முதலமைச்சர் பதவியை வெறுத்த தியாகச்சீலர் தியாகராயர்

 முதலமைச்சர் பதவியை வெறுத்த தியாகச்சீலர் தியாகராயர்

நீதிக்கட்சி முதல் அமைச்சரவை அமைத்தபோது முதல்வராக பதவியை ஏற்க விரும்பாதவர், பார்ப்பனர் அல்லாதார் கல்வி, அரசுப் பதவி மற்றும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கனா கண்டவர் வெள்ளுடைவேந்தர் சர் தியாகராயர்.

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவில் கால்ஊன்றி ஆட்சி யைப் பிடித்தான். ஆநிரை மேய்பவர்களாக வந்த ஆரியர்கள் நம் வாழ் வையே பிடித்துக்கொண்டனர். முடைநாற்ற மூடநம்பிக்கையை விதைத்து, வர்ணபேதத்தை உண்டாக்கி, சாதிப்பிரிவை தோன்றுவித்து, மனிதர்களிலே ஏற்றத்தாழ்வை விளைவித்து, தான் லாபம் அடைந்து, பெருவாரியான மக்களை சாஸ்திரம், சம்பிரதாயம் எனும் சடங்குகளிலே முடங்கவைத்து மூளைச்சலவை செய்துவந்தது தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கி விட்டது.

அது வெள்ளையன் இந்தியாவை ஆண்ட காலத்தில்தான் வெளிப்படை யாகத் தெரியவந்து நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு ஆரியர் – திராவிடர் என்று கருத்தும் கொள்கையும் வேறுபட்டு உருவானது. சுதந்திரப் போராட்டத்திற்கு இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட இந்தக் கிளர்ச்சியின்மூலம் உருவானதுதான் சென்னை திராவிடச் சங்கம். அப்படி ஒரு இயக்கம் தோன்றியிராவிட்டால் நாடு என்ன நிலைக்கு ஆளாகியிருக் கும் என்று எண்ணிப் பார்க்கமுடியாது. வெள்ளையனை எதிர்த்துப் போரிட் டதைப் போன்று ஆரியனையும் எதிர்த்துப் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். திராவிடர் சங்கத்தை தோற்று வித்தவர்களின் மூன்று முக்கியத் தலைவர்கள் டாக்டர் நடேசன், டாக்டர் நாயர், வெள்ளுடை வேந்தர் தியாகராயர் ஆவார்கள்.

அந்தத் திராவிட இயக்கத்தில் மூத்தத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர் சர். பி. தியாகராயர். 1882 ஆம் ஆண்டு “சென்னை உள் நாட்டினர் சங்கம்” என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடர்ந்து நடத்தினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் “சென்னை மகாஜன சபை” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இச்சபை அவ்வப்போது சென்னையில் கூடி விவாதித்துக் கோரிக்கைகளை ஆங்கிலேய அரசுக்குச் சமர்பித்து வந்தது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பார்ப்பனர்கள் கல்வித் துறை, அரசு நிர்வாகத்துறை ஆகியவைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது மட்டு மல்லாமல், இந்திய தேசியக் காங்கிரசிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆங்கிலேயேர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது உண்மை என்றாலும் நடைமுறையில் இந்தியாவை ஆள்பவர்களாகப் பார்ப்பனர்களே உள்ளனர் என்ற எண்ணம் பார்ப்பனரல்லாதார் மத்தியில் பரவத் தொடங்கியது. மேலும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி பார்ப்பனர் களின் நலன்களுக்காகவே செயல்பட்டு வந்தது என்பதையும் உணர்ந்தனர்.

இந்திய அரசின் சார்பில் இருந்த பொதுப் பணிகள் அனைத்தையும் பார்ப்ப னர்களே பங்கிட்டுக் கொள்கின்ற நிலை இருந்தது. மேலும் அரசுப் பணியில் பணியாற்றிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாதவர் பலர் தாங்கள் பார்ப்பன அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாலும், அழுத்தி வைக்கப்பட்ட தாலும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கலா யினர். அதோடு பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த செல்வாக்கு உள்ள வர்களின் ஆதரவைக் கோரலாயினர்.

இதன் காரணமாக 1913 ஆம்ஆண்டு “திராவிடச் சங்கம்” என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் பார்ப்பனரல் லாத மக்களி டையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது.

1916ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. தியாகராயர் அம்மாநாட்டை முன்னின்று நடத்தினார். காந்தியடிகள் சென்னை வந்தபோது அவருக்குச் சிறப்பான தொரு வரவேற்பைத் தந்தார்.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி யின் சார்பில் போட்டியிட்ட திராவிடத் தலைவர்கள் டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், கே.வி. ரெட்டி நாயுடு மற்றும் சர். பி. தியாக ராயர் ஆகியோர் காங்கிரசு கட்சியினரால் வஞ்சிக்கப்பட்டுத் தோற்கடிக் கப்பட்டனர்.

சர்.பி. தியாகராயரும் டி.எம். நாயரும் காங்கிரசுக் கட்சியில் மதிப்பும் மரியாதையும் இனி எதிர்பார்க்க முடியாது, காங்கிரசுக் கட்சியை பார்ப்பன ரல்லாதார் எந்தப் பயனும் அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்து, பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களின் நலன்களைக் காப்பதற்கு ஒரு வழிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சர் பி. தியாகராயர்  1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் பார்ப்பனரல்லாதார் மக்களின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்துவ தெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் “நீதி” (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இந்த அமைப்பு நடத்திவந்த “நீதி’ என்ற இதழின் பெயரைக் கொண்டே, அந்த அமைப்பை நீதிக்கட்சி (Justice Party) என்ற பரவலாக அழைக்கலாயினர்.

சர். பி. தியாகராயர் நீதிக்கட்சியின் தலைவராக சிறப்பாக கட்சியை நடத்தி வந்தார். தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனரல்லாதாரின் கொள்கை விளக்க அறிக்கை, பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி யைப் பெருமளவுக்குத் தட்டி எழுப்பியது. அவர்கள் நீதிக் கட்சியின் கொள்கை களுக்கும், திட்டங்களுக்கும் பேராதரவு தந்தனர்.

நீதிக்கட்சி இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர் ஆகியோருக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வேண்டும் என்று கோரியது.

சர்.பி. தியாகராயரின் தன்னலமற்ற விடாமுயற்சிகள் நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று 1921ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் சிறப்பாக வெற்றி பெற்றது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய சர்.பி.தியாகராயரை அழைத்து மாகாண ஆட்சியை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், சர்.பி. தியாகராயர் முதல மைச்சர் பதவியை ஏற்கத்தான் விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்ச ராகப் பொறுப்பேற்கச் செய்தார்.

நீதிக் கட்சியைத் தோற்றுவித்த மூவேந்தருள் முதன்மையானவர் நம் தியாகராயர் அவர்கள். அவர்களின் காலத்திற்குப் பின், அக்கட்சி தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் எனப் பெயர் பெற்று வளர்ந்தது வரலாறு. இன்றைய தமிழகத்திலுள்ள கழகங்கள் அனைத்திற் கும் ஆணிவேர்  தியாகராயர் அவர்களே.

நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும் செல்வம் உடையவர்களாக, சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 27-4-1852ம் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.  அவர், 1876ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.  தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி  அம்மாள்.  அவருக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள் களும் பிறந்தனர்.

தமது வீட்டருகே பிட்டி நெசவு ஆலை என்ற பெயரில் சுமார் நூறு தறி களைக் கொண்ட நெசவாலையை ஏற்படுத்தினார்.  தற்போது நம் கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே. அதற்கு முன் நாடாவை கைகளில் தள்ளி தான் நெய்தார்கள்.  இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப் புகழ் பெற்றவை.

இவர் 1892 முதல் 1925 வரை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பணி ஆற்றினார்.  1920ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற சட்டப்படி தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் மேயர் இவரே.  தொடர்ந்து 1922 வரை மூன்று முறை சென்னை மேயராகப் பதவி வகித்தார். அந்தக் காலங்களில் அவர் ஆற்றிய அரும் பணிகள் அளவிடற்கரியது.  மாநகராட்சி சார்பில் ஏராள மான பள்ளிகளைத் தொடங்கினார்.  அங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்கியும் இன்றைய அரசின் பல நல்ல திட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கி னார்.

தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி னார். சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் நிறுவியதே. சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவப் பெரும் தொண்டாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிக் காக வழி ஏதும் செய்யப்படாமையால் செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தை உரு வாக்கினார். பாட சாலைகளைப் போலவே தொழில்நுட்பப் பயிற்சி பள்ளி களைத் தொடங்கினார்.  முஸ்லீம் கல்வி அறக்கட்டளையிலும் உறுப்பின ராகவும், தலைவ ராகவும் இருந்து ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்தார்.  பிராமணமய மாய் இருந்த பச்சையப்பர் கல்வி அறக்கட்டளை யைச் சீரமைத்து அனைத்து தரப்பினரும் உறுப்பினராகும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.

இந்த அரும் பணிகளுக்கு இடையே 1920ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் வெலிங்டன் பிரபு, தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், தியாகராயர் செட்டியார் என்ன கூறினார் தெரியுமா? இந்திய வரலாற்றிலே முன் எப்போதும் இல்லையெனும்படி அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டி எழுப்பிய பாவத்திற்காக என்னையும், காலம் சென்ற எனதருமை நண்பர் டி.எம்.நாயரையும் வெள்ளையரின் வால் பிடிப்பவர்கள் என்று காங்கிரஸ் தலைவர்களும், அவர்தம் ஏடுகளும் தூற்றுகின்றனர். நான் இந்தப் பதவியை ஏற்பேனேயானால், புனிதமான என் கட்சிக்கு களங்கம் விளைவித்தவனாவேன். அதனால் நான் இந்தப் பதவியை ஏற்க மாட்டேன். மன்னிக்கவும் என்று பதில் கடிதம் எழுதினார். இவரின் மூத்த சகோதரர் பதவி ஏற்க வேண்டும் என்று வற்புறுத்திய போதும் மாட்டேன் என்று மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

தியாகராயரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்த போதிலும் பார்ப்பனிய ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார். அதனால் அவர் மகாத்மா காந்தியிடமும், முரண்பட நேர்ந்தது.  காந்திஜியின் கதர் கொள்கை யையும் ஏற்றுக் கொள்ளவில்லை.  பழைய முறையிலான கைத்தறி நெசவு நம் இந்திய முன்னேற்றத்திற்கு ஏற்றதல்ல. அதில் புதுமையைப் புகுத்தி தொழில் புரட்சி புரிய வேண்டும் என்பது அவர் எண்ணம்.  அதில் தீவிரமும் காட்டினார்.  காந்தியடிகள் இவரிடம் முரண் பட்டபோதும், அவர் சென்னைக்கு வந்தபோது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து அதைப் பார்வையிட்டார். அதில் ஒரு தறியிலும் அமர்ந்து நெய்தும் பார்த்தார்.  அதில் கண்டி ருந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள் வதற்காக தன்னுடைய புதல்வர்களான மணிலால், மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத கலைப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்.  தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அதில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர்.  இந்தத் தொழில்களுக்கு உதவி யாக நூறு படகுகளைக்கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார்.

நெசவாளர்கள் மாநாடு, மற்றும் கண்காட்சிகளை நடத்தி அதில் நடந்த போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றார்.

தந்தை பெரியாருக்கும் முன்னரே சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித் தவர் இவரே.

தமிழக காங்கிரஸில் பார்ப்பன சக்திகளின் ஆதிக்க வெறி கண்டு மனம் வெதும்பிய இவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார்.  அப்போது அவரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார் அவர்கள், பின்னாளில் அதே காரணத்திற்காகக் காங்கிரஸை விட்டு விலகி, தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார்.

தியாகராயர் அவர்களை எல்லோரும் நாத்திகர் என்றே நம்பியிருந்தனர்.  ஆனால் அவர் சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந் தாலும் கடவுள் திருப்பணிகளிலும் நிகரற்று விளங்கினார். சென்னை யிலுள்ள மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தை ரூபாய் பத்தாயிரம் செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார்.  இத்தனை செய்தும் அன்றைய பிராமணர்கள், இவரைக் கோபுரத்தில் ஏறி கும்பநீரை ஊற்ற அனுமதிக்கவில்லை. அப்போதுதான் அவர்களின் ஆதிக்க வெறி யை உணர்ந்தார்.

பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார். சென்னை வண் ணாரப் பேட்டையில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தில் கண்களில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடி கண் விழிகளை லண்டனிலிருந்து தருவித்தார்.  இன்றும் அந்த வாகனத் தில் தான் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

பல கட்சிகளிலும் இருந்த தலைவர்கள் இவரிடம் கொள்கை ரீதியாக வேற்றுமை கொண்டிருந்தாலும் உளப்பூர்வமாக இவரிடம் பேரன்பு கொண்டிருந்தனர்.  ஒரு சமயம் இவரின் நிர்வாகத்தை எதிர்த்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் மிக ஆவேசமாக உரையாற்றினார்.  மறுநாள் தியாகராயர் தன் காரில் காஸ்மோபொலிடன் கிளப்பிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் திரு.வி.க.வைப் பார்த்து விட்டு காரை நிறுத்தி கீழே இறங்கினார்.  இருவ ரும் பரஸ்பர வணக்கம் செய்து கொண்டனர். பின் தியாகராயர், திரு.வி.க. வைப் பார்த்து, “அறை ஹயப்பா! நன்றாக அறை! நேற்று கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் என்னை வார்த்தைகளால் அறைந்தீர்!. இப்போது உன் முன் நிக்கிறேன்.  என் முதுகில் அறையும்” என்று கூறி முதுகைக் காட்டி னார்.  நாணித் தலை கவிழ்ந்த திரு.வி.க. தியாகராயரின் காரிலே ஏறி வெட்கப்பட்டு அமர்ந்துவிட்டார். பின் இருவரும் மகிழ்வுடன் உரை யாடிக்கொண்டே சென்றனர்.

சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் தேர்தலின்போது தியாகராயரை எதிர்த்துப் போட்டியிட்டார்.  துப்பாக்கியைக் காட்டி அவருக்கு எதிராக வாக்கு சேகரித்தார்.  ஆனால் நடந்ததோ வேறு.  பிராமணர்கள் நிறைந்த பகுதியில் மிகவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தியாக ராயர்.  அவர் மறைந்தபோது அதே சி.பி.ராமசாமி அய்யர், “ஒரு தன்னல மற்ற மனிதாபிமானியை இழந்தோமே”  என்று சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

பார்ப்பனியத்தை எதிர்த்தாரே தவிர, பார்ப்பனர்களைத் தியாகராயர் வெறுத்ததில்லை.  நம் வழக்குகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர பார்ப்பன வக்கீல்களைக் கொண்டு வழக்கு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினார். ஆனால், ஏழை பார்ப்பனர்களுக்கு அவரைப் போல் உதவியவர் வேறு யாரும் இல்லை.

தியாகராயரின் நீண்ட தாழ்வாரத்தில் ஏராளமான சிறுவர்களோடு பார்ப் பனச் சிறுவர்களும் அமர்ந்து வடமொழி கற்றுக் கொள்வார்கள். அவர் களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் அவர் செய்வார்.

யஞ்யராமன் என்ற பிராமணர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய் தங்கினார்.  அதனால், அவர் ஜாதி நீக்கம் செய்யப்பட்டு வேலையையும் இழந்தார். அப்போது தியாகராயர் தலை யிட்டு அவரை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்தார்.  இத்தகைய உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்த தியாகராயரின் நினைவாக இன்றும் சென்னையிலுள்ள ஒரு கல்லூரிக் கும், மதுரையில் உள்ள ஒரு கல்லூரிக்கும் இவரது பெயர் வழங்கப்படு கிறது. சென்னை தியாகராயர் நகர் என்பது இவரைக் குறிப்பதுவே.  பெங்களூரிலும் தியாகராயர் நகர் என்று இவரது புகழ்பாடும் பகுதி உள்ளது.  இவரைப் பற்றிக் கூற வேண்டுமானால் இன்றும் ஏராளமாகக் கூறலாம். அண்மையில் இவரின் தபால்தலையை வெளியிட்டு நம் இந்திய அரசு பெருமைக் கொண்டது.  தபால்தலையின் பின்னனியில் தறி நெய்யும் நெசவாளியின் உருவத்தைக் கொண்டிருப்பது நெசவாளர்கள் பால் இவருக்கிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது!

தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில்தான் முதன் முதலாகப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லோ ரையும் விட 1916 ஆம் ஆண்டிலே ரூ 10,000 நன்கொடை வழங்கிய தியாக ராயரை விழா மேடையிலே உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்க வில்லை! அதே நேரத்தில் தியாகராயரின் பார்ப்பன கிளர்க்குகளுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது! இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில் மிகத் தீவிர வாதியாக மாறினார்.

இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் மன்றத்தில் பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய பெரு மக்களுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

பார்ப்பனிய தலைமையை எதிர்த்து திராவிட இயக்க வேர்கள் சிந்திய வேர்வை இன்று வீணில் விதைத்த நீராகப் போய்விடுமோ?

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...