர் – இரவு ட்யூட்டி – எங்கோ டீ சாப்பிடப் போயிருக்க வேண்டும்.

அறையில் சில ரத்தம் தோய்ந்த பஞ்சுகள் குப்பைத் தொட்டியில். ரத்தம் தோயாத பஞ்சுத் துணுக்குகள் மேஜைமேல். வலைத்துணிச் சுருள். பீங்கான் ட்ரேயில் கத்தரி. சூழ்நிலையில் மெலிதாகப் பரவியிருந்த ஆல்கஹாலின் இனிமையான வாசனை. பிளாஸ்டிக் உறை விட்டு விலகாத, வர்ஜினிடி கெட்டுப் போகாத டிஸ்போஸபிள் சிரின்ஜ்.

அவன் ஆஸ்பத்திரி கேட்டினுள் நுழைந்தான். இருபக்கமும் பார்த்தான். யாரும் கவனிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

கேட்டிற்கு வெளியே அவனுக்காகக் காத்திருந்த, வேன் டிரைவரை நோக்கி சைகை செய்தான்.

கருப்பு நிறத்தில் இருந்த வேன், கியர் மாறி, லேசாக உறுமி ஆஸ்பத்திரி காம்பவுண்டில் நுழைந்து, நேரெதிரே தெரிந்த விபத்துப் பிரிவருகே, வலது பக்கம் திரும்பி, மறுபடி இடது பக்கம் திரும்பி, ஆஸ்பத்திரியின் விலாவை ஒட்டிச் சென்ற தார்ப்பாதையில் கிர்ரென்று நகர்ந்தது.

வேனுக்கு சைகை காட்டியவன், விபத்துப் பிரிவான, அவசரச் சிகிச்சைப் பிரிவில் நுழைந்தான். தூங்கிக் கொண்டிருந்த காக்கிச் சட்டையைக் கடந்தான். அறையில் இருந்த நர்ஸ், அவனது குறுக்கீட்டால், எழுந்து விடக்கூடாதென்பதில் கவனமாக இருந்தான். அவனது, ரப்பர் ஸோல் பொருத்தப்பட்ட ஷூக்கள் சத்தம் எழுப்பாமல், தரையில் முன்னேறின.

அவசர சிகிச்சைப் பிரிவைக் கடந்தான். பத்தடி தூரத்தில் ஒரு மரக்கதவு. அதைத் திறந்தான். திறந்து கொண்டது. அது இன்னொரு வராந்தாவில் கொண்டு சேர்த்தது. அந்த வராந்தாவின் மங்கலான ஆரஞ்சு வெளிச்சம்.

வராந்தாவின் மூலையில் ஓர் அறை. அறை வாசலில் ஸ்டூல் போட்டு ஒரு காக்கிச் சட்டை உட்கார்ந்தபடியே தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.

வந்தவன் தன் செயலில் தீர்மானமாக இருந்தான். காக்கிச் சட்டையின் அருகில் நின்றான். அவன் சட்டைப் பாக்கெட்டில் ஒரு சாவிக் கொத்து தெரிந்தது. ஒன்றிரண்டு சாவிகள் சட்டைப் பாக்கெட்டின் வெளிப்புறம். மற்றவை பாக்கெட்டிற்குள். காக்கிச் சட்டையிடம் கள்ளச் சாராய வாசனை – குடித்தவனுக்கு; நாற்றம் – வந்தவனுக்கு.

வந்தவன், அவன் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுக்கப் பார்த்தான். சாவியைத் தொட்டவுடன் தூங்கி வழிந்து கொண்டிருந்த வாட்ச்மேன், திடீரென்று பாம்பு போலக் கழுத்தை வளைத்துத் திருப்பினான்.

கண் விழித்தான். சிவந்த கண்கள். தன் எதிரில் நின்றவனைப் பார்த்தான். தன்னிச்சையாய் ஒரு தாக்குதல் போல் கையை உயர்த்தினான்.

வாய் திறந்து கத்தப் பார்த்தான்.

வந்தவன், இளைஞன். சுய நினைவுடன் இருந்தவன். காக்கிச் சட்டைக்காரனின், இந்த எதிர்மறைச் செயல்களை எல்லாம் எதிர்பார்த்து வந்தவன்.

எனவே –

காக்கிச் சட்டையின் வாயில், கையில் தயாராக இருந்த ஒரு வலைத்துணிச் சுருளைத் திணித்தான். அவனது வளைந்திருந்த கழுத்தில், புடைத்திருந்த நரம்பில், ஒரு ஜூடோ வெட்டு வெட்டினான்.

காக்கிச் சட்டை சரிந்தது. வந்தவன், தன் வேலையில் திருப்தியடைந்தவன் போல, ஜுடோ வெட்டு வெட்டிய தன் கையைத் துடைத்துக் கெண்டான். சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு பேனா மின் விளக்கை எடுத்தான். பித்தானை அழுத்தினான். சக்தி வாய்ந்த ஓர் ஒளிக்கற்றை, மின் விளக்கிலிருந்து ஒரு தடித்த கயிறாகப் பாய்ந்தது.

ஒளிக்கற்றையை, அறையின் கதவின் மேலிருந்த போர்டில் வீசினான். ஆங்கிலத்தில் மார்ச்சுவரி என்றும், தமிழில் சவ அறை என்றும் கறுப்பு, வெளுப்பில் எழுத்துக்கள் தென்பட்டன.

திருப்தியடைந்தான். காக்கிச் சட்டையின் பையில் இருந்து எடுத்த சாவிக் கொத்தால், அறைக் கதவைத் திறக்க முயன்றான்.

மூன்றாவது சாவி – க்ளிக்.

அவன் உள்ளே நுழைந்தான்.

குளிரூட்டப்பட்ட அறை அது. அறை உள்ளே நுழைந்ததும், ஒரு மாதிரியான ‘சிலீர்’ அவன் உடலைத் தாக்கியது. நாப்த்லின், பினாயில், டெட்டால், ரத்தம், உடல் அழுகியதால் ஏற்பட்ட நாற்றம் ஆகிய எல்லாவிதமான மணங்களும் கலந்து, அவன் வயிற்றைக் கலக்கியது.

ஒளிக்கற்றை, மார்ச்சுவரியின் எல்லாச் சுவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு ஸ்ட்ரெச்சர் அனாதையாக ஒரு ஓரத்தில், ஒதுங்கிக் கிடந்தது. ரயில்வே பர்த்கள் போல ஸ்டீல் ஷெல்ஃபில், ஆஸ்பத்திரியின் முத்திரை பதிக்கப்பட்ட, வெள்ளைத் துணி போர்த்திக் கொண்ட, உடல்கள் அந்த ஷெல்ஃப்களில். அந்த இடத்தில் இருந்த மரணமணம் அவனைத் துரத்தப் பார்த்தது.

ஒரு ஷெல்ஃபை நெருங்கினான். துணியை நீக்கினான். விபத்தில் இறந்தவனின் உடல் அது. தலை பாதி நசுங்கி இருந்தது. மூளை இருக்க வேண்டிய பகுதியில் இரண்டொரு சதைத் துணுக்குகள் ஒட்டிக் கொண்டிருந்தன. முகத்தின் ஒரு பக்கம் நசுங்கியிருந்தது. கண் இல்லை. ஒரு பக்கம் பற்கள் இல்லை. பெற்றவளே வந்தாலும் கூட, அடையாளம் புரிந்து கொள்ள முடியாத உடல்.

அவன் துணியால் மூடினான். அடுத்த உடலைத் தழுவி மூடியிருந்த போர்வையை விலக்கினான். நடுத்தர வயதுப் பெண். நாற்பது வயதிருக்கலாம். முகம் நிறைய மஞ்சள். உதடுகளில் புன்னகை. நெற்றியில் குங்குமம். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு, இருந்த அந்த உடல், என்னவோ ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாதிரி தெரிந்ததேயொழிய, இறந்து போன மாதிரித் தெரியவில்லை. அவன் துணியை மூடிவிட்டு, அடுத்த உடலை நோக்கிப் போனபோது, இந்தப் பெண் எழுந்து, அவனைப் பின்னங் கழுத்தின் சட்டைக் காலரைப் பற்றப் போகிறாள் என்று நினைத்தான். பயந்தான்.

அப்படி எதுவும் நிகழவில்லை. அவன் இன்னொரு போர்வையை விலக்கி, துணிக்குப் பின்னால் இருந்த உடலைப் பார்த்தான்.

அந்த உடல் ஓர் இளம்பெண்ணிற்குச் சொந்தமானது. மிஞ்சிப் போனால், இருபத்திரண்டு வயதிருக்கலாம். நெற்றிப் பொட்டில் காயம் தெரிந்தது. சிந்தியிருந்த ரத்தம் தெரிந்தது. கழுத்து ஒரு மாதிரி திரும்பியிருந்தது. கண்கள் மூடியிருந்தன. உதட்டில் கடைசி வினாடி வேதனையின் உறைவு.

அவன் போர்வையை முற்றிலும் விலக்கினான். உடலில் துணி இல்லை. நிர்வாண உடல். உயிருடன் இருந்த காலத்தில் எத்தனை, எத்தனை ஆண்களைப் பைத்தியமாக அடித்த உடலோ.

அவன் உடலில் இருந்து விலகினான். ஸ்ட்ரெச்சரைத் தள்ளி வந்தான். ஷெல்ஃபிலிருந்து, உடலை ஸ்ட்ரெச்சருக்கு மாற்றினான். போர்வையால் மூடினான்.

மார்ச்சுவரியின் இன்னொரு பக்கத்தில் ஒரு பெரிய ஷட்டர் மூடியிருந்தது. கையில் இருந்த சாவிக் கொத்தால் பூட்டைத் திறக்க முயன்றான்.

சாவி அவன் அவசரத்திற்குப் பொருந்தவில்லை.

வெகு திடீரென்று ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது. அவன் இதயம், ஒரு துடிப்பை நழுவ விட்டது. வியர்வைச் சுரப்பிகள் ஒலிம்பிக் வேகத்தில் வேலை செய்தன. ஒரு முழு வினாடிக்குப் பிறகுதான், சத்தம் ஆஸ்பத்திரியின் வேறு ஏதோ ஒரு வார்டில் இருந்து வந்ததெனப் புரிந்தது.

கையில் பதட்டம் அதிகமாகியது. இத்தனை நேரம் மௌனமாக இருந்த ஒரு சுவர்க்கோழி, திடீரென்று தன் கச்சேரியைத் தொடங்க, அந்த மூடிய அறையில் ரீங்காரம் ஆம்ப்ளிஃபை செய்யப்பட்டு, சுவர்களில் மோதி எதிரொலித்தது.

அத்தனை பிணங்களும் எழுந்து விடுமோ என்ற, வீண் பயம் அவன் நெஞ்சை ஊடுருவியது.

சாவி ஒன்று பூட்டில் பொருந்தி – க்ளிக் என்றது.

அவன் ஷட்டரை மேலே தூக்கினான். ஷட்டர், கிரீஸ் போட்டுப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால், தினசரி திறந்து, திறந்து மூடப்பட்டுக் கொண்டிருந்ததால், சத்தமின்றி மேலே சுருட்டிக்கொண்டது. வெளிக்காற்று, வெப்பக் காற்று, அவன் முகத்தைத் தாக்கியது. அவன் மகிழ்ச்சியடைந்தான்.

ஷட்டருக்கு நேர் எதிரே, வேன் முதுகுக் கதவு திறந்து நின்றிருந்தது. அவன் ஸ்ட்ரெச்சரைத் தள்ள, வேனின் முதுகு மோதி நிறுத்தினான். உடல் ஒருமுறை குலுங்கியது. அவன் உடலை ஸ்ட்ரெச்சரில் இருந்து வேனிற்கு மாற்றினான்.

அதன் முதுகுக் கதவைச் சார்த்தினான். வேன் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. அவன் மறுபடி மார்ச்சுவரியில் புகுந்து, ஷட்டரை இறக்கிப் பூட்டினான்.

மார்ச்சுவரி அறையில் இருந்து வெளிப்பட்டான். கதவு பூட்டினான். சரிந்து கிடந்த காக்கிச் சட்டையை ஸ்டூலில் உட்கார வைத்தான். சாவிக்கொத்தை அவன் சட்டைப் பாக்கெட்டில் முன்போல் வைத்தான்.

ஆஸ்பத்திரியில் நுழைந்தது போலவே நழுவினான்.

நகரமக்கள் பொறுப்பானவர்களாய் நடந்து கொண்டு, ஒரு விபத்துமின்றி சென்று கொண்டிருந்ததால், அவசரச் சிகிச்சைப் பிரிவு இன்னும் உறங்கிக் கொண்டிருந்தது.

அவன் ஆஸ்பத்திரி காம்பவுண்ட் கேட்டிற்கு வெளியே வந்தான். கேட்டிற்கு வெளியே கருப்பு வேன் காத்திருந்தது. அதன் விலாப் பகுதியில் எழுதப்பட்டிருந்த ‘அமரர் ஊர்தி’ என்ற எழுத்துக்கள் தெரு விளக்கில் மின்னின.

ஆகாயத்தின் மேகங்கள் ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டன. பருவமடைந்த மேகங்கள். மின்சாரம் பாய்ந்தது. பூமியில் யாரோ ஒருவன் ‘மின்னல்’ என்றான். காம வேகத்தில் இரு மேகங்களும் முனகின. பூமியில் ‘இடி’ என்றார்கள்.

பொட்டென்று ஒரு துளி, ஆனந்தக் கண்ணீரைச் சிந்தியது மேகம். பூமியில் ‘மழை’ என்றார்கள்.

‘சட, சட, சட’ என வினாடிக்குள் பலத்த மழை.

தெரு விளக்குகளின் கீழ், அமரர் ஊர்தி விரைந்தது. அதன் மேற்கூரையை, மழை அம்புகள் பெயர்க்க முயன்று நீர்ப்புகையாக மாறி, காற்றில், வெளிச்சத்தில் அலைந்தது.

-காதலி வருவாள்…

ganesh

2 Comments

  • ஆரம்பமே மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது. மின்னல் இடி மழைக்கு ஆசிரியரின் உவமை வெகு சிறப்பு..

  • அட்டகாசமான ஆரம்பம்! த்ரில்லாக முடிந்தது முதல் அத்தியாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...