கோமேதகக் கோட்டை | 9 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
பருந்துவடிவில் இருந்த வித்யாதரன் பறக்கும் பாயின் மீதமர்ந்து பறந்து செல்கையில் தன்னை ஒரு பருந்து துரத்தி வருவதைக் கண்டான். ஒரு நிமிடம் கண்முடி தியானித்தான். அப்போது அவன் கண்களுக்கு துரத்தி வருவது பருந்து இல்லை! ஒரு சூனியக்காரி என்பது தெரிந்துவிட்டது. அவளது நோக்கமும் அவனுக்குப் புரிந்துவிட்டது.
தன்னிடம் இருக்கும் இந்த மந்திரப் பாயை பறிக்கத்தான் அவள் துரத்தி வருகின்றாள் என்பதை உணர்ந்த அவன் அந்த சூன்யக்காரிக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பருந்து வடிவில் இருக்கும் தான் எப்படி அவளுக்கு சம்மாகப் போரிட முடியும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தான். தற்சமயம் இந்த சூனியக்காரியை ஏமாற்றிவிட்டு தப்பிப்பது ஒன்றே சிறந்தவழி! மற்றொரு சந்தர்ப்பத்தில் இவளை கவனித்துக் கொள்ளலாம் என்று தப்பிக்கும் வழி பற்றி யோசித்தான்.
கீழே குனிந்துபார்த்தான். அங்கே ஓர் ஆறு பாய்ந்துகொண்டிருந்தது அதில் படகில் மீனவர்கள் வலைவீசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பிடித்த மீன்கள் படகில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படகுக்கு நேர் கீழே பறந்த பருந்து உருவத்தில் இருந்த வித்யாதரன் அப்படியே படகினுள் வீழ்ந்தான். வீழ்ந்த வேகத்தில் பருந்திலிருந்து மீனாக மாறி துள்ளி ஆற்றினுள் குதித்து படகிற்கு இணையாக நீந்த ஆரம்பித்தான்.
பறக்கும் பாயில் பறந்து கொண்டிருந்த பருந்து கண நொடியில் ஆற்றில் விழுந்து மாயமாகிப் போனதைப் பார்த்து சூனியக்காரி அதிர்ந்து போனாள். பருந்தாக இருந்த வித்யாதரன் ஆற்றில் குதித்தான். ஆனால் அந்த பறக்கும் பாய் அது எங்கே போயிற்று..? பருந்து வடிவில் இருந்த சூனியக்காரி படகிற்கு மேலே பறந்து படகினுள்ளே தேடிப்பார்த்தாள். அங்கே செத்த பருந்து மட்டுமே கிடந்தது. அவள் ஏமாற்றம் அடைந்தாள். மந்திரப்பாய் எங்கே போயிருக்கும்..? அவள் யோசித்தாள். விடை கிடைக்காது ஏமாற்றத்தில் ஆத்திரப்பட்டாள்.
அப்போது அவளுக்கு ஆபத்து இன்னொரு வடிவில் வந்தது. ஆற்றங்கரையோரமாக வந்த வேடன் ஒருவன் தாழப் பறக்கும் அந்த பருந்தைப் பார்த்து குறி வைக்க சூனியக்காரி பதை பதைத்துப் போனாள்.
வேடனிடமிருந்து தப்பிக்க சட்டென்று உயரே பறந்து காணாமல் போனாள். வேடனும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.
ஆமாம், அந்த மந்திரப் பாய் எங்கே போயிற்று..? மீனாக மாறிய வித்யாதரன் வாயில் மந்திரப்பாயை கவ்வியபடி ஆற்றின் ஆழத்தில் நீந்திக் கொண்டிருந்தான். படகின் பின்புறம் வலை வீசியிருந்தார்கள். அந்த வலையில் சிக்காது அவன் சில மணி நேரங்கள் நீந்தினான்.
சிறிது நேரம் கடந்தபின் மீனவர்கள் வலையை மேலே இழுக்கும் சமயம் அந்த வலையினுள் தானாகச் சென்று சிக்கிக் கொண்டான். மீனவர்கள் வலையை மேலே இழுத்து சிக்கிய மீன்களை படகில் கொட்டினார்கள். “ஏய், மீன் வலையிலே இது என்னமோ புதுசா பாய் ஒண்ணு சிக்கியிருக்குண்ணே!” என்று ஒருவன் கத்தினான்.
”நம்ம குழந்தைங்க விளையாட உதவும்! எடுத்து காயப் போடு!” என்று தலைவன் உத்தரவிட அதை மேல் தளத்தில் காய வைத்தான் ஒருவன். மீனாக மாறிய வித்யாதரன் மீன்களோடு மீனாக குவியலில் இருந்தான். அவனுக்கு மூச்சுத்திணறியது. வலையில் சிக்கிய உடனேயே கூடுவிட்டு பாயும் மந்திரம் உச்சரிக்க ஆரம்பித்து இருந்தான். இன்னும் சில நொடிதான் அவன் உருமாற…
அந்த மீன் கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறக்கும் தருவாயில் அங்கே மீன் குவியலோடு இறந்து கிடந்த பருந்து உயிர்பெற்று எழுந்தது. அதன் கண்கள் மந்திரப் பாயைத் தேடியது.
மெல்லப் படகின் மேல் பறக்க ஆரம்பித்தது பருந்து.
”அண்ணே! அண்ணே ஒரு பருந்து மீன்களை குத்திட்டு போக வருது!” கூட்டாளி ஒருவன் கத்த…
”போகட்டும் விடுடா..! அதுதான் இம்புட்டு மீன் சிக்கியிருக்கே..! அதுல ஒண்ணு ரெண்டு போனா குறைஞ்சு போகாது..!” தலைவன் பதில் சொல்லிவிட்டு படகைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினான்.
படகின் மீது பருந்தின் கண்களில் பறக்கும் பாய் தென்பட, ”பாயே..! பாயே..! பறந்து வா..! பறந்து என்னை இருப்பிடத்தில் சேர்த்து வா..!” என்று மெல்ல முணுமுணுத்தான் வித்யாதரன்.
அடுத்த நொடி அந்தப்பாய் அப்படியே மேலெழும்பியது..!
”அண்ணே..! அண்ணே..! பாய் பறக்குதுண்ணே..!”
“விளையாடாதேடா..! பாய் எப்படிடா பறக்கும்?”
”நான் பொய்யா சொல்றேன்..? பறக்குதுண்ணே..! இதோ வந்து பாருண்ணே..!”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உயரே கிளம்பிய பாய் பருந்தின் அருகே சென்றது. பருந்து பாயின் மீது அமரவும் பாய் வேகமெடுத்து கிளம்பியது.
பாய் பறந்த்தையும் அதில் பருந்து அமர்ந்து செல்வதையும் அந்த மீனவர்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ”அண்ணே, அது மந்திரப் பாய் போல இருக்கு..! அதான் பறக்குது..!” ஒருவன் சொல்ல,
”ஆமாடா..! இப்ப வந்து சொல்லு..! முதல்லேயே தெரிஞ்சிருந்தா பத்திரமா சுருட்டி மடியிலே கட்டி வைச்சிருப்பேன் இல்லே..! இப்போ கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாம போயிருச்சு..!” என்று முறைத்தான் தலைவன்.
”எனக்கெப்படிண்ணே தெரியும் அது மந்திரப் பாயுன்னு.? ஏதோ குட்டியா அழகா வலையிலே மாட்டுச்சேன்னு எடுத்து வெயில்லே காய வைச்சேன்..! அது பறக்கும்னு நான் கண்டேனா..?” சோகமாக பதில் சொன்னான் கூட்டாளி.
“போடா! முட்டாள்! ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோம்..! இந்த பாயை எடுத்துப் போய் நம்ம ராஜா கிட்டே கொடுத்திருந்தா நமக்கு நிறைய சன்மானம் கொடுத்திருப்பார்..!” என்ற மீனவத் தலைவன் அந்த பாய் பறந்து போவதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அது கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் கண்களை விட்டு மறைந்தது.
அதே சமயம் வேடுவன் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்த சூனியக்காரி தன் இருப்பிடம் சென்று சேர்ந்தாள். சுய உருவம் அடைந்தாள். வித்யாதரனும் அந்த மந்திரப் பாயும் தன் கை விட்டுப் போய்விட்டதே என்ற கோபம் அவளுக்கு கொழுந்துவிட்டு எரிந்தது.
எப்படியாவது வித்யாதரனிடம் இருந்து அந்த மந்திரப்பாயை கைப்பற்ற வேண்டும். எப்படி தன் கண்களை ஏமாற்றி அந்த வித்யாதரன் தப்பி இருப்பான்..? அவ்வளவு எளிதில் என்னை ஏமாற்றி விட்டான் என்றால் அவன் பலே கில்லாடியாக இருப்பான் தான் போல..!
அவன் எப்படிப்பட்ட ஜாம்பாவனாக இருந்தாலும் இந்த சூனியக்காரியிடம் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் தப்பிக்க முடியாது. இன்று ஏதோ அவனுடைய நல்ல நேரம்… தப்பிப் பிழைத்துவிட்டான். இது எல்லா நாளும் அவனுக்கு அமையாது. எப்படியிருந்தாலும் என்றாவது ஒருநாள் அவனை மடக்கிப் பிடித்து அவனிடமிருந்து அந்த மந்திரப் பாயை அபகரிக்காமல் விடமாட்டேன்..! என்று கர்ஜித்தாள் அவள்.
பின்னர் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள். ‘சூர்ப்பனகா..! ஆவேசப்படாதே..! நிதானத்தை இழக்காதே..! நிதானம் இழந்தவன் எளிதாகத் தோற்றுவிடுவான்..! நீ தோற்கப் போகிறாயா..? இல்லை..! இந்த உலகத்தை வெல்லப் பிறந்த வெற்றித் திருமகள் நீ..! வீணாக ஆத்திரப்ப்பட்டு விவேகம் இழக்காதே..! இப்போது என்ன செய்யலாம் என்று யோசி..! அந்த வித்யாதரன் எப்படித் தப்பி இருப்பான்..? அதை கண்டுபிடி..! பின்னர் அவன் எங்கிருக்கிறான் என்பதையும் கண்டுபிடி..! அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் அப்புறம் அந்த பாய் உன் கைப்பிடியில் சிக்கிவிடும்..! வீணாக ஆத்திரப்படாமல் ஆக வேண்டியதைப் பார்..!’ தனக்குத்தானே பேசிக்கொண்டாள் சூர்ப்பனகா.
பின்னர் அங்கே இருந்த குகைக்குள் நுழைந்து மந்திரக் கண்ணாடி முன் அமர்ந்தாள்.
‘மந்திரக் கண்ணாடி..! மாயக் கண்ணாடி..! வித்யாதரன் எப்படி தப்பித்தான்..? எனக்குக் காட்டு..! மந்திரக் கண்ணாடி மாயக்கண்ணாடி வித்யாதரன் எப்படி தப்பித்தான் எனக்குக் காட்டு..! மந்திரக் கண்ணாடி மாயக் கண்ணாடி வித்யாதரன் எப்படி தப்பித்தான்? எனக்குக் காட்டு.’ என்று மூன்று முறை தன் மந்திரக் கோலை கண்ணாடி முன் மூன்று முறை உயர்த்தி இட வலமாகவும் வல இடமாகவும் சுழற்றினாள்.
உடனே அந்த கண்ணாடியில் டீவி போல் காட்சிகள் ஓடியது. ஆற்றில் படகு சென்று கொண்டிருக்க வித்யாதரன் பருந்து வடிவில் இருந்து படகில் விழுந்து மீனாக மாறி ஆற்றில் குதிப்பது அந்த கண்ணாடியில் காட்சிகளாகத் தெரிந்தது.
‘வித்யாதரா..! என்னிடமா உன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் காட்டுகிறாய்..? அந்த வேடன் மட்டும் என்னை குறி வைக்காவிட்டால் உன்னை ஒருவழி பண்ணியிருப்பேன். உன் நல்ல காலம்..! நீ ஏமாற்றி தப்பித்து விட்டாய்..! விடமாட்டேன்..!’ என்று சூளுரைத்தாள்.
மீண்டும் கொஞ்சம் கோபம் தணிந்து மந்திரக்கோலால் மூன்று முறை வல இடமாய் கண்ணாடி முன் சுழற்றி மந்திரக் கண்ணாடி மாயக்கண்ணாடி வித்யாதரன் தற்போது இருக்குமிடம் காட்டு! என்று மூன்று முறை சொன்னாள்.
மந்திரக் கண்ணாடியில் ஆற்றங்கரை காட்சிகள் மறைந்தது. ஆனால் வேறு எந்த காட்சியும் அங்கே தோன்றவில்லை! சூனியக்காரி மீண்டும் மூன்று முறை வல இடமாய் மந்திரக் கோலை சுழற்றி ”மந்திரக்கண்ணாடி மாயக் கண்ணாடி! வித்யாதரன் இருக்குமிடத்தைக்காட்டு!” என்று மூன்று முறை சொன்னாள்.
ஆனால் கண்ணாடியில் சிக்னல் கிடைக்காத டீவி போல் வெறும் புள்ளிகள் தான் தோன்றியது காட்சிகள் ஏதும் தோன்றவில்லை! இப்போது கோபமாய் இட வலமாய் மந்திரக் கோலை ஆட்டி மாயக் கண்ணாடி ஏன் வித்யாதரன் இருக்குமிடத்தைக் காட்டவில்லை! பதில் சொல்லு! என்று கேட்டாள்.
“சூர்ப்பனகா..! வித்யாதரன் இப்போது நம் பார்வைக்கு எட்டாத தொலைவுக்குச் சென்றுவிட்டான். அங்கே உன் மந்திரங்கள் பலிக்காது அவன் இருப்பிடத்தை இப்போது காட்சிப்படுத்த முடியாது. அவன் நம் எல்லைக்குள் வந்தால் காட்சிப்படுத்துகிறேன்” என்றது மாயக்கண்ணாடி.
‘ச்சே..! அதற்குள் அவ்வளவு தூரம் சென்றுவிட்டானா..? அவன் எங்கு சென்று இருப்பான்..?’
அங்கே இருந்த ஓர் அம்மன் சிலை முன் அமர்ந்த சூர்ப்பனகா தன் எதிரே இருந்த ஓர் தட்டில் கொஞ்சம் விபூதியைப் பரப்பினாள். அதில் ஏதோ கோலம் போல ஒன்றை வரைந்தாள். அதன் நடுவே சிறிது கற்பூரத்தை ஏற்றி வைத்து தியானத்தில் அமர்ந்தாள். அவள் உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரித்தன. முதலில் மெதுவாக இருந்த உச்சாடனம் நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. ஓர் அரை மணி நேரம் சென்றது அப்போது அவள் முன் எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் இருந்து ஒரு சிறு பூதம் மாதிரி ஒன்று தோன்றி அவளை வணங்கி நின்றது.
“மாதா..! வணங்குகிறேன்..! ஆணையிடுங்கள்..!“ என்றது அந்த பூத உருவம்.
“பூதகா..! வித்யாதரன் என்பவன் மந்திரப்பாயோடு இந்த வழியே சென்றான். அவனை பிடிக்க முடியவில்லை! அவன் எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என்று கண்டுபிடித்துவந்து விரைவில் என்னிடம் கூறு..! இதை விரைவில் முடிக்க வேண்டும். இது என் ஆணை” என்று உத்தரவிட்டாள்.
“அப்படியே ஆகட்டும் தாயே..! உங்கள் ஆணையை விரைந்து முடிக்கிறேன்..!” என்ற பூதகன் ஒரு நொடியில் மறைந்து போனான்.
“ஹாஹாஹா! வித்யாதரா..! உன்னை விடமாட்டேன்..!” என்று கொக்கரித்தாள் சூர்ப்பனகா!
பூதகனிடம் வித்யாதரன் சிக்கினானா?