பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்

 பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்

‘மகாகவி பாரதியார்’ என்ற நூலில் வ.ரா. எழுதிய பகுதியிலிருந்து…

வ.ரா.

ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும் அகஸ்மாத்தாய், நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன். வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது. நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போலப் புகைந்து கொண்டிருந்தது. சிலர் வேதமந்திரம் ஜபித்துக்கொண்டிருந்தார்கள். ஓர் ஆசனத் தில் பாரதியார் வீற்றிருந்தார். இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் என்ற ஹரிஜனப் பையன் உட்கார்ந்துகொண்டிருந்தான். புரெபஸர் சுப்பிரமணிய அய்யர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள்.

என்ன நடக்கிறது என்று மெதுவாகப் புரோபஸரைக் கேட்டேன். “கனகலிங்கத் துக்குப் பூணூல் போட்டு, காயத்ரீ மந்திரம் உபதேசமாகிக்கொண் டிருக்கிறது” என்றார். “உட்கார்ந்திருப்பது ஹரிஜனக் கனகலிங்கம்தானே! அதிலே சந்தேக மில்லை,“ என்று மறுபடியும் அவரைக் கேட்டேன். “சாக்ஷாத் அவனேதான்! அவனுக்குத்தான், பாரதி காயத்ரீ மந்திரம் உபதேசம் செய்தகொண்டிருக்கிறார்“ என்றார் புரொபஸர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்பு தான், என் பூணூலை எடுத்துவிடும்படி பாரதியார் எனக்குச் சொன்னார். அவரோ, வெகு காலத்துக்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார். தமது பூணூலை எடுத்துவிட்டு, என்னையும் பூணூலைக் கழற்றி எறியச் சொன்ன பாரதியாருக்குத் திடீரென்று வைதிக வெறி தலைக்கு ஏறி விட்டதாக என்று எண்ணினேன்.

மௌனமாக உட்கார்ந்திருந்தேன். பாரதியார் நான் இருந்த பக்கம் திரும்பிப் பார்க் கவேயில்லை. மந்திரோபதேசமெல்லாம் முடிந்த பிறகு, “கனகலிங்கம்! நீ இன் றையிலிருந்து பிராமணன்; எதற்கும் அஞ்சாதே; யாரைக் கண்டும் பயப்படாதே. யார் உனக்குப் பூணூல் போட்டுவைக்கத் துணிந்தது என்று உன்னை யாராவது கேட்டால், பாரதி போட்டுவைத்தான் என்று அதட்டியே பதில் சொல். எது நேர்ந்தாலும் சரி, இந்தப் பூணூலை மட்டும் எடுத்துவிடாதே“ என்று பாரதியார் அவனுக்கு வேறு வ்கையில் உபதேசம் செய்தார்.

இதைக் கேட்டு, யாரேனும் வாய்க்குள்ளாகவே சிரிக்கிறார்களோ என்று பார்த் தேன். பாரதியார் சொன்னதை ஆமோதிப்பதைப் போல, அவர்கள் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள். இந்த வைபவத்துக்கு வந்தவர்கள், தாம்பூலம் வாங்கிக்கொண்டு, பாரதியாரிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்கள். கனகலிங்கமும் போய்விட்டான். யாரோ ஒருவனைக் கூப்பிட்டு, “நீ கனக லிங்கத்துடன் கூடப்போய், அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா“ என்று பாரதியார் சொன்னார்.

எல்லோரும் போனபின், பாரதியார் தாம் போட்டுக் கொண்டிருந்த பூணூலை எடுத்துவிட்டார். ‘என்ன ஓய்!‘ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார். “இரண்டு பத்தினிமார்கள், பதினாயிரம் கோபிமார்கள் இவர்களோடு லீலைகள் புரிந்த கண்ணனுக்கு நித்ய பிரம்மசாரி என்ற பெயர் வந்த கதையாக இருக்கிறதே, உங்கள் பிரம்மேபதேசம்“ என்றேன். “நாடறிந்த பர்ப்பானுக்குப் பூணூல் எதற்கு ? உமக்கும் எனக்கும் வேண்டா. புதுப் பார்ப்பான் கனகலிங்கத்துக்குப் பூணூல் தேவை. எப்பொழுது நான் அவனுக்குப் பிரம்மோபதேசம் செய்தேனோ, அப் பொழுது எனக்கும் பூணூல் இருக்க வேண்டும். அது முடிந்துவிட்டது இனிமேல் எனக்கு என்னத்துக்குப் பூணூல்“ என்று பேச்சை அழகாக முடித்துவிட்டார் பாரதியார்.

கனகலிங்கம், பாரதியின் அன்புக்குரிய சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர், ‘என் குருநாதர் பாரதியார்’ எனும் நூலைப் படைத்தவர்.

இதைப்பற்றி வேறு எதுவும் பேச இடங்கொடுக்காமல், புரொபஸர் சுந்தரராம னோடு கீதை சம்பந்தமாக நடத்திய விவாதத்தில், அன்றைக்கு எழுதிய கட்டுரை யைப் பாரதியார் படித்துக் காண்பித்தார்.

கீதா விவாதம் வேடிக்கையான விவாதம். அப்பொழுது சென்னையிலே, ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்‘ என்ற தினசரி இங்கீலீஷ் பத்திரிகை ஒன்று நடந்து வந்தது. அதற்கு ஸ்ரீராம சேஷய்யர் ஆசிரியர். ஸ்ரீ சுந்தரராமனுக்கும் பாரதியாரக்கு மிடையே, கீதையைப்பற்றிய விவாதத்தை அவர் எப்படியோ தூண்டிவிட்டார். ஸ்ரீ சுந்தரராமன் சம்பிரதாய முறைப்படி கீதைக்கு வியாக்கியானம் செய்து, விவாதத்தை நடத்தி வந்தார். எதிலும் நவீன சம்பிராதாயத்தை நாட்ட வந்த பாரதியார், தமது மேதை காண்பித்த போக்கில் விவாதத்தை நடத்தினார்.

அரவிந்தர், பாரதியாரின் கட்சி வாதத்தை ஆதரித்தார். விவாதம் ரஸாபாசமாகப் போகும் நிலைக்கு ஸ்ரீ சுந்தரராமன் அதைக் கொண்டு வந்து விட்டார். பாரதியார் விவாதத்தை மேற்கொண்டு நடத்தவில்லை. இந்த விவாதம் நடக்கையில், விஷயம் செதரிந்த புதுச்சேரி நண்பர்கள் ஆச்சரியப்பட்டது ஒரு சங்கதியைப் பற்றித்தான்.

“பாரதியாருக்கு இவ்வளவு சமஸ்கிரதம் தெரியுமா? பாரதியார் இங்கிலீஷில் இவ்வளவு அழகாகவும் வன்மையோடும் எழுத முடியுமா?“ என்று அவர்கள் தலையை அசைத்துக்கொண்டு ஆச்சரியப்பட்டார்கள். உலகம் மதிக்கிற விதமே இப்படித்தான். தங்களுக்குப் பக்கத்திலிருப்பவர்களிடம் அபூர்வமான சக்தி இருக்கிறது, இருக்க முடியும் என்று பெரும்பான்மையோர் எண்ணுவதேயில்லை. இத்தகைய விபரீதத்துக்கு விமோசனம் என்றைக்கு ஏற்படப் போகிறதோ!

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.