கோமேதகக் கோட்டை | 5 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக் கோட்டை | 5 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

வித்யாதரா, சமயோசித புத்தி நம்மைப் பெரும் சங்கடத்தில் இருந்து விடுவித்துவிடும். அந்த திறமை உனக்கு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் ஒரு கதை சொல்கிறேன் கேள். முன்னொரு காலத்தில் காட்டில் ஓர் ஆட்டுக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அதில் ஓர் வயதான ஆடு வழி தவறி நெடுந்தொலைவு வந்து விட்டது.

பொழுதும் சாய்ந்துவிட்டது. திடீரெனப் பெரும் மழையும் பிடித்துக் கொள்ளவே அந்த ஆடு ஒதுங்க இடம் தேடியது. நல்லவேளையாக அங்கே ஒரு குகை தென்பட்டது ஆடு அங்கே போய் தங்கிக் கொண்டது. மழை வலுக்கவே அங்கேயே தங்கும்படி ஆகிவிட்டது. அப்போதுதான் ஆடு கவனித்தது அங்கே சில எலும்புத்துண்டங்களும் காலடித் தடங்களும் இருப்பதை… அதற்கு உடல் நடுங்கியது.

அது ஓர் புலியினுடைய குகை. வெளியே சென்றிருக்கும் புலி எந்த நேரமும் குகைக்குத் திரும்பலாம். அப்படி திரும்பினால் அதன் பசிக்கு தான் இரையாக நேரிடலாம். எனவே புலி வருவதற்குள் தப்பி விட வேண்டும் என்று நினைத்தது.

ஆனால் அதனுடைய கெட்ட நேரம் புலி அங்கே வந்துவிட்டது. புலியின் உறுமல் சத்தம் வெளியே கேட்டதும் ஆடு நடுங்கிவிட்டது. ஆனாலும் அது துணிச்சலை வரவழைத்துக் கொண்டது. அங்கேயிருந்த ஒரு பாறையின் மறைவில் மறைந்து கொண்டது. புலி உள்ளே நுழையும் போது குரலை மாற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தது. “ஏய் யாரது என் குகைக்குள் நுழைவது?” என்று அதட்டலாய் கேட்டது.

புலிக்குக் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. என்னுடைய குகைக்குள் நுழைந்து கொண்டு என்னையே யார் என்று ஏதோ ஒன்று கேட்கிறதே அது யாராக இருக்கும்? அது தன்னைவிட வலிமையான விலங்காக இருக்குமோ? என்று கொஞ்சம் அச்சப்பட்டுக் கொண்டே, “இது என்னுடைய குகை. இங்கே நீதான் புகுந்து கொண்டு இருக்கிறாய்? யார் நீ?” என்று மிரட்டலாய் கேட்டது.

“இது உன் குகையா யார் சொன்னது? நான் தான் மேஷா மிருகம்! சில வருடங்கள் முன் வரை இங்குதான் வசித்து வந்தேன். ஊருக்குச் சென்று திரும்பி வருவதற்குள் நீ ஆக்ரமித்துக் கொண்டாய் போலிருக்கிறது! ஆமாம், நீ யார்?” என்று உதார் விட ஆரம்பித்தது ஆடு.

‘மேஷா மிருகமா? இது என்ன புதுசா இருக்கிறது?’ என்று குழம்பிய புலி, “நான் தான் புலி வந்திருக்கிறேன்! நீ எந்த மிருகமாக இருந்தால் என்ன? என் குகையை விட்டு வெளியேறு” என்று மிரட்டியது.

“ஓஹோ புலியா? நான் ஆயிரம் புலிகளைக் கொன்று தின்பதாகச் சபதம் எடுத்து இருக்கிறேன்! இதுவரை தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது புலிகளை தின்று முடித்துவிட்டேன். ஆயிரமாவது புலியாக நீயாக வந்து மாட்டியிருக்கிறாய்..! உன்னைக் கொன்று தின்னாமல் விடமாட்டேன்!” என்று பயங்கரமான குரலில் கத்தியது ஆடு!

அந்த ஆடு தாடியும் மீசையுமாக கொம்புகள் வளைந்து இருந்தது. அப்போது ஒளிர்ந்த மின்னல் ஒளியில் ஆட்டின் நிழல் இன்னும் பயங்கரமாகக் காட்சி தரவும் புலி மிரண்டு போய்விட்டது. உள்ளே இருப்பது ஏதோ பயங்கரமான மிருகம் என்று நினைத்து ஓட ஆரம்பித்தது.

புலி ஓடிவருவதை பார்த்த நரி ஒன்று, “என்ன விஷயம்?” என்று கேட்டது. புலி நடந்த்தை சொன்னது.

“மேஷா மிருகமா..? அப்படியெல்லாம் எதுவும் இல்லை! உங்களை யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள். வாருங்கள், நான் கூட்டிச் செல்கிறேன். நீங்கள் வேட்டையாடியதில் எனக்கு கொஞ்சம் தந்தால் நன்றியோடு இருப்பேன்” என்று சொன்னது.

புலிக்குப் பயம் விடவில்லை! “இல்லை, வேண்டாம்! நான் அந்தப்பக்கம் இனி தலைவைத்து படுக்கமாட்டேன்” என்று சொன்னது. “நீ அங்கே சென்று என்னை விட்டு விட்டு ஓடிவிடுவாய்! நான் மாட்டிக் கொள்வேன்! வேண்டாம்” என்று சொன்னது. நரியோ, “உங்களுக்குப் பயமாக இருந்தால் என் வாலோடு உங்கள் வாலை முடிந்து கொள்ளுங்கள்! நான் உங்களை விட்டுப் போகமுடியாது” என்று சொல்லி புலியை சமாதானம் செய்து வாலில் முடிந்து கொண்டு குகைக்கு மீண்டும் கூட்டிச் சென்றது.

நரி புலியைத் தன் வாலில் கட்டிக் கூட்டி வருவதை ஆடு கவனித்து விட்டது. இந்தப் புலியை சும்ம விடக் கூடாது, நரியையும் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டுவிட்டது.

மீண்டும் குரலை மாற்றிக் கொண்டு, “ஆஹா! நரியாரே! நம் திட்டப்படி புலியை ஏமாற்றி கொண்டு வந்துவிட்டீர்களே! நன்றி! நன்றி! புலியைக் கொன்றதும் பேசியபடி பாதி கறியை உமக்குத் தந்துவிடுகிறேன்!” என்று சொன்னது.

இதைக்கேட்டு புலி மிரண்டு போனது! “அடேய்! தந்திரக்கார நரியே என்னை ஏமாற்றிக் கொல்லப் பார்க்கிறாயா? உன்னை நம்பி வந்தேன் பார்!” என்று ஓட ஆரம்பித்தது.

“புலியாரே! சொல்வதைக் கேளும்! ஓடாதீர்கள்!” என்று நரி சொன்னதைப் புலி காதில் கேட்கவே இல்லை! புலியின் வாலில் நரி முடிச்சு போட்டிருந்ததால் நரியையும் இழுத்துக் கொண்டு புலி ஓடியது மேடு பள்ளம் கற்களில் இடிபட்டு நரி வலியால் துடித்து, “என்னை அவிழ்த்து விடுங்கள்” என்று கெஞ்சியது. ஆனால் புலியோ, “என்னை ஏமாற்ற நினைத்தாய் அல்லவா..? உனக்கு வேண்டும்” என்று வேகமாக ஓடியது.முடிவில் நரியும் இறந்து போனது.

ஆடு பலகீனமான விலங்காக இருந்தாலும் தன் சமயோசித புத்தியால் உயிர் பிழைத்தது.

“வித்யாதரா! இதுதான் சமயோசித புத்தி! எதிரியின் வலையிலே சிக்கிவிட்டாலும் கூட நாம் புத்தி இழக்க கூடாது. நம்முடைய புத்தியை கூர்மையாக்கித் தப்பிக்கும் வழியை கண்டுபிடித்து வெளியே வரவேண்டும். அத்தகைய சமயோசித புத்தி உனக்கிருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். அதற்கு ஓர் சோதனை வைக்க வேண்டும் அந்த சோதனையில் நீ வெற்றி பெற்றால் அடுத்த கட்டத்திற்கு செல்வாய்” என்று மன்னர் விஜயேந்திரன் கதையை சொல்லி முடித்தார்.

“ஆட்டின் சமயோசித புத்தி மிகவும் சிறப்பானது மஹராஜா! புலியை ஏமாற்றியது மட்டுமில்லாமல் தந்திரத்தில் சிறந்த நரியையும் தன்னுடைய புத்தியால் அந்த கிழ ஆடு ஏமாற்றியது அதி அற்புதம். நீங்கள் வைக்கும் சோதனையில் வெற்றிபெற ஆயத்தமாக உள்ளேன். அது என்ன சோதனை என்று சொன்னால் உடனே களமிறங்கத் தயாராக உள்ளேன்.” என்று சொன்னான் வித்யாதரன்.

அப்போது சூரியன் அஸ்தமித்தான். பறவைகள் தன் கூட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தன. இருள் கவ்வ ஆரம்பித்தது.

“வித்யாதரா! பொழுது சாய்ந்துவிட்டது. உனக்கான இரண்டாவது சோதனை நாளை வைக்கிறேன். அதோடு நாளை ராட்சதன் வந்து நிற்பான். அவனுக்குத் தேவையான உணவுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இன்று இரவு நன்கு உறங்கி ஓய்வெடு! நாளைக் காலை அரண்மனைக்கு வந்து சேர். அங்கு உனக்கான இரண்டாவது சோதனை காத்திருக்கிறது.” என்று சொல்லிவிட்டு மன்னர் அரண்மனைக்கு கிளம்பினார்.

றுநாள் பொழுது புலர்ந்த்து. பறவைகளின் ரம்யமான சத்தங்கள் வித்யாதரனை எழுப்பியது எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு நீராட ஆற்றங்கரைக்குச் சென்றான் வித்யாதரன். ஆற்றில் நீராடுகையில் திடீரென வானம் கறுத்தது. ஏதோ மேகக் கூட்டம் கடந்து செல்வது போல பூமியே கறுத்துப் போனது.

“என்ன இது…? திடீரென வானம் இருண்டு போகிறதே!” என்று வானத்தை பார்த்தான் வித்யாதரன்.

அங்கே ஆகாயத்தில் ஒரு பெரும் கறுத்த பாறை மிதந்து செல்வது போல பறந்து சென்று கொண்டிருந்தான் அந்த ராட்சதன்.

‘இந்த ராட்சதனை எப்படி கொன்று இளவரசியை மீட்டு வருவது இது நம்மால் ஆகிற காரியமா? அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டோமா? அரசன் வைக்கிற சோதனைகளில் வெற்றி பெற்றால் கூட அரக்கனை வெல்வது அத்தனை சுலபமாக இருக்காது போலிருக்கிறதே’ என்று வித்யாதரன் சிந்தனை செய்ய ஆரம்பித்தான்.

அப்போது, “என்ன வித்யாதரா! அரக்கனை எப்படி கொல்வது? முடியாத காரியமாக இருக்கும் போலிருக்கிறதே என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாய் போலிருக்கிறதே! ஊக்கம் உள்ள இளைஞன் இப்படி யோசிக்கலாமா? உன் மனதில் தயக்கம் ஊடுருவலாமா?” என்று ஓர் குரல் கேட்டது.

‘யார் அது என் மனதை படித்தது போல பேசுவது? நான் அரக்கனை கொல்ல ஒத்துக்கொண்ட்தும் இப்போது மனதில் நினைத்ததும் அவருக்கு எப்படித் தெரியும்?’ என்று சுற்றும்முற்றும் பார்த்தான் வித்யாதரன்.

அங்கே ஒருவரும் காணவில்லை!

யாரும் இல்லாமல் குரல் மட்டும் வருகிறதே! ஏதாவது யட்சனாக இருக்குமோ? என்று வித்யாதரன் யோசிக்க,

“வித்யாதரா! மிரளாதே! நன்றாகக் குனிந்து என்னைப் பார்!” என்றது ஓர் குரல்.

அங்கே ஆற்றங்கரைப் படிமீது அவனது கட்டை விரல் அளவிற்கு ஓர் குள்ளன் நின்று கொண்டிருந்தான். அவனையே அதிசயமாகப் பார்த்தான் வித்யாதரன்.

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...