பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

11.கவிகை

வெளியே மழை குறைந்திருந்தது. ஆனாலும் அது தற்காலிகம்தான் என்று உணர்த்துவதுபோல, மேகங்கள் வானம் முழுக்கக் குடை கவித்திருந்தன.

தன் கூப்பேக்குப் போயிருந்த ஸ்ரீஜா இப்போது மீண்டும் டைனிங் காருக்குள் நுழைந்தாள். முகம் கழுவி, கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தாள். “என்ன, எப்படிப் போயிட்டிருக்கு?” என்று கேட்டாள்.

“பார்க்கலாம், இப்பதானே ஆரம்பிச்சிருக்கு” என்றாள் தன்யா.

“இப்போ அடுத்து என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீஜா.

“ஒரு நூலைப் பிடிச்சுக்கிட்டு அது எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் போனா, சிக்கல் அதிகமாகிடும். ஸ்ட்ரக்சர்டா போகணும்” என்றாள் தன்யா. ஸ்ரீஜா புரியாமல் பார்க்க, “நாங்க இந்தக் கேஸில் ஈடுபட்டிருக்கோம்ங்கறதை எல்லோருக்கும் சொல்லி, தயார் பண்ணிடுங்க. எல்லோரையுமே வரிசையா விசாரிச்சுடுவோம். லவுஞ்சுக்கு இந்தப் பக்கம் இருக்கற இரண்டு கேபின்கள்… அதில் பிள்ளை வீட்டுக்காரங்க வரதா சொன்னீங்க…”

“தூரத்துச் சொந்தக்காரங்க. அவங்களுக்குச் சுப்பாமணியை யாருன்னே தெரியாது” என்றாள் ஸ்ரீஜா.

“அப்போ அவங்களைச் சட்டுனு விசாரிச்சுடலாம். அதுக்குள்ள நீங்க டைனிங் கார்ல ஸ்பெஷல் கோச் ட்ராவலர்ஸ் எல்லோரையும் கூட்டி, விசாரணைக்கு ஒத்துழைக்கச் சொல்லுங்க” என்றாள் தன்யா.

“அப்புறம் அவங்கவங்க கேபினுக்கே அவங்க திரும்பப் போயிடலாம், இல்லையா? தனித்தனியாத் தானே அவங்களை விசாரிப்பீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீஜா.

அவள் குரலில் தெரிந்த மெல்லிய பதட்டத்தை உணர்ந்தவாறே தலையசைத்து ஆமோதித்தாள் தன்யா.

*

‘சட்டுன்னு’ என்று தன்யா சொன்னாலும், ஒரு மணிநேரம் ஓடிப் போய்விட்டது, அவர்கள் லவுஞ்சில் விசாரணையை முடிக்கும்போது. அங்கிருந்த இரு கேபின்களில் இருந்தவர்களுக்கு நடந்த எதுவுமே தெரியவில்லை. ட்ரெயினில் ஏறும்போது வரவேற்றதைத் தவிர, சுப்பாமணி அவர்கள் அருகிலும் வரவில்லை. பயணிகள் சந்திப்பிற்கும் அவர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால், லவுஞ்சில் அவர்களுக்காக ஒரு ஆங்கிலத் திரைப்படம் போடப்பட்டது. பதினொன்றரை மணிக்கு ஆரம்பித்த அந்தப் படம் ஒன்றரை மணிவரை ஓடியது. அதன்பிறகு எல்லோரும் கேபினுக்குத் திரும்பிவிட்டார்கள்.

“ட்ரெயின் நின்றபோது நீங்க வெளியே வந்து சுப்பாமணியைப் பார்க்கலியா?” என்று ஒவ்வொருவரிடமும் தன்யா கேட்டாள்.

எல்லோருமே லவுஞ்ச் அட்டெண்டர்களிடம் தாங்கள் பேசி விவரம் அறிந்ததாகச் சொன்னார்கள். நெல்லூரிலிருந்து ஸ்பெஷல் கோச் அட்டெண்டர்கள் இருவரும் லவுஞ்சில்தான் இருந்ததாக ஒருவர் சொன்னார்.

கைக்குழந்தையோடு வந்திருந்த இளம்தம்பதியினரை விசாரித்தபோது, நெல்லூரிலிருந்து கிளம்பிய பத்துப் பதினைந்து நிமிடங்களில் குழந்தை வெகுவாக அழுததால், அதனைத் தூக்கிக் கொண்டு லவுஞ்சிலிருந்து டைனிங் கார்வரை பல முறை நடந்ததாகவும், ஒரு முறை சுப்பாமணி கூப்பேயிலிருந்து யாரோ எட்டிப் பார்த்ததைப் பார்த்ததாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்தார்.

“யார் எட்டிப் பார்த்தது? ஆணா, பெண்ணா?”

“சொல்லத் தெரியலை. டைனிங் காரிலிருந்து கேபின்களுக்கு லிமிட்டெட் விஷன் தான். ஆனா எனக்கு ஏனோ அது ஒரு அட்டெண்டர்னு தோன்றியது” என்றார் பரத்குமார் என்ற அந்த இளைஞர்.

*

“அட்டெண்டர்கள் யாரும் நெல்லூருக்கு அப்புறம் ஸ்பெஷல் கோச்சுக்குள் வரவேயில்லை. நாலுபேருமே லவுஞ்சில் உட்கார்ந்து பேசிட்டிருந்திருக்காங்க. கேடரிங் சீஃபும் அதை ஒத்துக்கறார். மிஸ்டர் பரத்குமாருக்கு அது அட்டெண்டர்னு ‘தோன்றியதே’ தவிர, ஒரு அட்டெண்டர் டைனிங் கார் வழியாக ஸ்பெஷல் கோச்சுக்குப் போனதையோ, மறுபடி ஸ்பெஷல் கோச்சிலிருந்து வந்ததையோ பார்க்கலை” என்றாள் தர்ஷினி.

“பரத்குமாரை நாம சந்தேகப்படலாமா?” என்றான் தர்மா. ஏற்கெனவே சந்தேக லிஸ்ட் பெரிது, இன்னும் புதிதாக ஒருவரா என்ற சலிப்பும் அவன் குரலில் தெரியாமலில்லை.

“நாட் ரியலி” என்றாள் தன்யா. “ஸ்ரீஜாவைக் கேட்டதில் பரத்குமாருக்கும் சுப்பாமணிக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லைன்னு தெரியுது. பிள்ளை வீட்டுக்காரங்க க்ரூப்பை – தற்போதைக்காவது – விட்டுடலாம்னு தோணுது. இருந்தாலும் பரத்குமார் சொன்ன இந்தத் தகவலைக் கவனத்தில் வெச்சுப்போம்.”

*

“கோச்சோட இரு முனைகளிலும் இரண்டு கூப்பேக்கள் – ஸ்ரீஜா ஒன்றில், சுப்பாமணி ஒன்றில்” என்றாள் தன்யா.

“ஸ்ரீஜாவை விசாரிச்சுட்டோம், அவளுக்கு அடுத்த கேபினில்…” என்று தர்ஷினி சொல்லிக் கொண்டிருக்கையில் “ஸ்ரீஜாவை நாம இன்னும் முழுமையா விசாரிக்கலை. அவங்ககிட்டக் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஒண்ணு இருக்கு. போகட்டும், அவங்களுக்கு அடுத்த கேபின் யாருடையது?”

“மிஸஸ் இராணி கந்தசாமி, மிஸ்டர் கிருஷ்ணகுமார், அவருடைய இரண்டு மகள்கள்” என்றாள் தர்ஷினி.

*

“மிஸஸ் இராணி கந்தசாமி, சுப்பாமணி உங்களுக்கு என்ன வேணும்?” அமைதியாகவே ஆரம்பித்தாள் தன்யா.

“தூரத்து உறவு. நான் அவனுக்குச் சித்தி முறை” என்றாள் இராணி கந்தசாமி. அவளும் அமைதியாகவே பேசினாள்.

“நேரடியாகவே என் கேள்விக்கு வந்துடறேன், மிஸஸ் கந்தசாமி. உங்களுக்கும் சுப்பாமணிக்கும் இடையில் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கு, சரியா?” என்றாள் தன்யா.

இராணியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. “சுப்பாமணியோடு பல பேர்க்கு மனஸ்தாபம் உண்டு” என்றாள்.

“உங்களுடைய மனஸ்தாபத்திற்குக் காரணம் உங்க மகள்னு நினைக்கறேன்” என்றாள் தன்யா விடாமல்.

இராணி பெருமூச்செறிந்தாள். “இது டிடக்டிவ்ஸ்க்கே உண்டான சாபக்கேடு… எல்லாத்தையும், எல்லாரையும் சந்தேகப்படறது… காதில் வாங்கிக் கொண்ட சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி நடிக்கறது… எதுக்கு இதெல்லாம்? நீங்க கேட்காமலேயே உங்களுக்குத் தேவையான ஒரே பதிலைச் சொல்லிடறேன் – எனக்கும் சுப்பாமணியின் மரணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது” என்றாள்.

“நீங்க சொல்லிட்டீங்க, நாங்க எப்படி நம்பறது, மேடம்?” என்று புன்னகையுடன் கேட்டாள் தன்யா.

“நேரடியாக நீங்க கேட்கிற எந்தக் கேள்விக்கும் நான் பொய் சொல்ல மாட்டேன். ஏதோ சுப்பாமணி சொன்ன சில வார்த்தைகளை வெச்சு என்னை மடக்கணும்னு நினைச்சீங்களே, அதுதான் எனக்கு வருத்தம்” என்றாள் இராணி.

தோள்களைக் குலுக்கினாள் தன்யா. “ஆஃப்டர் ஆல், நீங்க புரொஃபஸரா இருந்தவங்க, எத்தனையோ டாக்டிக்ஸை ஸ்டூடண்ட்ஸ் கிட்டப் பார்த்திருப்பீங்க. வெல், நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலியே நீங்க? என்னுடைய நேரடியான கேள்வி – உங்களுடைய ஸ்டேட்மெண்ட்டை நாங்க எப்படி நம்பறது?” என்றாள்.

இராணி கந்தசாமி தன் கைகளை உயர்த்தினாள். “இந்தக் கைகளால் எத்தனையோ வெயிட் தூக்கியிருக்கேன். எத்தனையோ டெலிகேட்டான இன்ஸ்ட்ருமெண்ட்களைக் கையாண்டிருக்கேன். இப்போ எனக்கு வயசாகிடுச்சு. எழுபதைக் கடந்துட்டேன். என் கைகளை நல்லா பாருங்க” என்றாள். அவளுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

தர்மாவுக்குப் புரிந்தது. இராணி கந்தசாமியைப் பரிதாபத்துடன் பார்த்தான்.

“ஆமா” என்றாள் இராணி கந்தசாமி, அவனை நேரடியாகப் பார்த்து. “பார்க்கின்ஸன் டிஸீஸ். ஆரம்ப ஸ்டேஜ். என்னால் துப்பாக்கியைச் சரியாப் பிடிக்கக்கூட முடியாது. நான் எப்படிச் சுப்பாமணியைச் சுட முடியும், அவனை இழுத்துட்டுப் போய் ட்ரெயினிலிருந்து வெளியே தள்ள முடியும்?” என்று கேட்டாள்.

ஒரு கனத்த மௌனம் நிலவியது.

“நீங்க போகலாம்” என்றாள் தன்யா.

தன்யாவும் தர்மாவும் இராணியைப் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, தர்ஷினியின் முகத்தில் ஒரு சிரிப்பு மலர்ந்தது.

“பாவம், பெரியவங்களைப் பார்த்துச் சிரிக்காதே!” என்று தர்மா அவளைக் கண்டித்தான்.

“இந்தக் கொலை எப்படி நடந்ததுங்கறதை ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்காங்க இல்லை, இந்த இராணி மேடம்? ஏதோ நேரில் பார்த்தவங்க மாதிரி…” என்றாள் தர்ஷினி.

தன்யாவும் தர்மாவும் அதிர்ந்தார்கள்.

*

“நீங்க கேட்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். நான் சுப்பாமணியைக் கொல்லலை, கொல்லலை, கொல்லலை” என்றார் கிருஷ்ணகுமார்.

“சரி சார், உட்காருங்க” என்றாள் தன்யா.

“இதோ பாருங்க, எனக்கு இருக்கறது இரண்டு பொண்ணுங்க. அவங்க வாழ்க்கைக்கு நான் ஒரு ஏற்பாடு பண்ண வேண்டாமா? இந்தச் சுப்பாமணியைக் கொன்னு, நானும் ஜெயிலுக்குப் போய், அவங்க வாழ்க்கையையும் நாசம் பண்ணுவேனா, சொல்லுங்க?” என்றார் கிருஷ்ணகுமார், உட்காராமல்.

“அப்போ இந்தச் சுப்பாமணி மேல உங்களுக்குக் கோபம் இருந்தது, ஆனா உங்க பொண்ணுங்களோட வாழ்க்கை நாசமாகிடக் கூடாதுங்கறதுக்காக நீங்க அவரைக் கொல்லலை, சரியா?” என்றாள் தன்யா.

கிருஷ்ணகுமார் தளர்ந்துபோய் இருக்கையில் பொத்தென்று விழுந்தார்.

“சொல்லுங்க சார், உண்மை எப்போதுமே கெடுதல் செய்யாது” என்றான் தர்மா.

“பழைய கதை. இருபது வருடத்திற்கு முந்தைய கதை. அதை இப்போ பேசறதால யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆனா கெடுதல் உண்டு. சில நேரம் உண்மையைப் பேசாம இருக்கறது நல்லது” என்று உறுதியாகக் கூறிவிட்டார் கிருஷ்ணகுமார்.

“அப்போ நீங்க சுப்பாமணியைக் கொல்லலை” என்றாள் தன்யா.

“ஏற்கெனவே சொன்னேனே, என் மகள்களுடைய வாழ்க்கை எனக்குப் பெரிசு, அவங்களுக்காகத்தான் வாழறேன்.”

“உங்க… கஸின்… இராணி கந்தசாமி. அவங்களுக்கும் அவங்க மகளுடைய வாழ்வு பெரிசு, இல்லையா?” மெதுவாகக் கேட்டாள் தன்யா.

“என்ன… என்ன சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்? என்ன தெரியும்?” பதறிக் கொண்டு எழுந்துவிட்டார் கிருஷ்ணகுமார்.

“ஓரளவு தெரியும். மத்ததை நீங்களே சொல்லிட்டீங்கன்னா நல்லது” என்றாள் தன்யா.

கிருஷ்ணகுமார் தயங்கினார். ஏதோ சொல்லப் போனார்.

அப்போது “டாடி, பேசி முடிச்சுட்டீங்களா? மருந்து சாப்பிட மறந்துட்டீங்க, அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா போச்சு, சாரி” என்றவாறே உள்ளே நுழைந்தாள் மாயா. கூடவே சாயா.

“அடப் பாவிகளா!” என்று மனதிற்குள் சபித்தாள் தன்யா.

“பேசி முடிச்சாச்சு” என்றார் கிருஷ்ணகுமார் அழுத்தமாக, தன்யாவைப் பார்த்தவாறே. “வாங்க கேபினுக்குப் போகலாம்” என்று எழுந்தார்.

மாயாவும் சாயாவும் தலையில் குடை கவித்திருந்த ஸ்கார்ஃபை இறுக்கியவாறே கிருஷ்ணகுமாருடன் கிளம்பினார்கள்.

அவர்கள் தன்யாவைப் பார்த்த பார்வையில் டன், டன்னாய்க் கேலி கலந்திருந்தது.

–பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...