சிவகங்கையின் வீரமங்கை | 10 | ஜெயஸ்ரீ அனந்த்
ஆம் கணுக்காலுக்கு சற்று மேல் ஏதோ காயத்திற்கு கட்டு போட்டிருந்தான்” எனச் சொல்லவும், சற்றும் தாமதிக்காத நாச்சியார். அவனை பிடித்து வர உத்தரவு பிறப்பித்தாள்
“என் யூகம் சரியாக இருந்தால் அந்த கயவனை உடனடியாக கைது செய்து வர வேண்டும் ” என்றவள் “அத்தான், இம்முறை நான் செல்கிறேன் அவனை பிடித்து வந்து பெரியப்பாவின் காலில் விழ வைக்கிறேன். என்றவள் சிறிதும் தாமதிக்காமல் அறையை விட்டு வெளியேறினாள்.
“நாச்சியார் … சற்று பொறு. அவனை கைது செய்ய நீதான் போக வேண்டுமா? வீரர்களை அனுப்பலாமே?” என்றார் இளவரசர்.
“இல்லை அத்தான். அவன் அடிபட்ட புலி பதுங்கியிருந்து பாய்வான். அந்த பாய்ச்சல் மிகவும் உக்கிரமாக இருக்கும். ஆகவே அப் புலியை அடக்க அவசியம் நான் போய் தான் ஆக வேண்டும். ஒன்று அவனை உயிருடன் பிடித்து வருவேன். இல்லையேல் பிணமாக கொண்டு வருவேன். என்னை தடுக்காதீர்கள். சென்று வருகிறேன் என்றவள் சற்றும் தாமதிக்காமல் தயாராக இருந்த குதிரையில் ஏறி மின்னல் வேகத்தில் வைத்தியரின் விட்டை நோக்கி பறந்தாள்.
இளவரசர் முத்துவடுகநாதர் அவளின் வேகத்தையும் விவேகத்தையும் கண்டு பெறுமை கொண்டவராக அவரும் தாமதிக்காமல் சற்று இடைவெளி விட்டு வேறொரு குதிரையில் இளவரசியை பின்தொடர்ந்து சென்றார்.
மருத்துவரின் வீட்டில் மயங்கி இருந்த குவிரனுக்கு சில மூலிகைகளை அரைத்து காயப்பட்ட இடத்தில் பத்தியம் போட்டு கட்டிய வைத்தியர் அவனின் உடல் முன்றேற்றத்தை கவனித்தார். உடலில் சிறு அசைவு இருந்தது தெரிந்தது.
“நல்ல முன்னேற்றம் ” என்றவர் “அம்மா கெளரி … ” என்று மகளை அழைத்தார். வீட்டின் பின்புறம் பூத்திருந்த செண்பக மலர்களை கூடைகளில் பறித்து கொண்டிருந்த கெளரி வைத்தியரின் குரல் கேட்டதும் ஓடி வந்தாள்.
“அழைத்தார்களா தந்தையே?”
“ஆம்… அம்மா… ” என்றவர் அவளிடம் ஒரு சூரணத்தை தந்தார். “இதை நன்கு காய்ச்சிய பாலில் கலந்து எடுத்துட்டு வாம்மா. ” என்றார். பின், மெல்ல குவிரனின் தலையை தூக்கி தன் மடியில் வைத்து கொண்ட வைத்தியர் கெளரி எடுத்து வந்த அந்த பாலை அவன் வாயில் ஊற்றினார். ” மடக்…. மடக்’ … என்று விழுங்கினான். சற்றைக்கெல்லாம் மெல்ல கண் விழித்தான். மங்கலாக வைத்தியரின் முகம் தெரிந்தும்
“நான் …. நான் … பிழைத்துக் கொண்டேனா ? எங்கிருக்கிறேன்? “என்றான்
“நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். நான் வைத்தியர் இது என் வீடு தான் ” என்றார்.
“என்னை இங்கே அழைத்து வந்தது?”
“இளவரசர். நீங்கள் ஆபத்தாக இருந்ததை அறிந்த அவர் தான் தங்களை இங்கே அழைத்து வந்தார்” என்றதும் சடக்கென்று நிமிர்ந்தான்.
“என்ன இளவரசரா? ஐய்யோ…. ஆபத்து… ஆபத்து.. என்றவன் அங்கிருந்து புறப்பட எண்ணினான் இயலவில்லை. அதற்குள் வாசலில் குதிரையின் காலடி ஓசை கேட்டதும் வைத்தியரும் கெளரியும் விரைந்து வந்து வாசலை எட்டி பார்த்தனர்.
நாச்சியார் அதிவேகமாக புழுதிபறக்க வைத்தியரின் வீட்டை நோக்கி வந்தாள். இளவரசியை கண்ட வைத்தியர் பரவசம் அடைந்தார்.
“வாருங்கள் இளவரசியாரே…. நானே உங்களுக்கு செய்தி சொல்லி அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். தாங்களே வந்து விட்டீர்கள்.” என்றார்.
“என்ன செய்தி வைத்தியரே ” கேட்டபடி குதிரையிலிருந்து இறங்கினாள்.
“இளவரசர் கூட்டி வந்த இளைஞருக்கு உடலில் முன்னேற்றம் காணப்பட்டு நினைவு திரும்பியுள்ளது. இந்த நல்ல செய்தியை தான் சொல்லி அனுப்ப எண்ணியிருந்தேன்”
“நல்லது. எங்கே அந்த கயவன்” என்றபடி கம்பீரத்துடன் வைத்தியரின் வீட்டினுள் நுழைந்தாள்.
“என்ன ? அவன் கயவனா?” என்று அதிர்சியடைந்தவர் “அதோ அங்கே ” என்று அவன் இருப்பிடத்தை காட்டினார். அங்கு அவன் இல்லை. வீட்டின் பின் கட்டு சுவர் வழியாக எகிறி குதித்து தப்பி ஓடி கொண்டிருந்தான். பின்புறம் சத்தம் கேட்கவே நாச்சியார் மின்னல் வேகத்தில் அவனை துரத்திக் கொண்டு ஓடினாள் . “ஏய் நில் …. ” என்று அவனை துரத்திய சமயம் சரியாக பறந்து வந்த வளரி ஒன்று சரியாக அவன் காலை வாரிவிட்டது. கீழே விழுந்து உருண்டான். அந்த சந்தர்பத்தை பயன்படுத்திய நாச்சியார் குவிரனை பிடித்தாள். திமிறினான். தனது முட்டியால் அவன் தாடையில் இரண்டு குத்து விட்டாள். அவன் தாடை கிழிந்து பல் ஒன்று பெயர்ந்து விழுந்தது. “ம்மா” என்ற ஹீனஸ்வாதீனத்துடன் சரிந்தான். நாச்சியாரின் பிடியிலிருந்து அவனால் தன்னை விடுத்து கொள்ள இயலவில்லை. அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டான்.
“பலே …. சொன்னது போல் கயவனை பிடித்து விட்டாயே” என்றார் இளவரசர் அவள் அருகில் வந்தபடி.
“போதும். புகழ்ந்தது. உண்மையில் நீங்கள் வளரி எறிந்து இருக்காவிடில் இம்முறையும் இவன் தப்பியிருப்பான். நல்ல காரியம் செய்தீர்கள்” என்றவள். அவன் பின்னங்கை இரண்டையும் கட்டி கூடவே அவன் கண்களையும் கட்டி அவனை சிறை பிடித்தாள்.
“இவனை என்ன செய்வதாக உத்தேசம்?”
“யாரிவன் வந்ததன் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டு சிறை சேதம் செய்து விட வேண்டியதுதான்.” என்றாள்.
” நோயுற்று உள்ளவனை சிறை சேதம் செய்தல் முறையன்று “
” பிறகு?”
“பாதாள சிறையில் அடைத்து விடுவோம்”
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை சற்று தொலைவில் நின்றபடி கெளரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆஹா…. இளவரசிக்கு தான் எத்தனை துணிச்சல்? இந்த துணிச்சல் என்னிடம் இல்லையே? ஆண்களுக்கு நிகராக வாள் பிடிப்பதிலும் தன்னிகரற்றவள் . பராக்கிரமசாலி. புத்திசாலி மேலும் அவர் ஒரு நாட்டின் இளவரசியும் கூட.. நானோ ஒரு ஏழை வைத்தியரின் பெண். எனக்கும் இளவரசிக்கும் தான் எத்தனை வேறுபாடு? இப்படியிருக்கையில் இளவரசரின் மேல் நான் ஆசைப்படுவது எத்தனை முட்டாள்தனம். ச்சே…. அறிவை இழக்க இருந்தேனே? கூடாது.இனி என் மனதில் இளவரசரின் நினைவு அறவே வரக்கூடாது. அதற்கு தகுதியானவள் நான் அல்ல. என்று நினைத்தபடி கண்களின் ஓரத்தில் துளிர்த்த இரண்டு நீர் திவளைகளை மறைத்தபடி அவ்விடம் விட்டு அகல நினைத்தாள்.
“கெளரி…. ” என்று வேலுநாச்சியாரின் குரல் கேட்கவும், திரும்பி பார்த்தாள். இம்முறை அந்த பார்வையில் ஒரு துயரம் இருப்பதை இளவரசர் தெரிந்து கொண்டார்.
……..
சீதக்காதியை தடுத்து நிறுத்தியது முதன் மந்திரி பசுபதிதான்.
“சற்று நில்லுங்கள்” சீதக்காதியின் தோளில் பசுபதியின் கை விழுந்து அவரை தடுத்தியது. நின்றார்.
“முதன் மந்திரியாரே தாங்களா? “
” ஆம் … நீங்கள் மன்னரை சந்திக்க வந்ததன் நோக்கத்தை நான் நன்கு அறிவேன். இருப்பினும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதில் சில சிக்கல்கள் இருப்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். இதை கலைவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. தாங்கள் சம்மதித்தால் இதை பற்றி நாம் விவாதிக்கலாம்.” என்றார் முதன் மந்திரி பசுபதி.
பசுபதியை சற்று ஏற இறங்க பார்த்த சீதக்காதி , தணிந்த குரலில் இது பற்றி அரசருக்கு தெரிய வருமா ? என்றார்.
“தெரிந்தாலும் பயப்படுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் சேர்வைக்காரர் வழியில் வந்தவன் நான். இங்கு சட்டத்தை மாற்றுவதற்கும், விதிவிலக்கு அளிப்பதற்கும் எனக்கு முழு உரிமை உண்டு . இவ்வளவு ஏன்? அரசரை அரியணை ஏற்றி மன்னராக்கியது எனது தகப்பனார் தளவாய் வெள்ளையன் சேர்வைகாரர் தான்.” என்றார் பசுபதி.
இச்செய்தி உண்மையாகவே சீதக்காதியை சற்று பிரமிப்பில் ஆழ்த்தியது. கண்கள் சற்று விரிய பசுபதியை பார்த்துக் கொண்டிருந்தவர், “நீங்கள் சொல்வது உண்மை தானா? இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது கேட்கலாமா?”
“தாராளமாக … ” என்றார் சற்று பெறுமிதத்தோடு.
“சேர்வைகாரர் என்பது உங்களுக்கு உண்டான பட்டமா?” என்றார் சீதக்காதி
சற்றே நகைப்புடன் “ராஜாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் நாங்கள். சேர்வைகாரர் பட்டம் சாதாரணமாக எங்களுக்கு கிடைத்தது அல்ல. முதன் முதலில் எங்களின் சேவை காட்டிலிருக்கும் மிருகங்களின் அச்சுறுத்தலை சமாளிப்பதாக இருந்தது. அனேகக்காட்டு விலங்குகளுடன் போராடுவது என்பது எங்களுக்கு அவ்வளவு சாதாரணமாக இருந்திருக்கவில்லை. அதி பயங்கர சண்டையிடும் பயிற்சிதிறனை பெற்றிருக்க வேண்டும். எங்களின் இத்தகைய வீரத்தை கேள்வி பட்ட அரசன் பொண்ணும் பொருளும் கொடுத்ததோடு எங்களுக்கு நாட்டை பாதுகாக்கும் பொறுப்பினையும் அளித்தார். பிறகு ராஜாங்கத்தில் முக்கிய பதவியையும் தந்தார். அவ்வாறு படிப்படியாக உயர்ந்த எங்கள் பரம்பரையில் எனது தந்தையரின் பெருமை நாடறிய செய்தது. சொல்லப்போனால் அவர்தான் தங்கள் குல மக்களுக்கு உதவியும் செய்து ஏர்வாடியில் உங்கள் மக்கள் தொழுகைக்காக பள்ளிவாசலையும் தர்ஹாவையும் அமைக்க பல நிலங்களையும் நன்கொடையாக மன்னர் தர ஏற்பாடும் செய்தார். அது மட்டும் அல்ல மன்னரின் அனுமதி இல்லாமல் எனது தந்தையார் படை வீரர்களை திருநெல்வேலிக்கு நடத்தி சென்று போரிட்டு சில பாளையகாரர்களை சேதுபதியின் ஆட்சிக்கும் உட்படுத்தி பெருமை அவருக்கு உண்டு. அப்படி
பட்ட பராக்கிரம பரம்பரையில் வந்த எனக்கு தங்களின் கோரிக்கைகள் ஒரு பொருட்டே இல்லை. அதனால் நான் சொல்வது போல் நடந்து கொண்டால் நீங்கள் எதிர்பார்த்து வந்த கோரிக்கை விரைவாக நிறைவேறும் வாய்ப்புள்ளது” என்றார் முதன் மந்திரி பசுபதி சேர்வைகாரர் .
…….
சிலம்பம்,
ஆரம்ப நாட்களில் மக்கள் தங்களை விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் .தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’ ஆகும். முற்காலத்தில் இக்கலையை சத்திரியர்கள் பயன்படுத்தினர்.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சிலம்பம் ஆடப்பட்டு வருகின்றன.
…….
இராமநாதபுரம் அரண்மனையை ஒட்டி அமைந்துள்ள ஆயுத பயிற்சி கிடங்கில் ஆண்கள் பெண்கள் என்று இருபாலரும் தனித்தனியாக சிலம்பு பயிற்ச்சி மேற்க்கொண்டு வந்தனர். ஆசானாக வெற்றிவேல் இருந்தார்.
ஆண்களின் வரிசையில் முதலாவதாக சுமன் நின்று கொண்டிருந்தான். சுமனை போல சில புது மாணவர்களும் அதே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். வெற்றிவேல் மிகவும் சுலபமாக கம்பு சுற்றுவதை பார்த்த சுமனுக்கு ஏறக்குறைய அது ஒரு சக்ராயுதத்தை போலவே தெரிந்தது. “விசுக் விசுக் “காற்றை கிழித்துக் கொண்டு சுற்றும் வேகத்தில் எதிரிகள் பத்து பேரின் தலையை ஒரே சமயத்தில் கொய்து விடும் வேகத்தை கொண்டிருந்தது. அத கண்ட சுமனும் ஆர்வ பெருக்கினால் தனது கையிலிருந்த கம்பை சுழற்றினான். அது கை நழுவி எகிறி தூரமாக விழுந்தது.
“ஹஹஹா….” என்ற கேலி சிரிப்பலை மாணவர்களின் மத்தியில் எழுந்தது.
“ம்….” கை அசைப்பில் மற்ற மாணவர்களை அடக்கினார் வெற்றிவேல். “இது முறையல்ல. … அவர் நமது வகுப்பிற்கு புது மாணவர் . தெரியாததை சொல்லி தருவதே நமது பண்பாடு அதை விடுத்து அவரை அவமதிப்பது கலையை அவமதிப்பது போல் ஆகும்” என்றவர். சுமனிடம் வந்து சிலம்பை பிடிக்கும் முறையை கற்று தந்தார். ‘ மேல் இரண்டு அடியிரண்டு, சுற்று ஒன்று” என்று விரல்களை பழக்கப்படுத்தினார்.
சுமனும் அவர் கற்று தந்ததை “மேல் இரண்டு அடி இரண்டு சுற்று ஒன்று ” என்று சொல்லிக் கொண்டு மறுபடி மறுபடி செய்து பழகிக் கொண்டிருந்த நேரத்தில் குயிலி தூரத்தில் மதில் சுவர் பின்புறம் இருந்து இவனை சைகையால் வருமாறு அழைத்தாள்.
கம்பை ஓசை படாமல் மூலையில் வைத்து விட்டு ,ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து குயிலியின் இருப்பிடம் வந்தான்.
“என்ன குயிலி ஏதாவது அவசரமா?”
“ஆமாம் அவசரம் தான் நாம் உடனடியாக நாம் ராசசிம்மமங்கலம் செல்ல வேண்டும். இது முதன் மந்திரியின் உத்தரவு” என்றாள்.
” காரணம்?”
” காரணம் மிகவும் ரகசியமானது போகும் வழியில் சொல்கிறேன் வாருங்கள்” என்றாள்.
அடுத்த சில நாழிகையில் கையில் உணவு மூட்டையுடன் ஆளுக்கொரு குதிரையில் இருவரும் ராஜ சிம்மமங்கலத்தை நோக்கி பயணப்பட்டனர்.
தொடரும்.
3 Comments
அருமை ஜெயஶ்ரீ
அருமை
சிலம்பம் பற்றிய தகவல்கள் சிறப்பு! அருமையாக செல்கிறது தொடர் வாழ்த்துகள்!