தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 16 | தனுஜா ஜெயராமன்
முகேஷ் வேகமாக வண்டியை செலுத்தி சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்ஸியின் கேட்டில் உள்ளே நுழைய, அதேசமயம் சரியாக ஹரிஷூம் உள்ளே நுழைந்தான்.
பதட்டத்துடன் காரில் இருந்து இறங்கிய முகேஷ் …”என்னடா இது? பிரச்சினை மேல பிரச்சனையா போயிகிட்டிருக்கு”…
“நீ ஒண்ணும் பயப்படாத மச்சி.. எல்லாம் சரியாகிடும்… வா அசோக்கை பாத்துடலாம்”..
கவலை ரேகை தோய்ந்த முகத்துடன் ஹரிஷூடன் நடந்தான் ஆனாலும் மனதுக்குள் கலவரம்… “அந்த ராட்சசி அம்ரிதாவை யார் கொன்னிருப்பாங்க?” …என்ற கேள்வி வேறு மண்டையை குடைந்தது.
இருவரும் மேலே வந்து ரிசப்ஷன் சோபாவில் அமர்ந்தனர். அசோக் இன்னமும் வந்திருக்கவில்லை.. சினேகபாவமாக சிரித்த ரிசப்ஷனிஸ்டிற்கு பதிலுக்கு புன்னகையை வீசியது ஹரிஷ் மட்டுமே. முகேஷ் ஏகக் கவலையோடு சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தான்.
அவனின் நடவடிக்கையை பார்த்த ஹரிஷ்..”டேய் மச்சி… ரிலாக்ஸா இருடா… பாத்துக்கலாம்… பதறினா காரியம் சிதறி போகும்டா”..
“உனக்கென்னடா… ஈஸியா சொல்லிட்ட… அவளைக் கொன்னுட்டாங்கன்னு கேட்ட நொடியிலிருந்து மனசு “கெதக்கு”ன்னு இருக்குடா.. ஏற்கனவே என் நடவடிக்கை மேல வீட்டில் சந்தேகம் கிளம்பியிருக்கு… இதுவேற புதுப்பிரச்சனை”..
“சரி விடுடா… சரியாகிடும்”
“போலீஸ், கேஸ் ,விசாரணைன்னு நினைச்சாலே கதிகலங்குதுடா” …என்றான் பயத்துடன்.
“சில விஷயங்களை நேருக்கு நேராக ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்… துணிஞ்சிட்டா பயம் போயிரும்டா” …என்றான் ஹரிஷ் ஆறுதலாக.
“ஆமாம்? ..யாருடா அவளைக் கொன்னிருப்பாங்க?….
“யாருக்குத் தெரியும்?… அன்னைக்கு பார்ட்டி நடந்தப்ப ஒருத்தன்கூட காரில் போனதைப் பார்த்தோமே… அப்பவே பின்னாடி போய் பார்த்திருந்தா சில விஷயங்களை கலெக்ட் பண்ணியிருக்கலாம். ச்சே! மிஸ் பண்ணிட்டோம்டா”…
‘ம்’ …என்றான் முகேஷ் சுரத்தேயில்லாமல்
அதற்குள் அசோக் உள்ளே நுழைய, சட்டென பேச்சை நிறுத்தி… அசோக்கைப் பார்த்து புறுவலித்தனர் இருவரும்…
“சாரி!… கொஞ்சம் லேட்டாகிடுச்சி… வாங்கஇ உள்ளே போய் பேசலாம்” என அசோக் அழைக்க, வேகவேகமாக உள்ளே நுழைந்து எதிரில் அமர…
ஹரிஷ் தான் பேச்சை தொடர்ந்தான்.. “என்ன அசோக் சார்!.இப்படியாகிடுச்சி?”
“ஆமாம்… இது எனக்கும் அதிர்ச்சி தான்.. என்ன சொல்றதுன்னு புரியலை.. ஆனா நீங்க ஒண்ணும் கவலைபட வேண்டியதில்லை மிஸ்டர் முகேஷ்… விசாரணை நடந்திட்டிருக்கு இப்ப.. கேஸ் இப்ப போலிஸ் கஸ்டடியில்.. ஸோ, நாம கவனமாக தான் இதை கையாளணும்.. தட்சால்” …என அசோக் சொல்லியதும்…
முகேஷின் முகமே மாறிவிட்டது..
“போலீஸ் விசாரணைன்னா… முகேஷ் கிட்ட விசாரிப்பாங்களா?” என்றான் ஹரிஷ் தயக்கத்துடன்…
“பின்ன… இதென்ன கேள்வி?… அந்த பெண்ணோட சம்பந்தப்பட்ட அனைவருமே விசாரணை வளையத்திற்குள் தானே வருவாங்க” …என்ற அசோக்கின் வார்த்தை முகேஷின் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சியது..
“இதுக்கு வேற சொல்யூஷன் எதுவுமில்லையா அசோக்?” …என கைகளை பிசைந்தான் ஹரிஷ்…
“உங்க நம்பர் அம்ரிதா போனில் இருக்கில்ல.. அப்ப கட்டாயம் விசாரிக்க தானே செய்வாங்க.. வேணும்னா ஒண்ணு பண்ணலாம்” …என நிறுத்திய அசோக்கை…கேள்விக்குறியோடு இருவரும் பார்க்க…
“நீங்களே போலீஸ் கிட்ட போய் உண்மையை சொல்லிடறது பெட்டர்.. இன்னும் ஒருபடி மேல சொல்லணும்னா… எப்ப விசாரணைக்கு கூப்டாலும் ஒத்துழைக்கறதா சொல்லிட்டால் இன்னமும் நல்லது”.
“அப்படி போனா ஏதும் பெரிய பிரச்சனை வந்திடாதே?” என கலக்கத்துடன் ஹரிஷ் கேட்க…
“உங்க மேல எந்த குற்றமும் இல்லைன்னா ஒரு பிரச்சனையும் வராது” …என்றார் அசோக்…
“எங்க வீட்டுக்கு இதுவரை எந்த விஷயமும் தெரியாது… அதான் ஒரே கவலையாயிருக்கு” என்றான் முகேஷ் வாட்டத்துடன்..
“வேற வழியில்லை” …என அசோக் உதட்டை பிதுக்கினார்…
முகேஷின் முகம் போன போக்கை பார்த்து சற்று இரக்கப்பட்டு.. “வேணும்னா நான் உங்களுக்காக ஒன்னு செய்யுறேன்… அந்த R1 போலீஸ் ஸ்டேஷனில் என் நண்பர் கோகுல் தான் இருக்கார். அவர்கிட்ட பேசி விசாரணையை ரகசியமா வைக்க சொல்றேன்”…
“ப்ளீஸ்” ..என கெஞ்சினான் முகேஷ்..
“அப்புறம் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒண்ணும் இருக்கு. இருந்த பதட்டத்துல அதை சொல்ல மறந்துட்டேன்'”…என அசோக் சஸ்பென்ஸ் வைக்க….
என்ன என இருவரும் நிமிர்ந்தனர்.
“உங்க டி.என்.ஏ ரிப்போர்ட் வந்துருச்சி… காலைல அதை வாங்கத் தான் போயிருந்தேன்” …என நிறுத்தி இருவரையும் பார்க்க…
“என்னாச்சி?”…என ஆர்வமாகக் கேட்டான் ஹரிஷ்…முகேஷோ விட்டால் விழுந்து விடுவேன் என்பது போல சீட்டின் நுனிக்கே வந்து விட்டான்…
“நல்ல விஷயம் தான்.. ரிப்போர்ட் உங்களுக்கு சாதகமா தான் வந்திருக்கு… அந்த குழந்தை உங்களோடது கிடையாது” …என இருவரின் நெஞ்சில் பாலை வார்த்தார் அசோக்..
முகமலர்ச்சியுடன் எழுந்து நின்று அசோக்கின் கைகளை பிடித்து குலுக்கி… “ரொம்ப தேங்க்ஸ்” என நெகிழ்ந்தான் முகேஷ்..
“அப்புறம் என்ன..? பிரச்சனை தான் சால்வ் ஆகிடுச்சே”..என ஹரிஷ் சந்தோஷத்தில் கத்த..
“அப்படி சொல்லிட முடியாது. பாதி கிணறு தாண்டிட்டோம். அவ்வளவு தான்… முகேஷூற்கு அம்ரிதாவிற்குமான நெருக்கம் பற்றி கேள்வி வரலாம்… அவ உங்களை ப்ளாக்மெயில் பண்ணி பணம் பறிக்க முயற்சி பண்ணியிருக்கா… மிரட்டியிருக்கா” ..என தொடர்ந்தவர்
“இப்ப கொலையாகியும் இருக்கா? ….கொலையாளி மாட்றவரை…நமக்கு ரிஸ்க் இருக்கு.. அல்லது இதை முகேஷ் செய்யவில்லை என முடிவுக்கு வரும்வரையாவது பொறுமையாக இதை கையாளணும்… நானும் கோகுல் கிட்ட பேசி விசாரணையில் கவனம் வைக்கிறேன்” ..என்றார் அசோக்…
மனதுக்குள் ஆறுதலாக இருந்தது. சற்று நிம்மதியடைந்தவனாக “நன்றி” சொல்லிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்..
வெளியே வந்ததும் ” இந்த குழந்தை ப்ரச்சனை முடிவுக்கு வந்தமாதிரி… அந்த கடங்காரி அம்ரிதா ப்ரச்சனைகளும் கூடிய சீக்கிரமே முடிவுக்கு வரும்.. நீ கவலைபடாம வீட்டுக்கு கொளம்புடா”…என்றான் ஹரிஷ்…
“ஆமாடா!… ஆனா சீக்கிரம் முடியணும்… நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வரேன்… சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போய் பேசலாமா? ப்ளீஸ்.. நீயும் கொஞ்சம் துணைக்கு வாயேன்.. எனக்கும் கொஞ்சம் தைரியம் வரும்” …என கெஞ்சினான்…
“டேய்!… இதை நீ கேட்கணுமா? நீ தைரியமா போ…சாயங்காலம் நாம R1 போலீஸ்ஸ்டேஷன் போய் பேசுவோம்… அதுக்குள்ள அசோக் வேற உன்னை பத்தி ஸ்டேஷன்ல சொல்லி வைக்குறேன்னார்… நீ ரொம்ப யோசிக்காம கிளம்பு.… நானும் கெளம்புறேன்” …என ஹரிஷ் வண்டியை கிளப்பி சென்றான்…
ஹரிஷை அனுப்பியதும்… காரை எடுக்க, அப்பாவின் போன்…எடுத்ததும்
“எங்கடா போனே… காலையில சொல்லாம கிளம்பிட்ட… எங்க இருக்க?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
“ஒரு ஆபிஸ் வேலையா வெளிய வந்தேன்ப்பா” …என கூசாமல் புளுகியது மனதுக்குள் கஷ்டமாக இருந்தது முகேஷிற்கு…
“போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது” …என்றதும் “பக்”கென்றிருந்தது…
அப்பாவே தொடர்ந்து …”நீ ஒண்ணும் பயந்துக்காத.. அன்னைக்கு அந்த பொண்ணு அமிர்தா வீட்டுக்கு வந்ததில்ல. அப்ப என் நம்பரை அது போன்ல பதிச்சி வைச்சது போல, அதனால் தான் கால் பண்ணி விசாரிச்சாங்க… நான் அது வீட்டுக்கு வந்ததை சொல்லிட்டேன்… ண்ணும் ப்ரச்சனையில்லை”…என பேசிக்கொண்டே போனார்…
வேர்த்து போன முகத்தை கர்சீப்பால் துடைத்துக் கொண்டே… “சரிப்பா” …என்றான்.
“ஆனா” ….என இழுக்க..
“ஆனா என்னப்பா?” …என பதறியவனிடம்..
“தேவைபட்டா ஸ்டேஷனுக்கு கூப்பிடுவாங்களாம்”….
“அ..ப்..பா… நீங்க ஒண்ணும் கவலைபடாதீங்க.. நான் பாத்துக்கறேன்.. நான் நேரில் போய் பாத்து சொல்லிடறேன்… இப்ப வீட்டுக்கு தான் தான் வரேன் அங்க வந்து பேசிக்கலாம்ப்பா” ..என கூறி போனை வைத்தான்..
“சதிகாரி!… வீட்டுக்கு வந்து அப்பாவையும் இதில் இழுத்து விட்டிருக்கிறாளே” ..என வந்த கடுப்பை அடக்கிக்கொண்டு… “இதுவும் நல்லது தான்.. இதை சாக்காக வைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பேசி விடலாம்… வீட்டில் கேட்டாலும் நம்ம வீட்டுக்கு அவ வந்ததாலன்னு சொல்லி சாமாளிக்க வேண்டியது தான்” ..என மனசுக்குள் நினைத்துக்கொண்டு வண்டியை வீடு நோக்கி செலுத்தினான்..
போலீஸ் விசாரணை எந்த மாதிரி இருக்கும்? தம்மை இதில் இழுத்து விடுவார்களா? விஷயம் சிறிதளவு வெளியே கசிந்தாலும் அவமானமாக இருக்குமே…சுதாவின் முகத்தில் எப்படி விழிப்பது…என்ற கவலை முகேஷின் மனதுக்குள் வந்து புகுந்துக்கொண்டது…
ஒன்று போனால் இன்னொன்று என சங்கிலித் தொடராக இழுக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்க போகிறோம்… என்று அலுப்பாக வந்தது..
எப்போது விடியுமோ? என்ற கேள்வி மனதை குடைய கடவுள் மேல் பாரத்தை போட்டபடி வண்டியை வீடு நோக்கிச் செலுத்தினான்.