கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
“வித்யாதரன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்று வில்லவபுர இளவரசி சொன்னதும் அந்த ராட்சதன் ‘இடி இடி’ எனச் சிரித்தான். “இதோ இங்கேயே இருக்கிறது நமது துருப்புச் சீட்டு! இவளுக்கு வித்யாதரன் எப்படி இருப்பான் என்று தெரியுமாம்! இனி நமக்கு என்ன கவலை? இவளிடம் வித்யாதரனின் உருவத்தை வரைந்து கொடுக்கச் சொல்வோம்! அதை எடுத்துக் கொண்டு வில்லவபுரம் செல்வோம்! அங்கே வித்யாதரனைப் பிடிப்போம்! எப்படி என் யோசனை?” என்று கேட்டான்.
“பிரபோ! வித்யாதரன் வில்லவபுரத்தில்தான் இருப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது! அவன் அங்கிருந்து கிளம்பி வேறெங்காவது கூடச் சென்றிருக்கலாம் இல்லையா?” அரக்கன் ஒருவன் கேட்டதும்…
“அடேய்! நீயும் நன்றாக யோசிக்கிறாய்? வில்லவபுரத்தில் வித்யாதரன் இல்லாமல் வேறெங்காவதும் சென்றிருக்கலாம்தான். முதலில் இளவரசி வித்யாதரனை வரைந்து கொடுக்கட்டும். அந்த உருவத்தை நீங்கள் எல்லோரும் மனதில் பதிந்து கொள்ளுங்கள். மூலை முடுக்கெல்லாம் அவனைத் தேடுங்கள்! எங்கு அவன் தென்பட்டாலும் உடனே எனக்குத் தகவல் சொல்லுங்கள்!” என்றான் ராட்சதன்.
“ஏய்! பெண்ணே! உனக்கு வித்யாதரனை நன்குத் தெரியும் தானே! கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் அச்சு அசலாக அவன் உருவத்தை சித்திரமாக வரை! சீக்கிரம் ஆகட்டும்!” என்றவன், “இந்தப் பெண்ணிடம் ஓவியம் வரைவதற்கு சீலையும் வர்ணங்களையும் தாருங்கள்!” என்று அரக்கர்களிடம் உத்தரவிட்டான்.
இளவரசியும் மிகவும் கவனமாக வித்யாதரனின் உருவத்தை வரைய ஆரம்பித்தாள்.
மந்திரப்பாயில் அமர்ந்தவாறு வித்யாதரனும் சூர்ப்பனகாவும் வருவதை மன்னர் விஜயேந்திரன் அரண்மனை உப்பரிகையில் இருந்து கவனித்தார். மந்திரப்பாயும் அவர் உப்பரிகையில் இருப்பதைக் கவனித்து அவர் அருகே சென்று இறங்கியது.
”வா! வித்யாதரா! நீ சூர்ப்பனகாவுடன் வருவாய் என்று எதிர்பார்க்கவில்லை!”
”எல்லாம் சுட்டி கணேசரின் அருள்! அவர் உதவியால்தான் சூர்ப்பனகா எனக்கு உதவச் சம்மதித்தாள் மன்னா!”
”சுட்டிகணேசரின் அருள் கிடைத்தால் நம் காரியம் எளிதில் நிறைவேறும்! அவர் என்ன சொன்னார்?”
”மந்திரக் காப்பும் எனக்கு அளித்து நான் செல்லும் காரியம் வெற்றிபெறும் என்று ஆசியளித்திருக்கிறார் மன்னா!”
”அப்புறமென்ன? அமாவாசை கழித்து புறப்படப் போகிறீர்கள்தானே!”
“இல்லை மன்னா! இப்போதே புறப்பட கணேசர் உத்தரவளித்துவிட்டார்! தங்களிடம் தெரிவித்துப் போகத்தான் இப்போது வந்தோம்!”
“ஆஹா! நல்லது! கணேசர் உத்தரவளித்தபின் தாமதம் எதற்கு? புறப்படுங்கள்! வெற்றியோடு வாருங்கள்!”
“மன்னா! நானும் சூர்ப்பனகாவும் மந்திரப்பாயில் புறப்படுகிறோம்! எங்களைப் பின்தொடர்ந்து சாலை மார்க்கமாகப் படைவீரர்கள் வரட்டும்! கீழைக்கடல் எல்லையில் அவர்கள் ரணதீரன் கொண்டுவரும் நாவாய்களில் ஏறிக்கொள்ளட்டும்! அவர்களை ரணதீரன் வழிநடத்துவான். கோமேதகக் கோட்டையை நெருங்கியதும் நான் நாவாயில் இறங்கி அவர்களுடன் கலந்து கொள்கிறேன்! புறப்படுகிறேன் மன்னா!”
”அப்படியே ஆகட்டும்!வெற்றியோடு வா வித்யாதரா!” விஜயேந்திரன் வழி அனுப்பியதும் மந்திரப்பாயில் ஏறிப் புறப்பட்டனர் வித்யாதரனும் சூர்ப்பனகாவும். அவர்கள் சென்ற வழியில் சுமார் நூறு வீரர்கள் அடங்கிய சிறு குதிரைப்படை ஒன்று பின்பற்றிச் செல்ல ஆரம்பித்தது.
அமாவாசைக்கு இரண்டு தினங்கள் முன்பே அந்தப் படை புறப்பட்டமையாலும் புறப்பட்டபோது நண்பகலை கடந்துவிட்டதாலும் படைகள் சுமார் 50 காத தொலைவு கடந்ததுமே இருட்டத்துவங்கிவிட்டது.
அமாவாசைக்கு முந்தைய நாட்களாய் இருந்தமையால் நிலவு வெளிச்சம் என்பது சிறிதும் இல்லை! வானம் கடவுள் சிலைபோல கருத்திருக்க ஆங்காங்கே அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் ஜொலிப்பது போல வானத்து நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. இராப்பறவைகள் கீதமிசைத்துக் கொண்டிருக்க வீரர்கள் தீப்பந்தங்களை பொருத்திக் கொண்டு வேகமாகப் பாதையைக் கடந்து கொண்டிருந்தார்கள்.
பாதை மிகவும் கரடுமுரடாக இருந்தமையாலும் நெடுந்தொலைவு பயணித்தமையாலும் குதிரைகள் களைப்படைந்தன. வீரர்களுக்கும் தூக்கம் கண்களை சொக்கியது. தங்குவதற்கு ஏதாவது சத்திரம் கிடைக்குமா? இராப்பொழுதைக் கழித்துவிட்டு குதிரைகளுக்கும் ஓய்வளித்து விடியற்காலையில் புறப்படலாம் என்று படைகளுக்குத் தலைமை வகித்த வீரன் யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்படி அவன் யோசிக்கும் போதே தூரத்தே ஏதோ ஓர் வெளிச்சம் தென்பட்டது.
குதிரைப்படை தலைவன் தன் படைகளிடம் சொன்னான். “அதோ அங்கே ஏதோ ஓர் வெளிச்சம் தென்படுகிறது. அது தங்குமிடமாகவும் இருக்கலாம். அதை நோக்கி எல்லோரும் பயணப்படுங்கள்! நம் அதிர்ஷ்டம் அது நமக்கான தங்குமிடமாக அமைந்தால் அனைவரும் தங்கி களைப்பாறிவிட்டுச் செல்லலாம்” என்றான்.
களைப்படைந்த வீரர்கள் தலைவன் சொன்னதைக் கேட்டு குதிரைகளை வெளிச்சம் வந்த திசை நோக்கி விரட்டினர். சுமார் அரை நாழிகை நேரம் கடந்தபின் அந்த வெளிச்சத்தை நெருங்கினர். அது ஒரு தங்கும் சத்திரம் தான்! அதன் உச்சியில் ஓர் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அந்த இரவு நேரத்தில் ஓர் குதிரைப்படை வருவதை கவனித்த சத்திரத்துக்காரன் விரைந்து வந்து குதிரைப்படை தலைவனிடம் கேட்டான். ”ஐயா! தாங்கள் யார்? இத்தனை வீரர்களுடன் எங்கே செல்கிறீர்கள்?”
குதிரைப்படைத் தலைவனும், “நாங்கள் வில்லவபுரத்தை சேர்ந்த வீர்ர்கள்! எங்கள் இளவரசியை ராட்சதன் ஒருவன் தூக்கிச்சென்று கோமேதகக் கோட்டையில் சிறைவைத்துள்ளான். அவனிடமிருந்து இளவரசியை மீட்கச் சென்று கொண்டிருக்கிறோம்!” என்றான்.
“இந்தப் படைக்குத் தாங்கள்தான் தலைமை ஏற்றுச் செல்கிறீரோ?” என்றான் சத்திரத்துக்காரன்.
”இந்தப் படைக்கு மட்டும்தான் நான் தலைமை ஏற்றுள்ளேன்! எனக்குத் தலைவராக எங்கள் குலகுருவின் மகன் வித்யாதரன் உள்ளார். இன்றிரவு எங்கள் படை இங்கே தங்கிக் கொள்ள அனுமதி அளிக்க முடியுமா?” என்று கேட்டான்.
”தாராளமாகத் தங்கிக் கொள்ளுங்கள்! குதிரைகளையும் லாயத்தில் கட்டி வைத்துக் கொள்ளலாம்! ஆனால் உங்கள் அனைவருக்கும் உணவுதான் இருக்காது. பத்து பதினைந்து பேர் சாப்பிடும் அளவிற்கே உணவு இருக்கிறது!” என்றான் சத்திரக்காரன்.
”உணவைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை! போகுமிடத்தில் உணவுத் தேவையை சமாளிக்க நாங்கள் உணவுப் பொருட்களையும் உணவு சமைக்கத் தேவையான பொருட்களையும் கொண்டுவந்துள்ளோம்! இந்த இரவைக் கழிக்க தாங்கள் இடம் கொடுத்தால் போதும். எங்கள் குதிரைகளும் மிகவும் களைப்படைந்து உள்ளன. அவற்றிற்கும் ஓய்வு தேவைப்படுகிறது.”
”உணவு உங்களுக்குப் பொருட்டில்லை எனில் தாராளமாகத் தங்கிக் கொள்ளுங்கள்!” சத்திரக்காரன் சொன்னதும் படைத்தலைவன் குதிரை வீரர்களிடம் குதிரைகளை லாயத்தில் கட்டி அவற்றிற்கு உணவு நீர் போன்றவை அளித்துவிட்டு வருமாறு உத்தரவிட்டான். அத்துடன் தானும் தன் குதிரையை லாயத்தில் கட்டி அதற்கு உணவாக சிறிது புல்லும் நீரும் அளித்தான்.
அப்போது குதிரை லாயத்தில் வித்தியாசமான ஓர் குதிரையைப் பார்த்தான் குதிரைப்படைத் தலைவன். அதன் பிடரி முழுவதும் மயிர் வளர்ந்திருக்க ஒருபுறம் வெண்மையாகவும் மறுபுறம் கறுப்பாகவும் அந்தப்புரவி இருந்தது.
அனைவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆகாரங்களை உண்டுவிட்டு சத்திரத்தின் கூடத்தில் அனைவரும் படுத்து உறங்க ஆரம்பித்தனர்.
அதே சமயம் இருளான பொழுதிலும் ஆகாயத்தில் மந்திரப் பாயின் உதவியோடு பறந்து கொண்டிருந்தனர் சூர்ப்பனகாவும் வித்யாதரனும்.
“வித்யாதரா! சுமார் நூறுகாத தூரம் கடந்துவிட்டோம்! இன்னும் இருநூறு காத தூரம் கடக்கவேண்டும். இடையில் இப்போது நாம் கடக்க இருப்பது “பூதக் காடு” இந்த காட்டுவழியில் பகலில் செல்லவே கூட எல்லோரும் பயப்படுவர். இந்தக் காட்டில் என்னைப் போல மந்திரக்காரர்கள், பூதங்கள் யட்சினிகள் வசிக்கின்றனர். இரவில் அவர்களின் சக்தி அபரிமிதமாக இருக்கும். அமாவாசை நெருங்கி வருவதால் அவர்களின் சக்தி இப்போது குவிந்திருக்கும். இந்தக் காட்டை நாம் இப்போது கடப்பதை விட சுற்றிச் செல்வதே உசிதமாக இருக்கும். இதனால் நமக்கு காலதாமதம் ஆனாலும் ஆபத்து ஏதும் நேராது. ஆனால் இந்த காட்டிற்குள் நுழைந்து சென்றால் விரைந்து செல்ல முடியும். அதே அளவிற்கு ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டும்.” என்றாள் சூர்ப்பனகா.
“ஆபத்தைக் கண்டு பயந்து செல்ல நான் கோழை இல்லை என்று தெரியும் தானே சூர்ப்பனகா! கணேசரின் அருள் இருக்கிறது! மந்திரப்பாயும் மந்திரக் காப்பும் இருக்கிறது! போதாக் குறைக்கு நீயும் இருக்கிறாய்! இதையெல்லாம் மீறி எந்த ஆபத்து வந்துவிடப்போகிறது! இளவரசியை மீட்பதில் ஏற்கனவே கால தாமதம் ஆகிவிட்டது. இன்னும் காலம் தாழ்த்தக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்! நம்மைத் தொடர்ந்துவரும் படை நாம் வந்த தூரத்தில் பாதி தூரம்தான் வந்திருக்கும். நாமும் தாமதம் செய்தால் அது அரக்கனுக்குத்தான் உபயோகமாக அமையும். எனவே இந்த காட்டின் மீதே பயணிப்போம்! எந்த ஆபத்து வந்தாலும் எதிர் கொள்வோம்.” என்றான் வித்யாதரன்.
மந்திரப் பாய் பூதக் காட்டின் மீது பறக்கத் தொடங்கியது. பாதித் தொலைவு கடந்ததுமே எதிரே ஓர் அரக்கி வந்து மறித்து நின்றாள்.
“யார் நீங்கள்? இது எங்கள் காடு! இதன் மீது பயணிக்க உங்களுக்கு அனுமதி இல்லை!” என்றாள் அரக்கி.
”அப்படியா! காடும் மலைகளும் மண்ணும் இயற்கைக்கு சொந்தம்! இதை உங்களுக்கு கொடுத்தது யார் என்று சொல்ல முடியுமா?” என்றான் வித்யாதரன்.
”எதிர்க் கேள்விகள் கேட்க உனக்கு உரிமை இல்லை! இந்த காட்டில் எங்கள் அரசி வைத்ததுதான் சட்டம்! மரியாதையாக வந்த வழியே திரும்பி சுற்றிக் கொண்டு செல்லுங்கள்! இல்லையேல் உங்களைச் சிறைப்பிடிக்க வேண்டியிருக்கும்!”
”எங்களைச் சிறைப்பிடிக்கும் வல்லமை பிடித்தவரோ உங்கள் அரசி! யார் அந்த அரசி என்று தெரிந்து கொள்ளலாமா?”
”எங்கள் அரசி பூதகியார்!”
“வித்யாதரா! பூதகியை பற்றி உனக்குத்தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!” என்றாள் சூர்ப்பனகா.
“எனக்கு கிருஷ்ண பரமாத்மா அழித்த பூதகியைத்தான் தெரியும்! அந்தப்பூதகியை அவர் அழித்தது போல இந்தப் பூதகியை நாம் அழிப்போம்! ம்.. வழி விடு!” என்று அரக்கியிடம் சொல்லிவிட்டு, “தொடர்ந்து பற!” என்று பாய்க்கு உத்தரவிட்டான்.
வழி மறித்த அரக்கியை விட உயரமாக எழும்பிப் பறக்க ஆரம்பித்தது பாய்.
“என் பேச்சை மீறிப் பறக்கின்றீர்களா? உங்களை என்ன செய்யப் போகின்றேன் பார்!” என்று ஓர் வளையம் போன்ற அமைப்பை பாயை நோக்கி வீசி எறிந்தாள் அந்த அரக்கி.
அது நெருப்பைக் கக்கிக் கொண்டு போய் பாயினை சுற்றி மறித்த்து. முன்னேற முடியாமல் அப்படியே நின்றது பாய். அடுத்த நொடி தன் பையில் இருந்த ஓர் பொடியை எடுத்து நெருப்பு வளையத்தின் மீது எறிந்தான் வித்யாதரன்.
அந்த வளையம் அணைந்து போய் அப்படியே கீழே விழ, பாய் தொடர்ந்து முன்னேறியது.
“நீ வித்தைக்காரன் தான்! ஆனால் எங்கள் அரசி உன்னைவிட கெட்டிக் காரி! நீ எப்படித் தொடர்ந்து பயணிக்கிறாய் பார்ப்போம்!” என்று கொக்கரித்தாள் அரக்கி!