தலம்தோறும் தலைவன் | 7 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 7 | ஜி.ஏ.பிரபா

திருமுதுகுன்றம் ஸ்ரீ பழமலைநாதர்

மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர்

வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்

ஆனந்தம் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே

ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம்.

–திருவாசகம்

முக்தியை விரும்பாதோர் யார்?

அமைதியான, நிம்மதியான மரணமே மனிதர்கள் விரும்புவது.

மரணமில்லாப் பெருவாழ்வு என்று கூறுவதும் வாழும் நாள் வரை இறை சிந்தனையில் மூழ்கி, இறை நாமத்துடன் கழித்து, அந்த இறை சக்தியுடனேயே ஒன்றி விடுவது.

ஈசனை நினைத்தாலே வளமான வாழ்வும், இறை முக்தியும் கிடைக்கும். சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் என்றும் இல்லை என்பது வேத வாக்கு. எத்தனை இடர்கள் வந்தாலும் உன்னையே கை தொழுவேன் என்கிறார் சம்பந்தர்.

இடரினும், தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன்கழல்

தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சினை

மிடறினில் அடக்கிய வேதியனே”

என்கிறார்.

உலகத்து உயிர்களை காக்கும் பொருட்டு அமிர்தம் கடையும் போது பாற்கடலில் தோன்றிய நஞ்சை தான் விழுங்கி நீலகண்டன் என்னும் பெயர் பெற்ற ஈசன், அய்யனே என்றால் ஓடி வராமல் இருப்பாரா?

காசியில் இறப்பவர்க்கு காதில் ராமநாமம் சொல்லி ஈசன் முக்தி அளிப்பார். அதேபோல் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்தில் இறந்தவர்களை ஈசன் தன் தொடையில் கிடத்தி, மந்திர உபதேசம் செய்ய, இறைவி தன் முந்தானையால் விசிறி இளைப்பாற்றுகிறாள் என்பது கந்த புராணம் சொல்லும் செய்தி.

தூசினால் அம்மை வீசத் தொடையின் மேற் கிடத்தித் துஞ்சும்

மாசிலா உயிர்கட்கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி

ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த காசியின்

விழுமிதான் முதுகுன்றம் வரையும் கண்டான்”

என்கிறது கந்த புராணம்.

இறைவன் பழமலை நாதர், விருத்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மணிமுத்தாறு, அக்கினி, குபேர சக்கர தீர்த்தங்கள் இங்கு புனிதமாக கருதப்படுகிறது.

சுந்தரர் பரவை நாச்சியாரைத் திருமணம் செய்து கொள்ள, இத்தலத்து ஈசனிடம் பொருள் பெற்று அதை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக் கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.

இங்கு ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் என்று அமைந்து ஆலயத்திற்குச் சிறப்பு சேர்க்கின்றது. இங்குள்ள பாதாள விநாயகரை வேண்டினால், தீமைகள் அனைத்தும் விலகும். கணபதியின் அறுபடை வீடுகளில் திருமுதுகுன்றம் இரண்டாவது.

இங்கு இறைவி பெரியநாயகியின் சன்னதி தனிக் கோவிலாக முதல் பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் தல விருட்சமான வன்னி மரம் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது.

சைவ சமயத்தில் இருபத்தி எட்டு ஆகமங்கள் உள்ளன. இருபத்தி எட்டு லிங்கங்களாக முருகப் பெரூமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கோவிலின் வடமேற்குப் பகுதியில் தனிச் சன்னதியில் அமைந்துள்ளது. இந்த லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் நடுவில் முருகன், வள்ளி தெய்வானையுடனும் காட்சி அளிக்கின்றனர்.

அத்தனை லிங்கங்களின் பெயர்களும் மேலே பொறிக்கப்பட்டுள்ளன. எனவே இக்கோயிலை ஆகமக் கோயில் என்றும் அழைக்கின்றனர். சுந்தரர் இறைவன் மேல் பதிகம் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார்.

பொன் செய்த மேனியினீர் புலித் தொலை அரைக்கசைத்தீர்

முன் செய்த மூவெயிலும் மெரித் தீர்முதுகுன்றம ர்ந்தீர்

மின் செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன முகப்பே

என்செய்தவாறு அடிகேள் அடியேன் இட்டளங்கெடவே”– என்று பாடுகிறார்.

ஆதியில் இந்த மண்ணுலகை பிரம்மன் படைக்க விரும்பியபோது சிவபெருமான துதித்து வணங்கினார். அப்போது ஈசன் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே மற்ற மலைகள் தோன்றின. எனவே இது முதலில் தோன்றிய மலை என்பதால் பழமலை என்றும், ஈசன் பழமலை நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

காசியைப் போலவே திருமுதுகுன்றமும் முக்தி தலம். இங்குள்ள மணி முத்தாற்றில் நீராடி ஈசனை வழிபட்டால், காசியில் விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது தொன் நம்பிக்கை. காசியை விட வீசம் புண்ணியம் அதிகம் என்பது சொல்மொழி.

ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசி பிரம்மோற்சவம் போன்றவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தி. இங்கு பௌர்ணமி கிரிவலம் மிகச் சிறப்பு. ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் பழமையானது. ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது.

ஈசனின் தலங்களில் ஆயிரத்து எட்டு முக்கியமானவை. அதில் நான்கு மிகச் சிறப்பு வாய்ந்தது. அதில் ஒன்றுதான் விருத்தாசலம். விருத்த என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. எனவேதான் பழமலை விருத்தாசலம் என்று அழைக்கப்படுகிறது. தேவாரப் பதிகங்களில் திரு-முது-குன்றம் என்னும் சிறப்பு அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. பழமலை நாதரை வணங்கினால் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயும் தீர்கிறது. கல்யாணம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், நோய் என்று எந்தப் பிரார்த்தனைகள் செய்து கொண்டாலும் அது நடக்கிறது.

ஈசனுக்கு நல்லெண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம்,சந்தனம், பன்னீர், திருநீறு இவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இது தவிர வஸ்திரங்கள் சாற்றியும் வழிபடுகிறார்கள்.

முருகப் பெருமான் அமைத்த ஆகம லிங்கங்களுக்கு மேலே சக்கரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. எனவே இங்கு இறைவனை பிரார்த்தனை செய்தால் சகல வளங்களும் கிடைக்கும்.

இங்கு எல்லாமே ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. இறைவனுக்கும் ஐந்து நாமங்கள். விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர், விருத்தாலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.

அதேபோல் விநாயகர் ஐந்து, மூர்த்தங்கள் ஐந்து, ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், ஐந்து கொடிமரம், ஐந்து உல் மண்டபம், ஐந்து வெளி மண்டபம், ஐந்து வழிபாடுகள், ஐந்து தேர், என்று அனைத்தும் இங்கு ஐந்தாக உள்ளது.

ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப்

படைத்த பொருளெல்லாம் உமையாளுக்கோ மாட

மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில் தவழ

சோலை சூழ் முதுகுன்றாரே

என்கிறது சுந்தரர் பதிகம்.

ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்தர விழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் வேண்டி ஒவ்வொரு தளமாகச் சென்றார். அப்போது பழமலையில் ஈசன் பன்னிரண்டாயிரம் பொன் தந்தார். செல்லும் வழியில் கள்வர் பயம் இருந்ததால் பொன் அனைத்தையும் இங்குள்ள மணி முத்தாறில் போட்டு, இறைவன் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார்.

இதை அடிப்படையாகக் கொண்டே ஆற்றிலே போட்டு, குளத்திலே எடுத்தல் போல் என்று சொல்மொழி ஏற்பட்டது. இறைவன் அளித்த பொன் சுத்தமானதா என்று சுந்தரருக்கு சந்தேகம் எழவே, ஈசன் இங்குள்ள தும்பிக்கையானை சாட்சி வைத்து, பொன்னை மாற்றுரைத்துக் காட்டினார். எனவேதான் இங்கு உள் சுற்றில் அமைந்துள்ள விநாயகர் மாற்றுரைத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

விபசித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில் இது. மற்ற சிவத் தலங்களில் துர்க்கை அம்மன் சிவன் கோவிலில் ஆட்சி செய்வதாக அமைந்திருக்கும். ஆனால் இங்கு துர்க்கை, விருத்தாம்பிகையின் வடக்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் அருள் ஆட்சி செய்வது பழமலயின் சிறப்பு.

ஒருமுறை உலகம் அழிந்த பொது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடினார். இங்கு அவர் சந்தோஷத்தில் ஆடினார் என்கிறார்கள். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் நான்கு வேதங்களே நான்கு தூண்களாக அமைந்துள்ளன.

தல விருட்சமாக விளங்கும் வன்னி மரம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது. விபசித்து முனிவர் திருப்பணியின் பொது தன் வேலையாட்களுக்கு, இம்மரத்தின் இலைகளைச் சம்பளமாகத் தருவார். அவரவர் செய்த வேலைகளுக்கு ஏற்ப, அது பொற்காசுகளாக மாறும்.

மணிமுத்தாறு நதியில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால் அது கல்லாக மாறி நதியின் அடியிலேயே தங்கி விடுவதாக புராணங்கள் கூறுகிறது.

கர்நாடக மன்னன் ஒருமுறை இத்தலத்தின் சிறப்பு பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தபோது பசியால் வருந்தினான். அப்போது அம்பிகை இளமை வடிவெடுத்து அவனுக்கு பாலூட்டி குமார தேவர் என்றும் பெயர் சூட்டினாள் என்று ஒரு வரலாறு கூறுகிறது.

இத்தலத்து முருகனைப்பற்றி அருணகிரிநாதர் மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்று மூவராலும் பாடப்பட்ட தலம் பழமலை. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

ஈசனே என்றால் இறைவன் உடனே ஓடி வருவார். அடியார்களின் குரல் கேட்டு உடனே ஓடி வருபவன் அய்யன் என்பார்கள். அந்த இறைவனே தன் அடியவர்களின் இறப்பின் பொது தன் நாமத்தை ஓதும் சிறப்பு பெற்றது திருமுத்து குன்றம்.

அங்கு செல்ல முடியாதவர்கள், பழமலை நாதா என்றாலே போதும் பறந்தோடி வருவான் ஈசன் விருத்தகிரீஸ்வரன்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

1 Comment

  • திருமுதுகுன்றம் தலத்தின் சிறப்புகளை தெளிவாகவும் அழகாகவும் சொல்லியது சிறப்பு! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published.