கேன்ஸ் படவிழாவில் நிர்வாணப் போராட்டம் நடத்திய உக்ரைன் பெண்
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. கடந்த மே 17-ந் தேதி தொடங்கிய இந்த விழா வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் நடந்து வருவதை கவுரவமாக கருதுவர். அந்த வகையில் நேற்று அந்த விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.
.உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்று வருகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொள்கிறார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் திரைப்பிரபலங்கள் ஏ.ஆர் ரஹ்மான், நயன்தாரா உள்ளிட்ட ஒரு குழு இந்தியா சார்பில் கலந்துகொள்கிறது.
இந்த விழாவில் நேற்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. பெண் ஒருவர் திடீரென ஆடைகளைக் கழட்டிவிட்டு நிர்வாணமாக ஓடி வந்து அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உடலில் “எங்களைக் கற்பழிப்பதை நிறுத்துங்கள்” என்ற வாசகத்தை எழுதியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷ்ய படையினர் அங்குள்ள பெண்களைக் கற்பழித்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்தப் பெண் கேன்ஸ் பட விழாவில் நிர்வாணமாகப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நிர்வாணமாகப் போராட்டம் நடத்திய பெண்ணை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அந்த பெண் எதிர்ப்பாளர் உக்ரேனியக் கொடியை தனது உடலில் வரைந்து இருந்தார். அதில் எங்களை கற்பழிப்பதை நிறுத்து” என்ற வார்த்தைகள் எழுதபட்டு இருந்தது. உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் குரல்கொடுத்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் சிலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.