பயணங்கள் தொடர்வதில்லை | 20 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 20 | சாய்ரேணு

19. யாத்திரைக்கே!

“ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு பயணம், ஒரு யாத்திரை. அது எப்போது முடியும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம். சுப்பாமணியுடைய வாழ்வும்கூட ஒரு பாடம்” என்றாள் தன்யா, கூக்குரல் சற்று அடங்கியதும்.

“இந்தத் தத்துவம் எல்லாம் சரிதான், எங்க மேல பழிபோடறதை முதலில் நிறுத்துங்க” என்றார் தேவா கோபமாக.

“ஏன் கோபப்படறீங்க சார்? விஷயத்துக்கு வந்துடுவோம். தர்மா தான் கேபினில் பார்த்தது ஒரு அட்டெண்டரோன்னு நினைச்சான். அதுக்குக் காரணம் சாயா அணிந்திருந்த வெள்ளை உடை, அதுக்குமேல் தெரிந்த கறுப்பு பெல்ட். அது மட்டுமில்லாம, பரத்குமார் சொன்ன ஸ்டேட்மெண்ட்டும் காரணம். இல்லேன்னா, நான் வெள்ளை உடை அணிந்த ஒரு உருவத்தைப் பார்த்தேன்னு மட்டும்தான் சொல்லியிருப்பான். சரிதானா தர்மா?” என்று கேட்டாள் தன்யா.

“உண்மைதான். மை மிஸ்டேக். நான் க்ளியரா சிந்திச்சிருக்கணும்” என்றான் தர்மா, வெட்கியவனாய்.

“சரிதான், ரத்தம் கொட்டிட்டிருந்தப்போ நீ சிந்திச்சு இவ்வளவு கவனிச்சதே ஜாஸ்தி” என்றாள் தர்ஷினி, அவனை விட்டுக் கொடுக்காமல்.

“அதே அடிப்படையில் நாம பரத்குமாருடைய ஸ்டேட்மெண்ட்டை அலசினால் – அங்கே அவர் பார்த்தது ஒரு உண்மையான அட்டெண்டரா இருக்க முடியாது, ஏனெனில் ஸ்பெஷல் கோச் மற்றும் லவுஞ்ச் கோச் அட்டெண்டர்கள் எல்லோரும் லவுஞ்சில்தான் இருந்திருக்காங்க. யாரும் தன்னை க்ராஸ் பண்ணிப் போகலை, திரும்பியும் வரலைன்னு பரத்குமாரும் சொல்லியிருக்கார். எனவே கேபினுக்குள் இருந்தவங்க அவருக்கு ‘அட்டெண்டர் மாதிரி’ தோன்ற என்ன காரணம்? அவங்க உடையா? அது இயற்கையா நிகழ்ந்ததா அல்லது வேணும்னே அட்டெண்டர் உடை அணிஞ்சு வந்தாங்களா? அல்லது… பரத்குமார் சொல்றதே பொய்யா?” என்றாள் தன்யா.

பரத்குமார் திடுக்கிட்டான்.

“என்ன மேடம் என் மேலயே கேஸைத் திருப்பறீங்க? என் நாக்கில் சனி! ஏன் தான் அந்த பர்ஸன் அட்டெண்டர் மாதிரி இருந்ததா எனக்குத் தோணுச்சோ, ஏன் தான் சொல்லித் தொலைச்சேனோ” என்று அங்கலாய்த்தான்.

“உங்க குழந்தையை ஒரு பத்து நிமிஷம் உங்க மனைவியை வெச்சுக்கச் சொல்லிட்டு, நீங்க தாராளமா சுப்பாமணியைக் கொன்றிருக்கலாம், ஆனா சந்திரசேகர் சுப்பாமணியின் கேபினில் பார்த்த நபர் நீங்க இல்லை. துப்பாக்கியையும் நீங்க எடுக்கலை. வேறு யாரையாவது காப்பாற்ற பொய் சொல்றீங்களான்னு யோசிச்சா, சுப்பாமணியைத் தவிர இங்கிருக்கற யாரையும் உங்களுக்குத் தெரியாது. ஸோ, உங்க ‘அட்டெண்டர் மாதிரி’ ஸ்டேட்மெண்ட்க்கு வேறு பொருள்தான் தேடணும்” என்று விளக்கமாகச் சொன்னாள் தர்ஷினி.

பரத்குமார் இரண்டுபேரையும் முறைத்தான். “ஒரு பதட்டத்திலேயே வெச்சிருங்க எல்லாரையும்” என்றான் வெறுப்பாக.

தன்யா சிரித்தாள். தர்ஷினி அவனைக் கவனியாது தொடர்ந்து பேசினாள்.

“தேவா குடும்பத்தைப் பொறுத்தவரை, அவர்கள்மீது சந்தேகப்பட எங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. முதல் காரணம், அவங்களைப் பற்றிய ரகசியங்கள்…” என்று ஆரம்பித்த தர்ஷினியின் பார்வை சாந்தினியின் மீது விழவே, சுதாரித்துக் கொண்டாள். “வெல், அதெல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியங்கள். நாம சுப்பாமணியைப் பற்றிப் பேசுவோம். அவருக்கு ஒரு பழக்கம் இருந்திருக்கு. அவர் டீல் பண்றது எல்லாமே பிறருடைய விவகாரங்கள். அதைப் பற்றிய டாக்குமெண்ட்ஸைத் தன்னுடைய பொருட்களைவிட ஜாக்கிரதையாகவும்… பிரியமாகவும் என்று சொல்லலாமா?… பாதுகாத்து வந்திருக்கிறார். அவருடைய வெற்றிகளின் அடையாளங்கள் அவை என்று சரியாகச் சொன்னாள் தன்யா. அவை இருக்கும்வரை சுப்பாமணி எப்போது வேண்டுமானாலும் தேவா குடும்பத்தை மிரட்டலாம். அந்த டாக்குமெண்ட்ஸ் மீட்கப்பட வேண்டியது முக்கியம்.

“இன்னொரு பெரிய கஷ்டம் தேவா குடும்பத்தில் – அவர்கள் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் என்று ஒரு கூட்டுக் குடும்பம். அவர்களில் யாரேனும் இந்தக் கொலையைச் செய்திருந்தால் மற்றவர்கள் எல்லோருமா சேர்ந்து அவங்களை காப்பாத்திடுவாங்க. ப்ரூவ் பண்றது ரொம்பக் கஷ்டம்…”

“ஆனா தேவா குடும்பத்தைச் சந்தேகப்பட முடியலை. காரணம், சுப்பாமணியைக் கொல்லணும்னு அவங்க முடிவு பண்ணியிருந்தா, அவங்க அதுக்குத் தயாரா வந்திருப்பாங்க. ஸ்ரீஜாகிட்டயிருந்து துப்பாக்கியைத் திருடி இதைச் செய்யணும்னு அவங்க நினைச்சிருப்பாங்கன்னு தோணலை…”

“ஒரு நிமிஷம் தர்ஷினி” என்றாள் தன்யா. “முதலில் அப்படி நினைச்சிருக்காமல், ட்ரெயினில் ஏறியதும் சுப்பாமணியைக் கொல்ல முடிவு பண்ணியிருக்கலாம் இல்லையா? அதுக்குக் காரணம் – சொல்ல வருத்தமாயிருக்கு – நாம. ட்ரெயினில் டிடெக்டிவ்ஸ் இருக்காங்கங்கறதை வெச்சு இவங்களை மிரட்டலாமில்லையா?”

“பாஸிபிள். ஆனா உடனடிப் பிரச்சனை எதுவும் இவங்களுக்கு இல்லை. டிடெக்டிவ்ஸைப் பார்த்துப் பயப்படணும்னு இவங்களுக்கு அவசியமில்லை. ஆனா நான் அஸ்வின் மீது சந்தேகப்பட்டது உண்மை. நம்மைப் பார்த்துக் கலவரப்பட்டான் அவன்னு எனக்குப் புரிஞ்சது. ஆனா அப்படி இருந்தா, சுப்பாமணி கேபினில் இருந்த டாக்குமெண்ட்ஸ் கண்டிப்பா அவனால் அகற்றப்பட்டிருக்கும், இல்லையா? அட் லீஸ்ட், விஷயம் தெரிஞ்சு தேவா சாராவது அதைப் பண்ணியிருப்பார். அல்லது பிரபுராம்… பிரபுராமுடைய உதவியை அவன் கண்டிப்பா கேட்டிருப்பான். ஆனா பிரபுராம் பழசையெல்லாம் மறந்துட்டான், அவனுடைய கவனம் எல்லாமே அவனுடைய ஆக்டிங் காரியர், அவன் எடுத்துக்கப் போற கதாபாத்திரம் இதில்தான் இருக்குன்னு நல்லா புரியுது…”

“அந்த ராஸ்கல் ஒரு ஹெல்ப்பும் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டான்! பேட் பப்ளிசிட்டி ஆகிடும்னு காரணம் சொல்றான்!” என்றான் அஸ்வின் திடீரென்று.

“என்ன… என்ன சொல்ற நீ?” – தர்ஷினியே ஒருவிநாடி தடுமாறிவிட்டாள். எல்லோருமே அதிர்ந்தார்கள்.

அஸ்வின் மெதுவாக எழுந்தான். “மேடம், நீங்க சொன்னது எல்லாமே உண்மை. உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். எங்க காலேஜ்ல பேசிப்பாங்க… அதனால் சுப்பாமணி உங்களைப் பற்றிப் பேசினதுமே புதுசா என்ன ப்ளாக்மெயில் ப்ளான் பண்றாரோன்னு பயந்துட்டேன்.

“ஆனா சத்தியமா சொல்றேன், நான் சுப்பாமணியைக் கொல்லல. அவர் இறந்தப்புறம், அவருடைய கிட்பேக்கில் எங்களைப் பற்றின டாக்குமெண்ட்ஸ் இருக்கும், எடுத்துவந்துடலாம்னு நான் பிரபுராம்கிட்ட சொன்னேன், அவனுக்குத் தைரியமே வரலை… அப்புறம்…”

“உங்க கேபினுக்கு வந்த மாயா-சாயா அதைச் செய்ய ஒத்துக்கிட்டாங்க, இல்லையா? அப்படித்தானே உங்களுக்கு அந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கற இடம் தெரியும்?” என்று மாயா-சாயா பக்கம் திரும்பிக் கேட்டாள் தர்ஷினி.

மாயா-சாயா தலைகுனிந்தார்கள். “ஆனா எங்களுக்கு எங்க அப்பா சம்பந்தப்பட்ட எதுவும் கிடைக்கலை” என்றாள் சாயா.

“அதுக்கு நான் ஒரு காரணம் ஊகிக்கறேன். இந்தக் கூட்டத்திலேயே சுப்பாமணி மீது மிகுந்த கோபம் இருந்தாலும், இராணி மேடம் எங்களிடம் தான் சுப்பாமணியைக் கொல்லலைன்னு சொன்னாங்க, அந்த வாக்கியத்தில் உண்மையும் உறுதியும் இருந்தது. ஆனா அதுக்கு அவங்க சொன்ன காரணம் – தன் உடல்நிலை. ஆனா நான் நினைக்கறது, சுப்பாமணிகிட்டருந்து அந்த டாக்குமெண்ட்ஸை அவங்க ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ரொம்பக் கொடூரமான விலைகொடுத்து, வாங்கியிருக்கணும். அதுதான் அவங்களைத் தளர்த்திடுச்சு, சுப்பாமணி மேல கொடுங்கோபத்தில் வெச்சிருக்கு, ஆனா அவரைக் கொல்லணும்னு அவங்க நினைக்கலை. அவரைப் பேசாமல் இருக்கவைக்க வேறு ஏதாவது பண்ணணும்னு நினைச்சிருக்கலாம்.”

தேவா அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். “நீங்க சொல்றது சரிதான்னு நினைக்கறேன்” என்றார். “சந்துரு, உங்களுக்கு நினைவில்லையா? மூன்று வருஷத்துக்கு முன்னாடி, இராணி தான் வேலை பார்த்துட்டிருந்த காலேஜின் கௌரவ ஆலோசகர் என்ற பதவியிலிருந்து ரிஸைன் பண்ணினாங்க. அப்போ அந்தக் காலேஜுடைய தரம், ஹாஸ்டலுடைய மேனேஜ்மெண்ட் இதையெல்லாம் பற்றிக் காட்டமா ஒரு பேட்டி கொடுத்தாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வு ஊதியம் எதுவுமே கிடைக்கலை. காலேஜ் நிலையும் மோசமாகி, அதை வேறு ஒரு நிர்வாகம் சுலபமா வாங்கிட்டாங்க…”

“டிபிகல் சுப்பாமணி டச்” என்றாள் தர்ஷினி விழிகள் விரிய.

*

‘தடக்’ என்ற சப்தத்துடன் ட்ரெயின் நகர்ந்தது.

“மழை கொஞ்சம் தீவிரம் குறைஞ்சிருக்கு. ட்ராக் செக்கிங் முடிஞ்சுடுச்சுன்னு நினைக்கறேன்” என்றாள் தர்ஷினி.

தன்யா தன் மொபைலை வெளியே எடுத்து ஏதோ மெலேஜ் கொடுப்பவள்போல் வேகமாகத் தட்டினாள். “இன்னும் சிக்னல் வரலை” என்றாள். “இப்போ என் சந்தேகத்தைக் கேட்கிறேன், தர்ஷினி. மாயா-சாயா, கிருஷ்ணகுமாருக்குச் சுப்பாமணியோட டாக்குமெண்ட் கலெக்‌ஷன் பற்றி அஸ்வின் மூலமா தெரிஞ்சுது. அஸ்வினுக்கு எப்படித் தெரிஞ்சுது?” என்று தொடர்ந்தாள் தன்யா.

“புரியலை. என்ன சொல்ற?” என்று கேட்டாள் தர்ஷினி.

“இதில் புரிய என்ன இருக்கு? சுப்பாமணியுடைய டாக்குமெண்ட்ஸ் இங்கே ட்ரெயினில் இருக்குன்னு அர்ஜுனுக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னு கேட்கறேன். நாம அவர் கேபினைச் சோதனை போட்டப்போ அங்கே அர்ஜுன் இல்லை, தேவா சார் இல்லை…”

“ஏதோ கெஸ் பண்ணப் போற. சொல்லித் தொலையேன். பீடிகை வேற” என்றான் தர்மா. அவன் உடம்பு நடுங்குவதைக் கண்டதும் தன்யா “உனக்கு என்ன பண்றது? வீக்கா இருக்கா?” என்று கவலையுடன் கேட்டாள்.

“அதெல்லாம் இல்லை. வண்டி நகர ஆரம்பிச்சிடுச்சில்ல, அதான் லேசா குளிர்” என்றான் தர்மா.

“இந்தா, இந்த ஜெர்கினைப் போட்டுக்கோ” என்று தன் கனமான ஜெர்கினைக் கொடுத்தாள் தன்யா. தடை சொல்லாமல் வாங்கி, அவள் உதவியுடன் அணிந்துகொண்டான் தர்மா.

தன்யா மறுபடி மற்றவர்கள் பக்கம் திரும்பினாள்.

“தர்மா சொன்ன மாதிரி, இது என்னுடைய ஊகம்தான். தேவா சாரும் சந்திரசேகர் சாரும் தேவா கம்பெனியைவிட்டுப் போனதுக்கப்புறம் சந்திச்சுக்காம இருந்தாலும், இப்போ மறுபடி நண்பர்கள் ஆகியிருக்காங்க. காரணம், மறுபடி சுப்பாமணி!

“சந்திரசேகர் சார் தன் குடும்பத்துகிட்ட நடந்துக்கறதை வெச்சுப் பார்த்தா, அவருக்கு அவர் குடும்பத்தில் சுப்பாமணி விளையாடினது தெரிஞ்சுபோச்சுன்னு நினைக்கறேன்…” என்று தன்யா சொல்ல, தர்மாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

இதைத்தானே நானும் நினைத்தேன்! இது உண்மை என்றால் இந்தக் குடும்பத்தின் கதி…

அவன் இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோதே சந்திரசேகர் சோகத்துடன் தலையை ஆட்டினார். “என்னால் பொய் சொல்ல முடியாது. ஆமா” என்றார்.

“இந்தப் பயணம் முடிவானதும், தேவா சாரும் சந்திரசேகர் சாரும் சந்திச்சு, சுப்பாமணி தங்கள் குடும்பத்தை ப்ளாக்மெயில் பண்ணாம இருக்க ஒரு வழி பண்ண முடிவு பண்ணியிருக்காங்க. பயப்படாதீங்க, பணம் கொடுக்கறதா முடிவு!”

தர்மா மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான்.

தன்யா அவன் பக்கம் திரும்பினாள். “ஆமா! அந்தப் பணம் சுப்பாமணி இன்னொருத்தருக்குக் கொடுக்க வெச்சிருந்ததுன்னு நினைச்சோம், அது சுப்பாமணிக்கு இன்னொருத்தர் கொடுத்ததுன்னு நமக்குத் தோணவே இல்லை!”

“இப்ப மட்டும்? உங்க ஊகம்தானே? எப்படி நிரூபிப்பீங்க?” என்று காட்டமாகக் கேட்டார் சந்திரசேகர்.

“நோட்டுகளை ட்ரேஸ் பண்ண முடியும் சார். அதோட, நீங்க கேட்டதே நிரூபணம்தான்! ஏன்னா, இது உண்மையில்லைன்னா நீங்க கொலைக் குற்றத்தில் மாட்டிப்பீங்க!” என்று தன்யா சொன்னதும்தான் சந்திரசேகருக்குத் தேவா சிரித்துத் தலையில் அடித்துக் கொண்டது ஏன் என்று புரிந்தது.

“சந்துரு அப்பாவி! நான் சொல்றேன் – கெட் டுகெதர் முடிஞ்சதுமே நாங்க ரெண்டுபேரும் சுப்பாமணியைப் போய்ப் பார்த்து, நாங்க தயார் பண்ணிக் கொண்டுவந்திருந்த பணத்தைக் கொடுத்தோம். சுப்பாமணி…” – தேவாவின் முகம் கோபத்தில் கறுத்தது – “அந்த டாக்குமெண்ட்ஸை வெச்சு இது மாதிரிப் பல மடங்கு சம்பாதிக்க முடியும்னான்…”

எல்லோருக்கும் அருவருப்பில் மெய்சிலிர்த்தது.

“நாங்க கெஞ்சிக் கேட்டோம். கொஞ்சம் எங்களைக் கிண்டல் பண்ணிட்டு, கடைசியில் ஊருக்குப் போய் டாக்குமெண்ட்ஸை எடுத்துத் தரதா சொன்னார்” என்றார் சந்திரசேகர்.

“மிஸ்டர் சந்திரசேகர்! நாங்க முதலிலிருந்தே சந்தேகப்பட்டது உங்கமேல தான்!” என்றாள் தன்யா திடீரென்று.

சந்திரசேகர் நடுங்கிப் போனார். “என்ன… ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்றார்.

“ரொம்பப் பணக்காரர்களும் சரி, ரொம்ப ஏழைகளும் சரி, ஒரு பிரச்சனையில் மாட்டிக்கிட்டா, அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்க்கறதுன்னுதான் பார்ப்பாங்க. இந்தப் பிரச்சனையால் தன் நேர்மை, மானம், கௌரவத்துக்குப் பங்கம் ஏற்பட்டுடக் கூடாதுன்னு நினைக்கிற மிடில்க்ளாஸ் மெண்ட்டாலிட்டி உங்களில் தேவாவுக்கு ஓரளவு இருக்கு, உங்களுக்குத்தான் அதிகமா இருக்கு! உங்க ரெண்டுபேருக்குள் இருக்கும் நட்பும் ரொம்ப க்ளியரா தெரிஞ்சது. ஆனா அதை மறைச்சீங்க! அப்போ உங்க பிரச்சனையைப் பற்றி உங்களுக்குத் தெரியும்ங்கறது வெளியே வந்திருமே! அப்புறம்… உங்க பிஹேவியரைப் பார்த்தபோது, உங்களுக்கு உங்க குடும்பத்துக்கும் பெரிய பிரச்சனை இருந்ததும், ஆனா நீங்க அவங்களை விட்டுக்கொடுக்காம இருக்கறதும்… எல்லாம் புரிஞ்சது. அதனால் சுப்பாமணியைக் கொல்ல உங்களுக்குக் காரணம் இருக்கற அளவு வேறு யாருக்கும் இல்லை!”

சந்திரசேகர் கண்களில் பீதி தெரிந்தது. “நீங்க பேசப்பேச… என்னை நானே பார்த்துக்கற மாதிரி இருக்கு. நாந்தான் சுப்பாமணியைக் கொன்னுட்டேனோன்னு எனக்கே தோணுது!” என்றார் நடுங்கியவாறே.

“உளறாத சந்துரு” என்றார் தேவா கோபமாக. “மேடம் ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளுங்க. சுப்பாமணி இந்தப் பயணத்தை ஏற்பாடு பண்ணி எங்களை அழைச்சதும், சந்துரு வர மாட்டேன்னு சொல்லிட்டான். ஆனா நாந்தான் அவனை கன்வின்ஸ் பண்ணி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது சுப்பாமணி கிட்டருந்து அந்த டாக்குமெண்ட்ஸை வாங்கிடணும்னு சொன்னேன். பணமும் தயார் பண்ணிண்டோம்.

“நீங்க சொல்றது எல்லாம் உண்மை. ஆனா அவமானத்துக்கு அதிகம் பயப்படற சந்துரு, ஆமை மாதிரி ஓட்டுக்குள் ஒடுங்குவானே தவிர, அவனால் கொலை எல்லாம் பண்ண முடியாது மேடம்!”

தேவா பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டிருந்த தன்யா “சரி, கெட்-டுகெதர் முடிஞ்சதுமே நீங்க ரெண்டுபேரும் சுப்பாமணியைச் சந்திச்சுப் பணம் கொடுத்திருக்கீங்க. நெல்லூர் ஸ்டேஷன் தாண்டினதும் சந்திரசேகர் எதுக்காகச் சுப்பாமணியைப் பார்க்கப் போகணும்?” என்று கேட்டாள்.

“எங்க பழைய நட்பை ஞாபகப்படுத்தி, டாக்குமெண்ட்ஸை அவரைக் கன்வின்ஸ் பண்ணி வாங்கிடணும்னுதான் நெல்லூர் தாண்டினதும் அவர் கேபினுக்குப் போனேன். அங்கே வேற யாரோ…” என்று இழுத்தார் சந்திரசேகர்.

“நல்லது சார். விஷயத்துக்கு வந்துட்டோம். வேற யாரோ! யார் அந்த வேற யாரோ?”

எல்லோருடைய கண்களும் சொல்லிவைத்தாற்போல் ஸ்ரீஜா பக்கம் திரும்பின.

–பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...