தலம்தோறும் தலைவன் | 16 | ஜி.ஏ.பிரபா
16. திருநல்லூர்ப் பெருமணம்
ஸ்ரீசிவலோகத் தியாகேசர்
இப்பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு
எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான்
தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு
கிடப்பேனை மலரடி இணை காட்டி அப்பன் என்னை வந்து
ஆண்டு கொண்டு அருளிய அற்புதம் அறியேனே.”
திருவாசகம்.
காதல் என்பது என்ன?
மனிதர்களுக்குள் தகுதி பார்த்து, அழகு பார்த்து எதோ ஒரு எதிர்பார்ப்புடன் வருவது அல்ல காதல். உண்மையான அன்புடன், எதையும் எதிர்பார்க்காமல் செலுத்தும் அன்பே காதல் என்கின்றன பக்தி இலக்கியங்கள்.
மனித மனத்தின் நுண்ணிய உணர்வுகளை இறைவனை நோக்கித் திருப்பும் பக்தி இலக்கியங்கள், இறைவன் நம்மேல் வைக்கும் நிகரற்ற அன்பே காதல் என்கிறது. மனிதர்களின் அன்பானது எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அமைகிறது. ஆனால் இறைவன் கொள்ளும் காதல் அடியார்களின் வாழ்வையே மாற்றி அமைக்கிறது.
தன் அடியவர்கள் யார் என்பதை இறைவனே தீர்மானிக்கிறான். ஒருவர் இறைவனைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பும், அவன்பால் ஈர்க்கப்படுவதும் இறைவன் மூலமே நடக்கிறது. இதையே தேவாரம் ஒன்று,
“முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்–மூர்த்தி அவனிருக்கும்
வண்ணங் கேட்டாள்– பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்– அன்னையையும்
அத்தனையையும் அன்றே நீத்தாள். அகன்றார் அகலிடத்தார்
ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் ,தன் நாமங் கேட்டாள்–
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”
என்கிறது. தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிற அடியவர்களின் அன்பே காதல். முன்னர் அவன் நாமம் கேட்கிறாள். அவனின் ஊர், அவனின் பெருமைகளைக் கேட்கிறாள். கேட்டு அதில் மயங்கி தன் பெயரை மறந்து, அவனுக்கே பிச்சியாகிறாள் என்று அடியார்கள், இறைவன் மீது கொண்ட காதலை ஒப்புமைப்படுத்திப் பாடுகிறார் திருநாவுக்கரசர்.
எதையும் எதிர்பார்க்காமல் தன்னையே அர்பணித்துக் கொள்ளும் தூய உணர்வு அது. அனைத்தையும் துறந்து அவனே கதி என்று கிடக்கும் உணர்வு இது.
“ஆசைப் பட்டேன், ஆட்பட்டேன் உன் அடியேனே”- என்கிறது திருவாசகம். இதையே காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி”- என்று பாடுகிறார் சம்பந்தர். இப்பாடல் பிறந்த தலம் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஆச்சாள்புரம்.
இங்கு இறைவன் சிவலோகத் தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். புராணங்களில் சிவலோகபுரம் என்று அழைக்கப்படும் தலம். அம்பாள் உமையம்மை, சுவேதா விபூதி நாயகி என்ற பெயர்களுடன் அழைக்கப் படுகிறாள். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் ஐந்தாவது இடம் இது. சம்பந்தரின் தேவாரப் பதிகம் பெற்ற தலம்.
அன்புறு சிந்தையராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமணம்
மேவி நின் இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவார்
அல்லர் தொண்டு செய்வாரே’
– என்று இப்பெருமானைப் புகழ்ந்து பாடுகிறார் சம்பந்தர்.
இறைவன் இங்கு சுயம்புத் திருமேனி. மாமரம் தல விருட்சம். பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, ஜமதக்னி, வியாச, மிருகண்டு என்ற தீர்த்தங்கள் காணப்படுகிறது.
சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வேதநெறி தழைத்தோங்க, சைவ நெறி வளர்ச்சி பெறத் தோன்றியவர் திருஞான சம்பந்தர். அவர் அவதரித்து, அன்னையிடம் முலைப்பால் உண்டு தமிழ்ப் பாடல்களைத் பொழிந்த தலம் சீர்காழி.
அவரின் திருமணம் நடைபெற்று உறவினர்கள் அனைவருடனும் சிவ ஜோதியில் கலந்த இடம் ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர்ப் பெருமணம். ஆச்சாள் என்பது அம்பிகையின் பெயர். சம்பந்தரின் திருமணத்திற்கு அம்பிகையே நேரில் வந்து வந்திருந்த அனைவருக்கும் திருநீறு அளித்ததால் திருவெண்ணீற்று உமையம்மை எனப் பெயர். இத்தலத்திற்கும் ஆச்சாள்புரம் என்னும் பெயர் உண்டானது.
பிரம்மா இங்கு வந்து ஈசனை வழிபாட்டு படைப்புத் தொழில் கைவரப் பெற்றார். வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி முனிவர்களுக்கு ஈசன் கைலாய காட்சி காட்டி அருள் புரிந்த தலமும் என்ற சிறப்பு உடையது.
மகாவிஷ்ணு இங்கு வந்து வழிபாட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு அஞ்சி, தலையால் நடந்து வந்து நிரூதித் திசையில் அமர்ந்து தவம் செய்தார்.
சம்பந்தருக்கு முதலில் மயிலாப்பூரில் சிவநேசச் செட்டியாரின் மகளை மணம் பேசி முடித்தனர் அவர் பெற்றோர். இறைவனின் லீலை என்று நீண்ட மறுப்புக்குப் பின் சம்மதித்தார். திடீரெனப் பாம்பு கடித்து இறந்த அவளை உயிர்ப்பித்து அவளைத் தன் மகளாக ஏற்றார் சம்பந்தர்.
இதன் பிறகு சம்பந்தரின் தந்தை நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பி என்பவரின் மகள் பூர்ணாம்பிகை எனும் நங்கை நல்லாளை நிச்சயித்தார். ஆச்சாள்புரம் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழாச் சடங்குகளைச் செய்தார். அக்னியை வலம் வரும்போது, இருவினைக்கும் காரணமான திருமண பந்தம் எம்மைச் சூழ்ந்ததே என்று வருந்தி திருநல்லூர்ப் பெருமணம் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.
அப்போது ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய இறைவன் “நீயும், உன் மனைவியும், வந்துள்ளவ்ர்களும் இந்த ஜோதியில் கலந்து விடுக” என்று அசரீரியாக உரைத்தார். மெய்சிலிர்த்துப் போன சம்பந்தர்,
‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே”
என்று தொடங்கும் நமசிவாயப் பதிகம் பாடுகிறார். இதுதான் அவர் பாடிய கடைசி பதிகம். அதன்பின் தன் மனைவி, உறவினர்களுடன் ஜோதியில் கலந்து விடுகிறார். ஆண்டுதோறும் வைகாசி மூல விழாவில் இந்நிகழ்ச்சி திருவிழாவாக நடக்கிறது. சுவாமி சன்னதி வாயிலின் மேற்புறம் இந்நிகழ்ச்சி வண்ண ஓவியமாக உள்ளது.
சோழ, பாண்டிய, மகாராஷ்டிர மன்னர்கள் காலத்தியக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சிவலோகத் தியாகேசர் ஆலயம், கிழக்கு நோக்கி, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. உள்ளே நுழைந்தவுடன், கவசமிடப்பட்ட கொடிமரம், நந்தி மண்டபம், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இங்கு திருஞானசம்பந்தர் தன் மனைவி ஸ்தோத்திரப் பூரணாம்பிகையுடன் தனிச்சன்னதியில் காட்சி அளிக்கிறார்.
இங்குள்ள ஸ்ரீ ருணவிமோசன லிங்கேஸ்வரர் சன்னதி மிகச் சிறப்பானது. இவரை வணங்கினால் தீராத கடன்கள் தீரும், செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை. இவரைப் பதினோரு திங்கட் கிழமைகள் வழிபட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்தால் நம் அனைத்துச் சங்கடங்கள், கவலைகள் தீரும். இதையடுத்து மகாலட்சுமி சன்னதியும் உள்ளது. அம்பிகை தனிக் கோயிலாக, வெளிப் பிரகாரத்தில் தனிச் சுற்றுடன் அமைந்துள்ளது.
திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இந்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்துள்ளனர். இறைவியின் சன்னதியில் குங்குமத்துக்குப் பதில் திருநீறுதான் வழங்கப் படுகிறது.
திருநல்லூர் மிகச் சிறந்த திருமணப் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து அம்பிகையை வேண்டி, தீபங்கள் ஏற்றினால் திருமணத் தடைகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இறைவனுக்கான விசேஷ உற்சவங்கள் அனைத்தும் இங்கு நடந்தாலும் நமசிவாயப் பதிகம் பாடிய நாளே மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அருகில் உள்ள நல்லூர் என்ற கிராமமும் சம்பந்தருடன் தொடர்பு கொண்டது. இங்கிருந்துதான் சமபந்தர் திருமணத்திற்குப் பெண் அழைப்பு நடைபெற்றது.
இங்குள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் மிகச் சிறப்புப் பெற்ற தலமாகும். ஜாதக தோஷங்களால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்வித்து, நெய் விளக்கு ஏற்றினால், சிறப்பான திருமண வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
சம்பந்தர் பாடிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில்
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரே தொண்டர்
நல்லூர்ப் பெருமண மேய நம்பானே.”
என்று பாடுகிறார் சம்பந்தர்.
நல்லூர்ப் பெருமான் நம்மை அரவணைத்துக் காப்பான் எனும் சம்பந்தர் நமசிவாய எனும் மந்திரமே நம்மைக் காக்கும் அஞ்செழுத்து என்கிறார்.
ஈசனை நம்பி அவரின் நாமத்தை தன் நாவினால் ஓதுவார்க்கு மதுரம் போன்று இனிக்கும் வாழ்வையும் தந்து, மும்மலமும் அகற்றுவான் ஈசன் என்கிறார்.
நம்புவாரவர் நாவினவிற்றினால் வம்பு நாண்மலர்
வார்மது வொப்பது செம்பொனார் திலகம் முலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமசிவாயவே!
என்கிறார்.
பரம்பொருளாம் ஈசனின் நாமம் சொல்லச் சொல்ல வாழ்வின் சகல நன்மைகளும் ஏற்படும் என்கிறார்கள். அறுபத்திநான்கு ப்பாஷனங்களினால் ஏற்படும் விஷம் நீங்கும். அவரின் நாமத்தை உச்சரிக்கும் இடங்களில் முப்பத்தி முக்கோடி தேவர்களும் பிரசன்னம் ஆகி நம் மனக் குறைகளைத் தீர்ப்பார்கள் என்கிறது வேதங்கள்.
நாமம் வேறு, நாதன் வேறு அல்ல. அவனின் நாமத்தை ஓத, ஓத உள்ளமே அவன் உறையும் கோவிலாகி விடும்.
நாமும் நாளும் ஓதுவோம் நமசிவாய எனும் நாமத்தை.