சிவகங்கையின் வீரமங்கை | 14 | ஜெயஸ்ரீ அனந்த்
சிவிகையிலிருந்து இறங்கிய அரசரை கண்டதும் தேவி அகிலாண்டேஸ்வரி இருகரம் கூப்பி அவரை வரவேற்றாள். தாயாரைக் கண்டதும், இளவரசர் முத்துவடுகநாதரும் அவரின் கால்களை தொட்டு வணங்கினார்.
“எழுந்திரு குழந்தாய். வாருங்கள். அனைவரும் நலமாக உள்ளீர்கள் தானே?” என்றாள்.
“ஆம் தேவி. தற்பொழுது வரை நலமே… அன்னை எப்படி இருக்கிறார்கள்?”
“அவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் நியாபகமும் அந்த ஈசனின் நியாபகமும் தான். நமச்சிவாய மந்திரத்தை ஸ்ரமணம் செய்தபடி இருப்பார்கள். வாருங்கள் அவர்களை காணலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு குடிலுக்குள் விரைந்தாள்.
மாதா உத்திரகோச மங்கைக்கு இவர்களைப் பார்த்தும் எப்படி உடம்பில் பலம் துளிர்த்தது என்று தெரியவில்லை. எழுந்து அமர்ந்து விட்டாள். கொள்ளுப் பேரனை ஆரத்தழுவிக் கொண்டாள்.
“எப்படி இருக்கிறது உனது பயிற்சிகள்? வளரி எறிவதில் உன்னை மிஞ்ச பூலோகத்திலே யாரும் இல்லை என்று கூறுகிறார்களே.. அது உண்மையா?” நடுங்கும் குரலில் கேட்டாள்.
“ஆம் மாதா… வளரி எறிவதில் இளவரசருக்கு இணை யாரும் இல்லை. இப்பொழுது கூட மதுரை விஜயகுமார நாயக்கருடன் சேர்ந்து நவாப்பை எதிர்த்து போரிட்டு, வெற்றி வாகை சூடிய கையுடன் இங்கே வந்துள்ளார்…” என்றதும், அன்னை உத்திரகோசமங்கைக்கு சொல்லில்லா மகிழ்ச்சி.
கண்கள் சரியாக தெரியாத போதிலும் பேரனின் வளர்ச்சியை காணும் ஆவலில் கையால் இளவரசரை தடவி பார்த்து பேரானந்தம் கொண்ட பொழுது அவர் கண்கள் இரண்டிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. “விஸ்வநாதர் அருளால் சீக்கிரம் விவாக ப்ராப்தம் உண்டாகட்டும்” என்றவள், “தாண்டவராயன் எப்படி இருக்கிறார்..?” என்றாள்.
“ம்… அவர் செய்து கொண்டிருக்கிற தர்மத்திற்கும் தானத்திற்கும் அவர் இன்னும் பல நூறாண்டு காலம் வாழ்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை”
“ம்… அவன் இன்னும் மாறவில்லையா..? அவரது தந்தை காத்தவராய பிள்ளை, தாண்டவராயனை குழந்தைப் பிராயத்தில் என்னிடம் அனுப்பி வைத்தார். வேல் எறிவதற்கும், வாள் வீசுவதற்கும் உனது மாமனார், அதாவது என் மகன் (முத்துவிஜயரகுநாத சேதுபதி) அவனுக்கு நல்ல பயிற்சி அளித்தான். நானும் அவனுக்கு தேவாரம், சிவபுராணம், திருவாசகம், ஆழ்வார் பாசுரமெல்லாம் சொல்லி கொடுப்பேன். மிகவும் புத்திசாலி. வான சாத்திரம் தெரிந்தவன்.”
“ஆமாம் அன்னையே.. இன்னமும் அவரிடத்தில் பக்தி குறைந்திடவில்லை. குன்றக்குடி முருகன் கோவிலுக்கும் திருப்பத்தூர் வைரநாத ஸ்வாமி கோவிலுக்கும் இவர் செய்கின்ற கைங்கர்யம் சொல்லில் அடங்காது. பாகனேரியில் தடாகம் ஒன்றை அமைத்து அதற்கு இளவரசரின் பெயரை இட்டுள்ளார். இவர் நம்முடன் இருக்க நாம் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.”
“அவனிடத்தில் இளவரசரின் ஜாதகத்தைக் காட்டினாயா..? எப்பொழுது திருமணம் நடக்கும் என்று ஏதாவது தெரிவித்தாரா..?”
“ஆம். அது குறித்து விவாதிக்கவே நான் தங்களைக் காண வந்துள்ளேன். பவானியால் நாம் பட்ட துயரத்தை இன்றும் நான் மறக்கவில்லை. அவன் மாண்டுவிட்டதாக நினைத்து கொண்டிருக்கின்ற நேரத்தில் தஞ்சைச் சிறையிலிருந்து வெளிவந்து விட்டதாகத் தகவல் வந்துள்ளது. மறுபடி அவனால் நாட்டிற்கு ஆபத்து நேரக்கூடும் என்று எண்ணுகிறேன். வானத்தில் வேறு வால் நட்சத்திரம் தோன்றியுள்ளது. ஆகையால் நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்னதாக முத்துவடுகநாதருக்கும், வேலு நாச்சியாருக்கும் திருமணம் செய்தாக வேண்டும். கையோடு ராஜாங்கத்தையும் ஒப்படைத்து விட எண்ணுகிறேன்… இதில் உங்களின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன்.” என்றார்.
“அன்னையே, பெரியப்பா கூறுவதைப் போல் வால் நட்சத்திரம் தோன்றும் போதெல்லாம் அரச குடும்பத்தில் துர்மரணம் ஏதேனும் சம்பவிக்குமா..? இதை நீங்களும் நம்புகிறீர்களா..?”
“வேலு, ஏன் உனக்கு இப்படியொரு சந்தேகம்? உன் அப்பா செல்லமுத்துவிற்கு முன் ராஜ்ஜியம் செய்த கட்டையதேவரின் அண்ணன் சுந்தரேசரை, பவானி பழி தீர்த்த சமயத்தில், சுந்தரேசரால் எனது மகன் முத்து விஜயரகுநாதன் காப்பாற்றப் பட்டான். ஆனால் சிறிது காலத்தில் எனது பேத்திகளை இழந்தேன் (சிவகாமி நாச்சியார் ராஜேஸ்வரி நாச்சியார்.) கூடவே அவர்களது கணவன் தண்டபாணித் தேவரையும் இழந்தேன். அந்த இக்கட்டான நேரத்தில் வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றியது. எனது தமயன் (இரகுநாத கிழவன் சேதுபதி) இறக்கும் பொழுதும், இராணி மங்கம்மாவின் கைகளால் கொல்லப்பட்ட எனது தமயனின் மகன் ரணசிங்க தேவர் இறந்த சமயத்திலும் வானில் வால் நட்சத்திரம் தோன்றியது. ஆகையால் நாம் எப்பொழுதும் முன் எச்சரிக்கையுடன் இருத்தல் நலம்தானே..?”
“அம்மா, அவள் குழந்தை… விபரீதம் புரிந்து கொள்ளும் வயது இன்னும் அவளுக்கு வரவில்லை” என்றாள் அகிலாண்டேஸ்வரி.
“சசி…. உடனடியாக இவ்விடம் செல்லமுத்துவையும், முத்தாத்தாளையும் வரச் சொல்லி ஓலை அனுப்பு. வருகிற முகூர்த்தத்தன்று இவர்களின் திருமணம் இங்கேயே நடைபெறட்டும்”
“ஆஹா…. பரமானந்தம். இப்பொழுதே ஓலை அனுப்புகிறேன்.” என்ற சசிவர்ணத் தேவர் சிவக்கொழுந்திடம் ஓலை ஒன்றை எழுதி அனுப்பினார்.
•
பவானியிடம் ஓலை பெற்ற உதிரன் என்ன ஆனான் என்பதை நாம் பார்த்து விட்டு வரலாம்.
தஞ்சையை நோக்கிச் சென்ற உதிரன் ஆங்காங்கே சிவிகை தென்படுவதையும் பார்த்தான். சிவிகையின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பிற்குச் சில வீரர்கள் செல்வதையும் கண்ட உதிரன் “பழி வாங்குவதற்கான நேரம் இது அல்ல.. மாறாக இவர்கள் கைகளில் நான் சிக்கிக் கொண்டால் விஷயம் விபரீதத்தில் முடிந்துவிடும். ஆகவே ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டும்” என்று நினைத்தவனாய் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தஞ்சையை நோக்கிக் குதிரையை வேகமாகச் செலுத்தினான்.
குதிரை தஞ்சையை அடைந்தது. ஏகோஜி என்ற மராட்டிய மன்னர் தஞ்சையைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார்.
உதிரனின் குதிரை தஞ்சையை அடைந்ததும் சற்று பதட்டம் தணிந்தவனாய் குதிரையை மெதுவாக ஓட்டிச் சென்றான். அரண்மனைக் கோட்டைக்குள் பிரவேசிக்க, ஏற்கனவே பவானிதேவர் கொடுத்தனுப்பிய முத்திரை மோதிரத்தைக் காட்டவும் வீரர்களால் தடுத்து நிறுத்தப்படாமல் நேராக அரண்மனை உள்ளே பிரவேசித்தான்.
அரசர் ஏகோஜி மராட்டியருக்கே உரிதான உடையில், அலங்கார டர்பனைத் தலையில் சுற்றி அதில் ஓர் இறகைச் செருகி பார்ப்பதற்கு சற்றே வித்யாசமாய் தெரிந்தார். அவரைப் பார்த்ததும் மண்டியிட்டு வணக்கம் தெரிவித்தான் உதிரன்.
“வர வேண்டும் ஒற்றனே.. ஏதேனும் அவசரச் செய்தி தாங்கி வந்துள்ளீர்களா..?” என்றான்.
“ஆம்… அரசர் பவானி தங்களிடம் ஒப்படைக்கச் சொன்னது.” என்று தான் கொண்டு வந்த ஓலையை மராட்டிய மன்னன் ஏகோஜியிடம் தந்தான். ஓலையைப் பிரிந்து வாசித்த மன்னனின் முகத்தில் . மெல்லிய புன்னகை மலர்ந்தது.
அதில் குறிப்பிட்டிருந்த, “தக்க தருணம் இது. நாம் திட்டமிட்டபடி வேலுநாச்சியார் இவ்விடம் இல்லை. ஆகவே ராமநாதபுரம் மீது நாம் தாக்குதல் ஆரம்பிக்கலாம்” என்ற வார்த்தை அவருக்கு ஆனந்தத்தை அளித்திருக்க வேண்டும். சந்தோஷத்தில் அருகில் இருந்த பொற்காசுக் குவியலில் ஒரு பிடி எடுத்து உதிரனிடம் தந்தார்.
“நல்ல செய்தி பெற்று வந்தமைக்காக எனது சிறு பரிசு. வைத்துக் கொள்” என்றவர், படைத் தளபதியை அழைத்தார்.
“தளபதியே, தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நாம் ராமநாதபுரத்தைக் கைப்பற்ற வேண்டும்.” என்று கர்ஜித்தார்.
ஆணையை பெற்றுக் கொண்ட தளபதி, படைகளைப் போருக்கு ஆயத்தப்படுத்த தயாரானார்.
•
அங்கு ஜெகன்நாதப் பெருமாள் கோவிலைக் குயிலி அடைந்த பொழுது பட்டர் கோவிலின் நடையைச் சாற்றி கொண்டு வந்தார். குயிலியைக் கண்டதும், “என்னம்மா குயிலி நலம்தானே? ஊரில் அனைவரும் நலம்தானே!” என்றார்.
“அனைவரும் நலம். நல்லவேளை நீங்கள் வீடு செல்லும் முன்னதாக வந்து விட்டோம். அன்னக்கூடத்தில் உணவு இருக்கும் அல்லவா?”
“தாராளமாக… ஆனால் நீ என் பெண் போன்றவள். எதற்காக வழிப் போக்கர்கள் போன்று அன்னதான கூடத்திற்குச் சென்று சாப்பிட வேண்டும்..? அருகில்தான் என் இல்லம். உன் அன்னையும் எனக்காகச் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள். வாருங்கள்… நாம் ஒன்றாகச் சாப்பிடலாம். பிறகு என் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு, நாளை சூரிய உதயத்திற்குப் பின் கிளம்பலாம்.” என்றார் பட்டாசாரியார் கண்ணன்.
“இதுவும் நல்லதுதான். நானும் அன்னையைப் பார்த்து நாளாகி விட்டது. அவர்களைப் பார்த்தது போலவும் இருக்கும். மேலும் வயிற்றுப் பசி ஆறியது போலவும் இருக்கும்.” என்று இரு குதிரைகளையும் கோவில் வளாகத்தினுள் விட்டுவிட்டு கண்ணன் பட்டருடன் அவரின் வீட்டிற்குச் சென்றார்கள்.
அச்சமயத்தில் இருளில் குதிரையில் இரண்டு உருவங்கள் அவர்களைக் கடந்து சென்றதை மூவரும் பார்த்தனர். அவர்களை பார்த்த வினாடி அவர்கள் யார் என்பதை குயிலியும் சுமனும் தெரிந்து கொண்டார்கள்.
ஆம், அவர்கள் வேறு யாரும் அல்ல… சிகப்பியும், சலீம் மாலிக்கும் தான். குதிரைகள் இரண்டும் அவர்களைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
2 Comments
Good going….Continue…God bless u
அட்டகாசமா போகுது! குதிரைங்க மட்டும் இல்லைங்க! இந்த தொடரும்தான்! வாழ்த்துகள்!