தலம் தோறும் தலைவன் | 1 | ஜி.ஏ.பிரபா

 தலம் தோறும் தலைவன் | 1 | ஜி.ஏ.பிரபா

ம் பாரத பூமி புண்ணிய பூமி.

அன்பு மயமாய் விளங்கும் சிவனை வணங்குதல் அவற்றுள் முக்கியமானது. அன்பானவன். அருட்பெருஞ் ஜோதி வடிவினன். மங்களமாய், மறைபொருளாய் இந்தப் பிரபஞ்சமாய் நிறைந்திருக்கும் ஈசனுக்காக குமரி முதல் பனி நிறைந்த இமயம் வரை எண்ணற்ற ஆலயங்கள் நிறுவினார்கள் நம் முன்னோர்கள்.

சிவனின் இயல்புகளையும், அவனின் பெருமைகளையும் ஸ்ரீ பதஞ்சலியின் மகாபாஷ்யம் சிறப்பாக விளக்குகிறது. வியாசரின் சிவபுராணம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, தேவாரப் பதிகங்கள், திருவாசகம் போன்றவை சிவனின் மகிமைகளை, சிவனடியார்களின் பெருமைகளையும் அற்புதமாக விளக்குகிறது.

ஈசன் பராசக்திக்கு தன் இடபாகத்தை வழங்கி, அவருடன் சேர்ந்து ஆனந்த தாண்டவம் ஆடி அண்ட சராசரங்களையும் படைத்தனர் என்கிறது புராணங்கள்.
“கலாப்யாம் சூடலங்க்ருத சசிகலாப்யாம் நிஜதப
பலாப்யாம் பக்தேஷூ ப்ரகடித பலாப்யாம் பவதுமே
சிவாப்யாம் ஹ்ருதி புனர் பவாப்யா மானந்த ஸ்புர
தனுபவாப்யாம் நதிரியம் சம்போ மகாதேவ” என்று ரசிக்கிறார் ஆதிசங்கரர்.

சிவசக்தி வடிவாய் விளங்கும் அன்னையும், அப்பனும் கலை வடிவாய்த் திகழ்கிறார்கள். சந்திர கலையைச் சிரசில் அணிந்தவர்கள், ஒருவருக்கு ஒருவர் தவத்தின் பலனாய் விளங்குபவர்கள். தங்கள் பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குபவர்கள், மூவுலகினருக்கும் குறைவிலாத சகல நன்மைகளையும் அருளுபவர்கள், அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருப்பவருக்கு என் மகிழ்வான வணக்கங்கள் என்கிறார்.

“உலகெலாம் உணர்ந்தோதற்கரியன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்”

என்று புகழ்கிறது பெரிய புராணம். உலக உயிர்கள் அனைத்திலும் ஆத்மா ரூபமாகப் பரவி இருப்பவன். எந்நேரமும் யோக நிலையில் இருப்பதால் யோகி என்றும் சித்தர்களில் முதன்மையானவர் என்றும், புகழ்ப் படுகிறார்.

பிறப்பும், இறப்பும் இல்லாதவர். பிரளய காலத்தில் அனைத்தையும் அழித்து தன்னுள் ஒடுக்கி தான் மட்டும் நிலையாக இருப்பவர் என்கிறது சைவ இலக்கியங்கள். சிவனை மூலவராகக் கொண்டு அமைந்த கோயில்கள் சிவா திருத்தலங்கள் என்று அழைக்கப் படுகிறது. உலகம் முழுவதும் பல தலங்கள் இருந்தாலும் இறைவன் அற்புதம் செய்த தலங்கள் இந்தியாவிலேயே அதிகம். அட்ட மூர்த்த தலங்கள், முப்பீட தலங்கள், பஞ்ச பூதத் தலங்கள், அட்ட வீரட்டானத் தலங்கள், தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், முக்தி தர வல்லத் தலங்கள், ஜோதிர்லிங்கத் தலங்கள்,ஆதி கைலாயத் தலங்கள் என்று இன்னும் பல்வேறு வகையாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.

அவற்றில் சில தலங்கள், அங்கு பாடப்பெற்ற தேவாரம், திருவாசகங்கள், அங்கு இறைவன் நடத்திய திருவிளையாடல்கள், அக்கோயிலின் சிறப்புகள் பற்றிக் கூறுவதே இக்கட்டுரைகள்.

ஈசன் அருளால் அனைவரும் சகல நலங்களும் பெற்று வாழ்க வளமுடன் என எல்லையற்ற அந்தப் பரம்பொருளை வேண்டுகிறேன்.

1) திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலேஸ்வரர்

போற்றி அருள்க நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருள்க நின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றி எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
-திருவாசகம்.

அனைத்தும் பிரம்மம் என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.

ஒரே பரமாத்மாதான் அனைத்துமாக இருக்கிறது. அதுவே ஆத்மஸ்வரூபமாக இருக்கிறது. வெளியில் தெரியும் அனைத்தும் மாயை. உள்ளுக்குள் ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் பரம்பொருளே உண்மை என்று உணர்ந்த ஞானிகள் எல்லாமே ஈஸ்வர சங்கல்பம் என்ற நினைவுடன் இருக்கிறார்கள்

ஆனால் அந்த இறைவனே மாயா லோகத்தில் வாழும் உயிர்களின் ஆசைகளை பூர்த்தி செய்து, பரமானந்தம் தரும் முக்தியையும் தருகிறது. எந்தக் காரியமும் இல்லாமல், ஆனால் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தருகிற பரம்பொருளே ஈசன்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, ஒழுங்கான கதியில் நடத்தி, அதில் வாழும் உயிர்களின் அனைத்து மனோரதங்களையும் நிறைவேற்றும் அசாத்தியமான காரியத்தைச் செய்கிறவர் ஈசன்.

இறைவன் எல்லாம் தாமே என்று அறிந்தாலும் அவரையும் அறிய முயல்கின்றவர்களும் உண்டு. ஆனால் ஆணவத்துடன் அறிய முயலுபவர்களுக்கு அவர் கண்ணில் படுவதில்லை. அன்போடு அவரையே சரணாகதி அடைந்தவர்களுக்காக, அடியார்க்கு அடியாராக ஓடி வரும் பெரும் கருணைப் பேராறு ஈசன்.

அடியவர்களின் மனதில் புகுந்து அவர்களை இழுத்து வந்து தன் இதயவீட்டில் இருத்தி வைத்துக் கொள்பவர் ஈஸ்வரன். தாயினும் சாலப் பரிந்து காக்கும் ஈசன் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து, இப்பிரபஞ்சமே அவராக இருந்தாலும், அவரின் அருளாடல் நிறைந்த தலங்களில் இறைவனின் சக்தி அதிக வீர்யத்துடன் பக்தர்களுக்கு கருணை மழை பொழிகிறது.

அப்படிப் பட்ட பஞ்சபூதத் தலங்களில் ஒன்றுதான் திருவண்ணாமலை.

“நினைக்க முக்தி அருளும் தலம் திருவண்ணாமலை” என்று சிறப்பிக்கப்படுகிறது. அக்னித் தலமான இங்கு லிங்கமே மலையாக இருக்கிறது. எனவே இங்கு கிரிவலம் மிகச் சிறப்பு. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளது.

கிருத யுகத்தில் நெருப்பு மலை, திரேதாயுகத்தில் மாணிக்கமலை, துவாபர யுகத்தில் பொன்மலையாக இருந்த இம்மலை கலியுகத்தில் கல்மலையாகக் காட்சி அளிக்கிறது. இருநூற்று அறுபது கோடி ஆண்டுகள் மழமையான இம்மலைக்கு காந்த சக்தி உள்ளதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இம்மலையைச் சுற்றி வரும்போது இங்கிருந்து வீசும் காற்று பல மூலிகைகள் கலந்து வீசுவதால் பல அற்புதங்கள் நம் உடலிலும், வாழ்விலும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒருமுறை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தங்களை மறந்து போர் புரியும் அளவுக்கு இறங்கி விட்டனர். அப்போது அவர்களுக்கு இடையில் மிகப்பெரிய அக்னிப் பிழம்பு ஒன்று தோன்றியது. அளவு கடந்து பிரம்மாண்டமாக நிற்கும் இந்த அக்னி மலையின் அடியையோ, முடியையோ யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துச் செல்ல, பிரம்மா அன்னப்பறவை வடிவம் எடுத்து திருமுடி காணச் செல்கிறார். ஆனால் அவர்களால் அடிமுடி காண இயலவில்லை. அப்போது மேலிருந்து ஒரு தாழம்பூ ஈசனின் தலையிலிருந்து விழுந்து கொண்டிருந்தது. அதனிடம் தான் ஈசனின் தலைமுடியைக் கண்டதாக பொய் சொல்லச் சொல்லி பிரம்மா கேட்க, தாழம்பூ ஒத்துக் கொள்கிறது.

விஷ்ணு தன்னால் அடியைக் காண இயலவில்லை என்று உண்மையைக் கூற, பிரம்மாவுக்காகத் தாழம்பூ பொய்ச் சாட்சி சொல்கிறது. ஈசன் படீரென்று வெடித்துக் கிளம்பி அவர்களுக்கு காட்சி தருகிறார். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ தன் பூஜையில் இனி பயன்படுத்தக் கூடாது என்றும், பிரம்மாவுக்கு வழிபாடு கிடையாது என்றும் சபித்து விடுகிறார்.

இம்மலை பிறப்பு இறப்பு நீக்கக் கூடியது. எனவே மலை மருந்து எனவும், சிவந்த நிறம் உடையதால் அருணகிரி என்றும் அழைக்கப் படுகிறது. கிரிவலம் வருவதன் மூலம் இறைவனையே வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் வரும்போது ஒம் நமசிவாயா என்று ஒருமுறை உச்சரித்தால் கோடிமுறை உச்சரித்ததற்குச் சமம்.

“தொண்டர் இணங்கு மலை வானோரும் ஏனோரும் போற்றி வணங்கும் மலை,
அடியார் செய்தகுறை எல்லாம் மறக்கும்மலை நாளும் குறைவிலாச்
செல்வம் அளிக்கும் மலை.” என்று புகழ்கிறார் குகை நமச்சிவாயர்.


ஆறு ஆதாரத் தலங்களில் இது மணி பூரகத் தலம் எனப்படுகிறது. மனித உடலில் மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். அதற்காககத்தான் இந்த உலகமே இயங்குகிறது. அதற்குள் அனைத்தும் அடக்கம் என்பதுபோல் அண்ணாமலையாருக்குள் அனைத்தும் அடக்கம்.

எட்டுத் திக்கிலும் அஷ்ட லிங்கங்கள் கொண்ட எண்கோண வடிவில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. இரணியனின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் சொல்படி இங்கு கிரிவலம் வருகிறாள். அப்போது அமுத மழைத்துளிகள் மலையின்மீது பட்டு அவள் வயிற்றின்மீது தெளித்தது. எனவேதான் நரசிம்மரின் உக்கிரம் பிரகலாதனைத் தாக்கவில்லை.

மலையைச் சுற்றி வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு யாகம் செய்த பலன் உண்டு. அஷ்ட லிங்கங்களைத் தரிசித்து முடிக்கும்போது கிரிவலம் முடிந்து விடும். ஒவ்வொரு திசையிலிருந்து தரிசிக்கும் போது வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது மலை. கோவிலுக்கு உள்ளே பேய்க் கோபுரம் அருகே அண்ணாமலையார் திருப்பாதம் உள்ளது.

அடிமுடி காண இயலாத அய்யன் விச்வரூப மூர்த்தியாக எழுந்தருளிய இடத்தில் பாதம் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய ராஜகோபுரம். வல்லாள மகராஜா கோபுரம், கிளிக் கோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மாள் கோபுரம் என்று ஒவ்வொரு திசைக் கோபுரமும் அழைக்கப்படுகிறது.

மலையே கோவிலாக இருந்தாலும் அந்த மலைக்குள்ளும் குகைக் கோவில்கள் இருக்கிறது. வல்லாளன் என்று திருவண்ணாமலையை ஆண்ட மன்னன் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்தியபோது ஈசனே அவனுக்கு புத்திரனாக வந்து அவரின் ஈமக் சடங்குகளைச் செய்தார். திருவண்ணாமலையின் கீழ்த் திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் ஈசன் மன்னனுக்கான சடங்குகளைச் செய்தார்.

கிட்டத்தட்ட ஆறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் மாசி மகத்தன்று விழா கொண்டாடப்படுகிறது. அம்பிகை அபிதகுஜாம்பாள் என்று அழிக்கப்படுகிறாள். தவமிருந்து ஒரு பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து அம்பிகை ஈசனின் இடப்பாகத்தை அடைந்தாள்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் ஈசன் அக்னி ரூபமாக பிரும்மா, விஷ்ணுவுக்குக் காட்சி தந்தார். எனவே அந்த நாள் தீபத் திருநாள் என்று அழைக்கப் படுகிறது. அன்று அதிகாலையில் ஒரு தீபம் அண்ணாமலையார் அருகில் ஏற்றி. அதைக் கொண்டு மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின் அதனை ஒன்றாக்கி ஈசன் அருகில் வைத்து விடுவார்கள்.

இதுவே ஏகன் அநேகன் ஆகும் தத்துவம் என்று கூறப்படுகிறது. அனைத்தையும் தன்னுள் அடக்கிய பரம்பொருள் ஈசன் என்று இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

அதன்பிறகு இந்த தீபத்தை மலைக்குக் கொண்டு சென்று அங்கு அர்த்தநாரீஸ்வரர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதன்பின் மகாதீபம் ஏற்றப்படும். அந்த நேரம் மட்டுமே இறைவன் அர்த்தநாரீச்வரராகக் காட்சி அளிப்பார். தீப வழிபாடானது நம்மைத் தாக்கும் துன்பம், துயரம்,பாவங்கள், இடையூறுகளை விலக்கி, ஒளி, வளமை, செல்வம் ஆகியவற்றைத் தரும்.,2668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றுவதை அன்னை பார்வதியே தொடங்கி வைத்ததாகப் புராணங்கள் கூறுகிறது.

மூவாயிரம் கிலோ பசுநெய், ஏழு அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, ஆயிரம் மீட்டர் காடாத் துணி, இரண்டு கிலோ கற்பூரம் பயன்படுத்தப் படுகிறது. மொத்தம் பதினோரு நாட்கள் மலைமீது இந்தத் தீபம் ஒளிரும்.

அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசித்து திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், குமாரஸ்தவம் என்று பல பாடல்களை அவர் பாடிய தலம். கம்பத்திளையனார், கோபுரத்திளையனார் என்ற இரண்டு முருகன் சன்னதியும் இங்கு மிகச் சிறப்பு. நான்கு முகத்துடன் லிங்கம், பாதாள லிங்கம், கிளியாக காட்சி தரும் அருணகிரியார், முதலியவையும் சிறப்பு.

விநாயகரின் முதல் படைவீடு. இங்கு முதல் வணக்கம் முருகனுக்கே. ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் போன்ற பல மகான்கள் வாழ்ந்து புகழ் பெற்ற இத்தலத்தில் இன்றும் பல சித்தர்கள், மகரிஷிகள் சூஷ்ம ரூபத்தில் இங்கு இறைவனை தரிசிக்க வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

அழைத்ததும் ஓடி வரும் அய்யன் ஈசன் உள்ளன்போடு உருகி வழிபட்டால் ஓடி வரும் சுவாசக் காற்று. எனவேதான்,

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”

– என்கிறார் திருஞான சம்பந்தர்.

அம்மையப்பன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

-என்கிறது திருவாசகம்.

திருவாசகம் பாடிய பெருமைக்கு உரியது திருவண்ணாமலை. நமக்காகவே நம்மைக் காக்கவே பல்வேறு இடங்களில் ஈசன் அன்புருவாக அமைந்திருக்கிறார்.

ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுகத் தந்தருள் எம் உடையானே!

என்கிறது திருவாசகம்.

அன்பருக்கு அன்பராய் அடியவர்களை தன்னுள்ளே ஈர்த்து அனைத்தும் அளிக்கும் ஈசனாய், மலை உருவில் காட்சி அளிக்கும் மகா பரம்பொருளே திருவண்ணாமலை.

“ஓம் ஸ்ரீ அண்ணாமலையானே போற்றி.”

-பயணம் தொடரும்…

ganesh

1 Comment

  • அண்ணாமலையார் குறித்த அற்புதத் தகவல்கள் அருமை! மேற்கொளிட்ட தேவார திருவாசகப் பாடல்கள் தேர்வு மிகச்சிறப்பு! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...