வி.சி.11 – சதுர பூமி | ஆர்னிகா நாசர்

 வி.சி.11 – சதுர பூமி | ஆர்னிகா நாசர்

டோல்கின் எழுதிய ‘மிடில் எர்த்’ புத்தகத்தை கையில் வைத்திருந்தான் மாயவன்.

மாயவனுக்கு வயது முப்பது. நடுவகிடு எடுத்து தலைகேசத்தை வாரியிருந்தான். பால்வழி பிரபஞ்சத்தின் முதுகை தடவி விடும் கண்கள். பௌர்ணமித்த நுனி மூக்கு. மீசையின் இரு நுனிகளும் கீழ் நோக்கி வளைந்திருந்தன. முன்னம் மேல் வரிசை பல்லில் இடைவெளி இருந்தது.

மாயவன் புவியியலில் டாக்டரேட் பண்ணியவன்

“ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா இஸபெல்லா?”

இஸபெல்லா மாயவனின் காதலி.

“இன்னும் நீ குழந்தை பிராயத்திலேயே இருக்கிறாய் மாயா… தினம் ஐஸ்கிரீம் இல்லாது உன் பொழுதுகள் நகராது. சரி சாப்பிடலாம்!”

“எரித்து கொன்ற பிலிப்பினோ புருனோவின் சாம்பலை எடுத்து மீண்டும் தூக்கிலிட வேண்டும்!”

“ஏன்?”

“அவன்தானே பூமி உருண்டை என கூறினான்…”

“அதுதானே உண்மை!”

“இல்லை அது ஒரு பொய்புனைவு பூமி சதுரமானது…”’

“பூமி சதுரமாய் இருந்தால் அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருமா? சுற்றுதலுக்கு உருண்டைவடிவம்தானே வசதியானது? நீ ஒரு புவியியல் நிபுணராய் இருந்துகொண்டு இப்படி அபத்தமாக பேசலாமா?”

“பூமி சதுரமானது என்பதனை நான்தான் அழுத்தந்திருத்தமாய் சொல்ல முடியும். இன்னும் பல உண்மைகளை நான் சொன்னால் நீ அதிர்ந்து போவாய்!”

“சொல்லேன்… அதிர்கிறேன்!” கிண்டலித்தாள் இஸபெல்லா.

“கடல்நீரின் நிறம் என்ன இஸபெல்லா?”

“நீலநிறம்!”

“இல்லவே இல்ல… இளம்சிவப்பு நிறம்!”

“என் கூட விளையாடுகிறாயா மாயா?”

“ஆயிரம் சதவீதம் சீரியஸாக கூறுகிறேன்…. கடல் நீரின் நிறம் இளம்சிவப்பு நிறம்… நாம் சுவாசிக்க எது தேவை?”

“ஆக்ஸிஜன்!”

“ம்ஹிம்… நாம் கார்பன் டை ஆக்ஸைடைதான் சுவாசிக்கிறோம்..”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி… எல்லாத்தையும் உல்ட்டா பண்ணி பேசுகிறாய்!”

“யானைகளுக்கு கொம்பு இருக்கிறதா இல்லையா?”

“இல்லை!”

“யானைகளுக்கு அழகிய கொம்புகள் உள்ளன… யானையின் கொம்புகள் கலைமான் போன்று வேலைப்பாடு மிக்கவை!”

“ஓவ்!”

“ஆமைகளுக்கு இறக்கை உண்டு. உயரவானில் பறக்கும். கடல்மீன்களுக்கு நுரையீரலும் கால்களும் இருக்கின்றன. அவை நிலத்தில் நடக்கும் ஓடும்!”

இஸபெல்லா சிரித்தாள். “செம கற்பனைடா உனக்கு!”

“பூமிக்கு வெளியேயும் புவிஈர்ப்பு விசையும் காலமும் இருக்கிறது. நட்சத்திரங்கள் எண்கூம்பு வடிவம் கொண்டவை. சதுரபூமிக்கு நாலு சூரியன்கள். கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்றும் வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் உதிக்கின்றன.. நமக்கு தினம் தோறும் பௌர்ணமி. சதுரபூமியில் நான்கு துருவங்கள் உள்ளன.”

“அள்ளி விட்ர மாயா!”

“நமக்கெல்லாம் வாயில் நான்கே பற்கள். மேலே ஒன்று கீழே ஒன்று பக்கவாட்டுகளில் இரண்டு. மனிதருக்கு இரண்டு நாக்குகள். ஒவ்வொருவருக்கும் நான்கு இதயங்கள். ஒன்று பழுதானால் மீதி மூன்று இயங்கும். இரண்டு பழுதானால் மீதி இரண்டு இயங்கும். கைகளில் மூன்று மூன்று விரல்கள்!”

“இல்லையே… என் கைகளில் பார்…. ஐந்து ஐந்து விரல்கள்!”

“கண்கட்டு வித்தை செய்கிறாய். உண்மையில் உனக்கு இருப்பது மூன்று மூன்று விரல்களே…”

“எது சொன்னாலும் மாற்றி பேசுகிறாய் மாயா!”

“பெண்களின் கர்ப்பகாலம் 90நாட்கள்… ஆண்களும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம்… குழந்தைகள் பிறந்தவுடன் நடக்கும் பதினைந்து நாட்களில் பேசும்…”

உதடு குவித்து தலையாட்டினாள் இஸபெல்லா.

“பிறக்கும் ஆண் பெண்கள் அனைவரும் நூறுவருடம் வரை உயிர் வாழ்வர். அற்பாயுளில் யாரும் சாகமாட்டார்கள்!”

“பலே.. உன் கற்பனை கொடிகட்டி பறக்கிறது!”

“மனிதர்கள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்வார்கள்… மனிதர்களின் கால்களில் வேர்முண்டு இருக்கும். நைட்ரஜன் மூலம் உணவு தயாரித்துக் கொள்வார்கள்…”

முகவாயை தேய்த்துக் கொண்டாள் இஸபெல்லா.

“மாயா… நீ ஒரு யுடோப்பியன் உலகத்தை கற்பனை செய்கிறாய்… நீ கற்பனை செய்யும் உலகம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் வேறு!”

“நான் சொன்னது முழுக்க உலகில் அப்படியே அச்சுஅசலாக இருக்கிறது. நீ உன் கண்களை மூடிக்கொண்டு உலகை பார்க்காதே. கண்களை விரியத்திற!”

“நீ சிறுவயதிலிருந்து சயின்ஸ் பிக் ஷன் கதைகளை படித்து வருகிறாய். அது உன் பெர்ஸெப்ஷன் லெவலை அடியோடு மாற்றி விட்டது!”

“பிடிவாதம் பிடிக்காதே. இறங்கி வா..”

“சிலர் உலகின் எல்லாரும் எல்லா பொருட்களும் அழகு என்பர். சிலர் செய்யும் அனைத்து காரியங்களிலும் ஆன்மாவையும் காதலையும் ஊடுருவ வைப்பர். சிலர் காடுகளை காதலிப்பர். நீயோ அள்ள அள்ளக் குறையாத அதீதக் கற்பனைகளை ஆலிங்கனம் செய்கிறாய்!”

“என்னை குற்றம் சாட்டுவது போல பேசுகிறாய் இஸபெல்லா!”

“உன் மீதான அக்கறையில் பேசுகிறேன். உனக்கு மனதளவில் பெரிய பிரச்சனை இருக்கிறது!”

“நான் ஒரு மனநோயாளி என்கிறாயா?”

“மனநோய் இல்லாத மனிதர்கள் ஏது? உனக்கிருக்கும் மனநோயின் பெயர் பேராகாஸம் டிஸாடர்…”

“அப்டின்னா?”

“நீ உனக்கு பிடிச்சமாதிரி மனிதர்களை பூமியை இந்த பிரபஞ்சத்தை கற்பனை பண்ணி அத முழுசும் உண்மைன்னு நம்புற. உண்மைகள் உன் எதிரில் இருந்தும் உன் கண்களுக்கு தெரிய மாட்டிங்குது, நீ வாலிபவயதான குழந்தை. நான் சொல்ற பேராகாஸம் டிஸாடர் நிறைய எழுத்தாளர்களுக்கு இருக்கு அந்த டிஸாடர்தான் அவங்களை சிறப்பா எழுத வைக்குது..”

“இன்னொரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா இஸபெல்லா?”

“சாப்பிடலாம்!”

ஸ்ட்ராபெர்ரி பிளாவரில் வாங்கிக் கொடுத்தாள்.

“நீ என்னை முழுமையாக காதலிக்கல… ஜஸ்ட் டைம் பாஸிங்குக்காக பழகிற! அதனால நீ என் அலைவரிசைல யோசிக்க மாட்டிங்ற!”

“நோ ஐ லவ் யூ!”

“உனது கைகளை கொடு!” கொடுத்தாள்.

பற்றிக்கொண்டான். பத்துவோல்ட் மின்சாரம் பாய்ந்தது.

“என்னை முத்தமிடு!”

“பொது இடத்திலா!”

“இல்லை.. என் உதட்டில்..”

உதட்டில் முத்தமிட்டாள். நான்கு உதடுகளும் காதல்பாலம் அமைத்தன. இருபக்க உமிழ்நீர்களும் ஜவ்வூடு பரவல் செய்தன.

மேல் உதட்டை வருடி கீழ் உதட்டைக் கவ்வினான்.

மராத்தான் முத்தம் தொடர்ந்தது.

மெதுவாக மிக மெதுவாக முத்தத்திலிருந்து இருவரும் விடுபட்டனர். அதன் பின் மாயவன் இஸபெல்லாவின் முகத்தையும் கண்களையும் ஹவ்டினி போல் தடவிக் கொடுத்தான். மாயவனை பார்த்து துள்ளிக் குதித்தாள் இஸபெல்லா.

“மாயா! உனக்கு வாயில் நான்கு பற்கள் இரு நாக்குகள்!”

“தெரிகிறதா?”

அனிச்சையாக அண்ணாந்தாள்.

நான்குதிசைகளிலிருந்து நான்கு சூரியன்கள்! கண்கள் கூசின.

“நீ சொன்ன மாதிரி நான்கு சூரியன்கள்!”

“இருக்காதா பின்னே?”

“உனக்கு புட்டத்தில் வால்… எனக்கு புட்டத்தில் வால்! இரண்டு வால்களும் மின்மினி பூச்சிகள் போல மினுக்குகின்றன…”

சிரித்தான் மாயவன்.

இஸபெல்லாவை உரசியபடி டால்பின் மீன்களும் சுறாமீன்களும் நடந்து சென்றன,

எங்கிருந்தோ ஒரு கொம்பு முளைத்த யானை புழுதி பறக்க ஓடிவந்தது. தும்பிக்கையை சுழற்றி இஸபெல்லாவை தூக்கி தன் முதுகில் அமர்த்தியது.

காட்டை ஒரு வலம் வந்தது.

கண்களுக்குள் வயலட்நிறவானம் தட்டாமாலை சுற்றியது.

இஸபெல்லாவை இறக்கிவிட்டு வணங்கியது யானை. “சதுரபூமியின் இளம்சிவப்பு கடலின் மீது ஆணையாக கூறுகிறேன்… நாம் அனைவரும் உண்மையின் உண்மைகள்… வருகிறேன் பின்னொருநாள் சந்திப்போம்!”

“சதுரபூமியின் பிரஜைகள் நாம்!” மார்தட்டினாள் இஸபெல்லா. “பொய்களும் உண்மைகளே.. உண்மைகளும் பொய்களே… மாயைகள் போட்ட குட்டிகள் நாம்!” பகபகவென சிரித்தாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...