முதல் பெண் விடுதலைப் போராளி ராஜாராம் மோகன்ராய்

 முதல் பெண் விடுதலைப் போராளி ராஜாராம் மோகன்ராய்

 

புதிய இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுகிற ராஜாராம் மோகன் ராய் பெண்களின் மறுமணத்தை ஆதரித்தவர், உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கத்தை ஒழித்த முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன்ராய்

இந்து சமயத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் மூடப் பழக்க வழக்கங் களைத் தவிர்க்க, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து ஒரு சமூக சமய சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் என்ற இயக்கத்தை நிறுவினார் ராஜாராம் மோகன் ராய். மேலும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க இவர்தான் முதன்முதலில் தீவிரமாகப் பாடுபட்டார். 

1700 காலத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் அந்தப் பெண்ணை மீண்டும் மறுமணம் செய்து வைக்கக் கூடாது. மாறாக இறந்த அந்தக் கணவனின் உடலோடு மனைவியையும் உயிரோடு சேர்த்துப் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் என்கிற கொடிய பழக்கம் இருந்தது. இப்பழக்கத்தை ராஜாராம் மோகன் ராய் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தார். கணவன் இறந்தால் அந்தப் பெண்ணிற்கு மறுமணம் செய்ய வேண்டும். என்றும் அப்படி இல்லை என்றால் அவளை விதவையாக வாழ விடுங்கள் என்றும் தம் கருத்தை முன்வைத்தார். 

இவரது கடும் போராட்டத்தின் விளைவாக உடன்கட்டை ஏற்றும் பழக்கம் குறைந் தது.

மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி என்கிற மாவட்டத்தில் மே 22, 1772ஆம் ஆண்டு ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் ராம் காந்த ராய் மற்றும் தாரிணி என்கின்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

சிறந்த கல்வியாளரான இவர் தனது படிப்பு மட்டுமின்றி பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி இவர் இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச், லத்தீன், கிரேக்கம், ஈபுரு ஆகிய மொழிகளைக் கற்று அதில் கை தேர்ந்தவராக இருந்தார்.

ராஜாராம் மோகன்ராய் ஆங்கிலேய நாகரிகம் மற்றும் பழக்க வழக்கத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர். ஆனால் அடிமை மோகம் இல்லாதவர். அவர்களைப் போல வாழவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தது. அதனால் அவர் பலமுறை இங்கிலாந்து சென்று தங்கி வந்தார். 

தனது நாற்பதாவது வயதில் தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு விட்டு சமூக சீர்திருத்தப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண் டார். இதனால் அவருக்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இதுவே இவரை அவரது பெற்றோர்களைவிட்டு பிரியக் காரணமானது. வீட்டை விட்டு வெளியேறிய இவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வங்காளம் வந்தார்.

இந்து சமயத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழிக்க நினைத்த இவர் பிரம்ம சமாஜம் என்ற இயக்கத்தை நிறுவினார். பிரம்ம சமாஜ இயக்கத்தின் முதற் காரணம் சமயங்களைக் கடந்து மக்கள் கடவுள் ஒருவரே என்ற கூற்றை முன்வைத்து அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக யாவரும் சகோதரத்துவத் துடன் வாழ வேண்டும் என்பதே ஆகும்.

இந்த இயக்கத்தின் மூலம் பெண்களின் மறுமணம் மற்றும் உடன்கட்டை ஏறுதல் போன்ற மூடப் பழக்க வழக்கங்களை அடியோடு கலைக்க அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாகத் தனது வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்.

1829ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு வில்லியம் பெண்டிங் உதவியால் சதித் திட்டத்தை சட்ட விரோதமாக அறிவித்து வெற்றி பெற்றார். 

ராஜாராம் மோகன்ராய் ஒரு முகலாய மன்னனின் தூதராக ஐக்கிய நாடு களுக்கு உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் பெற்றுவர பயணம் மேற் கொண் டார். ஆனால் அவர் அங்கு மூளைக் காய்ச்சல் காரணமாக கிரிஸ்டல் அருகி லுள்ள ஸ்டேஷன் என்ற இடத்தில் 1833, செப்டம்பர் 27 அன்று காலமானார்.

ராஜாராம் மோகன் ராய் செய்த சாதனைகள்

  • பெண்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று ராஜாராம் போராட்டம் செய்தார்.
  • பல மனைவிகள் திருமணத்தை சட்டவிரோதமாக ராஜாராம் மோகன் ராய் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவுறுத்தினார்.
  • பெண்களை விலைக்கு விற்கும் மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்து பெண் விடுதலை என்ற இயக்கப் போராட்டத்தை நடத்தி ராஜாராம் மோகன் ராய் வெற்றிகண்டார்.
  • இந்து மதத்தில் உள்ள உருவ ஆராதனையைச் செய்துவந்த கல்கத்தா பிராமணர்களின் மூடப்பழக்க வழக்கத்தை எதிர்த்துப் போராடினார்.
  • கல்கத்தா தெருக்கள்தோறும் பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டி வேதங்களில் உருவ வணக்கம் உண்டா? நிரூபிக்க தயாரா? என்று பிராமணர்களுக்கு சவால் விட்டு கூட்டம் நடத்தினார்.
  • வேதாந்த சாரம் என்ற நூலை ஆங்கிலத்தில் அச்சிட்டு இந்து மதத்தின் பெருமைகளை உலகறியச் செய்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...