கால், அரை, முக்கால், முழுசு | 10 | காலச்சக்கரம் நரசிம்மா

10. அசுரர்களைச் சிக்கவைத்த பூதம்!!

நாலு பேர் கொண்ட டார்க் டெமன்ஸ்- குழுவினருக்கு, டிரினிட்டி இந்தியா டிவியில் பணியாற்றவே பிடிக்கவில்லை. என்ன செய்வது..?தேர்தல் முடிவுகள் முழுதாக வெளிவரும் வரையிலும், கருத்துப் பரிமாற்றங்கள், கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், எதிர்க்கட்சி அலுவலகம் வெறிச்சோடி இருப்பது, இனி பழைய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா, போன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டியிருந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு காத்தருந்தார்கள். இரவு பத்து மணிக்கு அட்டெண்டர் பஞ்சு ஓடி வந்தான்.

“சாரே… தெரியுமா..? நாளைக்கு நம்ம டிவி ஓனர் நஞ்சுண்டன் ஐயா பதவி விலகுகிறார்..! அந்த இடத்துக்கு நம்ம பிரதீப் நஞ்சுண்டன் சார் உட்கார வைக்கப்படுகிறார்! இதுவரையில். பிரதீப் சார் உட்கார்ந்திருந்த . சிஈஓ பதவியில், கங்கணா அம்மா உட்காரப் போறாங்க. லெட்டர் டைப் ஆகிட்டு இருக்கு. குண்டு சஞ்சனா சொல்லிச்சு. அதான் முதல் தகவலை சொல்ல ஓடோடி வந்தேன்.”

ஆதர்ஷ் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான். எவ்வளவு பெரிய தோல்வி..! ஒரு மாதத்தில் கங்கணா சரக்கு இல்லாதவள் என்று நிரூபித்து, இவன் கிரியேட்டிவ் ஹெட் பதவியை அவளிடம் இருந்து பார்க்கிறேன் என்று சவால் விட்டிருக்க, அவள் ஓர் மாதத்தியிலேயே சிஈஓ-வாக பதவி உயர்வு பெறுகிறாளா..?

”friends..! அடுத்த பிளைட்ல நான் கோயம்பத்தூர் போறேன். இனி நான் வேலையே பார்க்கபோறதில்லை. ஏழு தலைமுறைக்கு வீட்டுல உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு என் கிட்டே பணம் இருக்கு..!” –புகைச்சலுடன் சொன்னான், ஆதர்ஷ்.

”இந்த ஒற்றைத் தலைமை இருந்தாலே இப்படித்தான்.! திடீர் திடீர்னு முடிவுகள் எடுக்கப்படும். ஜனநாயக முறைப்படி, எங்களோட ஆலோசிக்காம, நீயா எப்படி தன்னிச்சையா முடிவு எடுக்கலாம்..?” — ரேயான் கேட்டான்.

”அதானே..! நான் இப்படித்தான் கங்கணாவை விட மிக அற்புதமா உள்ள ஒரு பெண்ணைத் தேடி கண்டுபிடித்து, அவளிடம் என் வாழ்வை ஒப்படைச்சு, நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தேன்..! டார்க் டெமான்ஸ் இயக்கத்துக்கு இரட்டை தலைமை தேவை.” –தினேஷ் கூறினான்..

”அடப் போங்கடா..! வேலையே வேண்டாம்னு சொல்றேன். அந்த கங்கணா மூஞ்சியைக்கூட பார்க்க வெறுப்பாயிருக்கு. நான் கிளம்பறேன். உடனடியா ராஜினாமா கடிதத்தை பிரதீப்புக்கு அனுப்பறேன்.” –தீர்மானத்துடன் நடந்தான, ஆதர்ஷ்.

பிரதீப்பின் அறையில் நின்றிருந்தாள், கங்கணா ஆனந்த்.

“நான் உங்ககிட்டே இண்டெர்வ்யூ போதே சொல்லிட்டேன். கங்கணா ! என் அப்பா, சேர்மன் பதிவியிலிருந்து விலகின உடனே சிஈஓவா அமர்த்தப்பட்ட போறீங்கன்னு. உங்களோட ப்ரொஃபைல் நல்ல இருந்தது. உங்க தேர்தல் கணிப்பு சரியாக இருந்தது,. எல்லா ஆஃபிஸ்லயும், சிஈஓ பதவின்னா Chief Executive Ofiicer. ! ஆனால் நம்ம ஆபிஸ்ல மகாட்டும், சிஈஓ அப்படினா, CREATIVITY EXECUTIVE OFFICER. ஆதர்ஷ், கார்த்திக், தினேஷ், ரேயான் நான்கு பேருமே, மிக சீப்பா நடந்துக்கிட்டாலும், நீங்கள் அவங்களை லட்சியம் செய்யாம, உங்கள் குறிக்கோளை நிறைவேத்திடீங்க. அதற்காக உங்களுக்கு வாழ்த்துகள்.”

”தாங்க் யு, மிஸ்டர் பிரதீப்..!” – என்று கதவை நோக்கி நகர்ந்தவளை, அவனது குரல் தடுத்து நிறுத்தியது.

”மிஸ் கங்கணா..! இப்ப நீங்க சிஈஓ ஆகிட்டதை தெரிஞ்சா, நான்கு பேரும், உடனே ராஜினாமா செஞ்சுட்டு, தங்களோட ஊரைப் பார்க்க கிளம்பிடுவாங்க. ஒரு பெண்ணின் தலைமையில் அவங்க வேலை செய்யறதை கொஞ்சம்கூட விரும்பலை. இருந்தாலும். அவங்க நாலு பேருமே ஒருவித திறமைசாலிங்க. அவங்களை இந்த கம்பெனி இழக்கக்கூடாது. எப்படியாவது அவங்களை சமாதானப்படுத்தி, வேலையில தொடர வைக்கணும். Neither can we pamper them and make them stay here nor can we afford to lose them. இது ஒரு ட்ரிக்கி சிச்சுவேஷன்..! அவங்களை திறமையா நீங்க சமாளிக்கணும். ”

பிரதீப் சொல்ல, தலையசைத்தாள் கங்கணா. ”நான் என்னால் ஆன முயற்சிகளைச் செய்யறேன், மிஸ்டர் பிரதீப்..!” –என்றபடி வெளியேறினாள், கங்கணா.

வீட்டுக்கு புறப்படுவதற்குத் தயாரான பிரதீப் எழுந்து, ஒரு முறை கைவிரல்களை சொடுக்கி, கைகளைத் தலைக்கு மேலாக உயர்த்தி சோம்பல் முறித்தபோது, சரியாக உள்ளே நுழைந்தனர், டார்க் டெமான்ஸ்.

“குட்பை பிரதீப்..! எப்படியாவது கங்கணாவை சிஈஓ ஆக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு, செயல்பட்டு ஜெயிச்சுடீங்க. உங்களை மாதிரி, பெண்களுக்கு ரெட் கார்பெட் விரிச்சு சாமரம் போடறவங்களாலதான், எங்களை மாதிரி இளைஞர்களை பெண்கள் கிள்ளுக்கீரையா நினைக்கிறாங்க. உங்க டிரினிட்டி டிவில எங்களுக்கு வேலை பார்க்க இஷ்டம் இல்லை. உங்க வேலையை நீங்களே வச்சுக்கங்க. என்னைக் கேட்டால், இனிமே பெண்களாகவே வேலைக்கு தேர்ந்தெடுங்க. எங்களை மாதிரி ஆளுக்கு வேலை தரேன்னு ஐவாஷ் செஞ்சுட்டு, பிறகு அவமானப்படுத்தாதீங்க..!” –வன்மத்துடன் கூறிய ஆதர்ஷ், ராஜினாமா கடிதாசியை, பிரதீப்பின் மேஜை மீது கிடாச, தொடர்ந்து மற்ற மூவரும் தத்தம் ராஜினாமாக் கடிதங்களை, மேஜை மீது எறிந்தனர்.

”விடுதலை… விடுதலை.. விடுதலை…! இனிமேல் கங்கணாவாவது சஞ்சுவாவது…!”

இவர்கள் பிரதீப்பின் அறையை விட்டு சென்றபோது, சஞ்சு வீட்டுக்குச் சென்று விட்டிருந்தாள். தினேஷ் ஆவேசத்துடன் அவள் சீட்டிற்கு சென்று, மேஜை மீது இருந்த பூச்சாடி, போட்டோக்கள், பைல்கள் எல்லாவற்றையும் தள்ளி விட்டான்.

”வேலையை ராஜினாமா செஞ்சாச்சு. கடைசி நாள், ஹோட்டல் பார்ட்டி, நைட் ஷோ னு என்ஜாய் செய்யலாம்..!” –கார்த்திக் யோசனை கூற, நால்வர் அணியினர் அன்றைய இரவை ஜாலியாகக் கழித்துவிட்டு, தங்கள் லைலா மஜ்னு குடியிருப்புக்குத் திரும்பினர்.

காலையில் அவர்களது குடியிருப்பின் கதவை பலமாக யாரோ தட்ட, நண்பர்கள் பதைபதைத்து எழுந்தனர். ரேயான் தூக்கக் கலக்கத்தில் எழுந்து சென்று கதவைத் திறக்க, ஒரு இன்ஸ்பெக்டரின் தலைமையில் நான்கைந்து காஸ்டபிள்கள் வெளியே நின்றிருந்தனர்.

”எஸ்..! என்ன வேணும்..?” –ரேயான் கேட்டான்.

”நீங்க டிரினிட்டி டிவியில வேலை பாக்கறீங்களா..?” –இன்ஸ்பெக்டர் கேட்டார்.

”எஸ்..! நேற்றைக்கு வரைக்கும் வேலை பார்த்துகிட்டு இருந்தோம். இன்னைக்கு இல்லே…! எதுக்கு கேட்கறீங்க..?”

”டிரினிட்டி டிவியில புதுசா வாங்கியிருக்கிற கேமராக்கள், ட்ரைபாட் எல்லாம் மிஸ்ஸிங் ஆகியிருக்கு..! நீங்க எடுத்துப் போயிருக்கக் கூடும்னு, உங்க ஆபிஸ் சிஇஓ சந்தேகப்பட்டு புகார் கொடுத்திருக்காங்க..! உங்க வீட்டைச் சோதனை போடணும். கான்ஸ்டபிள்ஸ்,…. உள்ளே போய் சர்ச் பண்ணுங்க..!” –இன்ஸ்பெக்டர் கூற, கான்ஸ்டபிள்கள் உள்ளே பாய்ந்தனர்.

”வாட் நான்சென்ஸ்..! நாங்க எதுக்கு எடுக்கப் போறோம்..?” –ஆதர்ஷ் கோபத்தில் கத்தினான்.

”திடீர்னு நாலு பேரும் ஒண்ணா ரிசைன் பண்ணினீங்கன்னா, ஏதோ திருட்டுத்தனம் பண்ணியிருக்கக் கூடும்னுதானே அர்த்தம்.?. தேடுங்கய்யா!” –இன்ஸ்பெக்டர் சொல்ல, தினேஷ் கட்டிலின் அடியில் இருந்து, நான்கைந்து கேமராக்கள், ட்ரைபாட் ஸ்டான்ட், லைட் என்று கான்ஸ்டபிள் ஒருவர் வெளியே எடுத்தார்.

”இன்ஸ்பெக்டர் சார்..! நாம தேடறது… இதோ இங்கே கிடைச்சிருக்கு..!” –ஏட்டு கூறினான்.

”இதுக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது..! அது எங்க கட்டிலின் கீழே எப்படி வந்ததுன்னு தெரியாது..!” –தினேஷ் அலறினான்.

”அதெல்லாம் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க..! எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, நாலு பேரையும் அரெஸ்ட்பண்ணி, அவங்க ஆபிஸ்க்கு இழுத்துக்கிட்டு வாங்க..! அந்த சிஈஓ அம்மாவை வச்சுக்கிட்டே விசாரணையை மேற்கொள்வோம்..!” –இன்ஸ்பெக்டர் கூறினார்.

”எப்படிடா.. இது சாத்தியம்..?” — நண்பர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக்கொண்டிருக்க, போலீஸ் அவர்களை வெளியேற்றி அழைத்துச் சென்று கொண்டிருக்க, சரியாக லிப்டில் வந்து இறங்கினார் மாத்ருபூதம்.

இடது கையில் மல்லிகைச் சரத்தைச் சுற்றிக்கொண்டு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன், டார்க் டெமன்ஸை பார்த்தார், பூதம்.

“காதல் ராஜ்ஜியம் எனது.

அந்த காவல் ராஜ்யம் உனது.”

என்று பாடியபடி செல்ல, சட்டென்று புரிந்து போனது, ஆதர்ஷுக்கு.

”அடேய்..! அந்த கங்கணா இந்த பூதத்துகிட்டே காதல் வசனம் பேசி, அதை சரிக்கட்டி, அதன் மூலமா இந்த ஆபிஸ் ஐட்டம்களை நம்ம ரூம்ல வச்சு நம்மை மாட்ட விட்டுட்டாடா..! நம்மளைப் பழி வாங்க, அவ போட்ட திட்டம்..!” –ஆதர்ஷ் கூற, மற்றவர்கள் ஸ்தம்பித்து நின்றனர்.

–மோதல் தொடரும்…

One thought on “கால், அரை, முக்கால், முழுசு | 10 | காலச்சக்கரம் நரசிம்மா

  1. பசங்க தோத்துட்டே இருந்தாலும் சுவாரஸ்யமாத்தான் இருக்குது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!