தமிழ்த் தாத்தா உ.வே.சா. நினைவு நாள் கட்டுரை

 தமிழ்த் தாத்தா உ.வே.சா. நினைவு நாள் கட்டுரை

திரு.ஜெயபால் இரத்தினம் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. வும் பெரம்பலூரும்’ என்கிற ஆய்வு நூல் உ.வே.சா.வைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள படிக்கவேண்டிய சிறந்த நூல். இந்த நூல் பெரம்பலூர் மக்கள் மட்டுமின்றி எல்லா ஊர் மக்களும் படித்துப் பாதுகாக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலுக்காக நூலாசிரி யர் திரு.ஜெயபால் இரத்தினம் எழுதிய முன்னுரையின் சுருக்கம் இங்கே. பக்கங்கள் 160, விலை ரூ.150, வெளியீடு, விச்சி பதிப்பகம், 255DA / 57A முதன்மைச் சாலை, சாமியப்பா நகர், பெரம்பலூர்-621212, கைபேசி 9444361209.

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் மற்றும் தமிழக வரலாற்று மீட்பிற்குப் பெரும்பங்களிப்பு நல்கியவர் பேராசான் உ.வே.சா. பின்னாட்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்துப் பெரும் ஆலமரமாய் விரிந்திருந்த அவரது இளமைக்கால வாழ்க்கையும் ஆரம்ப கால அடிப்படைத் தமிழ்க் கல்வியும் பெரம்பலூர் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. அவர் இளந்தளி ராய், வளரிளம் பருவத்துச் சிறுவனாய் இருந்தபோது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பற்றுக்கோடாகவும் உரமாகவும் உயிர்நீராகவும் விளங்கியவர்கள் பெரம்பலூர் மக்கள்.

உ.வே.சா. தனது சுயசரிதையான ‘என் சரித்திரம்’ நூலில் தனது பெரம்பலூர் வாழ்க்கை குறித்த செய்திகளை மிக விரிவாகவும் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பதிவு செய்துள்ளார் உ.வே.சா.

‘என் சரித்திரம்’ நூலை வாசித்தவர்கள் இந்நூலின் தலைப்பைப் படிக்கும் போது அவர் பெரம்பலூரில் வாழ்ந்ததாக அந்நூலில் எந்தக் குறிப்பும் இல்லையே பின் எவ்வாறு இப்படிக் குறிப்பிடப்படுகிறது என்று புருவம் உயர்த்தலாம். இதில் குழப்பம் அடைய எதுவுமில்லை. தன் வரலாற்று நூலில் உ.வே.சா. குறிப்பிடும் குன்னம், கார்குடி, செங்குணம், காரை, வெண் மணி, களத்தூர், மறவநத்தம், இரஞ்சன்குடி, இலந்தங்குழி, அரும்பாவூர், துறைமங்கலம் மற்றும் வெங்கனூர் ஆகிய அனைத்து ஊர்களும் இன்றைய பெரம்பலூர் மாவட்டத்தில் அடங்கிய ஊர்கள்தாம்.

இந்த ஊர்கள் அனைத்தும் தலைப்பில் இடம்பெற வாய்ப்பில்லை. அதே நேரத்தில் ஏதாவது ஒரு தனிப்பட்ட ஊரை மட்டும் குறிப்பிடுவதும் பொருத் தமாக இராது. எனவே அனைத்து ஊர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுச்சொல் அல்லது பொதுக்குறியீடு தேவைப்பட்டது. அதுதான் பெரம் பலூர்.

தமிழ்த்தாத்தா

எண்பத்தியேழு ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த உ.வே.சா. தனது வளரிளம் பருவத்தில் சுமார் ஐந்து ஆண்டு காலம் தனது தாய், தந்தை யருடன் பெரம்பலூர் பகுதிகளில் வாழ்ந்துள்ளார். அந்த ஐந்தாண்டு கால வாழ்க்கைதான் அடுத்துவந்த காலங்களில் அவர் பெற்ற பெருமைகளுக் கெல்லாம் அடிப்படையாக அமைந்திருந்தன என்பதைத் தன் வரலாற்று நூலில் மிகத் தெளிவாக விவரிக்கிறார் உ.வே.சா.

உ.வே.சா. என்ற பேராளுமைக்கும் பெரம்பலூர் மக்களுக்குமான பிணைப்பு என்பது உணர்வுபூர்வமானது. அதனாலேயே ‘எண் சரித்திரம்’ நூலில் அங்கு கற்றதையும் பெற்றதையும் குறித்த அவரது பதிவுகள் பல இடங்களில் குதூகலமாகவும் சில இடங்களில் நெகிழ்வுடனும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

உ.வே.சா. குறித்து நூல் அல்லது கட்டுரைகள் எழுதுபவர்களும் சரி அவ ரைப் பற்றி உரையாற்றுபவர்களும் சரி அவரது இளமைக்கால வாழ்க் கையை விவரிக்கும்போது குன்னம் சிதம்பரம் பிள்ளை மற்றும் விருத் தாசல ரெட்டியார் ஆகியோரிடம் உ.வே.சா. பாடம் கேட்டார் என்ற அளவில் மேலோட்டமாக கடந்துவிடுகிறார்கள். அல்லது அதைக்கூட தவிர்த்து விடுவார்கள்.

‘என் சரித்திரம்’ மட்டுமல்லாது அவரால் வெளியிடப்பட்ட அவரது ‘நான் கண்டதும் கேட்டதும்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘வெங்கனூர் கோயிற் சிற்பம்’ என்னும் கட்டுரையும் பெரம்பலூர் வட்டாரப் பகுதிகளின் வரலாற் றுக்குப் பல அரிய  செய்திகளை அளிக்கின்றன.

இங்கு சில செய்திகளைப் பதிவிடுவது பொருத்தமானதாக இருக்கும். உ.வே.சா.வுக்கும் தங்களது முன்னோர்களுக்கும் உள்ள பிணைப்பை அறிந்த இங்குள்ள சிலர் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி திங்கள் 19ஆம் நாள் உ.வே.சா.வின் பிறந்த நாளினை பெரம்பலூர், குன்னம், கார்குடி, செங்குனம் ஆகிய ஊர்களில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் கார்குடி யில் (உ.வே.சா. கல்வி பயின்ற ஊர்களில் ஒன்று)  வாழும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ‘உ.வே.சா. நூலகம்’ என்ற பெயரில் அவ்வூரில் ஒரு நூலகத் தைப் புதியதாக உருவாக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறப்புற நடத்தி வருகின்றனர்.

சென்னை உ,வே.சா. நூலகம்

அரசு நூலகம் இல்லாத அவ்வூரில் இந்நூலகம் மக்களுக்கு குறிப்பாக இளை ஞர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பயனளிப்பதாக உள்ளது. பெரம்ப லூரில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியப் பணிகளைச் சிறப்புற மேற்கொண்டுவரும் ‘பதியம் இலக்கிய சங்கமம்’ அமைப்பு உ.வே.சா.வின் 167வது பிறந்த நாளை பிரம்மாண்ட விழா ஒன்றின் மூலம் கொண்டாடியது.

பல ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் வரலாற்று ஆய்வு உள்ளிட்ட பல்வேறு சிறப்புச் செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் திரு. ரமேஷ் கருப்பையா அவர்கள் சில ஆண்டுகளாகப் பல முன்னெடுப்புகள் வாயிலாக உ.வே.சா. பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இவர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு இயக்கமான ‘தமிழ்க்காடு துணிப்பை இயக்கம்’ உ.வே.சா. உருவப்படம் மற்றும் அவரது பெருமைகளை விளக்கும் வாசகங் களுடன் கூடிய துணிப் பைகளைத் தயாரித்து 167ஆவது பிறந்த நாளில் விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் பெரம்பலூரைத் தலைமையிடமாகக்கொண்டு பன்னாட்டு அளவில் இலக்கியப் பணிகள் மேற்கொண்டுவரும் ‘சங்க இலக்கிய ஆய்வு நடுவம்’ என்னும் அமைப்பு, ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. விருது’ என்ற பெயரில் ஒரு விருதினை நிறுவி, சிறப்பாகத் தமிழ்ப் பணியாற்றும் பதினைந்து அறிஞர் களைக் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பு செய்தது.

மற்றுமொரு சிறப்பு, இங்குள்ளவர்களின் வேண்டுகோளை ஏற்று தங்களது கல்லூரியில் உ.வே.சா. பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவ ரோவர் கல்விக் குழும தாளாளர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முதன்முதலில் ‘என் சரித்திரம்’ தொடர் கட்டுரைகளாகவே ’ஆனந்த விகடன்’ வார இதழில் (1940-1943) வெளிவந்தது. பின்னாட்களில்தான் அது ஒரு தொகுப்பு நூலாக மலர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெரம்ப லூர் வட்டார வரலாற்று வரைவுக்கான தரவுகளைத் தேடி அலைந்தபோது ‘என் சரித்திரம்’ கட்டுரைகள் வெளிவந்த ‘ஆனந்த விகடன்’ இதழ்களைப் பார்க்க விரும்பி, ’ஆனந்த விகடன்’ ஆசிரியரிடம் அனுமதி கோரினேன். உடனடியாக அனுமதி கிடைத்தது. கட்டுரைகளைப் பார்வையிட்டதுடன் அவற்றின் படிகளையும் பெற்றேன்.

‘அருளுறை நீலியம்மன் இரட்டை மணிமாலை’ என்ற துதிப்பாடல் தொகுப்பே உ.வே.சா. இயற்றிய முதல் நூல் என்ற பெருமைக்குரியது. இத்துதிப் பாடல்களின் ஒரு கண்ணி மட்டும் ‘என் சரித்திரம்’ நூலில் இடம் பெற்றுள்ளது. முழு நூலும் கிடைக்கப் பெறவில்லை. இந்நூல் குறித்த விவரங்கள் ‘என் சரித்திரம்’ வாயிலாகப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டிருந்தாலும் அதனைத் தேடும் முயற்சியில் இறங்கியபோது அது எளிதில் கைகூடவில்லை. காரணம் இந்நூல் தனியாக அச்சிடப் படவோ வெளியிடப்படவோ இல்லை என்பதுதான்.

நீண்ட தேடலுக்குப் பின்னர் கி.வா.ஜ. அவர்கள் தொகுத்த ‘தமிழ்ப்பா மஞ்சரி’ (பகுதி 2) என்ற தொகுப்பு நூலில் இச்செய்யுட்களும் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டு சென்னையிலுள்ள உ.வே.சா. நூல் நிலையத்தில் இந்த நூலின் படி பெறப்பட்டது. இந்நூலினைப் படியெடுக்க உதவிய உ.வே.சா. நூலகக் காப்பாட்சியர் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

மூலவன்

1 Comment

  • வாழ்ந்த வரலாற்றினை வாழும் வரலாறாகிய தாங்கள் முன்னெடுப்பதே சிறப்பு, அதனை வழிமொழிதல் எங்களுக்கும் பெருமை, இன்றைய சுவடுகள் நாளைய தடமாக மாறும்…

    பெருமைமிகு பெரம்பலூரிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...