கால், அரை, முக்கால், முழுசு | 11 | காலச்சக்கரம் நரசிம்மா
11. காதல் கசந்திடுமா..?
”எப்படி என் வேலை..? –நம்ம ஆபிஸ் எக்விப்மென்ட்ஸை பூதம் சார் மூலமா அவங்க பிளாட்ல வச்சு போலீசுக்கு இனபார்ம் செஞ்சுட்டேன்..!” –சஞ்சு சொல்ல, அதிர்ந்து போனாள், கங்கணா..!
”என்ன வேலை செஞ்சிருக்கே..? அவங்களைப் பழி வாங்க, இப்படியெல்லாம். கேவலமாவா நடந்துப்பாங்க..? இப்ப என்ன பண்றது..! ” –கங்கணா தனது அலுவலக அறையில் இருந்து ஜன்னல் வழியே பார்க்க, நண்பர்கள் நால்வரும் காரில் இருந்து இறங்கி, போலீஸ் புடைசூழ அலுவலகத்தை நோக்கி வருவது தெரிந்தது.
அவசரமாக பிரதீப் நஞ்சுண்டன் அறைக்கு விரைந்தாள், கங்கணா.
”வெரி சாரி, மிஸ்டர் பிரதீப்..! ஆதர்ஷ், தினேஷ், ரேயான் மற்றும் கார்த்திக் மேல இருக்கிற கோபத்துல, சஞ்சனா, நம்ம ஆபிஸ் எக்விப்மென்ட்ஸ்-சை அவங்க பிளாட்ல பதுக்கி வச்சுட்டு போலீஸ் லெவல் வரைக்கும் கொண்டு போயிட்டாங்க. இப்ப போலீஸ் இன்க்வியரிக்கு அழைச்சுக்கிட்டு வராங்க. நீங்கதான் விஷயத்தை எப்படியாவது சமாளிக்கணும். அவங்க ஒரு தப்பும் செயலை. எல்லாம் இந்த சஞ்சனா செஞ்ச வேலை..!” –கங்கணா கெஞ்ச, பிரதீப் தலையசைத்தான்.
”டோன்ட் ஒர்ரி..! நான் பார்த்துக்கறேன்..!” –பிரதீப் கூற, கங்கணா தயங்கினாள்.
”மிஸ்டர் பிரதீப்..! அவர்களுக்குத்தான் என்னைப் பிடிக்கலியே தவிர, எனக்கு அவங்க கிட்டே ஒரு ப்ராபளமும் இல்லே..! அவங்க ராஜினாமா செஞ்சுட்டுப் போறதை நான் விரும்பலை. எப்படியாவது அவங்களை ரிசைன் பண்ணிட்டுப் போகாம, தொடர்ந்து வேலையில இருக்கச் செய்யுங்க. வேணுமின்னா, என்கிட்டே அவங்க ஆர்டர்ஸ் எடுக்காதபடிக்கு நேரே உங்க கிட்டேயே ரிப்போர்ட் செய்யட்டும்.” –கங்கணா கூறினாள்!
”எனக்கு உன்னோட நல்ல மனசு புரியுது கங்கணா..! அவங்களுக்கு என்னவோ உன்னைப் பிடிக்கலை..! அப்படியிருந்தும், நீ அவங்களுக்கு ஹெல்ப் செய்ய நினைக்கறே. என்னால ஆன முயற்சியை நான் செய்யறேன்..!” –என்றவுடன், கங்கணா சற்றே நிம்மதியுடன் வெளியேறினாள்.
சரியாக அவர்கள், பிரதீப்பின் அறையை நோக்கி வர, ஆதர்ஷ், கங்கணாவைக் குரோதத்துடன் நோக்கினான்.
”என்ன துணிச்சல் இருந்தால், எங்கமேல திருட்டு பட்டம் கட்டுவே..!” –ஆதர்ஷ் கேட்க, பதில் கூறாமல் விரைந்தாள், கங்கணா.
”சாரி இன்ஸ்பெக்டர்..! எந்த எக்விப்மென்ட்ஸ்-சும் களவு போகலை ! நாங்கதான் ஒரு ஷூட்டிங்குக்காக எக்விப்மென்ட்ஸை அவங்க வீட்டுக்கு அனுப்பினோம். அது தெரியாம, எங்கள்ல யாரோ தவறான தகவலைக் கொடுத்துட்டாங்க. நாங்க கம்ப்ளெய்ண்ட்டை வாபஸ் எடுத்துகிறோம் !” –பிரதீப் கூறினான்.
”ரிட்டன்ல எழுதிக் கொடுத்து அனுப்புங்க..!” –பிரச்சனை எளிதாகத் தீர்ந்தது குறித்து இன்ஸ்பெக்டர் நிம்மதியுடன் எழுந்து போக, டார்க் டெமான்ஸ் பிரதீப்பைக் கோபத்துடன் பார்த்தனர்.
”இந்த இன்சல்ட் எங்களுக்கு தேவைதானா, பிரதீப்..?” –கார்த்திக் கேட்டான்.
”எல்லாத்துக்காகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன்..! அதுக்கு பரிகாரத்தையும் நான் செய்யறேன். நீங்க ரிசைன் பண்ணிட்டு எங்கேயும் போக வேண்டாம். ஆதர்ஷ் வில் பி தி கிரியேட்டிவ் ஹெட்..! நீங்க நாலு பேரும் ஒரு டீம். உங்க விஷயங்கள்ல எந்த பெண்களும் தலையிட மாட்டாங்க. கங்கணா சி.இ.ஓ. ஆகிட்டாள். அவளுக்கு இனிமே வெறும் அட்மினிஸ்டரேஷன் வேலைகள்தான். உங்க கிரியேட்டிவ் சைட்ல அவ வரமாட்டாள்..! நீங்க அவ முகத்துலகூட விழிக்க வேண்டாம்..! ஓகேயா?” –பிரதீப் கேட்டதும், ஆதர்ஷ் யோசித்தான்.
”இல்லே பிரதீப்..! ரசாபாசம் நடந்து போச்சு..! இனிமே எந்தக் காரணம் கொண்டும் இங்கே எங்களுக்கு வேலை செய்ய மனசு ஒத்துக்காது..!” -ஆதர்ஷ் கூறினான்.
”சொல்றதைக் கேளுங்க, ஆதர்ஷ்..! உங்க திறமைகளைத் தேடி எடுத்துதான் நான் எங்க கம்பெனியில சேர்த்திருக்கேன். உங்க ஒவ்வொருத்தரோட திறமைகளையும் நான் அறிவேன். யுரேனஸ் டிவி பெரிய லெவல்ல EXPAND செஞ்சுகிட்டு இருக்கான். இந்தச் சமயத்துல உங்களை நான் வெளியே விடப்போறதில்லை. நீங்க நாலு பேரும் வேலை பார்க்கிற டிபார்ட்மெண்ட்ல எந்தப் பெண்ணும் இருக்க மாட்டாங்க. நீங்களேதான் உங்களுக்கு ராஜா..! நீங்க நாலு பேரும் என்கிட்டே மட்டும் ரிப்போர்ட் செஞ்சாப் போதும்..! உங்க ஆபிஸ் ரூமை பெருக்கிற ஸ்வீப்பர் கூட பெண்ணாக இருக்க மாட்டாள்..! போதுமா..?” –பிரதீப் உத்தரவாதம் அளித்தான்.
”அப்புறம் என்னடா… அவரே சொல்லிட்டார்..! இனிமே நம்ம காட்டுல மழைதான். திருப்பி வேலை தேடற கஷ்டம் இல்லாம, இங்கேயே இருந்துடலாம்..!” –கார்த்திக் சொல்ல, ஆதர்ஷ், பிரதீப்பை பார்த்தான்.
”பிரதீப்..! நாளைக்கு மீட்டிங், கான்பரன்ஸ்ன்னு எங்களை அந்தக் கங்கணாவோட உட்காரச் சொல்லக் கூடாது..! எங்களைப் பொறுத்தவரை, கங்கணான்னு இந்த ஆஃபீஸ்ல யாரும் கிடையாது..! ஓகே..!” –ஆதர்ஷ் சொல்ல, பிரதீப் தலையசைத்தான்.
”அப்படியெல்லாம் நடக்காது..! உங்களுக்கு மூன்றாவது மாடியில தனி ஆபீஸ் போட்டுத் தரேன்..! மூணாவது மாடிக்கே பெண்களுக்கு அனுமதி கிடையாது..! ஓகேயா..?”
”சூப்பர்..!” –ஆதர்ஷ் தனது கட்டை விரலைக் காட்டிவிட்டு, அறையை விட்டு செல்ல, டார்க் டெமான்ஸ் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
கங்கணாவை அலட்சியமாகப் பார்த்தபடி தினேஷ் செல்ல, அவள் கவலையுடன் தனது அறை வாயிலில் வந்து நின்ற பிரதீப்பை பார்த்தாள்.
”கவலைப்படாதே..! வேலையில் தொடர்கிறார்கள்..!” –என்கிற பாவனையில் தனது கட்டை விரலை உயர்த்தினான் பிரதீப்.
கங்கணாவின் மனதில் நிம்மதி உணர்ச்சி பரவியது.
அவளுக்கு இது விந்தையாக தான் இருந்தது. இவளை அடியோடு வெறுப்பவர்கள் நான்கு பேர் ராஜினாமா செய்து விட்டு போனால் போகட்டுமே. அவர்களுக்காக எதற்கு இவள் ப்ரதீப்பிடம் பேசி அவர்கள் மனதை மாற்ற வேண்டும்..?
ஆனால் தன்னையும் அறியாமல், அவர்கள் நால்வரும் வேலையில் தொடர வேண்டும் என்கிற ஆவலில் இருந்தாள். தெரிந்தோ தெரியாமலோ, அந்த நால்வரில் ஒருவன், அவளது மனதை ஆக்ரமித்து இருந்தான்.
யார்? கால் பங்கு ஆணாதிக்க எண்ணம் உள்ள, கார்த்திகா..?
அரை பங்கு ஆணாதிக்க எண்ணம் உள்ள தினேஷா..?
முக்கால் பங்கு ஆணாதிக்க எண்ணம் உள்ள ரேயானா..?
இல்லை, முழுவதுமாக பெண்களை வெறுக்கும் ஆதர்ஷா..?
எப்போதும் முழுவதுமாக சவாலாக விளங்குபவனைத்தானே, பெண் மனம் நாடும்..?
எது எப்படியோ, ஆதர்ஷ் கங்கணாவின் மனதைக் கவர்ந்து விட்டிருந்தான். அவனை நெருங்கிப்பேச இயலாதபடி, இவள் மீது த்வேஷத்தை அல்லவா கொண்டிருக்கிறான்..!
ஆதர்ஷிடம் சென்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டால் என்ன..? நன்றாகத் திட்டுவான். திட்டிவிட்டுப் போகட்டும்..! திட்டத் திட்டத் திண்டுக்கல்..! வைய வைய வைரக்கல் என்று துடைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்.
”மாத்ருபூதம் சார்..! உங்களை ஜென்டில்மேன்னு நினைச்சோம்..! இப்படி எங்களுக்கு எதிரா அந்தப் பொண்ணுங்களோட சேர்ந்து, எங்களுக்குத் திருட்டுப் பட்டம் வாங்கித் தருவீங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை..!” –ரேயான் அதட்டினான்.
”சாரி பா..! அந்த சஞ்சனாப் பொண்ணுதான், இப்படி செய்யச் சொல்லுச்சு.! நீங்க அப்படிச் செஞ்சா, கங்கணாவுக்கு உங்க மேல காதல் பிறக்கும்… அப்படி இப்படின்னு கதை சொல்லி, என்னை அந்த காரியத்தைச் செய்ய வச்சுட்டா..!” –புலம்பினார், மாத்ருபூதம்.
”கங்கணா, சஞ்சனா எல்லாம் பெண்களா..? உங்களுக்கு திருவான்மியூர்ல இவ்வளவு பெரிய ப்ராபர்ட்டி இருக்கு. நீங்க கண்ணை அசைச்சா எவ்வளவோ பொண்ணுங்க ஓடி வருவாங்க. போயும் போயும்…. கங்கணாவைப் போய்…” –தினேஷ் கூறினான்.
”அது தப்பு… அது தப்பு..! உனக்குப் பிடிக்கலைங்கிறதுக்காக, உண்மையான ஒரு பேரழகியை மட்டமாப் பேசக்கூடாது..! கங்கணா அழகு யாருக்குமே வராது ! நீ என்னப்பா சொல்றே, ஆதர்ஷ்..?” — மாத்ருபூதம் கேட்டார்.
”ரொம்ப முக்கியம் சார்..! நாங்க தொடர்ந்து டிரினிட்டி இந்தியா டிவியிலதான வேலை பார்க்கப் போறோம். சோ.. நாங்க காலி பண்ணப் போறதில்லை…!” –ஆதர்ஷ் சொன்னான்.
”குட்..! தட் இஸ் தி ஸ்பிரிட்..! நாலு பேரும் ராஜா மாதிரி இருக்கீங்க..! ஆளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆறதைப் பாருங்க.!”
லைலா மஜ்னு பிளாட் பெல் அடிக்க, ரேயான் சென்று மேஜிக் ஹோல் வழியாக வெளியே பார்த்தான்.
வியப்புடன் நண்பர்களைத் திரும்பி நோக்கினான்.
”கங்கணா தான் வெளியே நிற்கிறாள்” –என்றான் ரேயான்.!
1 Comment
மோதலில் பிறக்கிறது காதல்! பார்ப்போம் ஜெயிக்கிறதா என்று!