சிவகங்கையின் வீரமங்கை | 20 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 20 | ஜெயஸ்ரீ அனந்த்

ப்ரான்மலையை வந்தடைந்த பல்லக்குகளில் சக்ரவர்த்தி செல்லமுத்துவின் பட்டமகிஷியானவளும், வேலு நாச்சியாரின் தாயாருமான ராணிமுத்தாத்தாளை, ராணி அகிலாண்டேஸ்வரியும், இளவரசி வேலுநாச்சியாரும் எதிர்கொண்டு வரவேற்றனர். ராணி முத்தாத்தாளுடன் வந்திருந்த செல்லமுத்துவின் தங்கை முத்து திருவாயி நாச்சியார், அகிலாண்டேஸ்வரியைக் கண்டவுடன் அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அகிலாண்டேஸ்வரி, இருவரையும் வரவேற்று, கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

“அனைவரும் நலம்தானே..? தங்கள் ஈசனின் திருத்தொண்டு எவ்வாறு இருக்கிறது..?” என்றார் அகிலாண்டேஸ்வரி.

“அந்த ஈசனின் அருளால் அனைத்தும் மிக அற்புதமாகவே நடக்கிறது அக்கா. பெரியாத்தாளின் உடல்நிலையில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா..?” என்றாள் முத்தாத்தாள் .

“ம்… தனது பெயர்த்திக்கு விவாகம் என்றதுமே எழுந்து அமர்ந்து விட்டாள். இதுவரை நான் கண்டிராத வலிமையும், தைரியமும் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. வாருங்கள் பெரியாத்தாளைக் கண்டு வரலாம்” என்று அனைவரும் உத்திரகோசமங்கையின் இருப்பிடம் சென்றனர்.

ஒரே சமயத்தில் அனைவரையும் பார்த்த பெரியாத்தாளுக்கு அளவில்லா மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. அனைவரையும் தடவிப் பார்த்துத் தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டாள்.

“அக்கா… நீங்கள் வாக்குக் கொடுத்தது போல எனது புத்திரியைத் தங்களின் மருமகளாக்கிக் கொண்டீர்கள். இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று ராணி முத்தாத்தாள் கண்கலங்கிக் கூறவும், “அடிப்போடி பைத்தியம், நாச்சியார் எனக்கு முதலில் பெண், பிறகுதான் மருமகள். எந்தப் பிறப்பில் நான் எத்தகைய பாக்கியம் செய்தேனோ, நாச்சியாரை நான் மருமகளாகக் கொள்வதற்கு” என்று பெருமிதத்தோடு நாச்சியாரைப் பார்த்து அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். பிறகு, “ம்.. சரி வாருங்கள், சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்” என்று வந்தவர்களை உபசரித்து , அறுசுவை விருந்து படைத்து அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடும் செய்தார்.

அதே போல் சக்கரவர்ததி செல்லமுத்துவை எதிர்கொண்டு அழைத்த சக்கரவர்த்தி சசிவர்ணத் தேவரும், இளவரசர் முத்துவடுகநாதரும் அவர்களுக்கு வேண்டிய உபகாரங்களையும் பணிவிடைகளையும் செய்து அவர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டனர். ஓய்வு நேரத்தில் இரு அரசர்களும் ராஜாங்க ரீதியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் சில முக்கிய முடிவுகளையும் விவாதித்தனர். அதன்படி விவாகம் முடிந்த கையோடு முத்துவடுகநாதர் சிவகங்கையின் அரியணையை அலங்கரிக்கும் பொருட்டு அவரை அரசாட்சியில் அமர்த்தி முடிசூடவும் ஒப்புதல் செய்யப்பட்டது. இத்தகைய முடிவை ஒருமித்த கருத்தாக அனைவரும் மகிழ்சியுடன் வரவேற்றனர்.

இச்செய்தி மக்களின் காதுகளுக்கு அரச புரசலாக தெரிந்ததும், அவர்களது கொண்டாட்டம் இருமடங்கானது.

கலை நிகழ்ச்சியைக் காண மக்கள் மிகப் பிரம்மாண்டமாக போடப்பட்டிருந்த வெளி அரங்கத்தினுள் குவியத்தொடங்கினர். தவிரவும் மலைகளின் உச்சியிலிருந்த கோட்டைகள் மீதேறியும் மரங்களின் மீதேறியும் வீரர்களும், கோட்டைப் பாதுகாவலர்களும் பொதுமக்களும் ஆர்வத்தோடு நிகழ்ச்சியைப் பார்க்கக் குவிந்தனர். விருந்தினர்களுக்கு ஒரு புறமும், முக்கியஸ்தர்களுக்கு ஒரு புறமும், சிற்றரசர்களுக்கும், அரசர்களுக்கும் ஒரு புறமும், பெண்டிர்களுக்கும், ராணிகளுக்கும் ஒரு புறமும் என அரங்குகள் அமைக்கப்பட்டு விழாவைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கலை நிகழ்சிகள் ஆரம்பித்தன.

முதலில் சேதுபதிகளின் வரலாற்றின் பெருமையைக் கூறும் கூத்து நடைபெற்றது. அவர்களின் ராஜ்ஜியத்தில் சக்ரவர்த்தி கிழவன் ரகுநாத சேதுபதியின் தானங்களையும், வீரங்களையும், பிறகு அவர்களின் வழி வந்த அரசர்களின் வீரங்களையும், ஆலயங்களின் செப்பணிகளையும் கடல் சார் வாணிபங்களையும் குறித்து வருங்காலச் சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கூத்து நடைபெற்றது. அதன் பிறகு முருகப் பெருமானின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் சிவபெருமானிடம் அஷ்டமாசக்தி வேண்டி கைலாயம் சென்றது, சிவபெருமானின் சாபம், பிறகு கார்த்திகைப் பெண்களின் சாப விமோசனம், அதைத தொடர்ந்து குரவைக்கூத்தும் நடந்து முடிந்த பொழுது மூன்றாம் ஜாமம் முடிந்திருந்தது.

அனைவரும் சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டி கலை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதும், மக்கள் தத்தம் இல்லங்களுக்குச் செல்லத் தொடங்கினர். சிலர் அன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கடமைகளை முடித்துக் கொண்டு மறுபடியும் அரங்கத்திற்கு வந்து தத்தம் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். சிற்றரசர்களும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு மறுபடியும் கலை நிகழ்ச்சிகளைக் காணக் குழுமினர்.

சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் அரங்கம் கூடியது. விடிந்த காலைப் பொழுதில் வீரர்களும், இளம் பிராயத்தை ஒட்டிய ஆண் பிள்ளைகளும் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக மல்யுத்தம், வாள் யுத்தங்களில் பங்குபெற்று இளவரசர் முத்துவடுகநாதரின் கைகளால் பரிசையும் பெற்று கொண்டனர். இவ்வாறு போட்டிகளில் பங்குபெற்ற வீரர்களும் வாலிபர்களும் வீரதீர பராக்ரம செயல்களைச் செய்து காட்டி மக்களின் கரகோஷங்களுடன் இளம் மங்கைகளின் இதயத்தில் இடத்தையும் பிடித்தனர்.

பிறகு சற்று நேர ஓய்வுக்கு பின், ஆலயங்களில் நடைபெற்ற அபிஷேக அலங்கார ஹாரத்திகளில் பங்கேற்றனர். அங்கு ஓதுவார்கள் பாடிய தேவாரம், திருவாசகத்தையும் சிவபுராணத்தையும் கேட்டு மகிழ்ந்தனர். ஆலய பிரஹாரத்தில் நடந்த வாத்திய நிகழ்சிகளையும், நடனத்தைக் காணவும் கூட்டம் கூட்டமாக மக்கள் குழுமியிருந்தனர்.

வட மாநிலத்திலிருந்து நாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்ற வந்திருந்த குழுவினர், தயாராக ஆலயப் பிரஹார மண்டபத்தில் காத்திருந்தனர். நடனமாட ஆயத்தமாக இருந்த மங்கையின் தோற்றமும் அழகும் அங்குள்ள அனைத்து ஆடவரையும் மோகம் கொள்ளச் செய்தது. குறுநில மன்னர்கள் அந்த அழகியைத் தங்களது அந்தபுரத்தை அலங்கரிக்க வருமாறு தனது பணியாட்கள் மூலம் தூது அனுப்பினர். சில சிற்றரசர்கள் தங்களது அரண்மனைகளில் அவனது நாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்ற அழைப்பு விடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களும் அவள் அழகைக் காணத் தவறவில்லை.

அந்தக் கூட்டத்தில் இருந்தவனில் ஒருவன். “டேய் நம்ம குதிரைடா, இவளை தாண்டா நான் நேற்று பல்லக்கில் பார்த்தேன்” என்றான்.

“ஆஹா…. எப்பேர்ப்பட்ட அழகி இவள். இவளைப் போன்ற ஒருத்தியை என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்ததே இல்லை” என்றான் வேறொருவன்.

இவ்வாறு பலரும் அவளின் அழகைப் புகழ்ந்து பேசுகையில், இளவரசர் முத்துவடுகநாதருக்கு மட்டும் அந்த மங்கையின் மேல் ஒரு அருவருப்பு தோன்றியது. தனது மெய்காப்பாளனிடம் அவர்களை பற்றி விசாரித்து வர ஆணையிட்டார்.

அதற்குள்ளாக அந்த அழகி மேடையில் தனது சதிராட்டத்தைத் துவங்கி இருந்தாள். அவளுடன் வந்தவர்கள் பக்கவாத்திய இசையை வாசிக்க, அற்புதமான பிரம்மாண்டமான சதிராட்டம் நடந்தேறியது. அதைச் சற்றும் இமை கொட்டாமல் பார்த்த மக்களும், விருந்தினர்களும் ஆச்சர்யத்தில் உறைந்திருந்தனர். இளவரசிகளுக்கும் , மகாராணிகளும் அவளைக் கண்டு சற்றே பொறமை கொண்டனர் என்றால் அது மிகையாகாது.

“ஆஹா… அற்புதம்.. மிக அற்புதம். இப்படியொரு நாட்டியத்தை நான் இதுவரை பார்ததில்லை. என்ன ஒரு நளினம், என்ன ஒரு பாவனை, தாளம் பிசகாமல் ஆடிய அக்கால்களுக்கு என்ன பரிசளித்தாலும் ஈடாகாது.” என்று ஆனந்தத்தில், அரசர் சசிவர்ண தேவர் அவளுக்கு விலை உயர்ந்த பொன்னையும் பொருளையும் பரிசளிக்க உத்தரவிட்டார்.

அச்சமயம், அந்த பிரபஞ்ச அழகி, சற்று முன்னே வந்து, “சக்கரவர்த்தி அவர்களுக்கு வணக்கம், என் பெயர் மேனகை. எனது நடனத்திற்கான உங்களின் பாராட்டும், பரிசுப் பொருளும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. உண்மையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள். இளவரசரின் விவாக வைபவத்தில் எனது நடனத்தை அரங்கேற்றியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். நானும் தங்களைப் பற்றி நிறையக் கேள்விபட்டு இருக்கிறேன். நீங்கள் வீரத்திலும், தீரத்திலும், சிறந்தவர். தானங்கள் வழங்குவதில் வள்ளல் என்று. அப்படிப்பட்ட தங்களின் உன்னதமான கைகளால் நான் பரிசு பெற்றால் தன்யமானவளாவேன்” என்றாள்.

இதைக் கேட்டதும் அரசர் சசிவர்ண தேவர் மேலும் மகிழ்ச்சி கொண்டு அவரே, அவளுக்குப் பரிசுகளை வழங்கவும் ஆயத்தமானார். “வா… மகளே… உன் விருப்பப்படி இந்தத் தந்தையின் கைகளாலேயே உனக்கான பரிசினைப் பெற்றுச் செல்” என்று கூறவும், மேனகையும் மிக மகிழ்சியுடன் மேடையை விட்டு இறங்கி அரசர் அருகில் பரிசுபெறச் சென்ற சமயம்…. இளவரசி வேலுநாச்சியார் வீசிய கூரான கத்தியொன்று அவள் ஹிருதயத்தைப் பதம் பார்த்தது, “ஐய்யோ..” என்று அலறிச் சரிந்தாள்.

–தொடரும்…

பரதம் : வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது.

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...