கால், அரை, முக்கால், முழுசு! | 8 | காலச்சக்கரம் நரசிம்மா
8. பெண்மைக்கு கல்தா ! ஆண்மைக்கு சல்தா!!
”மிஸ்டர் கார்த்திக்..! தேர்தல் கணிப்பு தொடர்பாக ஆலோசிக்கணும். கம் டு மை ரூம், இம்மீடியட்லி.!” –EXTENSION போனில், கங்கணா அழைக்க, கார்த்திக்கிற்கு, எரிச்சல் ஏற்பட்டது.
”ஹாய் டாமி! கம் ஹியர் !” என்று கூப்பிடுவது போல, இவள் அழைப்பாள், நான் ஓடோடி போக வேண்டுமா..! –என்று யோசித்தவன், ”இப்ப நான் ரொம்ப பிசி..! அப்புறமா பார்க்கலாம்..!” — என்று போனை வைத்துவிட்டு, தனது கேபினை விட்டு, டார்க் டெமன்ஸ் தலைமையகமான ஆதர்ஷ்-ஷின் இருக்கைக்கு சென்றான்.
”ஆதர்ஷ் ! கங்கணா தன்னோட அதிகாரத்தை காட்டத் தொடங்கிட்டா. அவளோட ரூமுக்கு என்னைக் கூப்பிடறா..! தேர்தல் சர்வே பற்றி ஆலோசனை நடத்தணுமாம்..!” –கார்த்திக் கூற, ரேயான் அவனை அலட்சியமாக பார்த்தான்.
”கெட் லாஸ்ட்! -ன்னு சொல்றதுதானே..!”
”அதைத்தான் நாசூக்கா சொன்னேன்… இப்ப முடியாது, அப்புறமா பார்க்கலாம்னு..!” –கார்த்திக் சொன்னான்.
ஆதர்ஷ் தனது மீசையை வருடியபடி அவனை பார்த்தான்.
”கார்த்திக்..! தப்புப் பண்ணிட்டே..! நீ அவள் ரூமுக்கு போய் அவளோட திட்டம் என்னன்னு கேட்ருக்கணும். அவள் இப்படி ஒரு திட்டத்தை வைத்திருக்காள்னு, அதை அதிகாரபூர்வமா சி.இ.ஓ. பிரதீபுக்கு சொல்லிட்டு, அதை நீ நடைமுறைப்படுத்தறதா காட்டிக்கணும். உண்மையில உல்டாவா, திட்டத்தைச் செய்யாம, நீயா ஒரு பிளான் B ஒன்றைச் செயல்படுத்தி அதை நிறைவேற்றணும். தேர்தல் முடிவு வரச்சே, நீ சொல்ற சர்வேதான் நடந்தது, அவள் சொன்னபடி செஞ்சிருந்தா இந்த முடிவு வந்திருக்காதுன்னு பிரதீப் கிட்டே நிரூபிச்சு, அவளை பதவியை விட்டுத் துரத்தணும்.” –ஆதர்ஷ் கூறினான்.
”அப்புறம் நம்ம ஆதர்ஷ்தான் கிரியேட்டிவ் ஹெட்.! நம்ம ஆட்சிதான் அப்புறம்..!!” தினேஷ் கூற, கார்த்திக் யோசித்தான்.
”அப்படினு சொல்றியா..! இப்ப நானா போய் எப்படி கேட்கிறது..? இப்ப முடியாதுன்னு சொல்லிட்டு, போய் நின்னா எப்படி..?”
”உனக்குச் சொல்லியா தரணும்..? ஏதாவது பேசி, அவளோட திட்டம் என்னனு கேட்டுகிட்டு வா..! நாம் அதை சபடாஜ் செய்யணும் இல்லே..!” –ஆதர்ஷ் கூற, கார்த்திக், கங்கணாவின் அறையை நோக்கி நடந்தான்.
அறையின் உள்ளே, சஞ்சனாவோடு பேசிக்கொண்டிருந்தாள், கங்கணா.
”வரமாட்டேன்னு சொன்னீங்க..! வந்து நிக்கறீங்க..! ஒரு வேளை, உங்க நண்பர்கள் உங்களை போகக்கூடாதுனு தடுத்தாங்களோ..?” –கங்கணா காட்டமான குரலில் கேட்டாள்.
”அப்படியெல்லாம் இல்லை..! இந்தம்மா ரூம்ல இருக்காங்கனு கேள்விப்பட்டேன். நாம பேசப்போற விஷயத்துக்கும், எச்.ஆர். டிபார்ட்மெண்டுக்கும் என்ன தொடர்பு..? அவங்க கிளம்பி போனாட்டு வரேன்னு தான் நான் சொன்னேன்..!” –கார்த்திக் சொல்ல, சஞ்சனா கோபத்துடன் எழுந்தாள்.
”ஹவ் டேர் யு கால் மீ அம்மா..?” –என்றவளை, அமைதியாக இருக்கும்படி, கையசைத்து அடக்கினாள், கங்கணா.
”மிஸ்டர் கார்த்திக்..! அவங்களை எதுக்கு இங்கே அழைச்சிருக்கேன்னா, அவங்களும் இந்த் தேர்தல் கணிப்புக்கு உதவப் போறாங்க. எச்.ஆர். டெபார்ட்மெண்ட்தான் நமக்கு சர்வே செய்ய விஷுவல் கம்யூனிகேஷன் ஸ்டுடென்ட்ஸ்-சை வரவழைக்க போறாங்க. அவங்களும் தேர்தல் கமிட்டில இருக்காங்க.” –கங்கணா அவனை முறைத்தாள்.
”சரி..! நான் என்ன செய்யணும்..? சொல்லுங்க..!” –கார்த்திக் சஞ்சனாவை அலட்சியம் செய்தான்.
”நான், நீ என்கிற பேச்செல்லாம், இந்த பெரிய பணியில இருக்கக்கூடாது. நீங்க ஸ்ரீரங்கத்துல இருந்து வந்திருக்கீங்க. அங்கே தேர் ஓடறது நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஓர் ஆளாலே எப்படித் தேரை இழுக்க முடியும் ? ஊர் கூடி இழுத்தாதான் தேர் நகரும். தேர்தல் சர்வேங்கிறது எல்லாரும் சேர்ந்து நடத்தற ஒரு பணி. நான் என்ன செய்யணும்னு கேட்காதீங்க..! நாம் என்ன செய்யப் போறோம்ன்னு கேளுங்க..!”
”ஓர் வுமன் அதிகாரி கிட்டே, ‘நாம் என்ன செய்யணும்’ன்னு கேட்டால், உடனே நோட்டிஸ் விடுவீங்கன்னு எனக்கு தெரியாதா..? எப்படியாவது எங்க மேல ஹராஸ்மென்ட் சார்ஜ் செஞ்சு, நோட்டீஸ்விடப் பார்க்கறீங்க. நாங்க எல்லோரும் கேர்ஃபுல் மேடம்..! ” கார்த்திக் கூற, கங்கணா அதிர்ந்தாள்.
பொதுவாகவே, மைசூரில் இருந்த போது ஆண்கள், இவளிடம் குழைந்துதான் பேசுவார்கள். முதல் தடவையாக நான்கு ஆண்கள், இவளை மதிக்காமல், பேசுகிறார்கள். பேச்சில் மதிப்பு வேண்டாம். ஆனால் மிதிப்பதை போல, அல்லவா பேசுகிறார்கள். பெண்கள் மீது அத்தனை வன்மமா..?
அமைதியாக கார்த்திக்கின் முகத்தை எடைபோட்டாள், கங்கணா..! நால்வரில் இவன்தான் சற்று மிருதுவான மனதை உடையவனாகத் தோன்றியது அவளுக்கு. ஆதர்ஷின் முகத்தில் அகந்தையும், கோபமும் எப்போதும் தாண்டவமாடின. இவளது கண்களை நோக்கியே அவன் பேசியதில்லை. கூடியவரையில் இவளிடம் பேசுவதைத் தவிர்த்தான்.
ரேயான் உடற்கூறு மொழியிலேயே, பெண்களை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தான். தினேஷைப் பொறுத்தவரையில், பெண்கள் டிஷ்யூ பேப்பர்தான். தேவை என்றால் பயன்படுத்திக்கொண்டு, காரியம் ஆனதும் தூக்கி எறிந்து விடுவான். இந்த கார்த்திக்-தான் சற்று நின்று பேசுகிறான். அவன் காட்டமாக பேசுவதும், நண்பர்களின் போதனையால் இருக்கும்.
பெண்களின் மீது வன்மம் என்கிற வரிசையில், ஆதர்ஷுக்கு முழு மதிப்புகளும், ரேயானுக்கு, முக்கால் மதிப்பெண்களும், தினேஷுக்கு அரை மதிப்பெண்களும், கார்த்திக்கிற்கு கால் மதிப்பெண்களும் கொடுக்கலாம்.
முதலில் இவனை நால்வர் அணியில் இருந்து பிரித்து, நம் பக்கம் இழுத்துக்கொண்டால், ஆபீஸ் பணிகள் சிரமமின்றி நடக்கும் –என்பதை உணர்ந்து கொண்டாள்..!
”மிஸ்டர் கார்த்திக்..! நாம PROFESSIONAL-ஆ பேசுவோம்..! தமிழ்நாட்டு தேர்தல் சர்வே தொடங்கறதுக்கு முன்னாடி, நான் முன்னாடி வேலை பார்த்த டிவி சார்பா போன உபி தேர்தலில், சர்வேல கலந்துக்கிட்டேன். அப்ப ஓர் திட்டத்தை செஞ்சோம். உபியில ஹஸ்தினாபூர் ஓர் தொகுதி. அந்தத் தொகுதியோட சிறப்பு என்னன்னா, அந்தத் தொகுதில எந்த கட்சி ஜெயிக்கிறதோ, அந்த கட்சிதான், மாநிலத்துல ஆட்சி அமைக்கும். எனவே மாநில முழுவதுமா நாங்க சர்வே செஞ்சாலும், நான் அந்தத் தொகுதியில் மட்டும் தனியா சர்வே செஞ்சேன். கடைசியில அந்தத் தொகுதில ஜெயிச்ச கட்சிதான் மாநிலத்துல ஆட்சியை அமைச்சது. இங்கேயும் நாம அதை மாதிரி செய்வோம் ! தமிழ்நாட்டுல இருக்கிற அப்படிப்பட்ட Swing தொகுதி ஒன்றை கண்டுபிடிச்சு, அங்கே தனியா ஒரு சர்வே .எடுக்கலாம். மாணவர்கள் மத்த தொகுதியில் சர்வேக்கள் செய்யட்டும். நாம இருவரும் செய்யற இந்த தொகுதி சர்வே ரகசியமா இருக்கட்டும். நாம டீம் எடுக்கிற சர்வே தவறா இருந்தாலும், ரகசியமா நடத்திய அந்த தொகுதி சர்வே சரியா இருந்ததுனா, டிவிக்கு நல்ல பேர் கிடைக்கும். ஹஸ்தினாபூர் மாதிரி ஒரு தொகுதி தமிழ்நாட்டுல இருக்கானு தேடிக் கண்டுபிடிங்க.” — என்றாள் , சஞ்சனா.
‘மவளே… உபி வேற, தமிழ்நாடு வேற..! அங்கே ஓபிசி- வாக்கு..! இங்கே ஓசி வாக்கு ! ஓசி-யில வாங்கறவங்க வாக்கு..! யார் நிறையா சம்திங் கொடுக்கறாங்களோ அவங்கதான் ஜெயிப்பாங்க..!” –என்று சொல்லப் போன நாவை அடக்கினான்..! கங்கணா அம்மையாரை, கங்கணா அம்மை-யாக பிரதீப் பார்க்க வேண்டுமென்றால், அவளுக்கு ஆப்பு வைக்க வேண்டும். நண்பர்களிடம் இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். –என்று நினைத்த கார்த்திக், ”ஐ வில் டூ இட்..! இன்னும் அரை மணி நேரத்தில் உங்க டேபிள் ல டீடெயில்ஸ் இருக்கும்.” –என்று எழுந்தான்.
தனது திட்டத்தை சொன்னதும், அவன் உடனே ”அப்படியே செய்கிறேன்” என்று எழுந்து நின்றது, கங்கணாவுக்கு மட்டுமல்லாமல், சஞ்சனாவுக்கும் வியப்பை அளித்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் வியப்புடன் பார்த்தனர். இவனை எளிதாக வசப்படுத்தி விடலாம் என்று அவர்களுக்கு தோன்றியது.
கங்கணா-வின் அறையை விட்டு வெளியே கார்த்திக், நேராக நண்பர்களிடம் விரைந்தான்.
கங்கணா கூறிய யோசனையை அவர்களிடம் தெரிவித்தான்.
”உண்மையிலேயே ஹஸ்தினாபூர் போல, ஆட்சியை நிர்ணயிக்கும் தொகுதி ஏதாவது தமிழ்நாட்டில் இருக்கா ..?” –ஆதர்ஷ் கேட்டான்.
”மூணு தொகுதி இருக்கு..! திருச்செந்தூர், திருத்தணி, பழனி..! இந்த தொகுதிகளில் யார் ஜெயிக்கிறாங்களோ அவங்கதான் ஆட்சியை பிடிப்பாங்க. பன்னிரண்டு தடவையில், ஒரு தடவை மட்டும் தப்பியிருக்கலாம். ஆனா, இந்தத் தொகுதிகளில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ, அந்தக் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும்.” –கார்த்திக் சொன்னதும், அனைவரின் முகமும் மலர்ந்தன.
”திருத்தணி, திருச்செந்தூர், பழனியா…? எல்லாம் முருகன் கோவில் இருக்கிற ஊரா இருக்கே ? எனக்கு ஓர் ஐடியா..! இந்த மூணு தொகுதிகளையும் சொல்லாம ஏதாவது ஓர் தொகுதி பெயரை சொல்லு. அந்தாம்மா அங்கே சர்வே எடுக்கட்டும். நாம அசல் சர்வே செஞ்சு பிரதீப்பை இம்ப்ரெஸ் செய்யலாம். அந்தம்மா-வை அப்படியே பர்கூர் வழியா மைசூருக்கு அனுப்பிடலாம்..!” –ஆதர்ஷ் சொன்னான்.
”ஐடியா..! உடனே வேலையில இறங்கு..! ஏதாவது ஒரு ரிமோட் தொகுதி பெயரை கங்கணா கிட்டே சொல்லு..!” –ரேயான் சொல்ல, கார்த்திக், தனது அறைக்கு சென்று, தமிழக சட்டமன்ற தொகுதிப் பட்டியல்களை அறிந்து, ஒரு ஒதுக்குப்புறமான தொகுதியைத் தேர்ந்தெடுத்தான்.
அவன் தேர்ந்தெடுத்த தொகுதி ஜெயலலிதா நின்ற பர்கூர் !
கங்கணா-விடம் பர்கூர் தொகுதியைப் பற்றிய விவரங்களை தந்தான், கார்த்திக்.
”வெரிகுட்..! நீங்க நம்ப டீம் கூட சேர்ந்து மாநிலம் முழுக்க நடக்கற சர்வேயை பார்த்துக்கங்க. நான் பர்கூர் தொகுதியில மட்டும் விசேஷ கவனம் செலுத்தி தனி சர்வே எடுக்கிறேன்..!” –கங்கணா கூறினாள்.
”மைசூரூ ஹோகரத்துக்கு மூட்டை முடிச்சு பேக் மாடு….பேக்கு..!” –என்று அரைகுறை கன்னடத்தில் மனதினுள் கூறிவிட்டு, நண்பர்களிடம் சொல்ல, டார்க் டெமன்ஸ் அணி ஒருவருக்கொருவர் குதூகலத்துடன் கைகுலுக்கினர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது யார் முதலமைச்சர் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. தவறான சர்வே முடிவுகளை கொடுக்கப் போகும் கங்கணா நீக்கப்பட்டு, ஆதர்ஷ் கிரியேட்டிவ் இயக்குனராகப் பதவியில் அமர்த்தப்படப் போகிறான்.
டிரினிட்டி இந்தியா டிவியில் இனி…
கங்கணாவுக்கு கல்தா..! ஆதர்ஷுக்கு சல்தா..!
1 Comment
கங்கனாவா கார்த்திக்கா? யாருக்கு வெற்றி ஆவலில் மூழ்கடித்துவிட்டீர்கள்!