குஜராத்தில் நடந்த சதுரங்கப் போட்டியில் 7 வயது மாணவி சாதனை
குஜராத் மாநிலம் அகமதாபாத் சயன்ஸ் (Science city) சட்டியில் 6-10-2022 முதல் 11-10-2022 வரை நடைபெற்ற 35வது தேசிய மாபெரும் சதுரங்கப் போட்டியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் (மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி A.S.ஷர்வானிகா (7 வயது) தமிழ்நாடு சார்பில் (Under-7) கலந்துகொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 11 வெற்றிகள் பெற்று இந்திய அளவில் முதலிடம் என்ற சாதனையைப் படைத்து தமிழ்நாட்டிற்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் மீண்டும் ஒருமுறை பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆசிய, தெற்காசிய, காமன்வெல்த் மற்றும் உலகப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கான 10-வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதற்கான கோப்பை மற்றும் பரிசுத் தொகையை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார் A.S.ஷர்வானிகா. இம்மாணவி இப்போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை ஏற்கெனவே இம்மாணவியின் தந்தையிடம் கலெக்டர் வழங்கி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.