சிவகங்கையின் வீரமங்கை | 12 | ஜெயஸ்ரீ அனந்த்
மயங்கிச் சரிந்த கெளரியை நாச்சியார் தனது மடியில் கிடத்தி, “கெளரி… கெளரி…” என்று கன்னத்தைத் தட்டி கொண்டிருந்த நேரத்தில் அரண்மனை வைத்தியர் அங்கு வந்து கெளரியின் நாடியைப் பிடித்துச் சோதித்தார்.
“பயம் ஏதும் இல்லை. சற்று பதட்டமாகக் காணப்படுகிறாள். அவ்வளவு தான். சிறிது ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்.” என்றார்.
நிம்மதிப் பெருமூச்சு விட்ட நாச்சியார், இளவரசரிடம் திரும்பி, “அத்தான் நடப்பது எதுவும் நல்லதாக தோன்றவில்லை. ஆகவே நாம் அத்தையை ஒரு முறை நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்று காளையார்கோவிலுக்கும் சென்று வரலாம்” என்றாள்.
“ம்… ஆகட்டும் நானே நினைத்தேன். அன்னையையும் ஒரு முறை பார்த்து வரலாம் என்று. சரி, புறப்படுவதற்கு ஆயத்தமாக இரு.” என்றவர் அதற்கான வேலைகளில் துரிதமாகச் செயல்பட்டார்.
“மாமா…. நீங்களும் எங்களுடன் ப்ரான்மலை வருகிறீர்களா? அன்னை அகிலாண்டேஸ்வரியும், அத்தை பாட்டி, உத்திரகோசமங்கையையும் நலம் விசாரித்து விட்டு வரலாம்.” என்றார் இளவரசர் முத்துவடுகநாதர்.
“இல்லை மருமகனே… இங்கு சில வேலைகள் எனக்கு காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் சென்று வாருங்கள். ம்… அப்புறம் தந்தை தனியாக பயணிக்க வேண்டாம். சிவிகையில் அழைத்து செல்லுங்கள்” என்றார்.
“ஆகட்டும் மாமா” என்ற இளவரசர், சசிவர்ணத் தேவரின் இருப்பிடம் சென்றார். அங்கு அவர் சாளரத்தின் வழியாக வானத்தில் தெரிந்த வால் நடாத்திரத்தை பார்த்துக் கொண்டிருந்தவர் இளவரசரின் குரல் கேட்டு திரும்பினார்.
” மகனே எனக்கென்னவோ எனது இறுதி காலம் நெருங்கி விட்டதாகவே உணர்கிறேன். ஆகையால் நீ தான் இனி இந்த ராஜாங்கத்தின் அரசராகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உனக்கும் நாச்சியாருக்கும் விரைவில் திருமணம் நடத்தவும் ஆசைப்படுகிறேன். ஆகையால் இது குறித்து உன் அன்னை அகிலாண்டேஸ்வரியிடமும் அத்தை பாட்டி உத்திரகோசமங்கையிடமும் அனுமதி வாங்க வேண்டும்”
“தந்தையே, நீங்கள் அச்சமுறுவதை போன்று இங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாது. கவலையை விடுங்கள். வாருங்கள் நாம் அன்னையைச் சந்தித்து விட்டு வரலாம்”
அடுத்த சில மணி நேரங்களில் வீரர்கள் புடைசூழ சசிவர்ணத் தேவர் பல்லக்கிலும் வேலு நாச்சியாரும், முத்துவடுகநாதரும் குதிரையிலும் ப்ரான்மலை நோக்கி புறப்பட்டனர். அரண்மனை வாயிலில் கொம்புகள் ஊத, தாரை தப்பட்டைகள் ஒலிக்க ஒரு ஊர்வலம் போல இவர்கள் புறப்பட்டதும், ஊர் மக்கள் சந்தோஷத்துடன் இவர்களுக்கு பூமாரி பொழிந்து “வெற்றிவேல்வீரவேல்” என்று விண்ணை முட்டும் அளவிற்கு ஒலி எழுப்பி வழியனுப்பி வைத்தனர்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே பயணித்த உதிரனும் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.
சசிவர்ணத் தேவரின் பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவனாக சிவக்கொழுந்தும் இவர்களுடன் பயணிக்க, பேச்சுத் துணையாக முத்துவடுகநாதரும் சிவக்கொழுந்திடம் அவ்வப்போது உரையாடிக் கொண்டு வந்தார்.
•
அரபு நாட்டு சலீம் மாலிக், சுமனிடமும் குயிலியிடமும் பேசிக் கொண்டிருப்பதை கண்ட சிகப்பி சற்றே துணுக்குற்றாள். இவன் எதற்கு அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவள் மெல்ல அவர்களின் அருகினில் சென்றாள்.
“இரண்டுமே உயர் ஜாதிக் குதிரைகள் தான். இரண்டுக்கும் சேர்த்து ஐந்து வெள்ளிக் காசுகள் போதும்.” என்றான் சலீம்
“ஓ… பரவாயில்லையே… ஐந்து காசுகளுக்கு இரண்டு குதிரைகளா? அப்படியென்றால் எனக்கு ஐம்பது குதிரைகள் வேண்டும், எத்தனை காசுகளுக்குத் தருவாய்..?” என்று கேட்டான் சுமன்.
நடப்பதனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த குயிலி, சுமனின் அருகினில் சென்றாள். “நாம் என்ன குதிரை வாங்குவதற்கா வந்துள்ளோம்.? நேரத்தை கடத்துகிறாயே.. வந்த வேலை இன்னும் முடியவில்லை நினைவு இருக்கட்டும் ” என்றாள்.
“என்ன வேலை என்பதை நீ இன்னும் சொல்லவில்லை. அவ்வாறு இருக்கையில் வேலை முடிந்து விட்டதா இல்லையா என்பது பற்றி எனக்கு எப்படி தெரியும்?” என்றான்.
அச்சமயத்தில் அங்கு வந்த சிகப்பி, “மன்னிக்க வேண்டும். இவருக்குச் சற்று புத்தி பேதலித்து உள்ளது. இவர் கூறுவதைப் போல இங்கு குதிரைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதில்லை நீங்கள் செல்லலாம் என்றாள்.
“ஓ… அப்படியா? ஆனால் இவரைப் பார்த்தால் புத்தி பேதலித்தது போல் தெரியவில்லையே, ” என்றான் சுமன்.
“பார்த்தால் தெரியாது. பழகினால்தான் தெரியும்.” என்றாள் சிகப்பி.
1 Comment
ஒரு பக்க கதையாக மாற்றிவிட்டீர்களே! இந்த வாரத்தொடரை?!