இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கு​கிறது. 3,412 மையங்​களில் மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் நடப்பு 2025-26 கல்வி ஆண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கு​கிறது. தமிழகம் முழு​வதும் 3,412 மையங்​களில் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள், 27,783 தனித் தேர்​வர்​கள், 281 கைதி​கள் என மொத்​தம் 8.27 லட்​சம் பேர் தேர்வு எழுதுகின்​றனர். சென்னை மாவட்​டத்​தில் 250 மையங்​களில் 67,516 பேர் எழுதுகின்​றனர்.

முதல் நாளான இன்று தமிழ் மற்​றும் இதர மொழித்​தாள் தேர்​வு​கள் நடை​பெறுகின்​றன. தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதி​யம் 1.15 மணிக்கு முடிவடை​யும். 26-ம் தேதி வரை தேர்​வு​கள் நடை​பெறும். கண்​காணிப்பு பணி​யில் 44,624 ஆசிரியர்​கள் ஈடு​படு​கின்​றனர்.

காப்பி அடித்​தல், பிட் அடித்​தல் போன்ற முறை​கேடு​கள் நடக்​காமல் தடுக்க, 4,540 பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​வுக் கூடத்​துக்​குள் செல்​போன், மின்​சாதனப் பொருட்​களை கொண்​டு​செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆள்​மாறாட்​டம், காப்பி அடித்​தல் போன்ற ஒழுங்​கீன செயல்​களில் மாணவர்​கள் ஈடு​பட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது.

நம்பிக்கையுடன் தேர்வு எழுத தலைவர்கள் வாழ்த்து

பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: உயர் கல்வியே எங்கள் இலக்கு என்ற உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து, உங்கள் குறிக்கோளின் நுழைவுவாயிலான மேல்நிலை பொதுத் தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது. ‘‘என்னால் முடியும்’’ என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவைஇல்லை. தேர்வுகளை முனைப்புடன்,முழு கவனத்துடன் எழுதுங்கள்.

இந்த காலத்தில் உங்கள் உடல்நலன், மனநலனும் மிக அவசியம். சத்தான உணவு, போதுமான தூக்கம், மன அமைதி ஆகியவை தேர்வுகளை எதிர்கொள்ளத் துணைநிற்கும். பதற்றமின்றி, நம்பிக்கை, மகிழ்ச்சியோடு தேர்வை அணுகுங்கள். உழைப்புக்கு ஏற்ற பலனை நிச்சயம் அடைவீர்கள்.

உங்கள் உயர் கல்வி இலக்கை அடைய, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மனவலிமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வெற்றிப் பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மாணவர்கள் பயமோ, பதற்றமோ இன்றி நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு செல்லுங்கள். தேர்வில் தேர்ச்சி அல்லது அதிக மதிப்பெண் பெற முடியாவிட்டால் முடங்கிவிடாதீர்கள். அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை, மன உறுதியுடன் இருங்கள்.

பாமக தலைவர் அன்புமணி: பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்று, சாதனை படைக்க விரும்புகிறேன். மாணவர்கள் பதற்றம், பரபரப்பு இல்லாமல் கவனமாக படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பிளஸ் 2 பொதுத் தேர்வு, உயர்கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு எழுதுங்கள். அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!