சிவகங்கையின் வீரமங்கை | 9 | ஜெயஸ்ரீ அனந்த்
அரசர் செல்லமுத்து முதன்மந்திரி பசுபதியுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மெய்க்காப்பாளன் லிங்கபதி உள்ளே வந்தான். “அரசருக்கு வணக்கம். தங்களைக் காண கீழக்கரையிலிருந்து சீதக்காதி வந்துள்ளார்” என்றான்.
“நண்பன் சீதக்காதியா..? அவரை உடனே வரச்சொல்” என்று ஆணை பிறப்பித்து விட்டு பசுபதியிடம், “அமைச்சரே… நினைவு இருக்கட்டும்… இந்த வருடம் திருப்புல்லாணி மார்கழி உற்சவம் வெகு விமர்சையாக நடக்க வேண்டும். அதே போல் ராஜசிம்மமங்கலம் ஏரியின் உபரி நீர் தற்காலிகமாக நிறுத்தபட்டு அருகில் இருக்கும் மதகிற்குத் திருப்பி விட ஏற்பாடு செய்யுங்கள். மற்றவற்றை நாம் பிறகு கலந்து ஆலோசிக்கலாம். இப்பொழுது நீங்கள் செல்லலாம்”
“உத்தரவு” என்றபடி பசுபதி எழுந்து செல்லவும், சீதக்காதி உள்ளே நுழைந்தார். வெள்ளை நிறத்தில் நீண்ட குர்தி உடையில் தலையில் ஒரு டர்பனைச் சுற்றியிருந்தார். கண்களில் இடப்பட்டிருந்த கண்மை அவரின் பார்வையைக் கூர்மையாகக் காட்டியது. இருவரையும் பார்த்து நட்புறுவல் பூத்தபடி செல்லமுத்துவுக்கு மண்டியிட்டு மரியாதை செலுத்தினார்.
“சீதக்காதி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் மக்கள் யாவரும் நலம்தானே?” என்று அரசர் கேட்கவும், சற்றே புல்லரித்துப் போய்விட்டது சீதக்காதிக்கு.
“அரசே… நீங்கள் இருக்கும் பொழுது எங்களுக்கு என்ன குறை இருக்க கூடும்? உங்களின் தயவால் நாங்கள் நலமுடனே உள்ளோம்.”
“என்னை காண வந்ததன் நோக்கம்..?”
“அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தானியங்களையும் அளித்து விட்டு தங்களிடம் ஒரு உதவிபெற வேண்டி வந்துள்ளேன்.”
“பலே… பலே… தங்களுக்கு உதவி தேவைப்படும் பொழுதில்தான் இந்த நண்பனின் நியாபகம் வருகிறதா?” என்று தோழனை உரிமையுடன் அணைத்துக் கொண்டார்.
“மன்னிக்க வேண்டும். வேலையின் நிமித்தமாக வர இயலவில்லை. நான் வந்ததன் நோக்கம் என்னவென்றால், எங்கள் இன மக்கள் தொழுகை நடத்தவும் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் கீழக்கரையில் சில இடங்களில் தர்ஹாக்களும் மசூதிகளும் அமைத்துக் கொள்ள எங்களுக்கு தகுந்த இடம் தேவைப்படுகிறது. தாங்கள் அதை ஏற்பாடு செய்து தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கக்கூடும். தங்களின் தந்தையார் இருந்த காலத்தில் எங்களுக்கு முறையாக நிலம் ஒதுக்கித் தந்ததால் தான் நாங்கள் இன்றளவும் வணிகத்திலும் ஏற்றுமதியிலும் சிறப்பாக விளங்கி வருகிறோம். இதை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.”
சீதக்காதியின் இத்தகைய வேண்டுதல் செல்லமுத்துவிற்குச் சிறிது தயக்கத்தை ஏற்படுத்தியது. நெற்றியைச் சுருக்கிக் கொண்டு சில வினாடி நீண்ட யோசனையில் இருந்தவரைக் கண்ட சீதக்காதி, அவரின் தயக்கத்தை அகற்றும் பொருட்டு, “அரசரே…. இந்த உதவிக்குக் கைமாறாக நாங்கள் ராஜியத்திற்கு எப்பொழுதும் வழங்கும் வரிகளையும் தானியங்களின் அளவையும் மும்மடங்காக அதிகரித்துத் தருகிறோம். இதை தவிர எண்ணிடம் மேலும் ஒரு உபாயம் உள்ளது.” என்றார் அரசரின் ஆர்வத்தை தூண்டும் வகையில்.
“உபாயமா என்ன அது..?” என்ற செல்லமுத்து தனது குழப்பத்தைச் சற்று ஒதுக்கி வைத்தார்.
“எங்கள் மக்கள் வாணிபத்தில் மட்டும் அல்லாமல் விசைத்தறியிலும் மிகவும் திறமை பெற்றவர்கள். அவர்கள் தறியில் உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகள் யாவும் காஞ்சிப்பட்டுக்கு ஈடானவை. இத்தகைய துணிகள் வடக்கே மிகவும் பிரபலம் என்பது தாங்கள் அறிந்ததே. இத்தகைய சந்தையை அதிகரிக்க எங்கள் மக்களுக்கு நீங்கள் உதவுவதோடு வடக்கே வங்காளத்தில் ஓர் சேமிப்புக் கிடங்கை உறுவாக்கி அதன் மூலம் உற்பத்தியை பெருக்கி நாட்டின் நிதியினையும் பெருக்கலாம் என்பது என் எண்ணம்.” என்று கூறியதோடு அரசர் செல்லமுத்துவின் முகத்தைக் கூர்ந்து, அதில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று கவனித்தார். மாறாக அவர் முகத்தில் மிகுந்த குழப்பம் தெரிந்தது.
“நண்பரே…. உங்கள் சமூகத்தினுடனான எங்களின் தொடர்பு என் பாட்டனார் காலத்திலிருந்து தொடங்கியது. எனது தகப்பனாரின் வலது கையாக இருந்த தளவாய் வெள்ளையன் உங்கள் சமூகத்தினருக்காக, எனது தந்தையாருடன் பேசி உங்கள் தொழுகைக்கு பள்ளிவாசலையும் தர்ஹாக்களுக்கும் பல நிலங்கள் நன்கொடையாக பெற்று தந்தார் என்பது தாங்களும் அறிந்ததே. ஆனால்…” என்று யோசித்தவாறு தனது வெள்ளையும் கருப்புமாக கலந்து வளர்ந்த தனது தாவாயை தடவிக் கொண்டார்.
“ஆனால் என்ன நண்பனே…?”
“டச்சுகாரர்களைப் போன்று அச்சுறுத்தல் வந்து விட்டால்.? அது நாட்டுக்கு நல்லதல்லவே.?”
இந்த பதிலை கேட்ட சீதக்காதியின் முகம் சிறுத்தது.
“நண்பா…டச்சுகாரர்களை போல் அல்ல நாங்கள்- இடத்தைக் கொடுத்தால் மடத்தை அபகரிக்க. இது போன்ற கீழ்த்தரமான எண்ணம் எம் மக்களுக்கு அறவே கிடையாது. அவர்களைப் போல் என் மக்கள் என் தேசம் என்ற உரிமை கோரும் ஈன புத்தி எங்களுக்கு இல்லை. என்று எங்கள் நாட்டைத் துறந்து இங்கு தஞ்சம் என்று வந்து விட்டோமோ… இனி இது தான் எங்கள் நாடு .உங்களின் விரோதி எங்களுக்கும் விரோதி. இந்த வார்த்தையை நீங்கள் நம்பலாம்.” என்றார்.
“ஆகட்டும் இது குறித்து ஆலோசித்து நல்ல முடிவு சொல்கிறேன். தாங்கள் இரண்டு நாட்கள் விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டுச் செல்லலாமே?”
“இல்லை நண்பரே…. எனக்கு பணி அதிகம் உள்ளது. அடுத்த முறை வரும்பொழுது அவசியம் தங்குகிறேன். இப்பொழுது விடை பெறுகிறேன்” என்ற சீதக்காதி அரசவையை விட்டு வெளியே வந்த சமயம், ஒரு கை அவரைத் தடுத்து நிறுத்தியது.
• • •
குவிரனைத் தேடிச்சென்ற சிவக்கொழுந்து அவன் கிடைக்காததால் வெறும் கையுடன் அரண்மனைக்கு வந்தான். குவிரனின் குகைக்குள் மயங்கிச் சரிந்த வீரர்கள் இருவரையும் ஏற்றி வந்த குதிரை இம்முறை அவங்களைத் தாங்கி வந்தது.
சிவக்கொழுந்தின் மனதினுள் பல ஓட்டங்கள் “இச்சமயம் நான் இளவரசியை எப்படி எதிர்கொள்வேன்? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எதற்கும் லாயக்கில்லாத இவனெல்லாம் இருந்தென்ன- என்று நினைத்து வாளை எடுத்து என் தலையை கொய்து விட்டால்?” என்று நினைக்கும் போதே சிவக்கொழுந்திற்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அதனாலேயே குதிரையை மிகவும் மெதுவாக நடத்திக் கொண்டு அரண்மனை வரும் பொழுது காலைக் கதிரவன் தனது செந்நிறக் கதிர்களைக் கீழ் வானத்தில் படர விட்டிருந்தான்.
அச்சமயத்தில் “வெற்றிவேல்வீரவேல்” என்ற கோஷம் எழும்ப இவர்களைத் தாண்டி சில குதிரை வீரர்கள் அரண்மனையை நோக்கிப் பறந்து சென்றார்கள். அதில் நடுவே வெள்ளை குதிரையில் கம்பீரமாக முத்துவடுகநாதர் சென்றதும் தெரிந்தது.
“அதோ…. இளவரசர்… மதுரையில் அவர் நண்பர் விஜயகுமார நாயக்கருக்காக போராடி வெற்றி பெற்ற களிப்பில் வந்து கொண்டிருக்கிறார். ஆனால்,.. இவரின் முன்பு இளவரசியார் என்னை சினந்து கொண்டால்?… அப்பொழுது இளவரசர் என் வீரதீர பராக்கிரமங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லி என்னை அவமானத்திலிருந்து காப்பாற்றுவாரா? அல்லது….?” யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே குதிரை அரண்மனைக்குள் நுழைந்து நுழைவாயிலை அடைந்திருந்தது. நினைவிழந்த வீரர்கள் இருவரையும் உடன் வந்த வீரர்கள் அரண்மனையிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். சிவக்கொழுந்து அவமானத்துடன் தன் சிரம் தாழ்த்தியபடி இளவரசி வேலுநாச்சியார் முன் வந்து நின்றான்.
அச்சமயம் முத்துவடுகநாதர் அரண்மனைக்குள் பிரவேசித்த செய்தி அறிந்த வேலு நாச்சியாரின் முகத்தில் நாணம், வெட்கம் பூரிப்பு, படபடப்பு, விரததாபம் என்று இதத்தனையையும் ஒருங்கே பெற்று முகம் செந்நிறத் தாமரை போல காட்சியளித்தது. இளவரசரை எதிர்பார்த்து கண்கள் காத்திருந்தது. அதனால் சிவக்கொழுந்தின் வரவை இளவரசி அறிந்திருக்கவில்லை. இளவரசரும் தந்தை சசிவர்ணத் தேவரை பார்த்த கையோடு வேலுநாச்சியார் இருப்பிடம் தேடி வந்தார்.
கண்கள் படபடக்க இதயம் துடிதுடிக்க இளவரசரை பார்த்த நாச்சியார் தன் அரியணையை விட்டு எழுந்து நின்றாள். கால்களை விட்டுத் தரை நழுவுவது போல் தோன்றியது . இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். காதலில் ததும்பிய இருவர் முகமும் ஒன்றுக்கொன்று அன்பைப் பரிமாறிக் கொண்டன. சில நிமிடங்கள் இருவர் கண்களும் பேசிக் கொண்டது. அதில் நிறைய விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இதுதான் சமயம் என்று சிவக்கொழுந்து ஓசைப்படாமல் அவ்விடத்தை விட்டு அகல முயன்றான். அப்பொழுது இளவரசரின் கை சிவக்கொழுந்தின் மேல் விழுந்தது.
சுதாரித்துக் கொண்ட இளவரசி, சிவக்கொழுந்தை நோக்கி, “ஓ…. நீங்களா? போன காரியம் என்னவாயிற்று?” என்றாள்.
“அது வந்து…. இளவரசியாரே…” சொல்ல முடியாமல் மென்று முழுங்கினான்.
“ம்… தயங்காமல் சொல்லுங்கள்” என்றாள்.
“இது தான் கிடைத்தது இளவரசியாரே.”என்று இடுப்பில் சொருகி வைத்திருந்த தாயத்தை எடுத்து காட்டினான். எலும்பால் செய்யப்பட்ட மண்டை ஓட்டின் வடிவம் கொண்ட தாயத்து அது..
அதை கண்டதும் முத்துவடுகநாதரின் முகத்தில் சில ஆச்சரியரேகைகள் தோன்றியது. “இது தங்களுக்கு எங்கு கிடைத்தது? என்ற இளவரசரின் கேள்விக்கு, நடந்தது அனைத்தையும் விரிவாக கூறினாள் நாச்சியார்.
“நல்ல காரியம் செய்தாய் இளவரசி…. இதேபோல் தாயத்து தரித்து, கத்திகுத்துப்பட்ட ஒருவனை இன்று நான் சந்திக்க நேர்ந்தது. அவனின் காயத்தைக் குணப்படுத்துவதற்காக அவனை நான் பனையூர் வைத்தியரின் வீட்டில் அல்லவா விட்டு வந்துள்ளேன்.?” என்றார்.
“அப்படியென்றால் குற்றம் புரிந்தவன் அவனாகத்தான் இருக்க வேண்டும். அவன் அங்கத்தில் வேறு ஏதாவது அடையாளம் இருந்ததா?” என்று கேட்டாள் இளவரசி.
“ஆம். கணுக்காலுக்குச் சற்று மேல் ஏதோ காயத்திற்குக் கட்டுப் போட்டிருந்தான்” எனச் சொல்லவும், சற்றும் தாமதிக்காத நாச்சியார், அவனைப் பிடித்துவர உத்தரவு பிறப்பித்தாள்.
1 Comment
விறுவிறுப்பு குறையாமல் வேகம் பிடிக்கிறது தொடர்! வாழ்த்துகள்!