கால், அரை, முக்கால், முழுசு | 3 | காலச்சக்கரம் நரசிம்மா
3.CEO வீசிய வெடிகுண்டு
சற்றுப் பருமனாக இருந்த எச்.ஆர். அதிகாரி சஞ்சனாவைப் பின்தொடர்ந்து நடந்தனர், கருப்பு அசுரர்கள் நால்வரும்.
”மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி இல்லையா..? அதுதான் ரொம்பவே ‘வளமா’ இருக்கிறாள்..!” –தினேஷ், ரேயானிடம் முணுமுணுக்க, அவன் ‘ஹோ’ என்று சிரிக்க, சஞ்சனா நின்று திரும்பி ஆத்திரத்துடன் முறைத்தாள்.
”இது உங்க பிரம்மச்சாரிங்க தங்கற லாட்ஜ் இல்லை. பெரிய மீடியாக் கம்பெனி..! உரக்கப் பேசிச் சிரிக்கக் கூடாது. மைண்ட் யுவர் மானேர்ஸ்.” –என்று அதட்ட, கருப்பு அசுரர்கள் கடுப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
”ரொம்பதான் துள்ளறா..! முதல் போணி இவதான்..!” –கார்த்திக், நண்பர்களிடம் கிசுகிசுத்தான்.
கான்பரன்ஸ் ரூம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வட்ட மேஜை, அதன் பின்னாடி, தயாரிக்கப்படும் நிகழ்ச்சி களை காண்பதற்கு வசதியாக ஒர் வெள்ளை திரை, பிரிட்ஜ், டிவி, போன் என்று சகல வசதிகளுடன் காணப்பட்டது.
”என்கிட்டே ஜோக் அடிச்ச மாதிரி, CEO கிட்டே ஜோக் அடிக்காதீங்க. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க..! அவரு கோபக்காரர்..!” -சஞ்சனா அறிவுரை கூற, அவளை மீண்டும் நக்கலாகப் பார்த்தான் தினேஷ்.
”நான் எல்லார்கிட்டேயும் ஜோக் அடிக்க மாட்டேன், அஞ்சு.! இல்லல்லே… மஞ்சு… இல்ல..ல்லே…. சஞ்சு….! தன்னைப் பத்தியே பேசிப் புகழ்ந்து போராடிக்கிறவங்க கிட்டேதான் நான் ஜோக் அடிப்பேன்..!” –என்றதும், மற்றவர்கள் சிரிக்க, சஞ்சனா கோபத்துடன் அவர்களை வெறித்தாள்.
”மேல் சாவினிஸ்ட் ஃபிக்ஸ்..! மேனர்லஸ் ப்ரூட்ஸ்” –என்று கூறியபடி சஞ்சனா கோபத்துடன் வெளியேறினாள்..!
”நமது ‘கருப்பு அசுரர்கள்’ -என்கிற டார்க் டெமன்ஸ் இயக்கத்தின் முதல் வெற்றி, உள்ளறை அலங்கார நிபுணி, நீரூற்று நாயகி, ஹாத்தி மேரா சாத்தி-ஜி செல்வி சஞ்சனாவின் வெளிநடப்பு..!” –தினேஷ் கூற, மற்றவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, அப்போது கம்பீரமான ஒரு வாலிபன் கான்பரன்ஸ் அறையின் உள்ளே நுழைந்தான்.
”என்ன கலாட்டா இங்கே..? லெட் மீ என்ஜாய் தி ஜோக்..!” –என்றபடி டிரினிட்டி டிவி CEO பிரதீப் நஞ்சுண்டன், உள்ளே மிடுக்குடன் நடந்து வந்து, அவர்களது கைகளை பற்றி குலுக்கினான்.
”ஒண்ணுமில்லை சார்..!” –கார்த்திக் தயங்கினான்.
”நோ சார்..! கால் மீ பிரதீப்..! நீங்க ஜோக் என்னன்னு சொன்னீங்கன்னா, நானும் ரசிப்பேன்.! எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!” –என்றவுடன், தினேஷ் பட்டென்று சொல்லி விட்டான்.
”மிஸ்டர் பிரதீப்..! எச்.ஆர். டிபார்ட்மென்ட் சஞ்சனா எங்க கிட்டே ரொம்ப கோபமாப் பேசினாங்க. தன்னுடைய இன்டீரியர் டெக்கரேஷன் பத்தி ரொம்பவே பீத்திக்கிட்டு, போர் அடிச்சுகிட்டு இருந்தாங்க. வரவேற்பறையில் உங்க தாத்தா படத்துக்கு முன்னாடி இருக்கிற நீரூற்று எப்படி இருக்குனு கருத்து கேட்டாங்க. நான் அவஙக கிட்டே ‘நீருற்றைத் தள்ளி வையுங்க. தாத்தா உச்சா போற மாதிரி இருக்கு’ன்னு சொன்னேன்! அவங்களுக்குக் கோபம் வந்திருச்சு.” என்றதும், பிரதீப் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கினான். வெகு நேரம் சிரித்துவிட்டு, தனது கர்சீப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
”ப்ரெண்ட்ஸ்..! யு நோ வாட்..? எனக்குக்கூட அந்தத் ஐடியா பிடிக்கலை..! நான் ஏதோ ராயல் பேமிலின்னு பீத்திக்கிறா மாதிரி இருந்தது. பட் இந்த ஷோவெல்லாம் இந்தக் காலத்துல வேண்டியிருக்கு. ப்ரெண்ட்ஸ்..! நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இது கார்ப்பரேட் ஆபிஸ்தான்..! ஆனால் நம்ம தொழில் கிரியேட்டிவ் தொழில். கிரியேடடிவ் தொழிலில் இருக்கிறவங்க, எப்போதும் ஜாலியா சிரிச்சுக்கிட்டே இருக்கணும், அப்பத்தான் கற்பனை ஊற்று பெருகிக்கொண்டே இருக்கும். கிரியேட்டிவ் தொழிலில் இருக்கிறவங்களை, கார்ப்பரேட் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வைக்க முடியாது. ஃபீல் அட் ஹோம்..! நான் உங்க நண்பன், அவ்வளவுதான்..! . சிஇஓன்னு விசேஷ மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். நான் உங்களை நல்லா பார்த்துப்பேன். கிடைக்கிற லாபத்தை நாம எல்லோரும் சேர்ந்து பங்கு போட்டுப்போம். ஆனா ஒண்ணு… ட்ரினிட்டி டிவிக்கு சவால்கள் இல்லாம இல்ல. நமக்கு சாமர்த்தியம் மிக்க எதிரிகள், போட்டியாளர்கள் இருக்காங்க. அதுக்குதான், புதிய திறமைகளை நான் உள்ளே கொண்டு வந்திருக்கேன். நமக்கு போட்டியாளர் யுரேனஸ் டிவி னு உங்களுக்கு தெரியும்.” –பிரதீப் அவர்களின் கண்களை நோக்கினான்.
”எஸ் பிரதீப்…! வீ நோ..! எனக்கு அங்கேயும் ஜாப் கிடைச்சது. நான் வேண்டாம்னு உங்க கம்பெனியை சூஸ் செஞ்சேன்..!” –ஆதர்ஷ் கூறினான்.
”அப்படியா..? யுரேனஸ் டிவி வேண்டாம்னு ஏன் முடிவு செஞ்சீங்க..?” –புருவத்தை நெறித்தான், பிரதீப்
”பிரதீப்..! என்னால் பெண்களை சகிச்சுக்க முடியாது.! யுரேனஸ் டிவி தலைவர் ஷாலினி ஷர்மா ஒரு பெண். அதன் சி.இ.ஓ. நிரஞ்சனா நரேஷ்குமார் ஒரு பெண். அதனால்தான் இங்கே வந்தேன். ஒரு இளம் வயது, எங்க தலைமுறையை சேர்ந்த சி.இ.ஓ-வான உங்க கிட்ட நான் உற்சாகமாக வேலை பார்க்க முடியும், பிரதீப்..!” –ஆதர்ஷ் சொல்ல, பிரதீப் சிறிது நேரம் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
பிறகு நான்கு பேரையும் கண்களால் அளந்தபடி பேசத் தொடங்கினான் .
”மிஸ்டர் கார்த்திக் வாசுதேவன்..! நீங்க செய்திகள், அரசியல் நிகழ்ச்சி நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பு எடுத்துக்கங்க. மிஸ்டர், ஆதர்ஷ், நீங்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிர்வாக தயாரிப்பாளர். சினிமா, சின்னத்திரை, பேட்டிகள், டூரிஸ்ட் நிகழ்சசிகள் அதை பார்த்துக்கங்க. மிஸ்டர் ரேயான் தங்கபாண்டியன், நீங்க கிராபிக்ஸ் துறையின் தலைவர். மிஸ்டர் தினேஷ்..! நீங்க எடிட்டிங் துறையின் தலைவர். எடிட்டிங் துறைங்கிறதால உங்க ஜோக்ஸ் எதையும் எடிட் செய்ய வேண்டாம்..! ஐ எஞ்சாய்ட் யுவர் ஜோக்..! ஐ திங்க்… தட்ஸ் ஆல் பார் நவ்..!! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நான்கு மணிக்கு இந்த கான்ஃபெரென்ஸ் ரூம்ல நாம மீட் பண்ணலாம்..! உங்க பிரச்சனைகளை அப்ப என்கிட்ட சொல்லலாம்..! நான் ஊர்ல இல்லன்னா உங்களுக்கு தகவல் சொல்லிடுவேன்.” — என்றபடி நான்கு பேரின் செல் நம்பர்களையும் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டான், பிரதீப்.
”பை தி வே..! நீங்கள் எல்லாம் வெளியூரிலிருந்து வந்திருக்கிறதால , ஆபிஸ் உங்களுக்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செஞ்சிருக்கு. திருவான்மியூர்ல மூன்றாவது ஸீவார்ட் ரோட்ல ஒரூ நாலு பெட்ரூம் பிளாட் லீசுக்கு எடுத்திருக்கோம். ஆளுக்கு ஒரு ரூம்ல தங்கிக்கலாம் . ஆபிஸ் வில் பே தி ரெண்ட்..! நீங்க நாளைக்கே ஜாயின் பண்ணிடலாம் ! மிஸ் சஞ்சனா உங்க கிட்டே விவரங்களை சொல்லுவாங்க..!” -என்றதும், நான்கு பேருக்கும் உற்சாகம் பிடிபடவில்லை.
பிரதீப்புக்கு நன்றியை தெரிவித்துவிட்டு, நால்வரும் விடைபெறறுக்கொண்டு, அறையை விட்டுக் கிளம்புவதற்காகக் கதவை நெருங்கி, அதனைத் திறந்தபோது, பிரதீப்பின் குரல் அவர்களை தடுத்தது.
”பை தி வே, ப்ரெண்ட்ஸ்..! முக்கியமான ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்..! உங்கள் மேல் அதிகாரி நாளைக்கு ஜாயின் பண்றாங்க. நீங்க நாலு பேரும் அவங்ககிட்டேதான் ரிப்போர்ட் செய்யணும். அவங்கதான் டிரினிட்டி டிவி-யின் தென்னிந்திய பகுதிக்கு கிரியேட்டிவ் ஹெட்.! நீங்க தயாரிக்கிற நிகழ்ச்சிகளுக்கு அவங்களோட சம்மதம் முக்கியம். அவங்க மைசூர்லேர்ந்து வந்துகிட்டு இருக்காங்க. அவங்க பெயர் மிஸ் கங்கணா ஆனந்த் ” என்றதும், நால்வரும் அதிர்ச்சியுடன் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.
அவர்களுடைய உற்சாகம் எல்லாம் வடிந்து, பேய் அறைந்தவர்கள் போல நின்று பிரதீப்பை வெறித்தனர்.
‘மிஸ்டர் பிரதீப்..! இதை நீங்க முன்னாடியே சொல்லி இருந்தீங்கன்னா, நான் இந்த வேலையை ஏத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்.” –கார்த்திக் ஏமாற்றத்துடன் கூற, ஆதர்ஷும் தனது பங்குக்கு பிரதீப்பிடம் வேண்டுகோள் விடுத்தான்.
”பிரதீப்..! பழைய ஆபிஸ்ல பெண்களால் எனக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கு. ஐ வாண்ட் டு அவாய்ட் வுமன்..!”
”லுக் ஹியர் மிஸ்டர் பிரதீப்..! எங்களுக்கு வர்ற மேல் அதிகாரி ஒரு மேலா இருந்தா மேல்.” ரேயான் கூற, அவர்களை விசித்திரமாகப் பார்த்தான், பிரதீப்.
”வாட்ஸ் யுவர் பிராப்ளம்..? சிஇஓ-வாக இருந்தாலும், நமக்குள்ள பேதம் கிடையாது,. நாமெல்லாம் நண்பர்கள்ன்னு நான் சொன்ன மாதிரி தானே இதுவும்..? இந்த சீனியர், ஜூனியர், ஆண், பெண் பேதமெல்லாம் டிரினிட்டி டிவியில் கிடையாது. எல்லோரும் ஊழியர்கள். எல்லோரும் கல்லீக்ஸ்..! எல்லோரும் நண்பர்கள்..!” –பிரதீப் கூறினான்.
”இல்லை பிரதீப்..! நான் உங்க கருத்துல இருந்து. மாறுபடறேன். வொர்க் ஸ்பாட்டுல வேலையைப் பத்தி மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கணும்.! பழைய ஆபிஸ்ல நான் நிறைய அனுபவிச்சு இருக்கேன். வேலைக்கு வந்த பிறகு, கலீக்ஸ் கிட்ட தனிப்பட்ட முறையில் எமோஷனலா அட்டாச் ஆகிறது, காதல் கத்திரிக்காய்ன்னு ஜோடி தேடறது, பெண்ணியம் பேசறது, லிப்டுல தனியா போக நேர்ந்தா கூட இருக்கிறவன் எதையாவது செஞ்சுடுவானோன்னு, ஓரக்கண்னால் பார்த்துகிட்டு, புடவை பல்லுவையும், துப்பட்டாவையும் அட்ஜஸ்ட் செஞ்சுக்குறது, சம உரிமை பேசிட்டு, நைட் ஷிப்ட்ன்னா பெண்கள்ன்னு சொல்லி பின்வாங்கறது… இந்த மாதிரி நிறையப் பார்த்திருக்கிறேன். ஆபிஸ்ல ஹராஸ்மென்ட் கமிட்டின்னு ஒரு கமிட்டியை வச்சு பெண்கள் எதைச் சொன்னாலும் அதை வேத வாக்கா எடுத்துக்கிட்டு, ஆம்பிளைங்களை சித்ரவதை செய்யறதே பிழைப்பா போச்சு..! ஆபிஸ்ன்னா Professional-சம் இருக்கணும். பெண்கள் கிட்ட அதை எதிர்பார்க்க முடியாது. இப்ப தினேஷ் ஒழுங்கா வேலை செய்யலைன்னா என்னால அவரைத் திட்ட முடியும். ஆனா ஒரு பெண்ணைத் திட்ட முடியாது. திட்டினா, செக்ஷுவல் ஹராஸ்மென்ட் னு சொல்லுவாங்க. ! அதனால்தான் சொல்றேன்..! எங்களுக்கு மூவிங் ஸ்பேஸ் வேண்டும்..! எங்களுக்கு பெண் பாஸ் வேண்டாம்.” –ஆதர்ஷ் தீர்மானமாகக் கூறினான்.
”இதோ பாருங்க ஆதர்ஷ்.! உங்களை மாதிரி நானும் பல பெண்களால பாதிக்கப்பட்டிருக்கேன்..! என்னோட காதலி அனிதா, நான் இல்லாம வாழ மாட்டேன்னு சொல்லிக்கிட்டிருந்தவ, ஒரு நாள் ஏதோ டிவி நிகழ்ச்சியில் நடிகர் அனீஷ்ஷோட பங்கேற்று இருக்கா. அவனுக்கு அவளை ரொம்பப் பிடிச்சு போய், ‘ஐ லவ் யு’ சொல்லிட்டான். சினிமா கிளாமர்..! ஒரு நடிகரே தன்கிட்ட ‘ஐ லவ் யு’ சொன்னதும், அவளுக்கு நான் சின்னவனாப் போயிட்டேன். பணம் இருந்தாலும், எனக்கு கிளாமர் இல்லையே..! ‘உனக்கு சமைச்சு போட்டுக்கிட்டு பொண்டாட்டியா இருக்க முடியாது. ஐ ஆம் பிரேக்கிங் அப் வித் யு’ன்னு –பர்கா தத் பிரேக்கிங் நியூஸ் சொல்ற மாதிரி, சொல்லிட்டுப் போய்கிட்டே இருந்தா..! அதுக்கப்புறம் அனீஷ்ஷை கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு வருஷம் தான் சந்தோஷமா இருந்தா..! அனீஷ்க்கு மார்க்கெட் போச்சு..! இப்ப சானிடைசர் விளம்பரத்துல நடிச்சுக்கிட்டு இருக்கான். அனிதா என்கிட்டே வந்து வேலை கேட்டாள்..! ‘வேலை எல்லாம் தர முடியாது. வேணுமின்னா, குக்கரி க்ளாஸ் நடத்திக்கோ…’ னு சொன்னேன்..! எனக்கு சமைச்சுப் போட்டு பொண்டாட்டியா இருக்க முடியாதுன்னு சொன்னவ, இப்ப என் டிவி-யில சமையல் க்ளாஸ் நடத்திக்கிட்டு இருக்கா!. எனக்கு அந்தத் திருப்தி போதும். மத்தபடி அவளை பழி வாங்கணும்னு நான் நினைக்கவில்லை..! நமக்கான பொறுப்புகள் அதிகமா இருக்கு, ஆதர்ஷ்.! பெண்களோட சரிசமமா இறங்கி மல்லுக்கு நிற்க முடியாது ! கூடவும் கூடாது..!” –பிரதீப் சமாதானம் செய்தான்.
”இல்லை பிரதீப்..! நீங்க எவ்வளவு விளக்கம் சொன்னாலும், எங்களால பெண்களோட நிம்மதியா வேலை பார்க்க முடியாது. பெண்கள் உணர்ச்சி பிழம்புகள். அவங்க சிரிக்கறப்ப சிரிச்சுக்கிட்டு, கோபப்படறப்ப பம்மிக்கிட்டு, அழும் போது ஆறுதல் கூறிட்டு எல்லாம் ஆபிஸ்ல இருக்க முடியாது. பெண்கள் எதையும் தங்களை மையமா வச்சுச் சிந்திப்பாங்க..! .வீட்டுல கணவன் சரியில்லைன்னு பத்மாவதி-ங்கிற என்னோட கணக்கு டீச்சர், பையன்களையெல்லாம் போட்டு பிரம்பால் அடிப்பாங்க.! இதே பெண்டாட்டி சரியில்லாத தமிழ் வாத்தியார், பெண் மாணவிகள் கிட்ட மரியாதையா நடந்துப்பார். ஆண்களுக்கு இருக்கும் பொறுமை, விவேகம் பெண்களுக்கு கிடையாது..!” –கார்த்திக் கூறினான்.
ரேயான் ஒருபடி மேலே போய் சற்றுக் காட்டமாகச் சொன்னான். ”பிரதீப்..! என் அம்மா தற்கொலை பண்ணிகிட்டத்துக்கு காரணமே, என் அப்பாவோட ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஒரு விதமா டைப் அடிச்சு, அவரை வளைச்சுக் கட்டிகிட்டதாலதான். என்னை என் அப்பாவோட பேசவே விட மாட்டா அந்த ராட்சசி! லேடி பாஸ் கிட்டேதான் நாங்க வேலை பார்க்கணும்னு சொன்னீங்கன்னா, நாங்க இப்பவே கிளம்பறோம்” -ரேயான் சொல்ல, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த பிரதீப், முன்பாக வந்து, டேபிளின் மீது தனது இரு கைகளையும் ஊன்றி , தனது முகத்தை இரு உள்ளங்கைகளில் பதித்தான்.
”ஆண், பெண் உறவு குடும்பத்துல ஒரு மாதிரி இருக்கலாம், காதல்ல ஒரு மாதிரி இருக்கும். ஆனா ஆபிஸ்ல ஆண், பெண் உறவுங்கிறது, ஈஎம்யு மின்சார ரயில் மாதிரி இருக்கணும். தாம்பரத்துக்கு போறப்ப இன்ஜினாச் செயல்படும் பெட்டி, திரும்பி பீச் ஸ்டேஷன் போறப்ப, கடைசியில இருக்கும். அதுவரைக்கும் கடைசிப் பெட்டியா இருக்கிறது இஞ்சினா ரயிலை இழுத்துக்கிட்டு போகுது..! அது போலத்தான் ஆண், பெண் கலீக்ஸ் வேலை பார்க்கணும்..!” –பிரதீப் கூறினான்.
”நோ சான்ஸ் பிரதீப்..!” –கார்த்திக் கண்களில் உறுதி கொப்புளிக்க அவனை நோக்கினான்.
”நாங்க மெட்ரோ ரயில் போல ஓட விரும்பறோம், பெண்கள் மேலே இருந்தா, நாங்க அண்டர் கிரவுண்டுல ஓடுவோம். பெண்கள் அண்டர் கிரவுண்டில் இருந்தா நாங்க, உயரே பயணிப்போம்..! ஐ ஆம் சாரி..! நீங்க உங்க எண்ணத்தை மாத்திக்கலேன்னா, நாங்க புறப்படறோம்” –கார்த்திக் கூற, அவர்கள் பிடிவாதமாக இருப்பதை உணர்ந்தான், பிரதீப். கடைசியாக ஒரு அஸ்திரத்தை பிரயோகம் செய்தான்.
”ஆதர்ஷ்..! ரெண்டு மாசம் வேலை செஞ்சு பாருங்க. மிஸ் கங்கணா ஆனந்த்-தை விட நீங்கள் திறமைசாலி ன்னு நிரூபிச்சிட்டீங்கன்னா , நான் அவங்களை அந்த பதவியிலிருந்து நீக்கிட்டு, உங்களை கிரியேட்டிவ் ஹெட்டா நியமிக்கிறேன். ஜஸ்ட் டூ மந்த்ஸ்..!” –பிரதீப் சொல்ல, ஆதர்ஷ் உத்வேகத்துடன் எழுந்தான்.
”ஓகே பிரதீப்..! உங்க நிபந்தனையை நாங்க ஏத்துக்கறோம். இரண்டு மாசம் கூட வேண்டாம்..! ஒரு மாசத்திலேயே நான் ப்ரூவ் பண்ணிக் காட்டறேன். எனக்கு வரப்போற பெண் பாஸுக்கு திறமை கிடையாதுன்னு..!” –என்றபடி பிரதீப்பின் கையை மீண்டும் குலுக்கிவிட்டு, நால்வரும் வெளியேறினர்.
4 Comments
Very interesting
Very interesting story
Wow… Heating up
சவாலே சமாளி!ன்னு வேலையிலே சேர்ந்தாச்சு! அடுத்து என்ன நடக்குமோ?