படைப்பு குழும இலக்கிய விருது வழங்கும் விழா கோலாகலம்

 படைப்பு குழும இலக்கிய விருது வழங்கும் விழா கோலாகலம்

நூல் எழுதி வெளியிடுவதே கடினமாக இருந்த காலத்தில் இருந்து தற்போது நூல் வெளியிடுவது எளிதாகிப்போனது. நூல் எழுதினாலும் அங்கீகரிக்க அமைப்புகள் அரிதாக இருந்த காலத்தில் தற்போது எழுத்தாளர்களையும் அரிய படைப்பாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் அங்கீகரிக்கும் அமைப்புகள் உருவாகிவிட்டன. அப்படி படைப்பாளர்களை ஆண்டு முழுவதும் தெரிவு செய்து அவர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது படைப்பு அமைப்பு. அந்தப் படைப்புக் குழுமத்தின் ஏழாவது  ஆண்டு  விழா இன்று (15-10-2022) சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாராயர் அரங்கில் மாலை நேரத்தில் நடைபெற்றது.

முகநூலில் தொடங்கப்பட்டு விரிவடைந்த அமைப்பு படைப்பு குழுமம். இதன் ஆண்டு விழாவை விருது வழங்கும் விழாவாகவும், நூல் வெளியீட்டு விழாவாகவும்   இலக்கிய கொண்டாட்டமாகவும் நடத்தினார்கள் படைப்பு குழுமத்தினர். இவ்வாண்டு 40 நூல்கள் வெளியிடப்பட்டன. சிறந்த படைப்பாளிகள் பலர் விருதுகளும் பரிசுகளும்  பெற்றுள்ளனர். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் இந்திரன் அவர்களுக்கு படைப்புச் சுடர் விருதும் பிருந்தா சாரதிக்கு இலக்கிய சுடர் விருது வழங்கப்பட்டது.

சாதாரண வாசகர்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாய் கட்டமைக்கப்பட்டிருந்த இலக்கிய பீடங்களின் மாயத் தோற்றங்களை விலக்கி கடைக்கோடி எழுத்தாளனும் தன் படைப்புகளை சுதந்திரமாய் வெளிப்படுத்த ஒரு களம் அமைத்துக் கொடுத்திட உருவாக்கப்பட்டதுதான் படைப்பு இலக்கிய குழுமம்.

கவிதைகளுக்கான இலக்கிய பீடத்துடன் கூடிய படைப்பு குழுமத்தின் பயணம் இன்று இயல், இசை, நாடகம் என கலைகளின் அத்தனை வடிவங்களையும் தன்னுள் ஏற்றிக்கொண்டு இலக்கிய தாகத்துடன் பயணித்து வருகிறது. வெறும் கலை இயக்கியங்களுடன் நின்று விடாமல் மக்களுக்கான செயலிலும் தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டு பயணித்து வருகிறது. ஒரு இலக்கியக் குழுவினால் சமுதாயத்தை ஒன்றிணைத்து விடமுடியுமா எனும் சந்தேகத்தை அகற்றி, இன்று சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறது படைப்புக் குழுமம்.

இன்று லட்சம் உறுப்பினர்களைக் கடந்து ஒரு இலக்கியக் குழுமத்திற்கு இத்தனை நபர்களா என எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

மாதந்தோறும் படைப்பு, கல்வெட்டு, கவிதை, மின்னிதழில் புதிய புதிய கவிதைகளையும் கவிஞர்களையும் அறிமுகம் செய்து பல்வேறு வளங்களை உருவாக்கி தமிழ் இலக்கிய நேரலையில் அறிமுகப்படுத்தி தமிழுக்கும் தமிழிலக்கியத்துக்கும் இன்முகத்துடன் சேவையாற்றி வருகிறது படைப்புக் குழுமம்.

பசுமைத்திட்டப் பணிகளைச் செய்துவருகிறது. படைப்பாளர்களைத் தத்தெடுத்துக்கொள்கிறது.

விழாவில் பல மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், வாசகர்கள், பார்வையாளர்கள் என பல நூறு பேர் ஆர்வத்தோடு வந்திருந்தது பங்கேற்றிருந்தனர். விழாவில் பங்கேற்பாளர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் என்பது ஆரோக்கியமான விஷயம்.

விழாவில் சாகித்ய விருதாளர் எழுத்தாளர் பூமா வாசுகி, எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...