கால், அரை, முக்கால், முழுசு | 5 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு | 5 | காலச்சக்கரம் நரசிம்மா

5. பஞ்சுப் பொதிகளும், தீபச்சுடரும்…

நால்வரும் கங்கணாவைப் பார்த்து திகைத்து நின்றிருந்தனர்.

ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்து கட்டியபடி, சிக்லெட் மென்று கொண்டு, கட்டை விரலால் யாருக்காவது டெக்ஸ்ட் செய்து கொண்டு, அல்ட்ரா மாடர்னாக ஒரு பெண்ணை எதிர்பார்த்த நால்வருக்கும் முதல் அதிர்ச்சி. கங்கணா ஆனந்த், வெள்ளை நிறத்தில் சிவப்பு பார்டருடன் கூடிய காட்டன் சேலை உடுத்தி, வங்காளப் பெண்மணி போன்று காணப்பட்டாள்! கூந்தலை பிரெஞ்சு பிலீட்ஸ் மாதிரியில் பின்னலிட்டு, பிருந்தா காரத் மாதிரி பெரிய பொட்டு வைத்திருந்தாள். காதுகளில் தங்க வளையங்கள். கையில் ஒரு வெள்ளி பிரேஸ்லெட்! கைகளைக் கட்டிக்கொண்டு, தொலைவில் தெரிந்த கடலையே பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

”என்னடா..!! கோவா மாதிரி இருப்பான்னு நினைச்சேன். சென்னை மயிலாப்பூர் மாதிரிதான் இருக்கு..! அப்ப நாம ஈஸியா பயமுறுத்தி அடக்கிவிடலாம்.” –தினேஷ் கூற, ஆதர்ஷ், கங்கணாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சொன்னான்.

”அல்ட்ரா மாடர்னாவது சில சமயத்துல நம்மோட சோசியல்லைஸ் செய்யும்..! தண்ணி பார்ட்டிக்கு எல்லாம் வரும்..! இந்த மாதிரி, துர்கா பூஜை மேக்கப்-தான் அப்பப்ப சாமி ஆடும். ஆனா நாம யாரு..? உடுக்கை, பம்பையை அடிச்சு அடக்கிட மாட்டோம்?” –என்று கூறியபடி ஆதர்ஷ் தனது பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைய, மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர். அவர்களை நோக்கி நடந்து வந்தாள், கங்கணா.

”ஹலோ..! ஐ ஆம் கங்கணா ஆனந்த் ஃபிரம் மைசூர்..!” –அவள் தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொள்ள, அவர்கள் நால்வரும் அவள் பஞ்சு உடன் பேசிக் கொள்ளட்டும் என்பது போல, அவளை அலட்சியப்படுத்தி விட்டு, கீழ்த்தளத்தில் இருந்த லிப்ட்டை நோக்கி நடந்தனர்.

”வெல்கம் மேடம்..! யு கோ பை லிப்ட்..! யுவர் ஃபிளாட் இன் செகண்ட் ப்ளோர்..! ஐ கம் பை ஸ்டெப்ஸ்..” -என்று தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் கூறிவிட்டு, பஞ்சு சாவிகளுடன் படியேறிச் சென்றான்.

ஆதர்ஷ், கார்த்திக், தினேஷ் மற்றும் ரேயான் அவசரமாக லிப்டுக்குள் புகுந்துகொண்டு, கங்கணா நுழைவதற்குள் லிப்ட் கதவை மூடி விட வேண்டும் என்று அவசரப்பட, ஆனால் கங்கணா சட்டென்று உள்ளே நுழைந்து விட்டாள்.

”எப்படி முந்திக்குது பாரு…? முந்திரிக்கொட்டை..! அதுதான் கூடவே வந்து அதிகாரம் பண்ண போகுதே. லிப்ட்ல கூட கூடவே வந்து தொலையணுமா..?” –ரேயான் பல்லைக் கடித்தபடி சற்று உரத்த குரலில் கூறினான்.

”ஜாக்கிரதைடா..! புரிஞ்சுடப் போவுது..! அப்புறம் அப்ரைசல்ல பழி வாங்கிடும்..!” –கார்த்திக் கூறினான்.

”அதுதான் மூஞ்சியிலேயே எழுதியிருக்கே, பிஸிபேளாபாத் பேக்குன்னு..! அதுக்கு எங்கே தமிழ் தெரிய போவுது..? இப்ப மின்தூக்கில வசமாச் சிக்கியிருக்கு. நல்லாத் திட்டி அனுப்பிட வேண்டியதுதான்..!” -என்று ரேயான் சொல்ல, லிப்ட் முதல் தளத்தைக் கடந்து இரண்டாவது தளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கங்கணா பதறினாள்.

”ஐ நீட் டு கோ டு தி செகண்ட் புளோர் ஃபிளாட்..! பிரஸ் நம்பர் 2..!” –கங்கணா அதட்ட, அவளை லட்சியம் செய்யாமல் நான்கு பேரும், லிப்ட் பொத்தான்களை மறைத்துக் கொண்டு நிற்க, அவர்களின் நடுவே நுழைந்து அவளால் இரண்டாம் தள பொத்தானை அழுத்த இயலவில்லை.

“தமிழ் தெரியலைடா தினேஷ்..! திட்டலாமா..! மூஞ்சியப் பாரு..! பொறம்போக்கு..!” –தினேஷ் திட்ட, ரேயான் குறுக்கிட்டான்.

”அதுக்குப் புரியலை..! ங்கேன்னு விழிக்குது. கொஞ்சம் புரியற மாதிரி திட்டு.”

”பொறம்போக்குன்னு அவங்க பாஷையிலே எப்படி சொல்லுறது..?” –தினேஷ் தடுமாறினான்.

”நாம பாலுன்னு சொன்னா அவங்க ஹாலுன்னு சொல்லுவாங்க..! நாம போன்னு சொன்னா அவங்க ‘ஹோக்’ன்னு சொல்லுவாங்க..! ‘பா’ வர இடத்துல எல்லாம் ‘ஹா’ போடு, போதும்..!” –தமிழ் வசவு அவங்க வசவாகிடும்..!” –ஆதர்ஷ் சொன்னான்.

தினேஷ் கப்பென்று பிடித்துக்கொண்டான். ”ஹொரம் ஹொக்கு… ஹொரம் ஹொக்கு..!” –என்று சொல்ல, கங்கணாவின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.

மூன்றாம் தளத்தில் லிப்ட் நிற்க, கதவு திறந்தது, அவர்கள் வெளியேறும் வரை ஒதுங்கி நின்ற கங்கணா , பிறகு வெளியே வந்தாள்.

பஞ்சு படிகளில் மூன்றாவது மாடிக்கு ஓடி வந்தான் .

”மேடம்..! உங்களை இரண்டாம் மாடியில தான் இறங்கச் சொன்னேன்..!. உங்க ஃபிளாட் இரண்டாம் மாடியில் இருக்கு!. இவர்களுக்கு தான் மூணாவது மாடி ஃபிளாட்..!” –என்றதும், டார்க் டெமன்ஸ் நண்பர்கள் கிண்டலாக ஒருவரையொருவர் பார்த்து, நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டனர்.

”நான் என்ன செய்யறது..? இந்த நாலு ஹொருக்கி ஹசங்க இரண்டாம் மாடி ஹொத்தானை அழுத்த விடாம வழியை மறைச்சிக்கிட்டு நின்னாங்க. என்னால என்ன செய்ய முடியும்..? ஹைத்தியக்கார ஹாடுங்க.” –என்று கங்கணா கூறியதும், டார்க் டெமன்ஸ் உறுப்பினர்கள், அதிர்ச்சியில் வாயைப் பிளந்து கொண்டு நின்றனர்.

”இந்த பண்ணுக்கு தமிழ் தெரியுமா..? மைசூர்ன்னு சொன்னாங்களே..!” –கார்த்திக் விழித்தான்.

”ஹொறுக்கி ஹசங்க..! ஹைத்தியக்கார ஹாடுங்கனா என்ன அர்த்தம்?” –தினேஷ் ஆதர்ஷைக் கேட்க, கங்கணா முந்திக்கொண்டு பதில் தந்தாள்.

”உங்க பிரெண்டை கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்னு நினைக்காதீங்க. நீங்கதான் சொல்லிடீங்களே..! நான் முந்திரிக்கொட்டைன்னு .! பொறம் போக்குல, பாவுக்கு பதில் ஹா போட்டீங்க இல்லே. இப்ப, ஹொருக்கி ஹசங்க-! ஹைத்தியக்கார ஹாடுங்கன்னு நான் சொல்லியிருக்கேன். எங்கேயெல்லாம் ‘ஹா’ வருதோ அங்கே பா-வன்னாவைப் போடுங்க..! உங்களுக்கு அர்த்தம் புரியும்” என்றவள், பஞ்சுவைத் திரும்பி பார்த்தாள்.

“அதுக்காக என்னை ஹஞ்சுன்னு கூப்ட்றாதீங்க மேடம்…” பஞ்சு பதறினான்.

”நான் இரண்டாவது மாடியில் காத்துகிட்டு இருக்கேன்” –என்றபடி டார்க் டெமன்ஸ் குழுவினரைத் திரும்பிப் பார்க்காமல், கங்கணா விடுவிடுவென்று படிகளில் இறங்கிச் சென்றாள்.

மூன்றாவது மாடி பிளாட்டின் முன்பாக நின்ற நால்வரும் முகத்தைச் சுளித்தார்கள்..!

லைலா மஜ்னு..!

அந்த மூன்றாவது மாடி ஃபிளாட்டின் வெளியே பெயர்ப்பலகையில் எழுதப்பட்டிருந்தது.

”என்னய்யா பெயர் இது, பஞ்சு..? சகிக்கலையே..?” –ஆதர்ஷ் கேட்டான்.

பஞ்சு வாயின் மீது விரலை வைத்து எச்சரித்தான்.

”உஷ்..! இப்ப ஒண்ணும் கேட்காதீங்க..! ஹவுஸ் ஓனர் ரவுண்ட்ஸ்ல இருக்கார். அப்புறம் சொல்றேன்..!” –என்றபடி சாவியைக் கொண்டு, ஃபிளாட் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.

நால்வரும் ஃபிளாட்டை சுற்றி பார்த்தார்கள்.

எப்போதுமே கார்த்திக், இருப்பதில் சிறந்ததுதான் தனக்கு அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். மற்றவர்களின் அனுமதி இல்லாமலேயே ஜன்னல் வழியாக கடற்கரை தெரியும் அறையை அவன் தனதாக்கி கொள்ள, ஆதர்ஷ், அட்டாச்ட் பாத் இருந்த பெரிய ரூமை எடுத்துக்கொண்டான். மற்ற இரு அறைகளை ரேயானும், தினேஷும் எடுத்துக்கொண்டனர். சமையலறை விசாலமாக இருந்தாலும், அவர்கள் என்னவோ வெளியே சாப்பிடும் முடிவில்தான் இருந்தார்கள்.

சமைத்தால், பாத்திர பண்டங்களைக் கழுவ வேண்டும்..! அதெல்லாம் வீண் வேலை..!

தினேஷ், பஞ்சுவை ஆர்வத்துடன் நோக்கினான்.

”பஞ்சு..! அந்த பொண்ணு கங்கணா தனியா ஃபிளாட் எடுத்திருக்கா, இல்லை எங்களை மாதிரி நாலு பேரா ஷேர் செய்யப் போறாங்களா..?” –

கேள்வியைக் கேட்ட தினேஷை எரிச்சலுடன் நோக்கினான் ஆதர்ஷ்.

”அவ எப்படி போனா உனக்கு என்ன..? இப்ப எதுக்கு அவளை நினைவுபடுத்தறே..?”

”இல்லை..! ஒரு பொண்ணுன்னா ஈஸியா சமாளிக்கலாம். நாலைஞ்சுன்னா நமக்கு பிரச்னையாச்சேன்னு நினைச்சேன்.”

பஞ்சு தலையசைத்தான். ”இல்லை சார்..! அவங்க, அவங்க அம்மா..! ரெண்டு பேர் மட்டும் தான்..!” –பஞ்சு சொன்னான்.

”எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல..! அந்த பொண்ணு நமக்கு மேலதிகாரின்னு சொல்றதுக்கே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இன்ஃபாக்ட், அப்படியே திரும்பி கோவைக்குப் போயிடணும் போல இருக்கு..!” –ஆதர்ஷ் மனதில் குமைந்தப்படி, சோபாவில் சரிந்தான்.

”அப்படி என்ன சார் பொண்ணுங்க மேல வெறுப்பு..? அவங்க என்ன பண்ணாங்க உங்களை..?” –பஞ்சு கேட்க, ஆதர்ஷ் தொலைவில் தெரிந்த பீச்சை வெறித்தபடி கூறினான்.

”உள்ளுக்குள்ளே நிறைய சோகங்கள் இருக்கு பஞ்சு. அதையெல்லாம் இப்ப கேட்காதே..! நாலு பேரும் ஏதோ ஒரு விதத்துல பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கோம். எங்களைப் பொறுத்தவரைக்கும், பெண்கள்ன்னா பிரச்னைகள்தான்.” –ஆதர்ஷ் கூறினான்.

”அய்யய்யோ..! அப்படினா உங்க வாழ்க்கையில கண்ணாலமே கட்டப் போறதில்லையா..?” –பஞ்சு அதிர்ந்தான்.

”எங்க பெயர் சொல்ல பிள்ளை வேணுமே..! கண்ணாலம் உண்டு.! ஆனா பெண்டாட்டிங்கிற பெயர்ல ஒரு பொம்மையைத்தான் நாங்க கல்யாணம் கட்டிப்போம். எந்திரன் மாதிரி எங்களுக்கு மனைவிகளா வரப்போறவ, எந்திரி-யா இருக்கணும்.!” –கார்த்திக் சொன்னான்.

”ஆமா..! நாங்க எந்திரின்னா எந்திரிக்கணும்…! உட்காருன்னு சொன்னாகூட, உட்காராமல் எங்களுக்குப் பணிவிடை செய்யணும்..! வர்றவளுக்கு விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாது. நாங்க பிடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னா, ஒரு காலை உடைச்சு முயல் சூப் வச்சுட்டு, ஆமாங்க முயலுக்கு மூணு கால் தான்-னு சொல்லணும்..!” –ரேயான் கூறினான்.

”அதே சமயம், நாங்க யாரும் லவ் பண்ண மாட்டோம்..!” –தினேஷ் கூற, பஞ்சு திகைத்தான்.

”லவ், மேரேஜ் இதெல்லாம் பண்ணாம இருக்க முடியுமா? அதுவும் இந்தக் காலத்துல..?” –பஞ்சு வியந்தான் .

”நம்ம தாத்தா பாட்டி காலத்துல லவ்வா பண்ணாங்க..? டொமஸ்டிக் லைஃப் அமைதியாகத்தானே இருந்தது..? லவ் மேரேஜ் வந்தப்புறம் தான் விவாகரத்தும் அதிகமாகியிருக்கு.! அதுவும் ஸ்கூல்ல, ஐ லவ் யு சொல்றது, காலேஜுல ஐ லவ் யு சொல்றது, ஆபிஸ் கல்லீக் கிட்டே ஐ லவ் யு சொல்றது… எல்லாத்தையும் நான் வெறுக்கிறேன். படிக்க வந்த இடத்துல, வேலை பார்க்க வந்த இடத்துல என்ன லவ் வேண்டியிருக்கு.? ஆபிஸ்ல ஜாயின் பண்றவங்க யாரும் லவ் செய்ய கூடாதுன்னு, வேலையில சேரும்போதே எழுதி வாங்கிக்கணும்..!” –ஆதர்ஷ் சொன்னான்.

”இதெல்லாம் நடக்கிற காரியமா..? பஞ்சையும், நெருப்பையும் பக்கத்துல வைக்கக்கூடாதுன்னு என் ஆயா சொல்லும்..! நம்ம ஆபிஸ்லயும் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல தான் இருக்கு..!” –பஞ்சு சொன்னான்.

”அது கிடக்கட்டும்..! அந்த ஹிப்போபொட்டமஸ் சஞ்சனா ஏன் எப்பப் பார்த்தாலும் ஆம்பளைங்களத் திட்டுது..?” –தினேஷ் கேட்டான்.

”அதைப் பெண் பார்க்க ஒரு பையன் வந்தான், சார்..! அதோட லுக் பிடிக்கலை. சஞ்சனாவோட தங்கைகாரி அஞ்சனா சிக்குன்னு இருக்கா, அவளைக் கட்டி கொடுங்கன்னு கேட்டிருக்கான்..! இது நத்திங் டூயீங்ன்னு சொல்றதுக்குள்ளார தங்கைகாரி அஞ்சனா, ‘எனக்கு ஓகே..! அவ கிடக்கிறா’ன்னு சொல்லிட்டு, அவனோட ‘சிக் புக்’ ரயிலேறிப் போயிடுச்சு. அதுலேர்ந்து இதுக்கு ஆம்பளைங்களைக் கண்டாலே பிடிக்காது..! ஒரு காலத்துல, எப்பப் பாத்தாலும் சிக்லெட்டு குதப்பிக்கிட்டே இருக்கும். இந்தச் சம்பவத்துக்கு அப்புறம், சிக்லெட் தின்றதை விட்டுடுச்சு..!” –பஞ்சு சொல்ல, டார்க் டெமான்ஸ் திகைத்தனர்.

”ஏன்..?”

”சிக்லெட்-ல சிக்-னு இருக்கே..?” –பஞ்சு கூற, தினேஷ் சிரித்தான்.

”சிக்லட்டுக்கு பதில் பூமர் தின்னலாம். பார்க்கறதுக்கு பூம்ன்னு இருக்கே..” –தினேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பிளாட்டின் பஸ்ஸர் ஒலித்தது. கதவில் இருந்த மேஜிக் ஹோல் வழியாக வெளியே பார்த்த பஞ்சு, பரபரப்புடன், நால்வரையும் பார்த்தான்.

”ஐயோ.. ஆபத்து..! ஆபத்து..!” என்று அலறியபடி பஞ்சு அவர்களை வெறித்தான்.

–தொடரும்…

ganesh

1 Comment

  • நகைச்சுவை பூக்கள் ஆங்காங்கே பூத்து தொடர் சிறக்கிறது! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...