ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
மக்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்காக மதுக்கடைகள், மக்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கத் தூண்டுவதற்காக ஆன்லைன் சூதாட்டங்கள் என தமிழகம் அழிவுப்பாதையில் தடம் பதித்து வருகிறது. மக்களை மாய வலையில் விழவைக் கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், இளைய தலைமுறையினரின் எதிர் காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றப் பாதையி லிருந்து இளைய தலைமுறையினரைத் திசைமாற்றுகிறது. மேலும், தன்னம் பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.
இந்த சூதாட்டத்தினால் கடந்த ஓராண்டு மட்டும் 27 பேர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று நீதியரசர் சந்துரு தலைமையில் குழு ஒன்றைத் தமிழக முதல்வர் அறிவித்தார். இதற்கு முன்பு அ.தி.மு.க. அரசு, நவம்பர் 2020இல் நிறைவேற்றிய அவசரச் சட்டம் பிப்ரவரி 2021 இல் சட்டமன்றத் தில் முறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டம் தகுந்த ஆதாரங்கள், காரணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதாக ஆகஸ்ட் 2021 இல் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.
தற்போது, நீதியரசர் சந்துரு குழு, 2022, ஜூன் 27ஆம் தேதி தன்னுடைய அறிக்கை யைத் தந்த பின்பும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், முதல்வரின் முதல் தனிச் செயலாளர் பங்கேற்ற உயர் அலுவலர்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. பிறகும், இந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வர, காலதாமதத்திற்கு காரணமும் தெரிய வில்லை; புரியவும் இல்லை. எனவே தமிழக அரசு இன்னும் ஓர் உயிர்ப்பலி நிகழ்வதற்கு முன், இன்னும் ஒரு குடும்பம் சீரழிவை சந்திப்பதற்கு முன், அவசரச் சட்டத்தை இயற்றி இணையவழி சூதாட்டத்திற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது லாட்டரி சீட்டுக்குத் தடை கொண்டுவந் தார். கந்துவட்டி தடை சட்டம் கொண்டுவந்தார். அதற்கெல்லாம் அவர் இவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இந்தச் சட்டத்தை நடை முறைப்படுத்திட ஏற்படுத்திடும் காலதாமதம் யாருக்கு ஆதரவாக துணை போவது போல் உள்ளது. எனவே உடனடியாக ஆன்லைன சூதாட்டங்கள் தடை செய்யப்படவேண்டும்.
இம்மாதம் 10ஆம் தேதி நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய தமிழக முதல்வர், போதைப்பொருள் விற்பனையாளர்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று தெரி வித்து உள்ளார்; இதை வரவேற்கின்றோம். அதே நேரத்தில் எத்தனை பேர் சொத்துக்கள் முடக்கப்பட்டன என மூன்று மாதகால அவகாசத்தில் தெரிவித்தால் நல்லது. அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு போதைப்பொருள் விற்பனையாளர் கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது தமிழகஅரசு என்பதனையும் வேதனையுடன் நினைவுபடுத்தவேண்டியுள்ளது.
அது, மது விற்பனை செய்யும் மதுக் கடைகள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும் மதுப் பழக்கத்தில் இருந்து தமிழக மக்களை மீட்டு எடுக்கத் தமிழக அரசு முனைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – மது விற்பனை நேரத் தைக் குறைக்க வேண்டும் – விற்கப்படும் மது வகைகளுக்கு விற்பனை ரசீது வழங்கப்பட வேண்டும் – அனுமதியின்றி நடத்தப்படும் மதுக் கூடங்களை உடனே மூட வேண்டும் – சட்டவிரோதமாக மதுபானங்கள் பெட்டிக்கடைகளில் விற்பதை ஒடுக்கவேண்டும். இப்படி எத்தனையோ நடவடிக்கைகள், எத்தனையோ முறை அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எடுத்து சொல்லப்பட்டுள்ளன. ஆனாலும் அரசுக்கு கேளாச் செவியாகவே உள்ளது. இந்தப் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை, காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.