பிரான்ஸில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்

பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் 2022ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 

பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைத் தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும் அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

அன்னி எர்னாக்ஸ், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதும் துணிச்சலான எழுத்தாளராக அன்னி எர்னாக்ஸ் அறியப்படுகிறார். 

82 வயதில் மொழி தொடர்புக்காக அன்னி எர்னாக்ஸுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அன்னி எர்னாக்ஸ் பெற்றிருக்கிறார்.

அன்னி எர்னாக்ஸ் தனது சுயசரிதையைத்தான் நாவல்களாக எழுதினார். தற்போது அந்த சுயசரிதைகளுக்குத்தான் நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாவல்களுக்கான பாரம்பரிய பாதையிலிருந்து விலகி, எந்தவித புனைவும் அல்லாது வாசகர்களுடனான ஓர் நுலாசிரியரின் இயல்பானதொரு உரையாடலுக்குக் கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம் நிச்சயம் இலக்கிய உலகில் புதிய பாதையைத் திறக்க வழி செய்திருக்கிறது.

ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய உலகில் பிரெஞ்சு மொழியில் அன்னி தொடர்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். உண்மையில் ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பின்னர்தான் அவரது படைப்புகள் உலகளவில் அடையாளம் கண்டன.

அன்னி தனது 50 ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத எழுத்தாளராகவே இன்றளவும் அறியப்படுகிறார். பிரான்ஸில் நிலவிய பாலினப் பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக முரண்பாடுகள், வர்க்க பேதம், பெண்களின் நிலை என அனைத்தையும் தனக்கு நடந்த உண்மை நிகழ்வுகளின் வாயிலாக வெளிக்கொண்டு வந்தார்.

எழுத்தையும் அரசியலையும் பிரிக்க முடியாது எனத் தீர்க்கமாகக் கூறும் அன்னி, பிரான்ஸில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு எதிராக எழுந்த தடைகளுக்கு எதிராகவும் தனித்து குரல் கொடுத்தார். 

அன்னி செப்டம்பர் 1, 1940 அன்று பிரான்சின் நார்மண்டியில் உள்ள லில்லி போனில் பிறந்தார்.  அவரது ஆரம்பகால வாழ்க்கை ஏழ்மை நிலைதான். அவரது பெற்றோர் கஃபே மற்றும் மளிகைக் கடையை நடத்தி வந்தனர். நடுத்தர வர்க்கப் பின்னணியைச் சேர்ந்த பெண்களைச் சந்தித்தபோது, ​​அவர் தனது உழைக்கும் வர்க்கப் பெற்றோர் பட்ட அவமானத்தை முதன்முறையாக அனுபவித்தார்.

அதுவே பின்னர் அவரது நாவல்களில் ‘உடல் மற்றும் பாலுணர்வு; நெருக்கமான உறவுகள்; சமூக சமத்துவமின்மை மற்றும் கல்வியின் மூலம் வகுப்பை மாற்றும் அனுபவம்; நேரம் மற்றும் நினைவாற்றல் போன்ற வாழ்க்கை அனுபவங்கள் அவரது கருப்பொருள் ஆனது.

ரூவன் பல்கலைக்கழகம் மற்றும் போர்டியாக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு, அவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தார். நவீன இலக்கியத்தில் உயர் பட்டம் பெற்றார்.

எர்னாக்ஸ் 1974இல் அவரது முதல் புத்தகத்தை வெளியிட்டார். ‘க்ளீன்ட் அவுட்’ என்பது 1964இல் அவர் செய்த சட்டவிரோதக் கருக்கலைப்பு பற்றிய கதை.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அதிர்ச்சியை அவர் ‘ஹேப்பனிங்’ புத்தகத்திற்காக எழுதினார். அது திரைப்படமாக வந்து கடந்த ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த பரிசை வென்றது.

எர்னாக்ஸின் மற்றொரு புத்தகமான ‘தி இயர்ஸ்’ 2008இல் பிரான்சில் பிரிக்ஸ் ரெனாடோட் விருதையும் 2016இல் இத்தாலியில் பிரிமியோ ஸ்ட்ரீகா விருதையும் வென்றது. ஒரு வருடம் கழித்து அவர் தனது வாழ்க்கைப் பணிக்காக மார்குரைட் யுவர்செனார் பரிசை வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!