பத்திரிகை உலக வரலாற்றுப் பெட்டகம் ஐ.சண்முகநாதன்
தினத்தந்தி பத்திரிகையின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்து அதன் வளர்ச்சி யில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள். அவருக்குத் தற்போது 88 வயது. அதை முன்னிட்டு அவரின் 80வது ஆண்டு மலரில் திரு. கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே.
பச்சை கோடு போட்ட பாலியஸ்டர் வேட்டியும், சந்தன வண்ண சட்டையுமாக பரிவும் கனிவும் அறிவுத் தெளிவும் நிறைந்த முகத்தோடு திகழும் அய்யா ஐ.சண்முகநாதன் அவர்களைப் பார்க்கும்போதே நமக்குள் இனம் புரியாத அன்பும் ஈர்ப்பும் ஏற்படும். மென்மையான, அதே நேரத்தில் வலிமையான எழுத்தும், அசாத்தியமான உழைப்பும் கூடவே, ஒழுக்கமும் நேர்மையும் பளிச்சிடுகிற வாழ்வும்…. அப்பப்பா… நிச்சயம் தமிழ்ப் பத்திரிகையுகின் அதிசயம் இவர்.
‘இப்படி எல்லாம் இருக்கமுடியுமா ?’ – எப்போது நினைத்து பார்த்தாலும் மனசு ஒரு நீண்ட பெருமூச்சைத்தான் பதிலாகத் தருகிறது. ‘இன்றைக்குத் தன்னைத் தலைப்புச் செய்தியாக்கமாட்டாரா’ எனத் தலைவர்களையும் முதலமைச்சர்களை யும் 40 ஆண்டுகள் தவம் கிடக்க வைத்தவர்.
இத்தனை எளிமையாக இருப்பது சாத்தியமா? கலாம் முதல் கலைஞர் வரை அத்தனை ஆளுமைகளாலும் மதிக்கப்பட்டாலும் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கமுடிகிறதே எப்படி? 60 ஆண்டுகாலத் தமிழக வரலாற்றின் நேரடி சாட்சியாக இருந்தும், அதையெல்லாம் அற்புத நூல்களாக வடித்த பிறகும் அணுவளவும் ஆர்ப்பாட்டம் இன்றி இருப்பது வரமா? தவமா?
ஒரே ஒரு தொடர் மூலம் பத்திரிகையின் விற்பனையைச் சில நாட்களிலேயே லட்சம் பிரதிகளுக்கு மேல் உயர்த்திவிட்டு, அந்த வரலாற்றுச் சுவட்டில் தன் பெயரைப் பதிய வைக்கக்கூட நினைக்காத ஒருவரைப் பார்க்க முடியுமா?
நாற்பதைத் தாண்டியதுமே நன்னம்பிக்கை தளர்ந்து போகிற மனிதர்களுக்கு மத்தி யில், எண்பதைத் தொட்ட பிறகும் ஓய்வில்லாமல் உழைக்கிற வைராக்கியத் திற்கு என்ன பெயர்?
எங்காவது ஓர் ஓரத்தில் ஒற்றை வரியில் தன் பெயர் வராதா எனத் தமிழர்களை ஏங்க வைக்கிற ‘நம்பர் ஒன்’ பத்திரிகையின் அத்தனை அங்குலங்களையும் அரை நூற்றாண்டு காலம் தீர்மானித்தவர், சொத்தாக சம்பாதித்தது நற்பெயர் மட்டுமே என்பது எவ்வளவு பெரிய அதிசயம்? இது எங்காவது நிகழுமா? அதிலும் விழுமி யங்களும் வாழ்வியல் நெறிகளும் மண்ணோடு, மண்ணாகிப்போகிற 21ஆம் நூற்றாண்டில் நடக்குமா? இதோ நம்கண்முன்னே நடக்கிறதே அந்த அதிசயம்.
இப்படியொரு அபூர்வ மனிதரின் அளப்பரிய அன்பு எனக்குக் கிடைத்தது பாக்கியம். அதிலும் ‘என் மகனைப் போன்றவர்’ என்று மற்றவர்களிடம் அவர் என்னை அறிமுகப்படுத்துவது நான் பெற்ற பெரும் பேறு.
புரசைவாக்கம் பண்டாரம் தெரு வீட்டில், அவரின் பத்துக்குப் பத்து அறையில் நான் கற்ற பாடங்கள் நிறைய. முழுக்க முழுக்க புத்தகங்களும் இதழ்களும் சூழ்ந் திருக்க, அங்கே மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். பத்திரிகை ஆசிரியராக விடிய விடிய விழித்திருந்து ‘தினந்தந்தி’யை ஆலமரமாக வளர்த்தெடுத்த காலத்து சம்பவங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
அச்சான பிரதிகளைக் கடைகளுக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டு, கென்னடி படுகொலையைத் தலைப்புச் செய்தி ஆக்கியதில் தொடங்கி, ராஜீவ்காந்தி சிதைக் கப்பட்டதைச் செய்தியாக்கப் பட்டபாடு வரையிலான சிலிர்க்க வைக்கும் வரலாறு.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதரில் ஆரம்பித்து, ரஜினி, கமல் காலம் தாண்டி இன்றைய அஜித், விஜய் வரையிலும் அதற்குப் பிறகு வந்தவர் களைப் பற்றியும் ஆயிரமாயிரம் செய்திகள்.
அரசியலில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு வந்தவர்களைப் பற்றியும் ஏராளமான தகவல்கள். இதேபோல இலக்கியம். இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை, வரலாறு களைக் கேட்டிருக்கிறேன். நடமாடும் கூகுளாகச் சம்பவங்களின் கால விவரங் களைத் துல்லியமாகச் சொல்வதைக் கேட்டு வியந்திருக்கிறேன்.
சுவாரசியம் என்னவென்றால், ஒவ்வொரு சம்பவத்தின் பின்னாலும் கொட்டிக் கிடக்கின்ற, இதுவரை எங்கேயும் பதிவாகாத செய்திகள் அதில் நிறைந்திருக்கும். நாம் படித்ததற்கும், கேட்டதற்கும் அப்பால் சத்தமில்லாமல் வரலாறு தனக் குள்ளே அடக்கிவைத்திருக்கும் ஆயிரமாயிரம் ரகசியங்களின் புதையலாக அவரைப் பார்த் திருக்கிறேன்.
ரோமக்கால்கள் குத்திட திகில் திரைப்படத்தைப் போல கேட்கக் கேட்கத் திகட்டா மல் நான் கேட்ட கதைகள் ஏராளம். அதிலும் சினிமாவையும் அரசியலையும் பற்றி ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு அவர் விவரிக்கும் அழகே அழகு.
வரலாறு மட்டுமின்றி, வாழ்க்கையைப் பற்றியும் நிறையவே பேசியிருக்கிறோம். வாழ்வில் அவர் சந்தித்த சோதனைகளையும் துயரங்களையும் பாடம் போல போதித்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்வில் வேறு யாராவது அவரளவுக்குத் துயரங்களைப் பார்த்திருந்தால் நொறுங்கி போயிருப்பார்கள். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு, பத்திரிகைப் பணியோடு தமிழ்ச் சமூகத்திற்குக் காலமெல்லாம் பயன்தரும் நூல்களைத் தந்திருக்கிறார்.
இவ்வளவுக்கும் அவரது பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதபோதும் அதற்காக வருத்தப்பட்டதில்லை. ஆலமர நிழலைப் போன்ற சூழலால் அவர் அழுத்தப்பட்டாலும் உழைப்பால், மனஉறுதியால் அவற்றை எளிதில் கடந்து ஒரு ‘ஜென்குரு’வைப் போல கடமையைச் செய்துகொண்டே இருக்கிறார்.
எல்லாருக்கும் பிடித்தவராக இருக்கும் அவருக்கு இளைஞர்களை மிகவும் பிடிக் கும். புதியவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பதிலும், எழுத்திலே அவர்களை மெருகூட்டுவதிலும், நன்றாக எழுதியவர்களை மனமார பாராட்டுவதிலே அவ ருக்கு நிகர் அவர்தான்.
தொலைக்காட்சி ஊடகவியலைப் பற்றி முதன்முதலாகத் தமிழில் வெளிவந்த என்னுடைய ஒரு நூலுக்கு அவர் கொடுத்த அணிந்துரையே அதற்குச் சாட்சி. அண்மையில் விகடனிலிருந்து வெளிவந்த தமிழகத்தை உலுக்கிய வழக்குகள் பற்றிய என் புத்தகத்தைப் படித்துவிட்டு, பழைய வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூர்ந்து நீண்ட நேரம் வாழ்த்தியதை மறக்கவே முடியாது.
நடமாடும் வரலாற்றுக் களஞ்சியமாக, கிடைத்தற்கரிய புதையலாக, அனுபவ பெட்டகமாக திகழும் அய்யா சண்முகநாதன், நூறாண்டுகளைக் கடந்தும் முழு உடல்நலத்துடன் வாழ்ந்திட வேண்டும். ஞானத் தந்தையாக எமை வழிநடத்திட வேண்டும்.
(தினத்தந்தியின் 50 ஆண்டு கால ஆசிரியர், திரு.ஐ.சண்முகநாதன் அவர்களின் 80வது ஆண்டு பிறந்தநாள் மலரில் கோமல் அன்பரன் அவர்கள் எழுதியது.)