கால், அரை, முக்கால், முழுசு | 6 | காலச்சக்கரம் நரசிம்மா
‘லைலா மஜ்னு’ ” ஃபிளாட்டின் பஸ்ஸர் ஒலிக்க, கதவின் மேஜிக் ஹோல் வழியாக வெளியே நோட்டம் விட்ட பஞ்சு பரபரப்படைந்தான். .
” ஐயோ ஆபத்து சாரே ! கீழே இருக்கிற ஹவுஸ் ஓனர் மாத்ருபூதம் வந்திருக்காரு. ” — பஞ்சு அலறினான்.
”ஹவுஸ் ஒனர்தானே வந்திருக்காரு ! எமன் வந்திருக்கிற மாதிரி ஏன் கூப்பாடு போடறே ?” — கார்த்திக் கேட்டான்.
” அவரை பத்தி உங்களுக்கு தெரியாது. ! உங்கள் கொள்கைக்கு நேர் எதிரானவர். பெயர் வாத்சாயனர் மாத்ருபூதம். நாங்க செல்லமா பூதம்னு கூப்பிடுவோம். உங்களை இப்பவே எச்சரிக்கை செஞ்சுடறேன் ! பூதத்துக்கு உலகத்துல பிடிச்ச ஒரே விஷயம், பெண்கள்தான். மடோனா, கேட் வின்ஸ்லெட் தொடங்கி, சன்னி லியோன், நயன்தாரா, த்ரிஷா, தொடங்கி சீரியல், நடிகை வரைக்கும் வீட்டுல போட்டோவை கட் பண்ணி ஒட்டியிருக்காரு. சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செஞ்சதுக்கு பத்து நாள் தீட்டு காத்தார் . அவருக்கு பெண்களை யாராவது அவமதிச்சாலோ, காதலை கேவலமா பேசினாலோ பிடிக்காது. இப்படித்தான் அவரோட வாக்கிங் வந்த கிழவர் ஒருத்தர் காதலை பத்தி கேவலமா பேச, அவரை போட்டு அடிச்சு, ட்ரைனேஜ்-ல தள்ளி விட்டுட்டாரு. உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன். அவரு முன்னாடி பெண்களை திட்டாதீங்க. அப்புறம் காலி செய்ய சொல்லி கலாட்டா பண்ணுவாரு !” — பஞ்சு கூற, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
”இப்படியும் ஒரு ஆளா ?” — ரேயான் கேட்டான்.
”பயங்கர சபலானந்தா ! ஃபிளாட் பெயரை பாருங்க! . லவ்வர்ஸ் நெஸ்ட் ! உங்க குடியிருப்பு பெயர், லைலா மஜ்னு ! செகண்ட் புளோர்ல கங்கணா மேடம் குடியிருக்கிற ஃபிளாட் பெயர், ரோமியோ ஜூலியட் ! கீழே பூதம் குடியிருக்கிற ஃபிளாட் பெயர் அம்பிகாபதி, அமராவதி. காதலை பத்தி அவர்கிட்ட தயவு செய்து தப்பா பேசாதீங்க ” — என்று ஆயிரம் எச்சரிக்கைகளை செய்தவுடன், கதவை திறந்தான், பஞ்சு.
மிஸ்டர் பீன் போன்ற முகவெட்டும், அதே உயரம், அதே கோணங்கி தனத்துடன்.உள்ளே நுழைந்தார், மாத்ருபூதம்.
”ஐ ஆம் மாத்ருபூதம். ! யு கேன் கால் மீ பூதம்! . என்னை சுத்தி எப்பவும், இளமை இருக்கணும்! . அதனாலதான் உங்க ஆபிசுக்கு இந்த இடங்களை லீஸ் விட சம்மதித்தேன். என் கண்ணுல எப்பவும் காதல் செய்யற இளம் பையன்களும், பெண்களும்தான் தென்படணும். பெரிசுகளை கண்ணால கூட பார்க்க மாட்டேன். ” –பூதம் கூறினார்.
”நீங்க கண்ணடியே பார்க்க மாட்டீங்களா ?” — தினேஷ் கேட்க, ஒருகணம் பூதம் அவனை எரிச்சலுடன் பார்த்தார்.
” என்னோட பிளாட்ல கண்ணாடி கிடையாது. எலிசபெத் டெய்லர் போட்டோல இருக்கிற கண்ணாடியிலதான் தலை சீவுவேன். உங்களை முதன் முறையா சந்திக்கிறேன், தம்பிகளா ! என்னோட கண்டிஷனை கேளுங்க.! இந்த பிளாட்ல இருக்கிறவங்க, எப்பவும் காதல், கள்ள உறவு, சண்டை, ஸ்காண்டல் அப்படி இப்படினு ஏதாவது செஞ்சு பரபரப்பு ஏற்படுத்திக்கிட்டே இருக்கணும். எவனாவது ஒழுங்கா இருக்கேனு, பெண்களை திரும்பி பார்க்காம இருந்தீங்க, பெட்டி, படுக்கையை தூக்கி வெளியில வீசிடுவேன். பக்கத்திலேயே பீச் இருக்கு ! நிறைய கேர்ள்ஸ் வருவாங்க ! அவங்களோட பிரெண்டு பிடிச்சு எனக்கு அறிமுகம் செஞ்சு வையுங்க ! புரியுதா !” ஸோ,….டோன்ட் பிஹேவ் யுவர்செல்ப்! . நீங்கல்லாம் காதல் விஷயத்துல, ஜெயிலுக்கு போனீங்க கூட, நான் பெயில் எடுப்பேன். ஆனா பெண்களை திரும்பி பார்க்காம ஒழுங்கா இருந்தீங்க…! ! வெளியில தள்ளிடுவேன் ! சோ.. என்ஜாய் …..காரி ஆன்.” என்றவர் திரும்பி ஹாலை பார்த்தார்.
”நாலு பையன்க இருக்கீங்க ? இன்னும் ஒரு பெண்களோட ஒரு கவர்ச்சி போட்டோ கூடவா ஓட்டலை. தம்பிகளா ! நான் எல்லா ஹவுஸ் ஓனர்களை மாதிரி இல்லே. நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுவத்துல ஆணி அடிக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன். ஆணிலே கவர்ச்சி படம்தான் தூங்கணும். நீங்க பாட்டுக்கு, அப்பத்தா, ஆயா னு, கொள்ளு பாட்டினு படங்களை தொங்க விட்டீங்க, பெட்டி படுக்கைகளை வெளியில தூக்கி எறிஞ்சுடுவேன். கபர்தார் ! அடுத்த முறை நான் வரச்சே, ஹால் முழுக்க, கவர்ச்சி படங்களா இருக்கணும். குட்பை ” என்றவர், திடீர் என்று நின்று, நால்வரையும் வெறித்து பார்த்தார்.
”தம்பிகளா ! உங்களால ஒரு வேலை ஆகணுமே ! ஒரு ஆளை என்னோட ஃபிளாட்ல இருந்து விரட்டணும். !” — என்றார் பூதம்.
”யாருங்க ?” — குழப்பத்துடன் கேட்டான், தினேஷ்.
”கீழே ரோமியோ ஜூலியட் ஃபிளாட்ல, கங்கணா-னு ஒரு பொண்ணு வந்திருக்காளே !” — என்றதும் நால்வர் அணிக்கு பரபரப்பு. கங்கணா-வை விரட்டுவதில், இவர்களை போலவே மாத்ருபூதம் குறியாக இருக்கிறாரோ ? இந்த விஷயத்திலாவது இவர்களுடன் ஒத்து போகிறாரே !
”ரோமியோ ஜூலியட் பிளாட்ல கங்கணா-னு ஒரு பேரழகி வந்திருக்காள் ! அவதான் இனிமே என் காதலி. அவகூட அவ அம்மா ரேணுகா னு ஒரு கரடி வந்து தங்க போறாங்களாம். அந்த கரடியைதான் இங்கே தங்கவிடாம விரட்டணும். பையன்களா ! உங்களை வச்சுதான் அவங்களை விரட்டப்போறேன் ! சீரியோ ! மறக்காதீங்க ! உங்க கேர்ள் ப்ரெண்ட்ஸை எனக்கு அறிமுகம் செய்து விடுங்க ! ” — என்று கீழே இறங்கி செல்ல, நால்வரும் தடாலென்று சோபாவில் சரிந்தார்கள்.
”இதென்னடா ரோதனை ! பிள்ளையாரை பிடிக்க நினைச்சா குரங்கா போகுது ! நாம என்ன கும்கி யானையா ! இவரு கேர்ள் ப்ரெண்ட்ஸ் பிடிக்கிறதுக்கு நம்மை யூஸ் பண்ணிக்க பார்க்கிறாரே ! பொண்ணுங்களை வெறுக்கிற நம்ம நாலு பேரு இந்த சபாலானந்தர் கிட்டேயா சிக்கணும் ! எந்த வேளையில ஊரை விட்டு கிளம்பினோமோ ?” — கார்த்திக் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்க, ஆதர்ஷ்-சுக்கு ஒரு யோசனை.
”இதையே நாம் நமக்கு சாதகமா உபயோகிச்சுக்கலாமே ! இந்த ஆள் கொடுக்கிற தொந்திரவுல, அந்த கங்கணா திரும்பி மைசூருக்கு தலைதெறிக்க ஓடணும் !” — ஆதர்ஷ் சொல்ல, மற்றவர்கள், உற்சாகத்துடன் எழுந்தனர்.
”ஐடியா !” – என்று ஆதர்ஷை அவர்கள் தட்டிக்கொடுக்க,, உடற்பயிற்சி செய்வதற்காக, ஆதர்ஷ் வெறும் ஷார்ட்ஸ், டி ஷர்ட் அணிந்து மொட்டை மாடிக்கு சென்றான். அங்கே கங்கணா தான் அணிந்திருந்த சேலையை துவைத்து, மொட்டை மாடியில் உலர்த்திக்கொண்டிருந்தாள். சுரிதார் அணிந்திருந்த அவள், தனது ஈர கூந்தலை விரித்திருக்க, அது அவளது முதுகு முழுவதும், மறைத்திருந்தது.
ஆதர்ஷ் அவளை லட்சியம் செய்யாமல், அவளுக்கு முதுகை காட்டியபடி, தனது உடற்பயிற்சியை செய்ய தொடங்கினான். முதுகில் ஒருவித குறுகுறுப்பு ஏற்பட்டது. கங்கணா தனது பின்பாக, தன்னையே வெறித்துப்பார்ப்பது போன்ற பிரம்மை.
ஒரு காகம் வந்து, கைப்பிடி சுவற்றில் உட்கார, ”உஷ்..சே போ !” — என்று சற்று உரக்கவே குரல் கொடுத்தான்.
பின்னால் பக்கெட்-டை எடுத்துக்கொண்டு, கங்கணா நகர்ந்து செல்ல, அவளது ஹவாய் செப்பல் படிகளில் ‘பட் பட்’ — என்று அறையும் ஒலி கேட்டது.
‘கங்கணா ! உன்னை விரட்டணும்னு கங்கணம் கட்டியிருக்கேன். திரும்பி மைசூருக்கே போயிடும்மா ! உன் பதவில நான் குந்திக்கிறேன் ” — என்று தனக்குள் கூறியபடி, உடற்பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தான், ஆதர்ஷ்.
விஸ்தாரமான அந்த மொட்டைமாடியில் ஜாக் செய்யலாம் என்று ஆதர்ஷ் மெதுவாக ஓட ஆரம்பிக்க காற்றில் பரந்த கங்கணா-வின் காட்டன் சேலை அவனது முகத்தில் வந்து மோத, கோபத்துடனும், அருவருப்புடனும், அதை முகத்திலிருந்து நீக்க, தற்செயலாக வாட்டர் டாங்க் மேடையில், வைக்கப்பட்டிருந்த அந்த சாவியை பார்த்தான்,
”ரோமியோ ஜூலியட்” என்று கீ செயின்-னில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க, அது கீழே சென்றிருந்த கங்கணா -வின் பிளாட் சாவி என்பதை புரிந்துகொண்டான். சேலையை உலர்த்த வந்தவள், சாவியை எடுத்துச்செல்ல மறந்து விட்டாள் போல் இருக்கிறது.
அவள் மீது தாக்குதலை இப்போதே தொடங்கினாள் என்ன ? சாவியை தூக்கி எங்கேயாவது வீசி எறிந்துவிட்டால், பிளாட் வெளியே தேவுடு காக்கட்டும். அந்த சபலானந்த பூதத்திடம் டூப்ளிகேட் சாவி கேட்டு அல்லாடட்டும் !”
கங்கணாவை சென்னையில் இருந்து விரட்டும் முயற்சியில் முதல் கட்டமாக, அவள் பிளாட் சாவியை தூக்கி எறியலாம் என்ற முடிவுக்கு வந்ததும், சட்டென்று அந்த சாவி கொத்தை கையில் எடுத்தான். அதை தனது வலது கரத்தில் வைத்து, நீரஜ் சோப்ரா ஜாவ்லின்-னை ஏந்தி குறி வைப்பது போல, ஆதர்ஷ் தொலைதூரத்த்தில் இருந்த மரங்களை குறிவைத்து வீசி எறிவதற்கு தயார் நிலையில் நின்றான்.
குறி பார்த்து எறிவதற்கு தயாரான போது —
திடீரென்று உள்ளுணர்வு எச்சரிக்க, திரும்பி நோக்கினான்.
அவனுக்கு சற்று தள்ளி, கங்கணா- தான் நின்றிருந்தாள். காலில் ஹவாய் செருப்புகளை காணவில்லை. அதனால்தான் அவள் திரும்பி மாடி ஏறி வந்த சத்தம் கேட்கவில்லை. மறந்து விட்ட சாவியை எடுப்பதற்காக வந்திருந்த கங்கணா, ஆதர்ஷ் அதை வீசி ஏறுவதற்காக தயார் நிலையில் நிற்பதை பார்த்துவிட்டாள்.
மீண்டும் ஆதர்ஷ் கங்கணாவை திரும்பி நோக்கியபோது, அவள் கையில் அவனது ஐ போன் இருந்தது. ஜாக் செய்வதற்காக அதனை மொட்டை மாடியில் செடிகளை வளர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மண் சட்டி ஒன்றின் மீது வைத்திருந்தான். அதனை பாய்ந்து கையில் எடுத்திருந்த, கங்கணா, ஆதர்ஷ் குறி பார்த்து கொண்டு நின்றிருந்த அதே திசையை நோக்கி, தனது வலது கரத்தில் ஏந்தியிருந்த அந்த ஐ போனை குறி வைத்தாள் .
ஆதர்ஷின் நெஞ்சம் பதறியது. எவ்வளவு விலையுயர்ந்த ஐ போன்.! தன்னையே சுதாரித்துக்கொண்டு கங்கணாவின் சாவிக்கொத்தை இருந்த இடத்திலேயே வைத்தான். இப்போது கங்கணா-வும், அவனது ஐ போனை அந்த மண்சட்டியின் மீது வைத்துவிட்டு, தனது சாவியை எடுத்துக்கொண்டு கீழே சென்றாள்.
தான் பிரதீப்பிடம் சபதம் செய்தது போல், கங்கணாவை ஒரு மாதத்தில் சென்னையை விட்டு விரட்டிவிட முடியுமா என்கிற கவலை ஆதர்ஷ-ஷிடம் எழுந்தது. தனது முதல் திட்டமே தவிடுபொடியாகியது குறித்து ஆதர்ஷுக்கு பேரதிர்ச்சி. ஏற்கனவே, லிஃப்டில் அவளிடம் வம்பு வளர்த்த, ரேயான் மற்றும் தினேஷுக்கு, அவர்கள் வழியிலேயே பதில் கொடுத்திருந்தாள். இப்போது இவனுக்கும் தான் எப்படிப்பட்டவன் என்கிற சேதியை சொல்லி விட்டிருந்தாள். அவளை சுலபத்தில் கலங்கடிக்க வைத்து, அச்சுறுத்தி, வேலையை விட்டு ஓடிஏ செய்ய முடியும் என்று ஆதர்ஷுக்கு தோன்றவில்லை. இந்த சம்பவத்தை நண்பர்களிடம் சொல்லக்கூடாது என்று தீர்மானித்தான். பிறகு டார்க் டெமன்ஸ் தலைவர் பதவிக்கு அவன் அருகதையற்றவன் என்று முடிவு கட்டிவிடுவார்கள்.
கோபத்துடனும், எரிச்சலுடனும், தனது ஃபிளாட்டுக்கு சென்றான், ஆதர்ஷ்.
அவனது முகத்தை பார்த்ததுமே, கார்த்திக் யூகித்து விட்டான்.
”என்ன ஆதர்ஷ் ? ஏதாவது பிரசசனையா ?”
”ஏண்டா கோவையிலிருந்து வந்தோம்-னு இருக்கு ! எங்கே போனாலும் அந்த சூர்ப்பனகை கங்கணா வந்து நிற்கிறா ! எனக்கு சுத்தமா பிடிக்கவேயில்லை. நான் ஒர்கவுட் செஞ்சுகிட்டு இருக்கேனு கொஞ்சம் ஒதுங்கி இருக்க கூடாதா ? துணி உலர்த்தர மாதிரி என்னையே நோட்டம் விடறா ! நான் பேசாம அடுத்த பிளைட்ல -யே கோவை-க்கு போயிடப்போறேன் !” — வெறுத்து போய் கூறினான், ஆதர்ஷ்.
”நத்திங் டூயிங் ! நீதான் டார்க் டெமன்ஸ் தலைவர் 1 நீயே ஜகா வாங்கினா எப்படி ? தலைவரா லட்சணமா, பெண்ணியத்தை வேரறுக்கணும்னு அப்பப்ப அறிக்கை விடு ! அப்புறம் நமக்கு விடியல்தான் ! அந்த கங்கணா-வை விரட்டிட்டா, நீதான் கிரியேட்டிவ் ஹெட் ! அப்புறம் நம்ம ஆட்சிதான் !” — தினேஷ் கூறினான் .
”போயும் போயும் ஒரு பொண்ணுகிட்ட போய் மோதணுமான்னு பார்க்கிறேன் !” —
”மோடியே லேடிகிட்ட மோதியிருக்காரு ! நீ தில்லா மோது ! நான் பிரஷாந்த் கிஷோர் மாதிரி ஐடியா கொடுக்கிறேன் ! அந்த பெண்ணை பாக் பண்ணி டஞ்சோ-ல மைசூருக்கு அனுப்பிடு ! ” — ரேயான் கூற, தன்னையும் அறியாமல், ஆதர்ஷின் பார்வை தனது ஐ-போனின் மீது படர்ந்தது.
அவ்வளவு சுலபமா டஞ்சோ-ல பேக் செய்து அனுப்பிவிடக்கூடிய பெண்ணா அவள் ? இந்திரா காந்தி, கோல்டா மேயர், தாட்சர், சிரிமாவோ, பெனாசிர், ஜெயலலிதா, மம்தா, ரேணுகா சவுதரி, நிர்மலா சீதாராமன் எல்லோரும் சேர்ந்த கலவையாக தெரிகிறாள், அந்த கங்கணா !
” பெரிய கண்டத்தில் இருந்து தப்பி வந்திருக்கிறேன்.’! எதையும் யோசித்து செய் — என்று கூறுவது போன்று அவன் கையில் இருந்த அந்த ஐ- போன் அவனை பார்த்து கண் சிமிட்டியது. ‘க்ளிங்’ என்று மெசேஜ் அலெர்ட் ஒலித்தது.
‘பிரதீப்தான் மெசேஜ் அனுப்பியிருந்தான்.
”ஹோப் யூ ஹாவ் ஆல் செட்டில்ட் டவுன் !” — என்று கேட்டிருந்தான்.
ஆதர்ஷ் பற்களை நறநற என்று கடிக்க, மற்றவர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர்.
தொடரும்
1 Comment
இந்திரா காந்தி, கோல்டா மேயர், தாட்சர், சிரிமாவோ, பெனாசிர், ஜெயலலிதா, மம்தா, ரேணுகா சவுதரி, நிர்மலா சீதாராமன்: இந்த லிஸ்ட்ல கடைசியிலே இருக்கிறப்பேரைப் படிச்சு சிரிப்பு வந்துருச்சு!