தலம்தோறும் தலைவன் | 8 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 8 | ஜி.ஏ.பிரபா

திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

பொழிகின்ற துன்பம் புயல் வெள்ளத்தில் நின்கழல் புணைகொண்டு

இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க்கடல் வாய்ச்

சுழி சென்று மாதர்த்திரை பொரக் காமம் கரவு எறிய

அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

-திருவாசகம்

இந்த உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த ஐவகை அம்சங்களே மனித உடலில் ஆட்சி செலுத்துகிறது.

மனிதனுக்குள் மறைபொருளாக ஈசனே அருள் ஆட்சி செய்கிறான். துன்பம் சூழ்ந்த இந்த மண்ணுலகுக்கு வந்த உயிர்கள் ஈசனின் திருவடி என்னும் தெப்பத்தைக் கொண்டு முக்தி எனும் கரை ஏறுகின்றனர். அப்பா எனக்கு உன் திருவடி தரிசனம் வேண்டும் என்றுதான் அடியார்கள் வேண்டுகின்றனர்.

எனவேதான், அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும், ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று பாடுகிறார் வள்ளலார்.

இறைவன் என்பது வேறு ஒன்று இல்லை. அன்பு. அன்பின் வடிவே, அனைத்துயிரும் நீயே என்கிறது வேதம். உன்னைப் போல் பிறரையும் நேசி என்கிறது. அன்பு குறைந்தவர்களே அரக்கர்கள் என்கின்றன புராணங்கள்.

அவர்களை ஆட்கொண்டு, அன்பின் வழி நிலைநிறுத்தவே ஈசனின் பஞ்சபூதத் தலங்களில் அவரின் லீலைகள் நிகழ்கிறது. அம்மட்டில் செய்த வினைகளின் தீமை குறையவும், இறை வழியில் நின்று செயல்படவும் வலியுறுத்தும் தலமாக திருவானைக்காவல் விளங்குகிறது. இது நீர்த்தலம். அனைத்து தோஷங்களும் நீங்க வழிபட வேண்டிய ஈசன் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. ஆறு ஆதாரத் தலங்களில் இது ஸ்வாதிஷ்டானத் தலம். அம்பிகையால் நீரில் லிங்கம் பிடித்து வைத்து பூஜிக்கப்பட்டதால் இது அப்பு(நீர்) தலம். சிலந்தியும், யானையும் சாப விமோசனம் பெற்ற தலம். இதையே திருநாவுக்கரசர்..…

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து

உவந்து அவன் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆகக்

கலந்த நீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்

குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டானரே

என்று பாடுகிறார்.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தது. அங்கே ஜம்பு எனும் ஒரு முனிவர் ஈசனை வேண்டித் தவம் இருந்தார். ஈசன் அவருக்கு ஒரு நாவல் பழம் அளித்துக் காட்சி அளித்தார். ஈஸ்வரப் பிரசாதம் என்று முனிவர் அதை விழுங்கி விட, அந்த விதை ஈசனின் கருணையால் வயிற்றுக்குள் முளைத்து, முனிவரின் தலை வெடித்து முக்தி அடைந்தார். அந்த நாவல் மரமே இங்கு தல விருட்சமாக இருக்கிறது. ஈஸ்வரனும் ஜம்புகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஈசனின் சிவகணங்களில் புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் சிறந்த சிவ பக்தர்கள். அவர்களுக்குள் ஒருமுறை தங்களில் யார் சிறந்த சிவ பக்தன் என்ற மோதல் எழுந்தது. ஈசன் மாலியவானை சிலந்தியாகவும், புட்பதந்தனை யானையாகவும் பிறக்கும்படி சாபம் அளித்தார்.

இருவரும் இங்கு வந்து வெண்நாவல் மரத்தடியில் அம்பிகை பூஜித்த சுயம்பு லிங்கத்துக்கு சேவை செய்தனர். இங்கும் அவர்களுக்குள் சண்டை வந்தது. கூரையில்லாமல் இருந்த ஈசனுக்கு சிலந்தி வலை பின்னி சிவனை வெயில், மழை இவற்றிலிருந்து காத்தது. யானை தன் துதிக்கையின் மூலம் காவிரியிலிருந்து நீரும், பூவும் கொண்டு வந்து வழிபட்டது.

சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி யானை அதை பிய்த்துப் போட, சிலந்தி மறுபடியும் வலை பின்னும். யானை அறுத்து எறியும். இதனால் சிலந்தி யானையைத் தண்டிக்க, அதன் துதிக்கையில் சிலந்தி புக, இரண்டும் சண்டையிட்டு மடிந்தன.

இவர்களின் பக்தியில் மனமிரங்கிய ஈசன் யானையை சிவகணங்களுக்குத் தலைவன் ஆக்கினார். சிலந்தி சோழ மன்னன் கோச்செங்கணான் என்ற அரசனாகப் பிறந்தான். அவனே காவிரிக் கரையில் வரிசையாக எழுபது மாடக் கோவில்கள் கட்டினான். யானை ஏற முடியாத படி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது ஈசனை நிறுத்தினான். அவன் கட்டிய முதல் மாடக் கோவில் திருவானைக்காவல் ஆகும்.

இங்கு பிரணவப் பொருள் உபதேசத்தை ஈசன் அம்பாளுக்கு குருவாக இருந்து உபதேசிக்க, மாணவியாக நின்று அன்னை அதை கற்றுக் கொள்கிறார். எனவே கல்வி அறிவு பெருக இத்தலத்து அம்பிகையையும், ஈசனையும் வணங்குவது மிகச் சிறப்பு.

ஜம்புகேஸ்வரர் சன்னதி தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ளது. எனவே அவருக்கு எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகள் உள்ள ஒரு ஜன்னல் அது. அதன் வழியாகச் சென்றுதான் ஐயனைத் தரிசிக்க வேண்டும். இது மனித உடலில் உள்ள நவ துவாரங்களைக் குறிக்கிறது.

மதுரையில் ஈசன் சித்தராக வந்து லீலைகள் செய்தது போல், இங்கும் விபூதிச் சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்துள்ளார். சோழ மன்னன் ஒருமுறை இக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தைக் கட்டினான். அந்த வேலை நடைபெறும்போது போர்ச் சூழல் உருவானது. அப்போது ஈசன் விபூதிச் சித்தராக வந்து கட்டுமான வேலையை முடித்தார். மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு ஈசன் திருநீறைக் கூலியாக அளிக்க, அது பசும்பொன்னாக மாறியது. சிவன் கட்டிய மதில் திருநீற்றான் மதில் என்றும், பிரகாரம் விபூதிப் பிரகாரம் என்றும் அழைக்கப் படுகிறது.

சிவனை வேண்டி தன் பாபம் தொலைய அன்னை இங்கு தவம் இருந்ததால் ஈசன் அவருக்கு காட்சி அளித்தார். ஆனால் இங்கு திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இக்கோவிலில் திருமண உற்சவ வைபவம் நடைபெறுவது இல்லை. பள்ளியறை பூஜையும் இல்லை.

இங்கு வைகாசியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசியில் காவிரியில் மழை காரணமாக நீர் இருப்பதால் சிவனைச் சுற்றி நீர் நிற்கும். எனவே நீர் அதிகம் இல்லாத வைகாசியிலேயே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

பிரம்மாவின் சாபம நீக்க ஈசன் அம்பிகை வடிவிலும், அம்பிகை ஈசன் வடிவிலும் இங்கு பிரம்மாவிற்கு காட்சி அளித்து அவரின் தோஷத்தைப் போக்கினர். சிவனும், சக்தியும் ஒன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடந்தது.

எனவே ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் போது ஈசனும், அம்பிகையும், இங்குள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு எழுந்தருளி காட்சி தருகின்றனர். பிரம்மாவின் தியானம் கலையக் கூடாது என்று அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

திருவானைக்காவல் கோவிலை நினைத்தாலே ஈசன் தன் கருணையால் மெய்ப்பொருள் விளங்கச் செய்வார் என்கிறார் சம்பந்தர்.

விண்ணவர் போற்றி செய்ஆனைக்காவில் வெண்ணாவல் மேவிய

மெய்ப்பொருளை நாணி இறைஞ்சிமுன் வீழ்ந்து எழுந்து

நால்கோட்டு நாகம் பணிந்ததுவும் அண்ணல்கோச் செங்கண்

அரசன் செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்

பண் உறு செந்தமிழ் மாலைபாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்”

என்று பாடுகிறார் சம்பந்தர்.

இது அம்பிகை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித் தலம். ஒரு காலத்தில் அம்பிகை மிகவும் உக்கிரமாக இருந்தாள். ஆதிசங்கரர் அன்னையின் காதுகளில் இரண்டு தாடகங்களை அணிவிக்க் அன்னை சாந்தமாகக் காட்சி அளிக்கிறாள். உச்சிக்கால பூஜையின் போது அம்பிகை ஈசனைப் பூஜிப்பதாக ஐதீகம். எனவே அப்போது சிவாச்சாரியார் அன்னையைப் போல் பெண் வேடமிட்டு, யானை முன்னே செல்ல, மேள, வாத்தியங்களோடு ஈசனின் சன்னதிக்கு வந்து பூஜை செய்து, கோ பூஜையும் செய்வார்.

இக்கோவில் சிற்பங்கள் நிறைந்த கலைக் கூடமாக விளங்குகிறது. அன்னையின் சன்னதிக்கு வெளியே உள்ள தூணில் ஏகநாதர் சிலை உள்ளது. மும்மூர்த்திகளும் ஒருவரே என்னும் தத்துவத்தை விளக்கும் சிற்பம் காண வேண்டிய ஒன்று.

ஜம்புலிங்கம் தரை மட்டத்திற்குக் கீழ் உள்ளதால் எப்போதும் நீர்க் கசிவு இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் அங்கு நீர் வற்றுவதில்லை. மிகப் பிரம்மாண்டமாய் பதினெட்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப் பட்ட இக்கோவில் பல வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது.

சோழ மன்னர்கள் தவிர, பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் பலரும் இக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர். நாயன்மார்கள் தவிர, தாயுமானவரும் இத்தல ஈசனைப் பற்றிப் பாடியுள்ளார். கலிக்காம நாயனார் இத்தலத்தைச் சேர்ந்தவர்.

தலப் பெருமையை பழந்தமிழ்ப் பாடலொன்று “வேதகைய பயன் விழைவோர் ஞானதலத் துறைகுவது மேவாதாயின் ஒதுக்க அத்தலைப் பெயரை” என்று புகழ்கிறது. அப்பரின் தேவாரப் பதிகம் ஒன்று

துன்பம் இன்றித் துயரின்றி என்று நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

என்று இறைவன் புகழைப் பாடுகிறார் திருநாவுக்கரசர்.

துன்பமும், துயரமும் தீர இரவு பகல் எந்நேரமும் ஈசனைத் துதித்தால், அவன் அன்பனாய் நின்று நம்மைக் காத்திடுவான். நம்மைக் காக்கவேதானே ஈசன்.

–தரிசனம் தொடரும்…

ganesh

1 Comment

  • திருவானைக்காவல் தலத்தின் திருச்சிறப்புக்களை அறிந்து கொண்டேன்! அகம் மகிழ்ந்தேன்! அருமையான தொடர்! பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...