தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
14. திருப்பழனம் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
பொருந்தும் இப் பிறப்பும் இறப்பு இவை நினையாது
பொய்களே புகன்று போய்க் கரும்குழலினர் கண்களால்
ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பு
அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அரும்
துணைவனாய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே!
திருவாசகம்.
அஞ்ஞான இருளை அகற்றும் தீபம் இறைவன்.
முக்தி அடைவதற்கு வேதங்கள் கர்மம், ஞானம், பக்தி, யோகம் எனப் பல வழிகளைச் சொல்லியிருந்தாலும் அதில் சுலபமானது இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும், சரணாகதியும்தான்.
பரம்பொருளான ஈசனிடம் முழுச் சரணாகதியும், விசுவாசமும் தேவை. ஈசனை மனதில் நிறுத்தி முழு நம்பிக்கையுடன், பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தால் அவர் எங்கிருந்தாலும் ஓடி வந்து நம்மருகில் நிற்பார். ஏனென்றால் இறைவன் இருப்பது வெளியில் அல்ல. நமக்குள். அவனைக் கண்டடைவதே பக்தி. தியானமே அதற்கு உதவுகிறது.
“என்னுள்ளே நீ இருக்க, உனைத்தேடி நான் அலைந்தேன்” என்கிறார் ஒரு சித்தர். இறைவனை வணங்கும்போது ஏற்படும் உள்ளச் சிலிர்ப்பை அழகான தமிழில் கூறி மகிழ்கிறது திருவாசகம்.
மெய்தான் அரும்பி, விதிர்விதிர்த்து உன் விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி, வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்த்துன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே
என்கிறார் மாணிக்க வாசகர்.
இறைவனை நினைக்கும்போதே உடல் சிலிர்க்கிறது. ஈசனின் பாதத்தில் தலை வைத்து, கண்ணீர் பெருக, நிர்மலமான மனதுடன் ஈசனின் பெருமைகளைப் போற்றிப் பாடுகிறது நம் நா. உன்னுடைய உடமையாகிய என்னைக் கைவிடாமல் காத்தருள் என்று கேட்டாலே போதும்… நமக்கு வேண்டிய அனைத்தும் தந்து விடுவான் ஈசன். தன் குழந்தைக்கு என்ன தேவை என்பது தாய்க்குத் தெரியாதா? தாயுமானவன் அல்லவா சிவபெருமான்.
இறைவன் தன் அடியவர்களுக்காக நடத்திய திருவிளையாடல்கள் ஏராளம். சிவனடியார்கள் அத்தலங்களுக்கு எல்லாம் சென்று இறைவனைத் தரிசித்து, அவனைப் பற்றி பாடிப் பணிந்து, மகிழ்ந்தார்கள்.
அப்படித் திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற சப்தஸ்தானங்களில் ஒன்றுதான் திருவையாறுக்கு அருகில் உள்ள திருப்பழனம். இங்கு இறைவன் ஆபத்சகாயர் என்ற பெயரில் வழங்கப்படுகிறார். அப்பர், சம்பந்தர், அப்பூதி அடிகள், சேக்கிழார், சந்திரன் முதலியோர் வழிபட்ட தலம்.
திருவையாறுடன் தொடர்புடைய ஏழு கோயில்களில் ஒன்று. இதைத் தலைமை இடமாகக் கொண்டு, கட்டிடக் கலைச் சிறப்புடைய இந்த ஏழு கோயில்கள் சப்தரிஷிகள் தவம் செய்த இடங்களாகப் போற்றப்படுகிறது. குத்ஸர் என்னும் முனிவர் தவம் செய்த ஆசிரமம் இருந்த இடம் திருப்பழனம் என்கிறார்கள்.
நந்திதேவருக்கும், சுயம் பிரகாசிக்கும் திருவையாறில் திருமணம் முடித்து, ஏழு முனிவர்களின் ஆசியைப் பெற வேண்டி, ஐயாரப்பன் இந்த ஏழு தலங்களுக்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
கௌதம நதி தீரத்தில் வசித்த சிறுவன் சுசரிதன், தன் பெற்றோரை இழந்து வேதனையுடன் மன அமைதி நாடி இங்கு வந்தான். அப்போது ஒரு நாள் கனவில் எமன் தோன்றி, “இன்றிலிருந்து ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்” என்று கூறுகிறான்.
பயம் அடைந்த சிறுவன் இங்குள்ள ஈசனைச் சரணடைகிறான். அவன் பயத்தைப் போக்கி, ஈசன் அசரீரியாக, “நீ திருவையாறு சென்றால் உயிர் பிழைத்துக் கொள்வாய்.” என்று கூறுகிறார். சிறுவனின் ஆபத்தைப் போக்கியதால் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகள், அதற்கு முன்பின் இரண்டு நாட்கள் நிலா இத்தல இறைவன் மீது படுகிறது. சிலாதர் முனிவரின் மகனான நந்திக்கு திருமழபாடியில் ஈசன் முன்னின்று திருமணம் செய்வித்தார். தன் பிள்ளை போன்ற நந்தியை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர விரும்பினார் ஈசன். திருவையாறில் தொடங்கிய ஊர்வலம் திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் வழியாக மீண்டும் திருவையாறு வந்தடைகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தான விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலம் கதலிவனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆபத்சகாயேஸ்வரரை இலக்குமி தேவி வணங்கி, பல வரங்கள் பெற்றுத் தன் இருப்பிடம் திரும்பியதால் ஈசன் பிரயாணபுரீசர், என்றும் இத்தலம் பிரயாணபுரி என்றும் பெயர் பெற்றது.
பாற்கடலைக் கடைந்த போது கௌசிக முனிவரின் பங்கை ஒரு அமுத கலசத்தில் பத்திரமாக மூடி வைத்திருந்தார்கள். அதை அறிந்த ஓர் அசுரன் அதைக் கொள்ளையடிக்க முயன்றபோது, ஆபத்சகாயேஸ்வரர் தோற்றுவித்த ஐயனார், காளி அவனை அழித்து, அமுதத்தை முனிவரிடம் ஒப்படைத்ததாகத் தல புராணம் கூறுகிறது. அந்த அமுதத்தைக் கொண்டு கௌசிகர், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.
அம்பாள் பெரியநாயகி, சிவசுந்தர கல்யாணி அம்மை என்று வழங்கப் படுகிறாள். இங்குள்ள மங்கள தீர்த்தம் பயன்படுத்தாமல் அழிந்து விட்டது. இது போக காவிரி தீர்த்தம், அமுத தீர்த்தம், முனிகுப்ப தீர்த்தம், தேவ தீர்த்தம் உள்ளது. கதலி, வில்வம் இதன் தல விருட்சங்களாக உள்ளன.
பழமையான மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி உள்ளது. சுவாமி சன்னதி பிரகாரத்தில் முருகன் இருக்க வேண்டிய இடத்தில் குழலூதும் கிருஷ்ணன் சிலை உள்ளது. ஈசன் சுயம்பு மூர்த்தி. வெளிப்பிரகாரத்தில் ஈசனுக்கு இடப்பக்கமாக தனிக் கோவிலில் அம்பாள் அருளாட்சி செய்கிறாள்.
இக்கோவில் முதலாம் ஆதித்த மன்னராலும், முதலாம் பராந்தக மன்னராலும் கட்டி முடிக்கப்பட்டது. சப்தஸ்தானங்களில் இது இரண்டாவது தலம். சிவன் தான்தோன்றியாக உருவானவர் என்று நம்பப் படுகிறது.
முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாக உள்ளது. உள்ளே சென்றால் இடது புறத்தில் சப்த மாதர்களுடன், பல்வேறு பெயர்களுடன் சிவலிங்கங்கள், நடராசர் சபை, பைரவர் சிலையும் உள்ளது. திருப்பழனம் கோவிலை ஒரு சிற்பக் கலைப் பெட்டகம் என்று கூறலாம்.
பல அற்புதமான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் கோவிலை மேலும் அழகுபடுத்துகின்றன. இங்கு ஈசனுக்கு உண்டான விழாக்களுடன், சப்தஸ்தான விழா, சிவராத்திரி, திருவாதிரை, அன்னாபிஷேகம் போன்றவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இத்தலம் பற்றிய கல்வெட்டுகள் சோழர்கள் காலத்தில் இதன் சிறப்பையும், இளவரசிகள், மன்னர்கள், அரசிகள் இத்தல இறைவனுக்கு விளக்கிற்காக நிலமும், நெய்யும், பொன்னும் வழங்கியதையும் குறிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன், சிந்திநல்லூரில் உள்ள நிலங்களைப் பதினைந்தாயிரத்து ஐநூறு காசுகளுக்கு விற்று, அதைக் கோயிலுக்குக் கொடுத்தான்.
இராஜராஜன் மூன்று காணி ஒரு முந்திரி நிலம் அளித்தான் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. இத்தல இறைவனின் சிறப்பை அறிந்த பிற்கால மன்னர்கள் கல்மண்டபங்கள், பூஜைக்கு நிலங்கள் அளித்துள்ளார்கள்.
அப்பூதி அடிகளின் பிறந்த இடமான திங்களூர் இதன் அருகில் உள்ளது. விடம் தீர்த்த பதிகமான “ஒன்று கொலாம்” எனும் பாடல் பிறந்த தலம். இதன் அனைத்துப் பாடல்களிலும் ஈசனின் அடையாளங்கள், அவரின் புகழ்ச் செய்திகள் மட்டுமே கூறப்படுகிறது. அப்பூதி அடிகளின் மகன் பாம்பு கடித்து இறந்த செய்தியோ, வேண்டுகோளையோ வைக்காமல், இறைவனைப் பாடிப் புகழ்கிறார் அப்பார். அதில் மகிழ்ந்த ஈசன் சிறுவனை உயிர்பித்துத் தருகிறார்.
பாம்பின் விஷம் மிகவும் கொடிய வெப்பத்தை உண்டு செய்யும். ஆனால் அதற்கு நேர்மாறான, குளிர்ச்சியை உடைய சந்திரனைத் தன் தலையில் சூடிய ஈசன் என்கிறார் திருநாவுக்கரசர்.
ஈசனை வழிபடுவதன் மூலம் துக்கமெல்லாம் விலகும் எனும் அப்பர் பெருமான் அவரிடம் நாம் எந்த வேண்டுகோளையும் வைக்க வேண்டியதில்லை என்கிறார்.
“மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி வாய்ப் பழனத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே’
என்கிறது ஒரு பதிகம்.
நம் உயிருக்குக் காவலனாய், ஐம்பொறிகளால் செய்யப்படும் வினைகளை அகற்றுபவரும், நம் வினைகளில் இருந்து நம்மைக் காப்பவருமாக திருப்பழனம் ஈசன் இருக்கிறார் என்கிறார் அப்பர் பெருமான்.
“பண்டையென் வினைகடீர்ப்பார் பழனத்தெம் பரமானாரே.”
என்கிறது திருநேரிசை.
“வேண்டத் தக்கது அறிவாய் நீ, வேண்ட முழுவதும் தருவாய் நீ” என்று மாணிக்க வாசகர் உருகுவது போல், நமக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து நாம் கேளாமலேயே வேண்டிய அனைத்தும் தருபவர் திருப்பழனம் ஈசன்.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் “சிக்கெனப் பற்றினேன் சிவனே” என்று இருப்பதே.