கால், அரை, முக்கால், முழுசு | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

18. தனியொருவன்

லுவலகத்தில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்ட ஆதர்ஷின் பார்வை தற்செயலாக, தனது காரின் வைப்பரில் சொருகப்பட்டு இருந்த அந்தத் துண்டுக் காகிதத்தின் மீது படர்ந்தது. வியப்புடன் அதனை எடுத்துப் பிரித்ததுமே, ஜிவ்வென்று அவனது முகத்தில் இரத்தம் ஏறியது.

”மூன்றாவது விக்கெட்டும் காலி..! இனி நீ மட்டும்தான் பாக்கி..! -வெள்ளை தேவதைகள்..!”

ஆத்திரத்துடன் திரும்பிப் பார்க்க, சரியாக, கங்கணா தனது ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு விர்ரென்று அவனைக் கடந்து போக, ‘நிச்சயம் இது கங்கணாவின் வேலைதான்’ என்று தீர்மானித்தான்..! ‘விக்கெட் காலி’ என்று துண்டுச்சீட்டு வைத்து நண்பர்களிடையே கலகத்தை விளைவித்து, இவர்களைப் பிரிக்கப் பார்க்கிறாள். ஒற்றுமையாக இருந்த நான்கு எருதுகளிடையே சண்டையை மூட்டி, அவற்றைக் கபளீகரம் செய்த சிங்கத்தைப் பற்றிப் பஞ்சதந்திரக் கதைகளில் படித்திருக்கிறான். இன்று அவனிடமே அந்த வேலையைக் காட்டுகிறாளா, கங்கணா..! நண்பர்கள் இப்போது எங்கே..? –அவர்களை முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

ஆனால் காலையில் அலுவலகம் வந்தது முதலாக மூன்று பேருமே இவனை வந்து பார்க்கவில்லையே..! அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டு சென்றுவிட்டார்களா..? அப்படியென்றால், இவனிடம் சொல்லாமல் சென்று விட்டார்களா..? நான்கு பேருக்குமே தனித்தனியாக பிளாட் கொடுத்திருந்தார் வீட்டுக்காரர் மாத்ருபூதம்.

சந்தேகத்துடன் கார்த்திக்கிற்கு போன் செய்தான், ஆதர்ஷ்.

”என்னோட கார் ஏ.சி.ல ஏதோ பிரச்னை..! அதான் ஹ்யுண்டாய் கம்பெனிக்கு வந்திருக்கேன்..! நான் அப்புறமா பேசறேன்..” என்று உடனடியாக போனைக் கட் செய்தான், கார்த்திக்.

தினேஷுக்கு போன் செய்ய, அவனோ, ”ஆதர்ஷ் ! நான் டாக்டர் வீட்டுல இருக்கேன். முதுகு வலி..! நான் அப்புறமா பேசறேன்..!” என்று போனைத் துண்டித்தான்.

ரேயானுக்குப் போன் செய்ய, ”என்னோட பைக் டயர் பஞ்சர்..! வண்டியை பஞ்சர் கடைக்குத் தள்ளிக்கிட்டு இருக்கேன். அப்புறமாக் கூப்பிடறேன்..!” –என்று போனை வைத்துவிட்டான்.

மூன்று பேரும் ஒரே மாதிரியாக பதிலைக் கூறி, போனைக் கட் செய்ய, ஆதர்ஷ் சந்தேகத்துடன் தனது போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தே நேரம்–

எழும்பூர் அன்னலட்சுமி ஹோட்டலின் ஓர் மூலையில் உட்கார்ந்து கார்த்திக், தினேஷ், மற்றும் ரேயான் மூவருமே எரிச்சலுடன், போனை தங்கள் பாக்கெட்டினுள் திணித்தனர்.

”எப்படித்தான் இந்த ஆதர்ஷுக்கு மூக்குல வேர்க்குதோ..! நல்ல வேளை..! ஆளுக்கு ஒரு காரணம் சொன்னோம்.” –ரேயான் சொன்னான்.

”சரி..! அவனைப் பத்தி என்ன..? நம்ம விஷயத்திற்கு வருவோம். நாம என்ன செய்ய போறோம்..?” –தினேஷ் கேட்டான்.

”எனக்கு மெஸ் மாமியோட வளர்ப்புப் பொண்ணு, இந்துவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு..! ஐஸ்வர்யா ராயைவிட அழகா கேட்டேன். இந்திரலோக ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, ஐஸ்வர்யா ராய், எல்லாருமே சேர்ந்த காம்போவா இந்து இருக்கா. இந்துவைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே..! நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கத் தீர்மானிச்சுட்டேன். ஈஸிஆர்ல கடலை பார்த்த வீடு. உப்பரிகையில், இந்துவோட சல்லாபம். இதுதான் என்னோட வருங்கால வாழ்க்கை…” –கார்த்திக் சொன்னான்.

”நானும் ஒரு பெண்ணைப் பார்த்திருக்கேன் கார்த்திக். பணக்கார விதவை. அவள் பெயர் அர்ச்சனா..! போலீஸ் கமிஷனர் பெண்..! ராணுவ வீரனைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்லி, அப்படியே செஞ்சுகிட்டு விதவை ஆனவள். இதுல ஆச்சரியம் என்னன்னா, அவளுக்கு ஆண்கள் மேல அனுதாபம் உண்டு. பெண்கள் தப்பு செஞ்சா சகிச்சுக்கவே மாட்டாள். ஆண்களைத் துன்புறுத்துற பெண்களுக்கு எதிரா போராடுவேன்னு சொல்றா. இன்னும் சொல்லப் போனால், ஒரு பெண் என் பைக் மேல இடிச்சு கீழே விழுந்து என்னோட தகராறு செஞ்சா. ஈவ் டீசிங்னு புகார் கொடுத்தா..! அப்ப நல்ல சமயத்துல அர்ச்சனா வந்து எனக்கு ஆதரவா சாட்சி சொல்லி, என்னைக் காப்பத்தினா..!” –தினேஷ் கூறினான்.

”ஆச்சரியமா இருக்கே..! இந்தக் காலத்துல ஆண்கள் மேல பரிதாபப்படற பெண்ணா..?” –கார்த்திக் வியந்தான்.

”ப்ரோ…!” –ரேயான் கண்களில் கிறக்கத்துடன் சொன்னான். ”நானும் ஒரு பெண்ணோட நெருங்கிட்டேன்..! கங்கணா வீட்டுல வந்து தங்கியிருக்காளே ஃபானி..! அவளோட பெயர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். சுருக்கமா ஃபானின்னு சொல்றாங்க. அவளும் நானும் நேத்து மொட்டைமாடியில் மனசை விட்டு பேசிட்டோம். என்னை டேட்டிங் கூப்பிட்டு இருக்கா. நான் போக போறேன்..”

”என்னைக்கூட அர்ச்சனா அவளோட வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கா..! அனேகமா கமிஷனர் மாப்பிள்ளையாகிடுவேன்.”

”நல்லதாப் போச்சு..! கமிஷனர் மாப்பிள்ளை நண்பனா இருக்கச்சே நான் எதுக்கு பயப்படணும்..! மாமி தடுத்தாலும் சரி, இந்துவைக் கடத்திகிட்டுப் போய் நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்..!” –கார்த்திக் சொல்ல, நண்பர்கள் முகத்தில் உடனே பதற்றம் தோன்றியது.

”நாம பாட்டுக்கு தீர்மானிச்சுட்டோம்..! நம்ம தலைவன், ஆதர்ஷ் என்கிற ரிஷ்யஸ்ருங்கனை எப்படிச் சமாளிக்கப் போறோம்..? அவன் நம்மைக் கல்யாணம் செஞ்சுக்கவே விடமாட்டான்..!” –ரேயான் சொல்ல, கார்த்திக்கின் முகத்தில் எரிச்சல்.

”ஹூ இஸ் ஹீ..? நாம கல்யாணம் செஞ்சுக்கணும்னு முடிவு செஞ்சா அவன் யாரு அதை தடுக்க..? நான் இப்பவே டார்க் டெமான்ஸ் இயக்கத்திலிருந்து ராஜினாமா செய்யறேன்..!” –கார்த்திக் அறிவித்தான்.

”அவசரப்படாதே..! முதல்ல அவங்க அவங்க ஆளுங்ககிட்ட பேசிப் பாப்போம்..! அப்புறமா, ஆதர்ஷுக்கு விஷயத்தத் தெரிவிக்கலாம். !” –தினேஷ் சொன்னான்.

”அதுவும் சரிதான்..! நாளைக்கே நான் இந்துகிட்டே பேசப்போறேன்..!” –கார்த்திக் சொன்னான்.

”நாளைக்கு நானும் அர்ச்சனா வீட்டுக்கு போகப்போறேன்..! அவள் அப்பாவைச் சந்திக்கப் போறேன்..!” –தினேஷ் சொன்னான்.

”நாளைக்கு பெசன்ட் நகர்ல, நானும், ஃபானியும் டின்னர் டேட்டிங் போறோம்..!” –ரேயான் கூறினான்.

”முதல் விக்கெட் காலி, இரண்டாவது விக்கெட் காலி, மூன்றாவது விக்கெட் காலி..! இனி நீ மட்டும்தான் பாக்கி –வெள்ளை தேவதைகள்” என்கிற அந்த மூன்று துண்டு சீட்டுகளை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான், ஆதர்ஷ். தான் இனி தனியொருவனாகத்தான் பெண்களை எதிர்த்துப் போராட போகிறான் என்பதை அவன் இன்னும் அறிந்திருக்கவில்லை. பெண்ணீயத்தை எதிர்க்கும் அவனது தளபதிகள், நெருப்பில் வைக்கப்பட்ட ஈயச் சொம்புகளாக உருகி விட்ட கதை, அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

னது ரோமியோ ஜூலியட் பிளாட்டில் ஃபானி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்தாள், கங்கணா !

”நிஜமாவா… அந்த ரேயான்கூட டேட்டிங் போறே ! அவங்க தலைவன் அந்தச் சிடுமூஞ்சி ஆதர்ஷ் எப்படி ஒப்புக்கிட்டான். அவனுக்குத் தெரியுமா..?” –கங்கணா கேட்டாள்.

”பெண் நினைச்சா நடக்காதது உண்டா..?” –கண் சிமிட்டினாள், ஃபானி.

”அந்த கல்லுளிமங்கன் ஆதர்ஷும் வழிக்கு வருவானா ஃபானி?” –கங்கணா கேட்டாள்.

”நிச்சயம் வருவான்..! முயற்சி செஞ்சு பாரு..!” –ஃபானி சொல்ல, புதிய நம்பிக்கையுடன், சோபாவில் நிமிர்ந்து அமர்ந்தாள் கங்கணா .

–மோதல் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...