கோமேதகக் கோட்டை | 18 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
‘உன் உடல் வேண்டுமானால் என் காதில் இருந்து வெளியே வா..! என்ற பூதகியின் அச்சுறுத்தலுக்கு என்ன பதில் சொல்வது? அப்படி வெளியே வந்தால் மட்டும் அவள் உடலை நசுக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?’ என்னசெய்வது என்று ஒரு நிமிடம் சிந்தித்தான் வித்யாதரன்.
”என்ன வித்யாதரா? என்ன யோசிக்கிறாய்..? நீ என் காதை விட்டு வெளியே வருவதொன்றுதான் உனக்கான ஒரே வழி..! சீக்கிரம் வெளியே வா..!”
வித்யாதரன் இப்போது மவுனித்து, ஏதோ தியானித்தான். உடனே சூர்ப்பனகா, “வித்யாதரா, அப்படியே செய்கிறேன்..!” என்றாள். மறுநொடி அவள் ஒரு மாபெரும் பருந்தாக மாறி வித்யாதரனின் உடலைப் பூதகியின் காலடியில் இருந்து கவ்விச் சென்றாள்.
பூதகியால் சடுதியில் நடந்த இந்த சம்பவத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை..! இதெப்படி இந்தப் பருந்து இங்கே வந்தது..? என்று யோசிக்கும் போதே அவளது மற்றொரு காதுக்குள் புகுந்து சரமாரியாக கடிக்கத் துவங்கினான் வண்டாக இருந்த வித்யாதரன்.
“ஐயோ..! போதும் வித்யாதரா..! நான் தோற்றேன்..! என்னை விட்டுவிடு..!”-பூதகி மன்றாடினாள்.
”விட்டுவிடலாமா சூர்ப்பனகா..!” வித்யாதரன் கேட்க, பருந்தாக இருந்த சூர்ப்பனகா மீண்டும் சுய உருவுக்கு வந்து, “வித்யாதரா..! பாவம் பூதகி… அவளை மன்னித்து விட்டுவிடலாம்..! இனி அவள் யாருக்கும் தொந்தரவு செய்ய மாட்டாள்..!” என்றாள்.
“ஆம் வித்யாதரா..! என்னை உயிரோடு விட்டுவிடு..! இனி இந்தக் காட்டுவழி செல்லும் யாரையும் நான் துன்புறுத்த மாட்டேன்..! ஆனால் நானும் என் சகாக்களும் இந்தக் காட்டிலேயே வசிக்க நீ அனுமதிக்க வேண்டும்..! உன்னிடம் நான் வைக்கும் வேண்டுகோளை ஏற்றுகொண்டு என்னை உயிரோடு விட்டுவிடு..! கோமேதகக் கோட்டைக்கு நானும் உன்னோடு வருகிறேன்..! அந்த ராட்சதனைக் கொல்ல உதவியாக இருக்கிறேன்..!” என்றாள் பூதகி.
“நீ இவ்வளவு தூரம் கெஞ்சுவதால் மட்டுமல்ல… அனாவசியமாக ஓர் உயிரைக் கொல்ல என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறேன்..! இனி யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் இந்த கானகத்தின் பாதுகாவலர்களாக நீயும் உன் கூட்டமும் இருந்து கொள்ளுங்கள்..!” என்ற வித்யாதரன் பூதகியின் காதுக்குள் இருந்து வெளியேறினான். அடுத்த நொடி மந்திரப் பாயில் வித்யாதரன் உயிர்பெற்று எழுந்தான்.
“வித்யாதரா, உன் வீரமும் சமயோசிதபுத்தியும் அருமை..! கண்டிப்பாக நீ அந்த ராட்சதனை வென்று இளவரசியை மீட்டுவிடுவாய்..! அதில் ஐயம் ஏதுமில்லை..! நீ புறப்படு..! கோமேதகக் கோட்டையை நீ அடையும் சமயம் உனக்கு உதவியாக நானும் அங்கிருப்பேன்..!” என்றாள் பூதகி.
அப்போது, “வித்யாதரரே..! வித்யாதரரே..! உங்களுக்கு உதவ நானும் வருகிறேன்..! என்னை விட்டுச் செல்லாதீர்..!” என்றொரு குரல் கேட்டது.
வித்யாதரன் கீழே குனிந்து பார்த்தான். அங்கே சித்திரக்குள்ளன் நின்றிருந்தான். “வாருங்கள் சித்திரக் குள்ளரே..! வாருங்கள்” என்று மந்திரப்பாயை கீழிறக்கி சித்திரக்குள்ளனை அதில் ஏற்றிக் கொண்டான் வித்யாதரன்.
மந்திரப்பாய் மூவரோடு கோமேதகக் கோட்டையை நோக்கிப் பயணித்தது.
அதேசமயம் சத்திரத்துக்குள் தங்கியிருந்த குதிரைப்படைத் தலைவனும் அவன் கூட்டாளிகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது மெல்லப் பூனை நடைபோட்டு அங்கே வந்த சத்திரத்தின் காவலன் அவர்கள் நன்கு உறங்குகின்றனரா என்று பார்த்தான். அனைவரும் நல்ல உறக்கத்தில் இருக்கவே, ‘ஆழ்ந்து உறங்குகிறார்கள். இதுதான் சமயம்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். இவர்கள் இந்த இடத்தை விட்டு அகலக் கூடாது, அதற்கு என்ன செய்யலாம் என்று மனத்திற்குள் கேட்டுக்கொண்டான்.
பின்னர் கண்களை மூடித் தியானித்துக் கைகளை நீட்டினான். அவன் கைகளில் நாகம் ஒன்று வந்தது. ”ஏ சர்ப்பமே..! நீயும் உன் கூட்டமும் இவர்களுக்கு காவலாய் இருந்து ஒருவரையும் வெளியேற விடாமல் மடக்கி வைத்திருக்க வேண்டும். இது நம் தலைவர் உத்தரவு..!” என்று அந்தப் பாம்பை தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகில் விட்டான்.
அந்த ஒரு பாம்பு நீண்டு உறங்கி இருந்தவர்களை சுற்றி ஒரு வட்டமாக மாறிப் பிணைந்து கொண்டது. இனிக் கவலையில்லை! இவர்கள் இங்கிருந்து வெளியேற முடியாது. நாம் எஜமானுக்குத் தகவல் தெரிவித்து விடலாம் என்ற சத்திரக் காவலன் மெல்ல குதிரை லாயத்திற்கு வந்தான். அங்கு கருப்பும் வெள்ளையுமாக இருந்த அந்த அசுவத்தின் முதுகில் ஏறி அமர்ந்தான். இப்போது அவன் ஒரு குட்டி அரக்கனாக மாறி இருந்தான்.
”ஏய் ஸ்யாம ஸ்வேதமே..! என்னை கோமேதகக் கோட்டைக்கு அழைத்துச்செல்..! ”என்றான். அந்தக் குதிரை அப்படியே அவனைச் சுமந்து கொண்டு ஆகாயத்தில் பறந்து செல்ல ஆரம்பித்தது.
கோமேதக கோட்டையில் இருந்த இளவரசி பாதாளச் சிறையில் தள்ளப்பட்டாள் அல்லவா..? அந்தப் பாதாளச் சிறையில் சாளரம் ஒன்று மட்டும் இருந்தது. அதன் வழியாக சிறிய வெளிச்சம் மட்டும் உள்ளே வந்து கொண்டிருந்தது.
அந்த சாளரம் கொஞ்சம் உயரத்தே இருந்தது. ஆனால் பாதாளச்சிறையின் சுவர்கள் பாறைகளால் குடையப்பட்டிருந்ததால் ஆங்காங்கே கொஞ்சம் பிடிமானங்கள் கிடைத்தது. அந்தப் பிடிமானங்கள் உதவியால் மெல்ல சுவற்றில் பல்லிமாதிரி ஒட்டிக் கொண்டு மேலேறி சாளரம் வழியாக எட்டிப் பார்த்தாள்.
அவள் சாளரம் வழியே கண்ட காட்சி அவளுக்கு மிரட்சியைத்தான் கொடுத்தது. ஆம். அவள் சாளரத்தின் வழியே பார்த்தபோது வெளியே எங்கும் நீர்ப்பரப்பாய் இருந்தது. அதுவும் சாதாரண நீர்ப் பரப்பு அல்ல..! கடல்நீர் சூழ்ந்திருந்தது. அவள் கரை ஏதாவது தென்படுகின்றதா என்று உற்றுப் பார்த்தாள். ஆனால் அவள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்நீரே காட்சி அளித்தது.
அவள் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள். இந்தக் கோட்டை கடலின் மையத்தில் இருக்கின்றது போலும். யாரும் அவ்வளவு சுலபத்தில் இங்கே வந்துவிட முடியாது போலிருக்கிறதே..! கடலைக் கடந்து இந்தக் கோட்டைக்குள் நுழைந்து நம்மை வித்யாதரன் காப்பாற்றிச் செல்வானா? இப்படி அவள் யோசித்தபோது வெளியே யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. அந்த ஓசை நெருங்குவதற்குள் இளவரசி கீழே குதித்து ஓர் மூலையில் அமர்ந்து கொண்டாள்.
அந்த ஓசை மெல்ல மெல்ல அதிகரித்து அவளது சிறைவாசல் அருகே வந்து நின்றது.
அவளைக் கடத்திச் சென்ற ராட்சதன் தான் வந்து நின்றான். ”ஏய், இளவரசியே..! உன்னை மீட்க எந்த ராஜ குமாரனும் வரமாட்டான்..! அந்த வித்யாதரன் வருவான் என்று கனவு கூடக் காணாதே..! அப்படியே வந்துவிட்டாலும் என் முன் அவனால் ஒரு நிமிடம் நிற்கக் கூட முடியாது. இன்று நான் வில்லவபுரம் செல்கிறேன்..! உன் தந்தைக்கு ஓர் நற்செய்தி சொல்லப் போகிறேன்..!” என்றான்.
“நற்செய்தியா..? என்ன செய்தி அது..? என்னை விடுவித்துவிடப் போகிறாயா..?”
”அட, பேராசைப்படுகிறாயே..! நீதானே என் துருப்புச்சீட்டு..! உன்னை விடுவித்துவிட்டால் நான் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா..?”
”அப்புறம் என்ன நற்செய்தி..? உணவுப் பண்டங்கள் கேட்பதை விட்டுவிடப் போகிறாயா..?”
”அட, ஓரளவு ஊகித்துவிட்டாய்..! என்ன இருந்தாலும் நீ இளவரசி அல்லவா..?”
”இப்போதாவது உன் மனம் மாறியதே..! உங்கள் கூட்டத்துக்கு உணவு தேடவே எங்களுக்கு நேரம் போதவில்லை..! உனக்கு நன்றி..!”
“அவ்வளவு சீக்கிரம் நன்றி சொல்லாதே..! உணவு கேட்பதை நான் விட்டுவிட வேண்டுமானால் உன் தந்தை நான் கேட்கும் ஒரு நிபந்தனைக்குச் சம்மதிக்க வேண்டும்.”
“அப்படி என்ன நிபந்தனை விதிக்கப் போகிறாய்..?”
“இளவரசி..! இனி நீ இளவரசி இல்லை..! இந்த ராட்சதனுக்கு நீ தான் அரசி..! உன்னை மணந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! இதற்கு நீயும் உன் தந்தையும் சம்மதித்தால் இனி உணவுக்காக உங்கள் மக்களை துன்புறுத்த மாட்டேன்.”
காதைப் பொத்திக் கொண்டாள் இளவரசி. “நான் ஒரு சிறுமி..! என்னைப் போய்..!”
”நிறுத்து..! உன்னைப் போல் ஒரு சிறுமியை மணந்து கொண்டால் என் பலம் அதிகரித்து விடுமாம். அப்புறம் என்னை வெல்ல யாராலும் முடியாதாம்! அதுதான் உன்னை மணந்து கொள்ள முடிவெடுத்துவிட்டேன். இதற்கு உன் தந்தை சம்மதித்தால் போதும். இனி உணவுக்காக அவரையும் உங்கள் மக்களையும் துன்புறுத்த மாட்டேன்.”
”அதற்கு அவர் சம்மதம் ஏன்..? நான் தான் உன் சிறையில் இருக்கிறேனே..! நீயே என்னை வலுக்கட்டாயமாக மணந்து கொண்டு விடலாமே! ”
“அங்கேதான் ஒரு சிக்கல் இருக்கிறது..! உன் தந்தையும் நீயும் சம்மதித்து உன் தந்தை உன்னை என் கரத்தில் வைத்துத் தாரைவார்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் என் பலம் பலமடங்கு அதிகரித்துவிடும். அதற்காகவேண்டித்தான் சம்மதம் கேட்க இன்று வில்லவபுரம் செல்கிறேன்.”
”உன் காரியம் பலிக்காது..! என் தந்தை சம்மதிக்கமாட்டார்..!”
”மக்களா..? மகளா..? என்று வரும்போது உன் தந்தை மக்களுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்..!”
”அதையும் பார்த்துவிடலாம்..!”
“பார்க்கத்தானே போகிறாய்..! அப்புறம் உனக்கு ஒரு கெட்ட செய்தியும் சொல்லப் போகிறேன்..!”
”ஐயோ..! பாவி..! வித்யாதரனைக் கொன்றுவிட்டாயா..?” இளவரசி கதறினாள்.
”ஏன் இப்படி பதட்டப்படுகிறாய்..? வித்யாதரன் இன்னும் என் கண்ணில் சிக்கவில்லை! சிக்கும்போது அவனைக் கொல்லத்தான் போகிறேன்! இப்போது சொல்லவந்தது வேறு. அடேய்..! அஜமுகா..! வந்து சொல்லித்தொலையேன்..!”
அஜமுகன் என்று அழைக்கப்பட்ட அந்த சத்திரத்தின் காவலன் உள்ளே நுழைந்தான்.
”இளவரசி, உங்களை மீட்பதற்காக வித்யாதரனும் சூர்ப்பனகாவும் சில நூறு வீரர்களும் புறப்பட்டு வந்தனர். வித்யாதரன் சூர்ப்பனகா மந்திரப்பாயில் சென்றதால் என்னால் தடுக்க முடியவில்லை..! அவர்களைத் தடுத்து நிறுத்துமாறு பூதகியிடம் சொல்லியுள்ளேன். அந்த நூறு வீரர்களை காட்டு வழியில் ஒரு சத்திரம் மாதிரி உருவாக்கி அதன் காவலனாக நான் நடித்து அவர்களை அங்கே தங்க வைத்து நாகப் பாசத்தால் கட்டுப் போட்டுவிட்டேன். அந்தக் கட்டை விடுவிக்க அவர்களால் முடியாது. அந்த காட்டுக்குள்ளேயே கட்டுண்டு கிடக்கப் போகிறார்கள். வித்யாதரனை பூதகி வழிமறித்து நிறுத்திவிடுவாள். நீங்கள் எங்கள் அரசரை மணப்பது ஒன்றே உங்கள் நாட்டு மக்களைக் காக்கும் வழி..!” என்றான் அஜமுகன்.
அப்போது அங்கே ஆந்தை ஒன்று வந்து அமர்ந்தது. ”அடேய் அஜமுகா..! உன் நாகபாசம் வீரர்களை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஆனால் பூதகி வித்யாதரனிடம் தோற்றுவிட்டாள். அவள் வித்யாதரனுடன் சேர்ந்து கொண்டு இங்கே வந்து கொண்டிருக்கிறாள்..!” என்றது.
”என்னது..? வித்யாதரன் பூதகியை வென்றுவிட்டானா..? நம்ப முடியவில்லையே..!” என்றான் ராட்சதன்.
“அவன் உன்னையும் வெல்லத்தான் போகிறான்! உன் ஆட்டம் முடியும் நேரம் வந்துவிட்டது” என்றது ஆந்தை.