கோமேதகக் கோட்டை | 3 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
”என் பொண்ணை ராட்சசன் தூக்கிட்டு போயிட்டானாமே! நீங்க அவளை பார்த்துக்கிட்ட லட்சணம் இதுதானா? உங்களை கைது பண்ணி சிறையிலே அடைக்க போறேன். என் பொண்ணு உயிரோட திரும்பி வந்தா உங்களுக்கு விடுதலை! இல்லேன்னா உங்க உயிரும் பறிக்கப்படும்”னு கத்திக்கிட்டு தன் முன்னால் வந்து நின்ற ராஜாவைப் பார்த்து குரு வெலவெலத்துப் போயிட்டாரு. அவருக்குத்தொண்டைத்தண்ணி எல்லாம் வத்திப் போச்சு! பேசக் குரலே வரலை
“அது வ… வந்து மஹாராஜா! இது எதிர்பாராம நடந்துவிட்டது. காட்டில் சுள்ளிப் பொறுக்க மாணவர்கள் சென்றபோது திடீரென ராட்சசன் வந்து இளவரசியை கடத்திப் போய்விட்டு இருக்கிறான்…”
“குருவே! உங்களிடம் கதை கேட்க நான் வரவில்லை! என் மகளுக்கு 15வது வயதில் கண்டம் இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியும்தானே? அப்படி இருந்தும் நீங்கள் அசட்டையாக இருந்து ராட்சசனிம் அவளைச் சிக்க வைத்துவிட்டீர்கள்! இதற்கு என்ன தண்டனை தெரியுமா? இளவரசியை கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த உமக்கு மரண தண்டனை விதிக்கலாம் தெரியுமா? என் ஒரே மகள்! அவள் அந்த ராட்சதனிடம் சிக்கி என்ன பாடுபடுகிறாளோ? உம்மைச் சும்மா விடமாட்டேன். பாதாளச் சிறையில் அடைத்து உம்மை சித்திரவதை செய்வேன்!”
“மன்னா! கொஞ்சம் பொறுமை கொள்ளுங்கள்! என்னைச் சிறையில் அடைப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை! தங்கள் மகளை மீட்க ஏதேனும் வழி இருக்கிறதா யோசிப்போம்.”
“ஓ அதைக்கூட இனிமேல்தான் யோசிக்கப் போகிறீங்களா?அதற்கும் நேரம் காலம் எல்லாம் பார்த்து பொறுமையாக நீங்கள் திட்டம் தீட்டுவதற்குள் ராட்சசன் என் மகளை கொன்றுவிடுவான் உம்மை என்ன செய்வது என்றே தெரியவில்லை!” மன்னர் கோபமாகக் கத்தினார்.
அப்ப அந்த குரு குலத்தில் மரத்தில் இருந்த ஒரு பச்சைக்கிளி பேச ஆரம்பிச்சது. ”மன்னா! ராட்சசன் உங்கள் மகளை கடத்திட்டு போகனுங்கிறது விதி! அதுக்கு குரு என்ன பாவம் செஞ்சாரு?” அப்படின்னு கிளி கேட்டுது.
கிளி பேசுவதைக் கேட்டு ராஜாவுக்கு இன்னும் ஆத்திரம் அதிகம் ஆயிருச்சு! ”அப்ப குரு சிறைக்கு போகணுங்கிறதும் விதி! அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது. நீ இப்படி அதிகமா பேசினா உன்னை கொன்னு போட்டுருவேன்! அதுவும் விதிதான்!”னு எரிஞ்சு விழுந்தாரு.
“மன்னா! உன் மகளை ராட்சசன் கடத்திட்டு போனதாலே ஆத்திரத்துல அறிவை இழந்து இப்படி பேசறே? குருவைச் சிறையிலே அடைப்பதாலே உன் மகளை விடுவிக்க முடியுமா? யோசிச்சு பாரு! அப்படின்னுச்சு கிளி.
“ஏய் கிளியே! என் கோபத்தைக் கிளறாதே! இந்த குரு என் மகளை பாதுகாக்கத் தவறிவிட்டார் அது உனக்குத் தெரியவில்லையா?”
“மன்னா! சில விஷயங்கள் எல்லோரையும் மீறி நடக்கின்றன. அவற்றை தெய்வங்களால் கூட தடுக்க முடியாது! அப்படி தெய்வங்களாலேயே முடியாத செயலை குருவால் செய்ய முடியுமா? அவர் பாடங்களை போதிப்பவர் மட்டுமே! அவரால் ராட்சதனைக் கொன்று உங்கள் மகளை காப்பாற்றியிருக்க முடியுமா? இது நிகழவேண்டும் என்பது ஏற்கனவே தீர்மாணிக்கப்பட்டுவிட்டது. அதை மீறி யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. கொஞ்சம் நிதானமாக யோசித்து பாருங்கள்!” என்று சொல்லிச்சு கிளி.
மன்னன் ஆத்திரத்தை கைவிட்டு யோசிக்க ஆரம்பித்தான். “கிளியே நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன். அநியாயமாக குருவைத் தண்டிக்க நினைத்தது என் தவறுதான். எப்படியோ… நடந்தது நடந்துவிட்ட்து இனி என் மகளை மீட்க வேண்டிய பணிகளைத் துவக்க வேண்டும் அதுவே சரியானது. தக்க சமயத்தில் என் தவறை சுட்டிக் காட்டினாய் உனக்கு நன்றி! குருவே, என்னை மன்னித்துவிடுங்கள்! ஆத்திரத்தில் அறிவிழந்து ஏதேதோ பேசிவிட்டேன்.” என்று குருவிடம் மன்னிப்பு கேட்டான் மன்னன்.
அப்போது கிளி சொன்னது, “ராஜா! அந்த கோமேதகக் கோட்டை இருக்கிற இடம் இந்த குருவிற்குத் தெரியும். . குருவோட பிள்ளை வித்யாதரன் நல்ல அறிவாளி! அதோட வீரனும் கூட! அவனுக்கு ஒரு கப்பலையும் சில படை வீரர்களையும் கொடுத்து உதவுங்கள்! நானும் அவனுக்கு உதவுவேன். நாங்க ரெண்டு பேரும் போய் இளவரசியை மீட்டு வரோம். அது வரைக்கும் அந்த ராட்சசன் கேக்கறதை எல்லாம் செய்து கொடு!” அப்படின்னு சொல்லுச்சு கிளி.
“அப்படியா? ஆனால் வித்யாதரன் எங்கே இருக்கான்? அவனை இதுவரை நான் பார்த்த்தே இல்லையே?” என்று கேட்டார் ராஜா. ‘‘இங்கேதான் உங்கள் கண் எதிரே இருக்கிறான் மஹராஜா”ன்னு சொன்ன கிளி அப்படியே சுருண்டு விழ, ஆசிரமத்தின் உள்ளே இருந்து வித்யாதரன் வெளிப்பட்டான்.
மன்னன் ஆச்சரியத்தில் உறைந்து போனான். “குருவே இவன் தான் தங்கள் மகன் வித்யாதரனா? இதுவரை பேசிக்கொண்டிருந்த கிளிக்கு என்ன ஆயிற்று?” என்று குருவைப் பார்த்து கேட்டார் மஹாராஜா.
“அதற்கு நான் பதில் சொல்கிறேன் அரசே!” என்ற வித்யாதரன், “கிளி சொன்ன குருவின் மகன் நான் தான். என் பெயர் வித்யாதரன் என்பதையும் தாங்கள் அறிவீர்கள். கிளியின் உடலில் இருந்து உங்களுடன் பேசிக்கொண்டிருந்ததும் நான் தான்.” என்றதும் மன்னர் முகம் பிரகாசம் கொண்டது.
“அப்படியானால் உனக்கு…?” என்று அவர் கேட்குமுன்னரே, “கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரியும்” என்று பதிலுறுத்தான் வித்யாதரன்.
“இந்த இளவயதில் இந்த வித்தையை பயின்று ஜெயித்திருக்கிறாய் என்றால் நீ வித்தைக்காரன் தான். ஆனால் வெறும் அறிவு மட்டும் ராட்சதனை வென்றுவிடுமா? அல்லது கூடுவிட்டு கூடுபாயும் ஓர் கலையால் அந்த அரக்கனை வென்றுவிடத்தான் முடியுமா?” மன்னர் கேட்க…
“அவநம்பிக்கை கொள்ளாதீர்கள் மன்னா! ஒரு சிறு துரும்பு கூட பல் குத்த உதவும் என்கிறது ஓர் பழமொழி. வேடனின் வலையில் சிக்கிக் கொண்ட பலசாலி சிங்கத்தை விடுவித்தது பலம் குன்றிய சிறு சுண்டெலிதானே?” என்று கேட்டான் வித்யாதரன்.
“அதெல்லாம் சரிதான்! ஆனால் பலம் கொண்ட அந்த அரக்கனை வெல்லக் கூடிய திறன் உனக்கு இருக்கிறதா என்று நான் சோதித்து அறிய வேண்டும். என் படையில் இருந்த பல அதிபலசாலிகளை ஒரே வாயில் விழுங்கி ”சுவாகா” செய்துவிட்டான் அந்த அரக்கன். அப்படிப்பட்டவனை வெல்லக் கூடிய திறமை உனக்கு இருக்கிறதா என்று நான் சோதித்து அறிய வேண்டும். அப்புறம்தான் உன்னிடம் என் மகளை மீட்டுவரும் பொறுப்பினை தர முடியும்.”
“அதுவும் சரிதான்! அறிந்து தெரிந்து ஆராய்ந்து முடிவு எடுப்பதுதான் அரசருக்கும் அழகு. வள்ளுவப் பெருமானும் இதை ஓர் குறளில் சிறப்பாக எடுத்துச் சொல்லியுள்ளார்.”
“வள்ளுவப் பெருமானா? யார் அவர்?”
“அவர் குமரிக்கண்டத்தில் வாழும் ஓர் புலவர். திருக்குறள் என்னும் ஈரடி வெண்பாக்களை எழுதியிருக்கிறார். மொத்தம் 133 அதிகாரத்தில் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். மனிதனுக்கு வேண்டிய நீதி நெறிக் கருத்துகள் அனைத்தும் அதில் உள்ளது.”
“அப்படியா? அவர் கூறியது என்ன?”
“படை எடுத்துச்செல்கையில் தன் பலத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மாற்றானின் பலத்தையும் அறிந்து அதற்கேற்ப போர் தொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.”
“சரியாகவே சொல்லி உள்ளார். இப்போது நான் உனக்கு ஓர் தேர்வு வைக்கப் போகிறேன். இந்த தேர்வில் நீ எப்படி ஜெயிக்கப் போகிறாய் என்று பார்க்கிறேன். அது உன் அறிவுக் கூர்மையை எனக்கு உணர்த்தும். அதில் நீ வென்றதும், அடுத்த தேர்வு உனக்கு காத்திருக்கும். இப்படி மூன்று தேர்வுகளில் நீ வென்ற பிறகு உனக்கு தேவையான படைக்கலங்களையும் கப்பலையும் படை வீரர்களையும் நான் தருவேன். அவற்றைக் கொண்டு நீ ராட்சதனை வென்றுவரவேண்டும்.”
“ராட்சதனைச் சந்திக்கும் முன் நான் உங்கள் தேர்வுகளில் ஜெயிக்க வேண்டும்… அவ்வளவுதானே..? நான் தயார். உங்களது முதல் தேர்வு என்ன? சொல்லுங்கள்…” என்று பரிட்சைக்குத் தயாரானான் வித்யாதரன்.
4 Comments
விறுவிறுப்பு. வெகு நாட்களுக்குப் பின் குழந்தைக் கதை படிக்கிற சுவரசியம்.
வாழ்த்துகள்
அருமையான நடை.சிறுவர்கள் மட்டும் அல்ல.பெரியவர்களின் இளமை வாழ்க்கையை அசை போட வைக்கிறது. வித்யா தரன் நிச்சயமாக இளவரசி யை மீட்பான்.
13 1…4 வயசுக்கு பிறகு 60 வயசுல இப்பொழுது சிறுவர்கதை வாசிக்கிறேன். படிக்க சுவாரசியமாக உள்ளது.. ஜமாய்ங்க நத்தனாரே…
மாணவர்களுக்கு தேர்வு நேரம்… கதையிலும் தேர்வு நேரம்.. செம கோஇன்ஸிடன்ஸ்…
ஜூனியர் தேஜ்
நல்லா இருக்கு சுரேஷ். வாழ்த்துகள்