சிவகங்கையின் வீரமங்கை | 4 | ஜெயஸ்ரீ அனந்த்
நாச்சியார் குயிலியை பார்க்க ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு வந்தபொழுது “சரக் …”என்ற சத்தத்துடன் ஒருவகை வளைத்தடி கண்இமைக்கும் நேரத்தில் அவளைக் கடந்து சென்றது. அடுத்த நொடி “அம்மா” என்ற அலறலுடன் சுவர் மறைவில் இருந்த ஒருவன் கீழே விழுந்தான். என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்னதாக, “‘பிடியுங்கள் அவனைப் பிடியுங்கள்….” என்ற குயிலியின் குரல் வந்த திசைக்கு எதிர்த் திசையில் பெண்கள் ஓடி, கீழே விழுந்தவனை பிடிக்கச் சென்றனர்..
“இன்று யார் உன்னிடம் அகப்பட்டு கொண்டது? யார் இவன் ? என்ற கேள்வியுடன் வேலுநாச்சியரின் கண்கள் அப்புதியவனை அளந்தது.
“அக்கா, இவன் பொல்லாத போக்கிரி. அரண்மனையில் இருக்கும் ஆடு மாடுகளை வாரம் ஒன்றாகக் களவாடி செல்லும் கயவன். என்னிடம் இன்று வசமாக அகப்பட்டுக் கொண்டான் .”
“ஏதேது… இந்த ஊரிலும் கள்வனா? அதும் உன் இருப்பிடத்திலா? நம்ப முடியவில்லையே?”
கையில் இருந்த சிலம்பால் தரையில் தட்டியபடி “அக்கா, இவன் இந்த ஊர் ஆடவன் போல் தெரியவில்லை. வெளியூர் ஆடவன் போல் உள்ளான். பல நாட்களாக நானும் இவனைக் கண்காணித்து வருகிறேன். இன்று கையும் களவுமாகப் பிடித்து விட்டேன். ” என்ற குயிலி பின்புறமாகத் திரும்பி “பெண்களே, அவனை இழுத்து வாருங்கள், விசாரிக்கலாம் ” என்றதும் இரு பெண்கள் அவனது புறங்கையைக் பின்னால் கயிற்றினால் பிணைத்து கட்டவும் “வேண்டாம்…. என்னை விட்டு விடுங்கள். பெண்களால் சிறையுண்ட அவமானம் எனக்கு வேண்டாம்” என்று கூச்சத்துடன் பெண்களுக்கு மத்தியில் அவன் சற்றே நெளிந்தான்.
“சற்றே பொறுங்கள…” என்ற வேலுநாச்சியாரின் உத்தரவில் அவனை வேலு நாச்சியார் பக்கம் இழுத்துக் கொண்டு சென்று நிறுத்தினர்.
“நீ யார்..? எதற்காக வந்தாய்…?”
“இளவரசிக்கு வணக்கம். என் பெயர் சுமன். நான் வடக்கிலிருந்து வந்தவன். உங்கள் நாட்டில் நான் தங்குவதற்கு இடமும் உண்ண உணவும், வேலையும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இவ்விதம் நடந்து கொண்டேன் என்னை மன்னிக்கவும்.”
“அதற்காக இப்படி… ஆடு மாடுகளைத் திருடிச் செல்வதா? வெட்கமாக இல்லை? வடக்கிலிருந்து வந்ததாக சொன்னாயே யாருடன் வந்தாய்?”
“இளவரசி… சில ஆங்கிலேயர்கள் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமியை தரிசிப்பதற்காக, என்னை இழுத்து வந்தனர். தவறு… தவறு… அவர்களுக்கு நமது மொழி தெரியாத காரணத்தால் என்னை கடத்தி வந்தனர் என்பது தான் உண்மை. வந்த இடத்தில் சுவாமி தரிசனம் முடிந்ததும் அவர்கள் இலங்கைக்குப் படகில் ஏறி சென்றுவிட்டனர். எனக்கு மீண்டும் வடக்கே போக விருப்பம் இல்லாததால் இங்கேயே தங்கிவிட்டேன்”
அதுவரை அவன் கண்களை உற்று நோக்கி அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வேலுநாச்சியாருக்கு அவன் பேசுவதில் சற்று உண்மை இருப்பது போலத் தெரிந்து தனது கடுமையைக் குறைத்துக் கொண்டாள்.
“சரி… நீயும் அவர்களுடன் இலங்கை சென்றிருக்கலாமே? ஏன் இங்கேயே இருந்து விட்டாய்?”
“நானும் படகில் அவர்களுடன் பயணிக்கலாம் என்று எண்ணியிருந்த வேளையில், அதி பயங்கர கனவு ஒன்று என்னை ஆக்கிரமித்தது. நடுக்கடலில் அவர்கள் என்னைக் கொன்று சுறா மீனுக்கு இரையாகப் போடுவதை போன்ற கனவு. எதற்கு வம்பு என்று இங்கேயே தங்கி விட்டேன்.” என்று குயிலியைப் பார்த்து சற்றே நமுட்டு சிரிப்பை உதிர்த்தான்.
அப்பொழுது முன்னே வந்த குயிலி “அக்கா, எப்படி நாடகம் ஆடுகிறான் என்பதைப் பாருங்கள் . இவனும் இவன் முழியும்… இவன் ஒரு திருடன் இவனிடத்தில் பரிதாபம் எதற்கு? ” என்றாள்.
“குயிலி, இவன் நம் நாட்டிற்குத் தஞ்சம் என வந்தவன் .வடக்கே போக விருப்பம் இல்லாததால்தானே இங்கே இருக்கிறான்..? இவனுக்கு ஏதாவது ஒரு வேலையைப் போட்டு கொடுத்து இவனை நமக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம்.”
“ம்ம்…” என்று ஆமோதிப்பது போல் தலையை மேலும் கீழும் அசைத்தான்.
“பாத்தீர்களா அக்கா இவன் போக்கிரித்தனத்தை. ஆட்டுகிற தலையை அப்படியே கோழி தலையைத் திருகுவதைப் போலத் திருகி விடணும்” என்றவள்… “அக்கா உங்க அன்பிற்கும் கருணைக்கும் ஒரு அளவே இல்லையா..? எதிரியைகூட அன்பினால் அடிமைப்படுத்தி விடுவீர்கள்”
“குயிலி, கருணை சுரக்கும் அன்பில் தான் கருணை சாகரம் ஆகிறது கருணை தான் தர்மத்துக்கு ஆதாரம்”
“இப்படி ஏதாவது பேசி என் வாயை அடைத்து விடுவீர்கள். அது சரி … என்னை தேடி இவ்விடம் வந்ததன் காரணம் என்ன? ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நானே உங்களைத் தேடி வந்து இருப்பேனே. முக்கிய செய்தி ஏதேனும் உள்ளதா அக்கா?”
“நான் பெரியப்பாவைப் பார்க்க சிவகங்கை செல்ல வேண்டி உள்ளது. ஆகவே நான் வரும் வரை நீ அப்பாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். செய்வாயா?” என்றவள் வாஞ்சையுடன் அவள் தலையை வருடினாள்.
“அக்கா நான் வேண்டுமென்றால் உங்களுடன்…. ” குயிலி முடிக்கும் முன்பாகவே வேலுநாச்சியார் இடைமறித்து “இல்லை… இந்த முறை நீ என்னுடன் வர இயலாது. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்” என்று அவளைச் சற்று தனியே அழைத்துச் சென்று அவள் காதில் கிசுகிசுத்தாள்.
“குயிலி…. இப்பொழுது நம் நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது. வீரத்திலும் தீரத்திலும் எனக்கு நிகரானவள் நீ…. ஆகவே இந்த குழ்நிலையில் அப்பாவை நான் தனியே விடலாகாது. நான் வரும் வரை நீ அப்பாவின் அருகில் இருந்து கவனமாக அவரை பார்த்துக் கொள்ள வேண்டியது உன் கடமை “
“என்னக்கா சொல்கிறீர்கள்..? ஆபத்தா? யாரால்?”
“என்றுமில்லாமல் இன்று காரணம் கேட்காதே… பிறகு விஷயத்தை சொல்கிறேன்” என்றவளின் மனதில் சில எண்ண ஓட்டம் ஓட… சுமனின் பக்கம் திரும்பினாள்.
பின்னங்கைகள் கயிற்றால் பூட்டப்பட்டவனை அருகில் அழைத்தாள். அவனது நடையில் ஒரு கம்பீரமும் மிடுக்கும் ,முகத்தில் புத்திசாலித்தனமும் தெரிந்தது. நாச்சியாரின் முன் வந்து நின்றான்.
“முதலில் இவன் கைக் கட்டை அவிழ்த்து விடுங்கள்” என்றாள்.
“அதற்கு அவசியம் இல்லை இளவரசியே… அதை நான் கழற்றி ஒரு நாழிகை ஆகிவிட்டது.” என்று தானாகவே கயிற்றை களைந்து கைகளை உயர்த்தி காட்டினான்.
“என்னை என் அனுமதியில்லாமல் யாராலும் சிறைப்பிடிக்க இயலாது இளவரசியாரே..” என்றவன் குயிலியின் பக்கம் திரும்பி மறுபடியும் புன்னகைத்தான்.
“பலே திருடன்தான் நீ …. உண்மையை கூறு. நீ வந்ததன் நோக்கம் என்ன?”
“அதுதான் கூறினேனே இளவரசியாரே… ஆங்கிலேயருடன் ராமநாத ஸ்வாமியை தரிசிப்பதற்கு என்று..”
“அது பொய். உன்னைப் பார்த்தால் வீரனை போலத் தோன்றுகிறது. உண்மையைச் சொல் இல்லை என்றால்…” இடையில் இருந்த வாளினை உருவினாள்.
“மன்னிக்க வேண்டும் இளவரசியாரே. நான் ஆற்காடு தேசத்தை சேர்ந்தவன். முகமது அலியின் படை வீரராக இருந்தவன். எனக்கு அவரின் ராஜியத்தின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. அதனால் ஆங்கிலேயருக்கு வழிகாட்டும் பொருட்டு அங்கிருந்து வந்து விட்டேன்.” என்றதும் குயிலி தன்னிச்சையாக , “என்னது ஆற்காடு நவாப் படைத் தளபதியா?” என்றவள் அவனிடமிருந்து இரண்டடி தள்ளி பின்னால் சென்றாள்.
‘நல்லது. நீ இங்கிருக்கும் செய்தி நவாப்பிற்குத் தெரிய வந்தால்..?”
“கண்டிப்பாக தெரியாது இளவரசி . என்னுடன் வந்த வீரர்கள் இருவர் கண் முன்னே நான் கடலில் மூழ்கியதை கண்டு , நான் இறந்து விட்டதாக செய்தி தாங்கி அவர்கள் சென்று விட்டதையும் நான் அறிவேன்.”
“ஆங்கிலேயர் என்றாயே அவர்கள் வடக்கே ஊடுருவியுள்ளது உண்மை தானா? பல குறு நாடுகள் அவர்கள் கைவசம் என்கிறார்களே?”
“ஆம் இளவரசி… நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். வீரத்திலும் தீரத்திலும் நம்மை விட வலிமை குன்றியவர்களாக இருந்தாலும், அவர்களிடம் படைபலம் அதிகம். நவீன ஆயுதக் கருவிகளும் உண்டு”
“தந்தை சொல்வது சரிதான். நாட்டை சுற்றிலும் பேராபத்து காத்திருக்கு” என்று எண்ணியவள் நீண்ட பெருமூச்சில் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினாள்.
“போகட்டும்…. ஆங்கிலேயருடன் உரையாடும் அளவிற்கு தங்களுக்கு மொழி புலமை இருப்பதென்றால்…. எங்களுக்கு உங்களால் ஓர் உதவி தேவைபடுகிறது.”
“ஓ…. தாராளமாக இளவரசி. கட்டளையிடுங்கள்”
“இங்கு இருக்கும் பெண்களுக்கு ஆங்கிலம் கற்று தர வேண்டும் முடியுமா?”
“என்ன… ஆங்கில… மா…” என்று ஒருசேர கேள்வியுடன் அங்கிருந்த பெண்கள் தங்களுக்குள் பேசி நகைத்துக் கொண்டனர். அப்பொழுது அந்த இடம் சில்லறை மூட்டைகள் சிலவற்றை ஒருசேரக் கொட்டியது போல கலகலத்தது.
•
நடுநிசி சாமத்தில் அய்யனார் சிலை அருகே நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் குவிரன் தனது கத்தியை உதிரனின் நெஞ்சுக்கு நேராக உயர்த்தி கீழே இறக்கும் சமயத்தில்…
“சற்றுப் பொறுங்கள்….” என்று சிகப்பி அவர்கள் முன் வந்தாள்.
“இப்பொழுது நமக்குள் சண்டை வலுக்கும் நேரமல்ல இது. விடிந்தால் அந்த சசிவர்ணத் தேவரின் மூச்சை நிறுத்தி அவரை மேலுலகம் அனுப்ப வேண்டும். ஆகவே சண்டையை நிறுத்திவிட்டு அடுத்தது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவுகூர வேண்டும்..” என்றவளின் பேச்சை ஆமோதித்தனர் கூட்டத்தில் இருந்த ஒரு சிலர். குவிரனும் நிலமையை உணர்ந்து தனது கோபத்தை அடக்கிக்கொண்டு கத்தியை தன்னுடைய இடையில் சொருகிக்கொண்டு எழுந்தான்.
ஒரு சில நிமிட அமைதிக்கு பிறகு சிகப்பி பேச தொடங்கினாள். “இன்று எனக்குத் தெரிய வந்த விஷயம் என்னவெனில் நாளை நாச்சியார் அவரது பெரிப்பாவைக் காண சிவகங்கை செல்வதாக செய்தி. அவள் அங்கு போகும் முன்னதாக நாம் அந்த இடத்தை அடைந்து திட்டமிட்டபடி தேவரைக் கொல்ல வேண்டும். நாச்சியார் அருகில் இருக்கும் பொழுது அவரை நெருங்குவது அவ்வளவு சுலபமல்ல “
“நீ சொல்வதும் சரிதான். இந்நாட்டில் நாச்சியாரின் தைரியத்தால் தான் பிறந்த பெண் குழந்தைகூடக் கையில் வாள் பிடிக்கிறது. போரில் தோற்கடிக்கபட்ட மனவருத்தத்தில் சிறு குழந்தையாக இருந்த வேலுநாச்சியாரை எனது தந்தை கடத்த முற்பட்ட பொழுது அவரின் நெஞ்சில் வாளை வைத்து தைரியமாக அவரைச் சிறைபிடித்தது என் கண் முன் நிற்கிறது . அப்படிப்பட்ட அவளை நான் சும்மா விடப்போவதில்லை. அதனால் நானே சிவகங்கை செல்கிறேன். முடிந்தால் அவள் பெரியப்பாவுடன் சேர்த்து அவளுக்கும் ஒரு முடிவு கட்டுகிறேன்.” என்றான் குவிரன்.
இவர்கள் பேசியதைக் கேட்டு கொண்டு சற்று யோசித்தபடி இங்கும் அங்கும் நடந்த உதிரன் “ம்…. எனக்கு ஒரு யோசனை. இது சரியாக இருந்தால் நான் கூறுவது போல் செய்யுங்கள் “என்றவன் கூட்டத்தினரிடையே தன் ரகசியத் திட்டத்தை கூறினான்.
“ஆஹா.. இது நல்ல யோசனை. இப்படியே செய்யலாம்.” என்று ஒட்டுமொத்த கூட்டத்தினரும் அவனது திட்டத்தை ஆமோதித்தனர். சிறிது நேர உரையாடலுக்குப் பின் நள்ளிரவில் கூட்டம் கலைந்து சென்றதும் அந்த இடம் வெறிச்சோடி காணப்பட்டது.
இப்படிப்பட்ட இவர்களின் கூட்டுச் சதித்திட்ட ஆலோசனையை அங்கிருந்த காவல் தெய்வமும் கேட்டிருந்தது.
•
“பெரியப்பா…” என்ற குரல் வந்த திசையைப் பார்த்தார் சசிவர்ண தேவர். தேக்குமரக் கட்டிலில், பட்டு மெத்தையில் கண்களை மூடி அயர்ந்திருந்தார். வயதான தோற்றம். ஒரு அரசனுக்கு வேண்டிய அத்தனை லட்சணத்தையும் பெற்றிருந்தார். நாச்சியாரைக் கண்டதும் முகத்தில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. “வாம்மா மகளே….” என்றழைத்தவர் கட்டிலை விட்டு எழ முயற்சித்தார்.
“எழ வேண்டாம் பெரியப்பா…. அப்படியே .என்னை ஆசிர்வதியுங்கள்.” என்றவள் சற்றே குனிந்து அவரின் பாதத்தை தொட்ட அந்த வினாடி எங்கிருந்தோ பறந்து வந்த கூரிய கூரிய கத்தி ஒன்று நாச்சியாரின் தலைப்பாகையைத் தட்டிக் கொண்டு கட்டிலின் முகப்பில் குத்தி நின்றது.
4 Comments
அடுத்து என்ன என்கிற ஆவல் தன்னிச்சையாய் கிளர்கிறது படிக்கும்போது.
Thank you for your valuable comments
மிகவும் அருமை.இன்றைய தலைமுறையினர் இது போன்ற வீர வரலாற்றினை என்றென்றும் அவசியம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
படபடக்க வைத்துவிட்டீர்கள்! அருமையாக செல்கிறது! வாழ்த்துகள்!