கோமேதகக்கோட்டை | 10 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக்கோட்டை | 10 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

மீனவர்களின் படகில் இருந்து பாயுடன் பறந்த வித்யாதரன் இப்போது மிகவும் வேகமாகப் பறந்து கொண்டிருந்தான். மன்னிக்கவும், அந்தப் பாய் வேகமாகப் பறந்து கொண்டிருக்க, அதன் மீது கவனமாக அமர்ந்து கொண்டிருந்தான். அந்த முன்னூறு காத தொலைவுகளை மிகவும் வேகமாக சில மணிகளில் கடந்து அவனை சுமந்துவந்துவிட்டது அந்த மந்திரப்பாய்.

வில்லவபுரம் நகரின் மீது மந்திரப்பாய் தாழ்வாகப் பறந்து வரவும் அந்நகர மக்கள் “பாய் பறக்குது! பாய் பறக்குது!” என்று கூச்சலிட்டார்கள்!

”பாய் பறக்குது! அது மேலே ஒரு பருந்து இல்லே உட்கார்ந்துட்டு வருது! இது ஆச்சர்யமா இல்லே இருக்குது!” என்று ஒருவன் சொன்னான்.

”வில்லவபுரத்தில் இப்போது ஆச்சர்யங்களுக்கு பஞ்சம் ஏது? தினம் தினம் ஆச்சர்யங்கள் முளைத்துக் கொண்டேதானே இருக்கு! ”என்றான் இன்னுமொருவன்.

”நீ என்ன சொல்லவருகிறாய்? கொஞ்சம் விவரமாக சொல்லுவியா?” என்றான் முதலாமவன்.

”நம்ம இளவரசியை ராட்சசன் ஒருவன் கட்த்திட்டுப் போனது முதல் ஆச்சர்யம். அப்புறம் அந்த இளவரசியை மீட்க குருவோட மகன் முன் வந்த்து இன்னொரு அதிசயம். அவனை கூட்டிட்டுப் போக வந்த குள்ளன் மூன்றாவது அதிசயம். இப்போ இந்த பறக்கும் பாய் நாலாவது அதிசயம்!” என்றான் மற்றொருவன்.

”ஆமாம்டா! நம்ம நாட்டுலே என்னென்னமோ நடக்குது! இளவரசியைக் கடத்திட்டுப் போன ராட்சதன் நிறைய பொருட்களை கேட்டிருக்கானாமே!”

”ஆமாடா! தினமும் 100 மாடுகள், 200 ஆடுகள், 500 மூட்டை அரிசி சாதம், 500 மூட்டை காய்கறிகள், அண்டா நிறைய நெய், 100 குடம் பாயசம், 50 படகு நிறைய மீன் உணவுகள் வேண்டும்னு கேட்டிருக்கான். முதல் நாள் இவ்வளவு பண்டங்களையும் திரட்டி ராஜா கொடுத்திட்டு அவன் கிட்டே ஒரு வேண்டுகோள் விடுத்தாராம்.”

”அப்படி என்ன வேண்டுகோள் விடுத்தாராம்?”

”இப்படி தினமும் கொடுத்தா என் நாட்டுக்குள்ளே தினமும் ஒரு கிராமம் அழிஞ்சு போயிரும்! உன் கூட்டம் முழுவதுக்கும் நீ உணவு கேட்கிறாய்! அப்படி கொடுத்தால் என் நாடே சில தினங்களில் அழிஞ்சு போயிரும் அதனாலே உனக்கு மட்டும் என்ன தேவையோ அதைக் கேளு! எனக்கு என் பொண்ணு முக்கியம்னாலும் நாட்டு மக்களையும் நான் காப்பாத்தணும் இல்லையான்னு கேட்டிருக்காரு!”

“அதுக்கு அந்த ராட்சதன் என்ன பதில் சொன்னானாம்!”

”அவன் தான் ராட்சதன் ஆச்சே! என்ன சொல்லுவான்! உன் நாடு அழிஞ்சா எனக்கு என்ன?ன்னு திமிரா சொல்லிட்டு மன்னர் கொடுத்த பொருட்களை தன் கூட்டத்தோடு வந்து எடுத்திட்டு போயிட்டானாம்! ஆனா நேத்து அந்த ராட்சதன் வரவே இல்லையாம்!”

”அடடே! அப்புறம்?”

”நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்! அவன் வராமப் போனது நிம்மதியா இருந்தாலும் இன்னிக்கு வந்தா இன்னும் கோபத்தோடு வருவான்னு ராஜா பயந்துகிட்டு இருக்கார். அவன் எப்ப வருவான்னு மலையடிவாரத்திலே ரெண்டு நாட்களா அவன் கேட்ட பொருட்களோட ராஜாவோட சேவகர்கள் காத்துக்கிட்டு கிடக்கிறாங்க!”

”பரவாயில்லையே! இவ்வளவு விவரம் தெரிஞ்சு வைச்சிகிட்டு இருக்கியே!”

”நாட்டு நடப்பை அப்பப்ப தெரிஞ்சு வைச்சிக்கணும்! அப்பத்தான் நாம பிழைக்க முடியும்! இல்லேன்னா ஏமாளியாத்தான் வாழ வேண்டியிருக்கும்.”

“நீ சொல்றதும் சரிதான்! அது சரி இந்த பறக்கும் பாய் எங்கே போவுதுன்னு தெரியலையே!”

”வா! அது பின்னாடியே ஓடிப் போய் பார்த்து தெரிஞ்சுப்போம்!”

அவர்கள் இருவரும் பறக்கும் பாயின் பின்னாலேயே ஓடிவர அந்த பாய் மிகவும் லாகவமாக வில்லவபுர வீதிகளின் மீது பறந்து அரண்மனை வாசலைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்தது

வில்லவபுர அரசவையில் ராஜா விஜயேந்திரன் சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது அவர் முன்னே பறந்து வந்து இறங்கியது பறக்கும் பாய். அதன் மீதிருந்து கீழே இறங்கிய பருந்து வடிவில் இருந்த வித்யாதரன் ”வணங்குகிறேன் அரசே!” என்றான்.

”வித்யாதரா! வந்துவிட்டாயா? இரண்டு நாட்களுக்குள் விந்தியமலை சென்று திரும்பிவிட்டாயா? மிகவும் பெருமிதமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.”

”நான் விரைந்து வந்த்தற்கு இந்த மந்திரப்பாயும் ஒரு காரணம் மன்னா!”

”அப்படியா..? விவரமாக நடந்ததைக் கூறு.”

வித்யாதரன் நடந்த அத்தனையும் விவரித்துக் கூற விழிகள் விரிய மன்னரும் அவையோரும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். மலைப்பாம்பை வெற்றிக் கொண்ட விதத்தை வித்யாதரன் விவரிக்க “சபாஷ்” என்று பாராட்டினார் விஜயேந்திரன்.

”வித்யாதரா! உன் புத்திக் கூர்மையும் சமயோசித அறிவும் மிகவும் சிறப்பு! நீ நிச்சயமாக இளவரசியை மீட்டு இந்த வில்லவபுர மக்களை காப்பாற்றி விடுவாய்! எனக்கு நம்பிக்கை இருக்கிறது! ”என்றார் விஜயேந்திரன்.

”மன்னா! அப்புறம் என்ன? கவலையை விடுங்கள்! நான் இளவரசியை விரைவில் மீட்டு வந்துவிடுவேன்! அந்த கோமேதகக் கோட்டைக்குள் நுழைந்து இளவரசியை மீட்டுவர இப்போதே புறப்படுகிறேன்!” என்றான் வித்யாதரன்.

”அதில்லை வித்யாதரா! இப்போது ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது! அதுதான் யோசிக்கிறேன்!”

”என்ன சிக்கல் மன்னா! எதுவாகிலும் சொல்லுங்கள்! விடுவித்து விடுவோம்!”

“அது அவ்வளவு எளிதல்ல வித்யாதரா விடுவிப்பதற்கு!”

”என்ன சொல்கிறீர்கள் விளங்கவில்லை மன்னா!”

”அந்த ராட்சதன் நிறைய உணவுப்பண்டங்களை கேட்டு வாங்கிச்சென்றான் இல்லையா? அவனிடம் நான் இவ்வளவு பண்டங்கள் தினமும் தர இயலாது, கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டேன். அவன் சம்மதிக்கவில்லை! ஆனால் முந்தா நாள் பண்டங்களோடு சென்றவன் நேற்று முழுவதும் வரவில்லை! இன்று பகல் பொழுதில் இதுவரை வரவில்லை! அவன் ஏன் வரவில்லை! கோபித்துக் கொண்டு என் மகளை ஏதாவது செய்து விட்டிருப்பானோ? அல்லது அவனுக்கு ஏதாகிலும் அசம்பாவிதம் நிகழ்ந்து வராமல் இருக்கிறானா? தெரியவில்லை! எதுவாக இருந்தாலும் அங்கு அவன் பிடியில் சிக்கியிருப்பவள் என் மகள். அவளை நான் மீண்டும் உயிரோடு பார்ப்பேனா என்பது தெரியாமல் என் மனம் பதறுகின்றது”. இதைச்சொல்லும் போது விஜயேந்திரனின் கண்கள் களங்கின.

”அரசே! கவலை கொள்ள வேண்டாம்! இளவரசியாருக்கு ஓர் ஆபத்தும் ஏற்படாது. இன்று இரவுக்குள் அந்த ராட்சதன் மீண்டும் வருவான். பயப்படாதீர்கள்.”

“எப்படி நிச்சயமாகச் சொல்கிறாய்?”

”அரசே! அந்த அரக்கன் கேட்ட பொருட்கள் அபரிமிதமானவை! அவற்றை தினமும் நாம் கொடுப்பதானால் நம் ஊர்கள் நலிந்து நாசமடைந்துவிடும். அதனால்தான் நான் ஓர் யோசனை செய்தேன். அதை நம் வீரர்களிடம் சொல்லி செயல் படுத்தவும் செய்தேன். அதனால்தான் ராட்சதன் நேற்று வரவில்லை!”

”அப்படி என்ன செய்தாய்? எனக்குக் கூடத் தெரிவிக்காமல்?”

“மன்னிக்கவேண்டும் மன்னா! அதை சொல்லத்தான் அன்று அரசவைக்கு வந்தேன். அதற்குள் சித்திரக் குள்ளனுடன் விந்திய மலை செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அந்த களேபரத்தில் நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்து விட்டேன்.”

“சரி போகட்டும்! இப்போதாவது அந்த விஷயத்தை கூறுகிறாயா?”

“கூறுகிறேன் மன்னா! ராட்சதன் குடம் நிறைய தேன் கேட்டான்
இல்லையா?”

”ஆமாம்! அதைத்தான் தந்து விட்டோமே!”

”ஆம் தந்துவிட்டோம்! ஆனால் அதில்தான் விஷயம் இருக்கிறது!”

”பீதியை கிளப்பாமல் சீக்கிரம் சொல்! என்ன விஷயம்?”

”அந்த தேன் குடத்தில் கொஞ்சம் ஜாதிக்காய்களை பொடி செய்து கலந்துவிடச் சொன்னேன். மது என்ன செய்யும்? மயக்கத்தைத் தரும்! அதோடு ஜாதிக்காயும் சேர்ந்து கொண்டால் நல்ல உறக்கத்தை தரும்! அந்த ராட்சதனும் அவன் கூட்டாளிகளும் நல்ல உறக்கத்தில் இருப்பார்கள் இப்போதுதான் எழுந்திருப்பார்கள்!” என்றான்.

”ஆஹா! நீ புத்திசாலிதான் வித்யாதரா!”

”இன்று அனுப்பும் தேனிலும் அந்த ஜாதிக்காய்களை பொடி செய்து கலந்துவிடச் சொல்லியிருக்கிறேன்! அதனால் ராட்சதன் நாளை மீண்டும் வரமாட்டான். நாளை மறுநாள்தான் வருவான்”.

”பலே! உன் முன்யோசனை அற்புதம்!”

”நாட்டைக் காக்க இந்த முன் யோசனைகள் அவசியம் மன்னா! இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான். முழுவதுமாக காக்க அந்த ராட்சதனை அழித்து ஒழிக்க வேண்டும். அதையும் விரைவில் செய்து முடிக்கச் சித்தமாய் இருக்கிறேன் மன்னா!”

”வித்யாதரா! உன் முன் யோசனையும் வீரமும் அறிவும் சமயோசித புத்தியும் உனக்குத் துணை நிற்கையில் வேறு என்ன வேண்டும் அந்த ராட்சதனை வெல்வதற்கு? கட்டாயம் நீ அந்த ராட்சதனை வென்று நம் நாட்டு மக்களை காப்பாய்! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது!”

”உங்கள் நம்பிக்கைய நான் கட்டாயம் காப்பாற்றுவேன் மன்னா! கலக்கம் வேண்டாம்! அந்த ராட்சதனுக்கு அதிகபட்சம் இன்னும் இரண்டுமுறை மட்டும் உணவளித்தால் போதும்! அதற்குள் அவனை வென்றுவிடுவேன்! இளவரசியை மீட்டு வந்துவிடுவேன்.”

”ஆம்! என் பெண்ணொருத்திக்காக நாட்டுமக்களை துன்புறுத்தி அவர்களின் ஜீவனமான கால்நடைகளையும் தீவனங்களையும் பெறுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது! வெகு சீக்கிரம் இந்த அக்கிரமத்திற்கு நீ முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.”

”விடை கொடுங்கள் மன்னா! கோமேதக கோட்டை இருக்கும் தென்கிழக்கு சமுத்திரத்திற்கு கிளம்புகிறேன்!”

”இல்லை வித்யாதரா! இன்று ஒரு இரவு ஓய்வெடுத்துக் கொள்! நானும் படைவீரர்களையும் கடல்பயணம் செய்யத் தேவையான நாவாய்களையும், படகுக,ளையும் தயார் செய்து கொடுக்கிறேன்! நாளை தசமி நன்னாள். அம்பிகை அரக்கர்களை வென்றொழித்த நாள்.! அந்த நன்னாளில் நீயும் புறப்பட்டு வெற்றியை ஈட்டி வருவாயாக!”

”உங்கள் விருப்ப்படியே ஆகட்டும் மன்னா! நாளையே புறப்படுகிறேன்! இப்போது விடை கொடுங்கள்! ”வித்யாதரன் விடைபெற்று குருகுலத்திற்கு சென்றான்.

தே சமயம்… விந்திய மலைக்கும் வில்லவபுரத்திற்கும் இடையே இருந்த சாத்பூரா குன்றுகளில் இருந்த குகை ஒன்றில் சூனியக்காரி சூர்ப்பனகா குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தாள். அவள் முகம் தீவிர சிந்தனை வயப்பட்டு இருந்தது.

”இன்னும் இந்த பூதகனைக் காணவில்லையே! இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறான்?” அவள் வாய்விட்டுச் சொல்லவும் அங்கே பூதகன் வரவும் சரியாக இருந்தது

”பூதகா! வந்துவிட்டாயா? வா! வா! அந்த வித்யாதரன் இருக்குமிடத்தை கண்டுபிடித்து விட்டாயா?”

”கண்டுபிடித்துவிட்டேன் தாயே! கண்டுபிடித்துவிட்டேன்!”

“சபாஷ்! எங்கிருக்கிறான் அவன்? ”

”தாயே, இங்கிருந்து ஒரு இருநூறு காத தொலைவு தூரத்தில் வில்லவபுரம் என்ற நாடு இருக்கிறது! அங்கேதான் வித்யாதரன் இருக்கிறான்.”

”அங்கே எதற்காக சென்றான் வித்யாதரன்.?”

”அதுதான் அவன் தாய்நாடு தாயே! சித்திரக் குள்ளர்களுக்கு உதவி செய்ய விந்திய மலைக்கு வந்தவன் அவர்களுக்கு இடையூறாக இருந்த ஒரு பெரிய மலைப்பாம்பைக் கொன்று அந்த பாம்பிற்குச் சாப விமோசனம் அளித்திருக்கிறான். அதற்காக கந்தர்வன் கொடுத்த பரிசுதான் அந்த பறக்கும் பாய். இப்போது வில்லவபுர இளவரசியை மீட்க அவன் தென்கிழக்கே இருக்கும் கோமேதகக் கோட்டைக்குச் செல்லப் போகிறான்!”

”சபாஷ்! பூதகா! நல்ல செய்தி சொன்னாய்! அவன் ராட்சதனையே அழித்துவிடுவானா? முதலில் என்னை வென்று அப்புறம் அந்த ராட்சதனை வெல்லட்டும்! பூதகா! நீ உன் கூட்ட்த்தோடு சென்று அந்த வித்யாதரனை கட்டி இங்கே தூக்கி வா! இது என் ஆணை!” என்று கொக்கரித்தாள் சூர்ப்பனகா!

”அப்படியே ஆகட்டும் மாதா!” என்ற பூதகன் மாயமாக மறைந்தான்.

பூதகனிடமிருந்து வித்யாதரன் தப்பினானா?

அடுத்த பகுதியில் பார்ப்போம்!

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...